சிதம்பரம் பார்வை : உண்மை உலகம் பிரதமரை எதிர்நோக்குகிறது

நின்று போன திட்டங்களை அரசால் தொடங்க முடியவில்லை. மின் துறையில் மட்டும் 30,000 மெகா வாட்டுக்கும் அதிகமான திட்டங்கள் கோடிக்களை முழுங்கிவிட்டு, தேங்கியுள்ளது.

By: Updated: October 17, 2017, 11:30:56 AM

ப.சிதம்பரம்

நான் ஒரு ரயிலில் இருந்தேன். அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அங்கே ஒரு அறிவிப்பு இருந்தது. அதில் முதல் அறிவுரை, ‘ஒரு நொடி என்ன நடக்கிறது என்பதை அலசுங்கள். பதட்டப்படாதீர்கள்’. இந்திய பொருளாதாரத்தோடு இதை ஒப்பிடுகையில் எத்தனை பொருத்தமாக இருக்கிறது!! முதன் முறையாக, அமைச்சர்கள் மற்றும் அரசு செய்தித் தொடர்பாளர்களிடம் ஒரு பதட்டத்தை பார்க்கிறேன். இந்த பதட்டம் ஒரு வகையில் நல்லது. இந்த பதட்டம் அரசை நோக்கி வீசப்படும் விமர்சனங்களை சரியான புரிதலோடு அணுகி நல்ல முறையில் செயல்பட வைக்கும்.

அதே நேரத்தில், வழக்கமாக பேசும் அடாவடிப் பேச்சுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. பொருளாதாரத்தின் மோசமான நிலைமை குறித்து பேசிய, யஷ்வந்த் சின்காவும், அருண் ஷோரியும், அரசை ஒரு முறை குறை சொல்லாவிட்டால் இரவில் தூங்க முடியாமல் அவஸ்தைப் படுபவர்கள் என்று புறந்தள்ளப்பட்டார்கள். அவர்கள் இருவரையும், பெயர் குறிப்பிடாமல் பிரதமரே மோசமாக விமர்சித்தப்போது, அவர்களின் விமர்சனங்கள் பல லட்சக்கணக் கானோரை சென்றடைந்திருந்தது. அதன் தாக்கம் அனைவரையும் சென்றடைந்திருந்தது.

பொருளாதார தேக்கம் மற்றும் மந்தநிலை

பொருளாதாரம் மந்தமடையவில்லை என்பதை உணர்த்துவதற்காக பிரதமர் மிக கடுமையாக முயற்சி செய்தார். பொருளாதாரத்தின் சில கூறுகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை உணர்த்த முயற்சி செய்தார். அவர் கூற்றுப்படி, கார் விற்பனை அதிகரித்துள்ளது (12 சதம்), வணிக வாகனங்கள் (23 சதம்), இரு சக்கர வாகனங்கள் (14 சதம்), அதிகரித்துள்ளன. இது தவிர, விமான பயணங்கள், விமான சரக்கு போக்குவரத்து, புதிய தொலைபேசி இணைப்பு பெறுபவர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரதமர் சொல்வது சரிதான். சில துறைகள் வளரத்தான் செய்கின்றன. ஆனால் வெகு சில மட்டுமே வளர்கின்றன. இதனால்தான் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது.

பிரதமரின் ஆராய்ச்சியாளர்களும், அவருக்கு உரை எழுதுபவர்களும் சொல்ல மறந்த விஷயம் என்னவென்றால், பொருளாதாரத்தின் எல்லா கூறுகளும் வளரத் தவறினால் அதற்கு பெயர் பொருளாதார தேக்க நிலை. மந்த நிலை அல்ல. பொருளாதார தேக்க நிலைக்கும், மந்த நிலைக்குமான வேறுபாடு வெளிப்படையாக தெரியும். சில துறைகள் வளரும். சில துறைகள், வீழ்ச்சியை சந்திக்கும். வீழ்ச்சியை சந்தித்த சில துறைகள்

சுரங்க மற்றும் கனிம வளத் துறை (-) 0.66%
உற்பத்தித் துறை 1.17
கட்டுமானத் துறை 2.0
விவசாயம், வனத் துறை மற்றும் மீன்வளத் துறை 2.34

இந்த நான்கு துறைகள் மட்டுமே, பொருளாதாரத்தில் 40 சதவிதமாகும். இந்தத் துறைகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, பொருளாதாரத்தின் மந்த நிலைக்கான காரணத்தை விளக்குகின்றன. பிரதமரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார ஆலோசனை கமிட்டி, இதை ஒப்புக் கொண்டுள்ளது.

வரைபடங்கள் விளக்குகின்றன

இக்கட்டுரையில் மேலும் மேலும் எண்களைப் பற்றி பேசாமல், கீழே உள்ள வரைபடத்தை பாருங்கள். ஏப்ரல் 2014 முதல் உள்ள 13 காலாண்டுகள் (பிஜேபி மே 2014ல் பதவிக்கு வந்தது) முதல் ஜுன் 2017 வரை உள்ள காலாண்டுக்கான டேட்டாக்களை சிஎஸ்ஓ மற்றும் ஆர்பிஐ பதிப்பித்துள்ளது. இவ்வரைபடத்தில் இரண்டு கோடுகள் உள்ளன. ஒட்டுமொத்த மூலதன உருவாக்கத்தின் அடிப்படையில் முதலீடுகளுக்கான கோடி, அதை ஜிடிபியோடு பொருத்திப் பார்க்கிறது. இரண்டாவது கோடி, இதற்கு முன்னால் உள்ள இதே காலகட்டத்தோடு உள்ள வகையில் தற்போதைய கடன் வளர்ச்சி விகிதம்.

eg-759
இந்த இரண்டு கோடுகளும், மிகத் தெளிவாக, பிஜேபி / தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த பொருளாதாரத்துக்கு என்ன செய்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது. முதலில் அரசு, இந்தப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையே அழிக்கிறது. இதில் முதல் குற்றவாளி நிதி அமைச்சகமே. அந்த அமைச்சகம், பல கோடி ரூபாய்களை வரியாக முன் தேதியிட்டு வசூலிக்கத் தொடங்கியது. ஏற்கனவே உள்ள வரிச் சட்டங்களை மிக கொடூர ஷரத்துக்களோடு திருத்தியதோடு அல்லாமல், புதிய சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. எங்கே வேண்டுமானாலும் ரெய்டு நடத்தும் வகையில் ஒரு ரெய்டு சாம்ராஜ்யத்தை உருவாக்கியது. வரிகள் துறையின் அதிகாரிகளுக்கு மிக மிக அதிக அதிகாரம் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் செயல்களுக்கான காரணங்களை விளக்கக் கூட வேண்டியதில்லை என்று திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரிக் கணக்குகளை சரி பார்க்கையில், அதிகாரிகள் வரி செலுத்துபவரை அதிக கேள்வி கேட்காமல், கணக்குகளை சரி பார்ப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில், சிபிஐ விசாரணை போல, வரி செலுத்துபவர்கள் துளைக்கப்படுகிறார்கள். வருமான வரித் துறை பதிவு செய்யும் வழக்குகள், சட்டவிரோத பணப்பரிமாற்றச் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக அமலாக்கத் துறைக்கு அனுப்பப்படுகின்றன. எந்த ஒரு கணக்காயரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் முன்பை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாடிக்கையாளர்கள் புலம்புகிறார்கள்.

ஏற்கனவே நின்று போன திட்டங்களை அரசால் மீண்டும் தொடங்க முடியவில்லை. மின் துறையில் மட்டும் 30,000 மெகா வாட்டுக்கும் அதிகமான திட்டங்கள் கோடிக்கணக்கான மூலதனத்தை முடக்கி விட்டு, தேங்கிக் கிடக்கின்றன. வங்கி அதிகாரிகள் என்னிடம், மின் துறை, தொலைத் தொடர்புத் துறை, இரும்பு மற்றும் கட்டுமானத் துறைகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கிறார்கள். இத்துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க வழியே இல்லை.

இன்னொரு புள்ளி விபரம். 2017-18 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், புதிய திட்டங்கள் என, 84,500 கோடி ரூபாய்க்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த அரசு பதவியேற்ற பிறகு, மிகக் குறைந்த அளவு இதுதான்.

வாராக்கடன்கள் என்ற பெரும் சிக்கல்

வாராக்கடன் பிரச்சினையை அரசு மேலும் சிக்கலாக்கி விட்டது. வாராக்கடன் சிக்கலை வங்கி நிர்வாகங்கள் தீர்க்கும் என்று அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு பதிலாக, கன்னா பின்னாவென்று, அதிகாரிகள் மாற்றப்பட்டனர். வங்கி அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் சிக்கிக் கொள்வோம் என்ற கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி அச்சத்தில் இருக்கின்றனர். வங்கிகளின் எந்த தலைமை செயல் அதிகாரியிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். எங்களுக்கு கடன் வழங்க விருப்பம் இல்லை. வாராக்கடன் சிக்கலில் மாட்டிக் கொள்ள விருப்பமில்லை. மூலதனத்தை வளர்க்க விருப்பமில்லை. சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் ஓய்வு பெற வேண்டும் என்பது மட்டுமே விருப்பம் என்று கூறுவார்கள்.

ஒரு பொது வங்கியை உருவாக்கி, இதர வங்கிகளின் வாராக் கடன்களை அந்த வங்கி ஏற்றுக் கொள்ளும் என்று இவர்கள் அறிவித்ததை இவர்களால் செய்ய முடியவில்லை. வங்கிகளின் மூலதனங்களை அதிகரிக்க முடியவில்லை. வங்கி கடன் வழங்கும் முறை, சிதிலமடைந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தனியார் மூலதனத்தை அதிகரித்து, வங்கி கடன் வழங்கும் முறைகளை தொடங்கினாலே ஒழிய, பொருளாதாரம் மீள்வதற்கான வழியே இல்லை. இப்போது பேசுங்கள் பிரதமரே.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அக்டோபர் 15ம் தேதி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)

தமிழில் : ஏ.சங்கர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Across the aisle the real world beckons the pm

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X