சில வாரங்களுக்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீரில் நிலவும் அரசியல் சூழல் பற்றி குறிப்பிட்டு எழுதியிருந்தேன். பிஜேபி, காஷ்மீர் மீது வைத்திருக்கும் நிலைப்பாட்டினை குறித்து அவர்களை விமர்சிக்க நான் ஒரு போதும் தயங்கியதே இல்லை.
பிடிபி-பிஜேபி கூட்டணி முடிவிற்கு வந்த சமயத்தில் பிடிபி.க்கோ அல்லது அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முஃப்திக்கோ அப்பதவியில் இருந்து விலகுவதை தவிர வேறெந்த வாய்ப்புகளும் இல்லை. அவர் விலகிய பின்பு, ஆளுநர் ஆட்சியில் வந்து மாட்டிக்கொண்டது காஷ்மீர். ஆளுநரின் ஆட்சி என்பது கிட்டத்தட்ட நேரடியான மத்திய அரசின் ஆட்சி தான் என்பதை நாம் அறிவோம்.
இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களுக்கு இப்பிரச்சனையின் ஆழம் தெரியவில்லை. தீவிரவாதம் ஒழிக்கப்படும், பிரிவினைவாதிகள் தண்டிக்கப்படுவார்கள், அமைதியை மீண்டும் நிலை நாட்டுவோம், ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாக செயல்படும் என்று எத்தனை போலியான மாயாஜாலம் மிக்க வார்த்தைகளை பயன்படுத்தி மக்களைக் கட்டிப் போட்டிருக்கின்றார்கள் ஆட்சியாளர்கள். அதனால் தான் அங்கு கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியையும் தேசத்துரோக நடவடிக்கையாக கணக்கில் கொள்ளப்பட்டது.
பிஜேபியின் நிலைப்பாடு
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி அமைப்பின் அரசியல் கொள்கை என்பது, “சரியோ தவறோ அரசிற்கு உறுதியாக நிற்போம் ” என்பது தான். ஆனால், காஷ்மீரில் நடந்த ஆட்சியினை ஒரு நிமிடத்தில் கலைத்துவிட்டு, மக்களிடம் ஒரு மன்னிப்பும் கூட கேட்காமல் விலகியது ஏன் என்று தான் புரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்பாக, உள்துறை அமைச்சர், காஷ்மீரில் நடக்கும் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் முடிவினை கண்டுபிடித்துவிட்டதாக கூறினார். ஆனால் ஆளுநர் ஆட்சிக்குப் பின்பு, தீவிரவாதத்தினை பொறுத்துக் கொண்டு இனி ஒரு நிமிடமும் அமைதியாக இருக்க முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் யாரும் இறுதி வரையில் அவர் கண்டுபிடித்துவிட்ட முடிவினைப் பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல் போய்விட்டார்கள்.
காஷ்மீரில் இரமலான் மாதத்தினை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தாக்குதல் நிறுத்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்த விரும்பியது. ஆனால் இந்திய ராணுவ உயர் அதிகாரி, ‘தீவிரவாத இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் எங்களோடு போராட விரும்பினால் போராட்டத்தை தொடருங்கள், நாங்கள் எங்களின் தாக்குதல்களை உங்கள் மீது தொடருவோம்.. ஆனால் ஒரு போதும் நீங்கள் தேடும் அஜாதி உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது’ என்று, ஆளுநர் ஆட்சி நடைமுறைக்கு வந்த பின்பு மிகவும் துணிவாக பேசுகின்றார். மேலும் அவர் எந்த அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகாமல் இத்தாக்குதல்களை தொடருவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இது குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பவர் நம் நாட்டின் பிரதமர் மட்டும் தான். மூன்று வருடங்களுக்கு முன்பு நான் சொன்னதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிடிபி மற்றும் பிஜேபி கூட்டணி என்பது அத்தனை சரியானதாக அமையாது. அதனால் தான் அவர்கள் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலே அதற்கான வெளிப்படையான எதிர்ப்பினை காஷ்மீர் மக்கள் முன்வைத்தார்கள். பிடிபி கட்சியை ஏமாற்றுக்காரர்களாகவும், பிஜேபியினை ஆட்சியைப் பிடிப்பவர்களாகவும் தான் அவர்கள் பார்த்தார்கள்.
இவர்கள் ஆட்சியில் இருந்த 48 மாதங்களில் மட்டும் எத்தனை மோசமான தாக்குதல்கள், பலிகள், மற்றும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதனை யோசித்து செயல்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அதனால் தான் ஸ்ரீ நகரில் நடந்த இடைத்தேர்தலில் 7% ஓட்டினைக் கூட அவர்களால் பெற இயலவில்லை.
அடிப்படைக் கொள்கைகளில் இவர்கள் மாற்றங்கள் கொண்டு வந்த காரணத்தால் மட்டுமே அதிக இடங்களில் இழப்பினை சந்தித்திருக்கின்றது காஷ்மீர். சில அமைச்சர்கள் அவர்களுக்கான பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்ள நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அதனால் தான் சொந்த பிரஜைகளின் மீதே தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது அவ்வரசு.
மக்கள் கேட்கும் கேள்விகள்
அதிக வயது காரணமாக இம்மாத இறுதியுடன் பணி ஓய்வு பெற இருக்கும் வோஹ்ராவினைத் தொடர்ந்து யார் ஆளுநராக பொறுப்பேர்கள்? அவர் சென்ற பின்பும் காஷ்மீர் மீதான ஆட்சி இராணுவ கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகவே இருக்குமா?
ஆளுநர் ஆட்சியில் ஒரு பெரும் படையினைக் கொண்டு தீவிரவாதம் ஒழிக்கப்படுவது மிக முக்கியமான பொறுப்பாக அமையுமா?
புதிய சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறுமா? ஏன் எனில், நடைபெற இருக்கும் தேர்தலை காஷ்மீர் புறக்கணிப்பதற்கான காரணிகள் மிகவும் அதிகமாக இருக்கின்றது.
பாகிஸ்தான் உடன் போர் மூழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா? ஏன் எனில் எந்நேரமும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை ஒரு போராக போய் முடியும் நிலையில் பதற்றமான நிலையில் தான் இருக்கின்றது காஷ்மீர்.
நாம் காஷ்மீரை இன்னும் முழுதாக இழந்துவிடவில்லை ஆனால் அதனை பேராபத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றோம் என்பது மட்டும் வெளிப்படையான அப்பட்டமான உண்மை.
தமிழில் : நித்யா பாண்டியன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.