ப.சிதம்பரம் பார்வை : உண்மை, அதற்கு பிறகு மீண்டும் உண்மை.

உண்மை நிலை என்னவென்றால், பொருளாதாரம் மிக மோசமாக நிர்வகிகக்கப்பட்டு இருந்ததும், புதிய முதலீடுகள் வராததும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாததுமே காரணம்.

ப.சிதம்பரம்

தாமதமாக தொடங்கப்பட்ட பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம் நிறைவை நெருங்குகையில், மத்திய நிதியமைச்சர் ஒரு நெருக்கடியை சந்தித்தார். 4 ஜனவரி 2018 அன்று மாநிலங்களவையில் பொருளாதாரத்தின் நிலை குறித்த விவாதம் நடைபெற இருந்தது. அந்த விவாதத்துக்கு நிதியமைச்சர் பதிலளிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கைக்கு 27 நாட்களே இருக்கும் நலையில், பொருளாதாரம் குறித்து விவாதிப்பதும், வாக்குறுதிகள் அளிப்பதும் தர்மசங்கடமானது. பொருளாதாரத்தின் உண்மை நிலையை அனைவருமே அறிவார்கள். ஜெய்ட்லி அவர்களின் பதில், உண்மைக்கு பிந்தையது. மீண்டும் உண்மையை பேசுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி விகிதம், நிதிப் பற்றாக்குறை

1) “கடந்த மூன்றரை முதல் நான்கு வருடங்களில், பொருளாதார விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதை அரசு துரிதப்படுத்துவதற்கு தேவையான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பொருளாதாரத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று நிதியமைச்சர் கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவெடுக்கும் நடைமுறைகள் ஒன்று, வெளிப்படைத்தன்மை அற்றதாக இருக்கிறது. அல்லது பிழையானதாக இருந்தது பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், பிழையான ஜிஎஸ்டியும் இதற்கு உதாரணம். பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இதன் விளைவாக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. இதை அரசு மிகத் தயக்கத்தோடு ஒப்புக் கொண்டுள்ளது. ஜனவரி 2016 தொடங்கி, அடுத்தடுத்த ஏழு காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 8.7, 7.6, 6.8, 6.7, 5.6, 5.6 மற்றும் 6.1 சதவிகிதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 9.1 சதவிகிதத்திலிருந்து 6.3 சதவிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் தொழில் உற்பத்தி 121.4 முதல் 120.9 வரை, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

2) “நிதிப் பற்றாக்குறையில் சரிவு ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இன்று நிதிப் பற்றாக்குறையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 6 சதவிகிதத்தை எட்டியுள்ளது.” என்றார் நிதியமைச்சர். சர்வதேச நிதிச் சிக்கலுக்கு பின்னர், இதற்கு முன் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், செலவினத்தை அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை 5.9 சதவிகிதத்தை எட்ட அனுமதியளித்தது. அடுத்த இரண்டாண்டுகளில் இது 4.9 சதவிகிதம் முதல் 4.5 சதவிகிதம் வரை (31.03.2014) வரை குறைக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இதை 31.03.2018 அன்று உள்ளபடி, 3.2 சதவிகிதமாக குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு முந்தைய அரசு மற்றும் தற்போதைய அரசு ஆகிய இரண்டுமே எடுத்த நடவடிக்கைகளால் இந்த சதவிகிதம் 1.4 சதவிகிதமும், 1.3 சதகிவிதமாகவும் குறைந்தது பாராட்டத்தக்க அம்சம். வாக்குறுதியளித்தபடி, நிதியமைச்சர், இந்த நிதி இலக்கை 2017-18 நிதியாண்டின் இறுதியில் அடைந்தாரென்றால் நான் அவரை பாராட்டுவேன்.

தொழில் மற்றும் ஏற்றுமதி

3) “தொழில் நடத்த ஏதுவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவை 168 நாடுகளில் 142வது இடத்தில் விட்டுச் சென்றீர்கள். 142வது இடத்திலிருந்து 100வது இடத்துக்கு வந்தால், அதன் தாக்கம் என்ன என்று தெரியும். 2011ல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்தியா 183 நாடுகளில் 134வது இடத்தில் இருந்தது.” என்றார் மத்திய நிதியமைச்சர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் 189 இடங்களில் இந்தியா 142க்கு முன்னேறியது. 2017ம் ஆண்டு, 189 நாடுகளில் 130வது இடத்துக்கு உயர்ந்தது. வெறும் இரண்டே இரண்டு நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த முடிவு இது என்றாலும் இது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் இதன் உண்மையான தாக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கீழே உள்ள பட்டிலை பாருங்கள்.

pc - graph 01

4) “உலக பொருளாதார நிலைமை பலவீனமாக இருக்கையில், வாங்கும் திறன் குறையும், ஏற்றுமதிகள் மந்தமாகும். ஆனால் இந்த ஆண்டுக்கான ஏற்றுமதி விகிதம் மாறியுள்ளது“ என்றார் நிதியமைச்சர். இது தொடர்பான புள்ளி விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. நமது ஏற்றுமதிக்கும், உலக பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லை. உலகப் பொருளாதார விகிதம் வளர்ச்சியடைந்த போது கூட, ஏற்றுமதி 300 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருந்தது. இதற்கு எந்த விளக்கமும் இல்லை.

pc - graph-02

முதலீடுகள் மற்றும் வாராக் கடன்கள்.

5) “பொது முதலீட்டின் அடிப்படையில் உருவாகும் முதலீடுகள் சவாலாகவே இருந்தன. இது கடந்த காலாண்டுக்கான புள்ளி விபரங்கள் ஆகும். ஆரோக்கியமான விதத்தில், 4.7 சதவிகிதத்தில் தொடங்கிய இது, வரவேற்கத்தக்கது. இதே போல, உணவல்லாத கடன் விகிதம் 10 முதல் 11 சதவிகிதம் வரை வளர்ந்துள்ளது” என்று கூறினார் நிதியமைச்சர். ஒட்டுமொத்த முதலீடு வளர்ச்சி என்பது 2014-15 முதல் காலாண்டு முதல் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது (32.2 சதவிகிதம்). 2017-18 இரண்டாவது காலாண்டில் 28.9 சதவிகிதத்தை எட்டியது. கடன் வளர்ச்சி 2014-15 முதல் காலாண்டு முதல் தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வருகிறது (12.9 சதவிகிதம்). 2016-17 நாலாவது காலாண்டில், 5.4 சதவிகித அளவு வீழ்ச்சியடைந்தது. 2017-18 காலாண்டில், லேசான முன்னேற்றம் ஏற்பட்டு 6.5 சதவிகிதத்தை எட்டியது. இரண்டாவது காலாண்டில் அதிகரித்த சதவிகிதம் வளர்ச்சியா என்றால், தற்போது அதை கணிக்க இயலாது. இந்த சிறிய முன்னேற்றத்தை வைத்து, இதை முன்னேற்றம் என்று அளவிட முடியாது.

6) “இதனால்தான் மறு முதலீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். வங்கிகளின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்றார் நிதியமைச்சர். வாராக்கடன்கள் குறித்த புள்ளி விபரமே போதுமான விளக்கத்தை அளிக்கிறது. வாராக் கடன்களின் அளவு, 2013-14 நிதியாண்டில் 2,63,372 கோடியிலிருந்து 30, செப்டம்பர் 2017ல் 7,76,087 கோடியாக அதிகரித்தது. 43 மாதங்கள் பதவியிலிருந்த பிறகு, எந்த அரசும் முந்தைய அரசின் செயல்பாடுகளை இதற்கு காரணமாக கூற முடியாது. 31, மார்ச் 2014 அன்று நன்றாக இருந்த கடன்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் ஏன் வாராக் கடன்களாக மாறியது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

உண்மை நிலை

உண்மை நிலை என்னவென்றால், பொருளாதாரம் மிக மோசமாக நிர்வகிகக்கப்பட்டு இருந்ததும், புதிய முதலீடுகள் வராததும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாததுமே காரணம். உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியாவும் ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால், 2017-18 நிதியாண்டு 6.5 சதவிகித வளர்ச்சியோடு நிறைவடையும். இது மேலும் குறையவும் செய்யலாம். 2018-19 வேலை வாய்ப்பு, முதலீடுகள், விலைவாசி போன்றவற்றுக்கு பெரும் சவாலாக அமையும். மக்கள் “கடந்த ஐந்தாண்டுகளாக எங்களுக்கு என்ன கிடைத்தது” என்று கேள்வி எழுப்பத்தான் போகிறார்கள். விடைதான் இல்லை.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 14.1.18 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : ஆ.சங்கர்.

×Close
×Close