ப.சிதம்பரம்

எல்லா பொருளாதாரங்களுக்கும் கச்சா எண்ணெய் மிக மிக முக்கியமானது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்கு 80 சதவிகிதம் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. 2014ம் ஆண்டு, கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்தது. இது அனைத்து பொருளாதாரங்களுக்கும் ஒரு போனஸாக அமைந்தது. மத்திய பட்ஜெட்டும் இந்த விலை வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. குறைந்த கச்சா எண்ணெய் விலைகள், பிஜேபி – தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும், இதர மாநில அரசுகளுக்கும், பண வீக்கத்தை உயர்த்தாமல், மக்கள் மீது கடுமையாக வரி விதித்து, தங்கள் வருவாயை உயர்த்திக் கொண்டன. செலவு வகையில், சமையல் எரிவாயு, மண்ணென்ணை, மற்றும் உரங்களுக்கான மானியத்தை கணிசமாக குறைக்க முடியும். ரயில்வே மற்றும் டீசலைப் பயன்படுத்தும் பல துறைகளின் செலவையும், அரசால் குறைக்க முடியும். மொத்தமாக பார்த்தோமென்றால், அரசுக்கு இது ஒரு பெரும் போனஸ். இந்த போனஸை அறுவடை செய்த அரசு, கச்சா எண்ணை விலை உயர்ந்தால் என்ன நேரும் என்பதை கணிக்க தவறி விட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீது வரி விதித்து, அதன் மூலம், மாநில அரசு மற்றும் மத்திய அரசு பெற்ற வரி வருவாயை பாருங்கள்.

chidu-graph

இதன் மற்றொரு பக்க விளைவு, பெட்ரோலியப் பொருட்களால் வரும் வரிகளை அரசுகள் பெரிதும் நம்பி இருக்கத் தொடங்கி விட்டன. 2013-14ம் ஆண்டில் மத்திய அரசு பெட்ரொலியப் பொருட்களில் இருந்து பெறும் வரி வருவாய், 15 சதவிகிதத்தில் இருந்து 2016-17ம் ஆண்டில் 24 சதவிகிதமாக உயர்ந்தது. அதே நேரத்தில் மாநில அரசுகளுக்கான பெட்ரோலிய பொருட்களில் இருந்து வரும் வரி வருவாயின் சதவிகிதம் 2013-14ல் 10 சதவிகிதமாக இருந்தது 2016-17ல் 8 சதவகிதமாகியது.

வரி மற்றும் செலவுகளின் தோல்வி

பிஜேபி அரசு, வரி வசூல் மற்றும் செலவு என்ற புதிய முறையை 2013-14 முதல் 2016-17 வரை கையாண்டது. இதன் மூலம், செலவுகளின் மூலமான வளர்ச்சி அதிகரித்து, தனியார் முதலீடுகள் அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, போன்ற கவர்ச்சிகரமான முழக்கங்களும் இதற்கு உதவவில்லை. நிலையான முதலீடு 2013-14ல் 31.30 சதவிகிதத்தில் இருந்து 2017-18ல் 28.49 சதவிகிதமாக வீழ்ந்தது. இதில், தனியார் முதலீடு 24.20 சதவிகிதத்தில் இருந்து, 2016-17 வரை, 21.38 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது. ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டம் தொடக்கம் முதலே தேறவில்லை. அரசு புள்ளி விபரங்களின்படி, 6981 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வெறும் 109 மட்டுமே, அரசின் நிதி உதவியை பெற்றுள்ளது.

இதற்கு மாற்று வழி இருந்தது. பெட்ரோல் டீசல் மீதான வரிகளை துணிச்சலாக குறைத்திருந்தால், அது தனியார் நுகர்வுக்கு பெரும் ஊக்கமாக அமைந்திருக்கும். வரிக் குறைப்பு என்பது, ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்து, ஏற்றுமதியை அதிகரித்திருக்கும். இந்த நடவடிக்கைகள், தொழில் துறைக்கு உதவி செய்து, அதிகமான பயன்பாட்டுக்கு வகை செய்து, உற்பத்தியையும், வேலை வாய்ப்பையும் பெருக்கியிருக்கும்.

இதற்கான மாற்று யோசனைகள் ஒன்று பரிசீலிக்கப்படவில்லை. அல்லது நிராகரிக்கப்பட்டன. ஏன்? இதற்கான காரணமாக என்னால் ஒன்றே ஒன்றை மட்டும்தான் சொல்ல முடியும். கூட்டு யோசனையோ அல்லது கூட்டு முடிவோ, இதற்கான சாத்தியக் கூறுகளே இந்த அரசில் இல்லை.

ஒரு ஊருக்குள் வெள்ளைக் குதிரையில் நுழையும் ஒரு நபர், அனைத்து பிரச்சினைகளுக்கும், என்னிடம் தீர்வு உள்ளது என்று கூறி, அனைத்து மாற்று யோசனைகளையோ, மாற்றுத் திட்டங்களையோ, அல்லது எதிர் குரல்களையோ நிராகரித்தால், அதற்கு பெயர்தான் ஒரு நபர் தந்திரம். இது போன்றதொரு முன் முயற்சி, கடுமையான பொருளாதாரச் சரிவின்போது, சில நாடுகளில் வேலை செய்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இந்தியா மே 2014ல், பொருளாதார சரிவை சந்திக்கவில்லை. அரசின் சொந்தத் துறையின் புள்ளி விபரங்களின்படியே, 2013-14ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.4 சதவிகிதமாக இருந்தது. இதை அந்த அளவில் இருந்து அப்படியே உயர்த்தியிருக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அரசு அதை தவற விட்டு விட்டது.

வேறு வழியே இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளின் அனுபவம், குஜராத் மாடல் வேலை செய்யவில்லை என்பதை நிரூபித்து விட்டது. குறைந்தது இரண்டாவது ஆண்டின் முடிவிலாவது, அரசு தன் போக்கை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. 1 ஜுலை 2017 முதல், ஜிஎஸ்டி வரி விதிப்பு செயல்படுத்தப்பட்டபோது, இந்த சிக்கல் மேலும் அதிகரித்தது. பலருடைய ஆலோசனைகளை காதில் வாங்காத அரசு, தொழில் துறையை, குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் நசிவுக்கு வழி வகை செய்தது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி, முதலீட்டாளர்களின் மொத்த நம்பிக்கையையும் தகர்த்தது. பெட்ரொலிய பொருட்களின் மீதான அதிக வரி விதிப்பின் சுமையை மக்களே ஏற்றனர்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 30.4.18 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)

தமிழில் : ஆ.சங்கர்

×Close
×Close