ப.சிதம்பரம்
நமது நாட்டின் நிதிநிலை அறிக்கையை எடுத்து, அந்த நிதிநிலை அட்டவணையில் அனைத்து எண்களையும் பூர்த்தி செய்தால், ஒரு குடும்பத்தின் வரவு செலவு அறிக்கைக்கும், நாட்டின் நிதிநிலை அறிக்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பது தெரிய வரும். நிதிநிலை அறிக்கையில் அதிக எண்ணிக்கையில் உள்ள பூஜ்யங்களை கழித்தால், வீட்டின் வரவு செலவு அறிக்கை போலவே இருக்கும்.
2018-19ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை எடுத்துக் கொள்வோம். மொத்த பற்றாக்குறை ரூபாய் 6,24,276 கோடி. குடும்ப வரவு செலவு அறிக்கையை எடுத்துக் கொண்டால், இந்த பற்றாக்குறையை சமாளிக்க, ஏதாவது ஒரு இடத்தில் கடன் வாங்கித்தான் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். ஆனால், இரண்டு கடன்களுக்குமான தன்மை வேறு.
கடனை திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு கடன் பெறும். சில அரசுகள், திருப்பிச் செலுத்தும் திறனை மீறி, ஏராளமான கடனை வாங்கி, அடுத்து வரும் அரசுகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடும்.
சில அரசுகள், அடுத்த ஆண்டு வரும் கூடுதல் வருவாயில் கடனை திருப்பிச் செலுத்தலாம் என்ற நம்பிக்கையில் தற்காலிகம் என்று நினைத்து கடனை பெறும்.
எண்களுக்கு பின்னால்.
2018-19 நிதி நிலை அறிக்கையின்படி, மத்திய அரசு ரூபாய் 6,24,276 கோடி கடன் வாங்கும். இதைத்தான் நிதிப் பற்றாக்குறை என்கிறோம். எல்லா புள்ளி விபரங்களைப் போலவே, இந்த எண்ணிக்கையைப் பார்த்தால் உண்மை நிலை தெரியாது. அந்த எண்ணிக்கைக்கு பின்னால் உள்ள கதையை ஆராய வேண்டும். அதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
வருவாய் புள்ளி விபரங்களை முதலில் பார்ப்போம். பெரும் பகுதியிலான வருவாய் வரி வருவாயிலிருந்து வருகிறது. எந்தெந்த வரி வருவாய் என்ற விபரங்கள் கீழே உள்ள அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.
பெரும் அளவிலான வருவாய், சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி 1 ஜுலை 2017 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, ஜனவரி 2018 வரை, மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் சராசரியாக மாதத்துக்கு 22,129 கோடியாகும். இந்த மாதாந்திர சராசரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2018ல், 44,314 கோடியாகவும், பின்னர், மாதத்துக்கு 50,000 கோடியாகவும் உயரும் என்று நிதி நிலை அறிக்கை மதிப்பிடுகிறது. இது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.
மாதத்துககு சராசரியாக உயர்ந்து 40,000 கோடியை சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யும் என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டால் கூட, அதன் மொத்த ஆண்டு வசூல் ரூபாய் 4,80,000 கோடியாகும். அப்போது கூட, மொத்தம் 1,23,900 கோடி பற்றாக்குறையும், நிகரம் 71,862 கோடி பற்றாக்குறையும் மத்திய அரசுக்கு ஏற்படும். வருவாயில் மற்றொரு முரண்பாடு, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதால் வரும் வருவாய் என்று மதிப்பிட்டுள்ள வருவாயும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2017-18ல், நிதி நிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 72,500 கோடி. மறுமதிப்பீட்டில் இது 1,00,000 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த இலக்கு ஒரு தந்திரத்தால் அடையப்பட்டது. மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசியை, மற்றொரு மத்திய அரசு நிறுவனமான எச்பிசிஎல் நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை 36,915 கோடிக்கு வாங்க வைத்து, இந்த இலக்கு அடையப்பட்டது. இதையே மீண்டும் 2018-19ல் அடைய முடியுமா? சந்தேகமே. ஒரு தேர்தல் ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் மயப்படுத்தி, அதன் மூலம், 80,000 கோடியை பெற முடியும் என்ற இலக்கை அடைவது சந்தேகமே. இந்த இலக்கையும் முழுமையாக அடைய முடியாது. குறைந்தபட்சம் 20,000 கோடி பற்றாக்குறை ஏற்படும்.
குறைத்து காட்டப்பட்ட செலவினம்.
செலவின விபரங்களை பார்ப்போம். இதில் இரண்டு பெரிய ஓட்டைகள் உள்ளன.
முதல் ஓட்டை, உணவுக்கான மானியம். 2016-17ல், இது 1,10,000 கோடியாக இருந்தது. 2017-18ல் இது 1,40,000 கோடியாக இருந்தது. 2018-19ல், இது 1,70,000 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2018-19ம் ஆண்டுக்கு வெறும் 30,000 கோடி உயர்வு என்பது போதாத தொகை. விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை வழங்குவதில், பிஜேபி அரசு கஞ்சத்தனமாக நடந்து கொண்டது. தேர்தல் ஆண்டு என்பதால், மத்திய அரசு, திடீர் தாராளத்தோடு, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையோடு, கூடுதலாக 50 சதவிகிதம் என்று அறிவித்தது. ஆனால் இந்த “கூடுதல் 50 சதவிகிதம்” எங்கிருந்து வரப் போகிறது என்பதற்கான விளக்கமும் இல்லை. நமக்கும் புரியவில்லை. ஆனால், இந்த அறிவிப்பை உண்மை என்று எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,70,000 கோடி போதவே போதாது.
அடுத்ததாக தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம். இதற்கான நிதி சுத்தமாக ஒதுக்கப்படவில்லை. 2016-17ல் வெளியிட்ட ஒரு போலி அறிவிப்பை போலவே இதுவும் போலியாக இருந்தால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அரசு, பயனாளிகளுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை உண்மையிலேயே தொடங்குகிறது என்றால் அதற்காக செலவிட வேண்டும். இதற்கான செலவின மதிப்பீடுகள் 11,000 கோடியில் இருந்து 1,00,000 கோடி வரை ஆகும். இந்தத் தொகை செலவினத்தில் காட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த இரு தலைப்புகளில் மட்டும் அரசு, கூடுதலாக 20,000 கோடி முதல் 70,000 கோடி மற்றும் காப்பீட்டுக்கு 50,000 கோடி செலவிட வேண்டும்.
இந்த ஓட்டை எவ்வளவு பெரியது?
நிதிப் பற்றாக்குறையை மதிப்பிடுகையில் நான் கச்சா எண்ணை விலை உயர்வை கணக்கில் எடுக்கவில்லை. நிதி நிலை அறிக்கையும், கச்சா எண்ணையின் விலை ஒரு பீப்பாய் 70 டாலருக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஊகிக்கிறது. ஒரு வேளை கச்சா எண்ணை உயர்ந்தால், பெரும் சிக்கல் ஏற்படும். வரவு மற்றும் செலவு பகுதிகளில் நாம் இந்தத் தொகைகளை சேர்த்தால், வருவாயில் 92,000 கோடி ரூபாய் பற்றாக்குறையும், 70,000 கோடி செலவின தொகையாகவும் உருவாகும். தற்போது நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறையோடு சேர்த்து கூடுதலாக 1,62,000 கோடி பற்றாக்குறை ஏற்படும்.
ஆகையால் 2018-19ம் ஆண்டு 6,24,276 கோடி ரூபாய் பற்றாக்குறை என்பது, மொத்த ஜிடிபியில் 3 சதவிகிதம் என்பது சரியான மதிப்பீடு அல்ல. ஜிடிபியில் 4.15 சதவிகிதமாக – 7,86,276 கோடியாக உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.
சந்தைகள் நிதி நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. நீங்களும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அரசு வாங்கும் கடன், உங்களுடைய கடனும் கூட.
தமிழில் ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.