Advertisment

ப.சிதம்பரம் பார்வை : இந்திர தனுஷுக்கு என்ன ஆயிற்று?

சீர்திருத்தம் என்பது, சரியான முறையில் உள்வாங்கி, முறையாக திட்டமிட்டு, அதன் முடிவுகளின் மீதான தொடர்ந்த கண்காணிப்போடு செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iob schemes for senior citizens

iob schemes for senior citizens

ப.சிதம்பரம்

Advertisment

பொதுத் துறை வங்கிகள் அவசியமா அவசியமில்லையா? இதற்கான விடை, வாரத்தின் கிழமையை பொறுத்தது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

பொதுத் துறை வங்கிகள்தான் கிராமப்புரங்களில் கிளைகளை திறப்பதில் முன்னிலையில் இருந்தன. தற்போது பொதுத் துறை வங்கிகளின் மொத்த கிளைகள் 1,16,394. இவற்றில், 33,864 ஊரகப் பகுதிகளில் உள்ளன.

விவசாயக் கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் முனைப்பு காட்டியுள்ளன. 2017-18ம் நிதியாண்டில் மட்டும் பொதுத் துறை வங்கிகள் வழங்கிய குறுகிய கால பயிர்க் கடன்களின் மொத்த தொகை, ரூபாய் 6,22,685 கோடி.

குறிப்பிட்ட துறைகளை தேர்ந்தெடுத்து, அத்துறைகளுக்கு கடன் அளிப்பதை பொதுத் துறை வங்கிகள் கட்டாயம் என்று விதிகளை உருவாக்கின. அப்படி இல்லையென்றால், பல துறைகளுக்கு கடனே கிடைக்காமல் போயிருக்கும். கடன் வட்டி வகிதங்களை குறைத்து, ஏழைகளுக்கு கடன் வழங்கும் பணியையும் செய்தது பொதுத் துறை வங்கிகளே.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியது பொதுத் துறை வங்கிகளே. கல்விக் கடன்களை அதிகம் வழங்கியதும் பொதுத் துறை வங்கிகளே. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள கடன் தொகை 61,600 கோடி. கல்விக் கடன்கள் 70,400 கோடி.

ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், ஊரக கட்டமைப்புகளை மேம்படுத்த பொதுத் துறை வங்கிகளே கடன் வழங்கின.

பொதுத் துறை வங்கிகளே மக்களுக்காக வங்கிகளை நடத்தியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பதவி விலகுகையில், கட்டுப்பாடுகளற்ற வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 24.3 கோடி. பிஜேபி அரசு, 31.11 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளை திறந்துள்ளதாக கூறுகிறது.

கருப்பு வெள்ளை அல்ல

இந்தியாவின் வங்கிக் கொள்கை, கடந்த பல ஆண்டுளாகவே நல்ல பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒரே ஒரு பொதுத் துறை வங்கியாக (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) இருந்து. வங்கிகளை தேசியமயமாக்கியது முதல், பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கை சதவிகிதத்துக்கும் கீழே குறைத்தது முதல், பொதுத் துறை வங்கியை தனியார் மயமாக்கியது (யுடிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கியாக மாற்றப்பட்டது), வரை, இந்தியாவின் வங்கிகள் தொடர்பான கொள்கை முழுமையடைந்துள்ளது.

தனியார் வங்கிகளோடு ஒப்பிடுகையில், பொதுத் துறை வங்கிகளில் பல குறைகள் உள்ளன என்பது உண்மையே. நிதி முதலீடு, நிர்வாகம் போன்ற பலவற்றில், பொதுத் துறை வங்கிகளிடம் குறை இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், பரவலாக, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களிடையே, பொதுத் துறை வங்கிகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்று தீர்க்கமான கருத்து உள்ளது. அதில் நியாயமும் உள்ளது. பல்வேறு சமயங்களில் எடுத்த கருத்துக் கணிப்புகள், பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிரானதாகவே உள்ளன.

வங்கித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தேசிய மயமாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளை தனியார்மயப்படுத்த வேண்டும் என்ற குரல், பஞ்சாப் நேஷனல் வங்கியின் சமீபத்திய ஊழலுக்கு பிறகு அதிகமாக எழத் தொடங்கியுள்ளது. ஒரு வங்கியின் உரிமையாளர் யார் என்பதற்கும், வங்கி ஊழலுக்கும் எந்தத் தொடர்பும் இல்ரலை. கடந்த பத்தாண்டுகளில் மட்டும், மிகப் பெரிய தனியார் வங்கிகளான, லீமேன் பிரதர்ஸ், ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லேன்ட், மற்றும் மெரில் லின்ச் வங்கிகள் ஊழல் காரணமாக நிலை குலைந்துள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறை

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் பல அடுக்கு மேற்பார்வைகளை கொண்டவை. மத்திய ரிசர்வ் வங்கி, நிதி சேவைகள் துறை, மற்றும், பிஜேபி அரசு புதிதாக உருவாக்கிய வங்கி மேலாண்மை குழுமம் ஆகியவை இந்தப் பணிகளை செய்கின்றன. இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கம், ஒரு பொதுத் துறை வங்கி, ஏழு அடுக்கு தணிக்கைகளை கொண்டது – உள் தணிக்கை, சமகால தணிக்கை, திடீர் தணிக்கை, மீட்பு தணிக்கை, வருடாந்திர தணிக்கை, வெளி அமைப்புகளின் தணிக்கை மற்றும் ஆண்டு இறுதி தணிக்கை ஆகியவை.

இத்தணிக்கையை நடத்துபவர்களில் முதன்மையானது, மத்திய கணக்காயர் அலுவலகம் மற்றும் நான்கு முக்கிய பட்டய கணக்காளர் நிறுவனங்க்ள். பொதுத் துறை வங்கிகளின் சிக்கல்கள் பிஜேபி அரசில்தான் தொடங்கியது என்று கூறுவது நியாயமாக இருக்காது. ஆனால் அதே நேரத்தில் 2014ம் ஆண்டு முதல், பிஜேபி அரசு வங்கி நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்தது என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.

பதவியேற்ற உடன், பிஜேபி அரசு பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மேலாண் இயக்குநர்களின் அலுவலகங்களை வங்கி நிர்வாகத்திலிருந்து பிரித்தது. வங்கித் தலைவர்களை தன் இஷ்டம் போல மாறுதல் செய்தது. விதிகளை மாற்றி, இரண்டு முக்கிய வங்கிகளுக்கு வங்கி ஊழியர் அல்லாதவர்களை தலைவர்களாக நியமித்தது. சில நாட்களிலேயே விதிகளை மீண்டும் மாற்றி, பழைய முறையின்படியே, வங்கியின் செயல் இயக்குநர்களை மேலாண் இயக்குநர்களாக நியமிக்கும் பழைய விதிமுறைகளை அமல்படுத்தியது!!

2015ம் ஆண்டில், மிகுந்த படோடாபத்தோடு அரசு பொதுத் துறை வங்கிகளை சீர்திருத்த இந்திரதனுஷ் என்ற திட்டத்தை அறிவித்தது. பிஜேபியின் வழக்கமான பாணியில் A என்றால் நியமனம் (அப்பாயின்ட்மென்ட்), B என்றால் வங்கிக் குழுமம் (பேங்க் போர்ட் ப்யூரோ) G என்றால் நிர்வாகச் சீர்திருத்தம் (கவர்னன்ஸ் ரிஃபார்ம்ஸ்) என்று அறிவிக்கப்பட்டது.

எஸ்எஸ் முந்ரா, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனராக ஜுலை 2017ல் நியமிக்கப்பட்டார். பொதுத் துறை வங்கிகளை மேற்பார்வை செய்யும் பணி அவருடையது. வழக்கமாக வங்கி அதிகாரிகளால் நிரப்பப்படும் இந்தப் பதவி, இந்த நாள் வரை காலியாக இருக்கிறது.

ஒன்றும் புரியவில்லை

வங்கிகளில் மறு முதலீடு செய்வதற்கு அரசு திடீரென நிபந்தனைகளை விதித்தது. எந்த வங்கி சீர்திருத்தங்களை மேற்கொள்கிறதோ, அந்த வங்கிக்குத்தான் மறு முதலீடு என்று அறிவித்தது. இந்த அடிப்படையில் 2014-15ம் ஆண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 4,714 கோடி வழங்கப்பட்டது. மேலும் 5,473 கோடி வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்த மறு முதலீட்டை பெறுவதற்கு எப்படி தகுதி பெற்றது என்பதற்கான விடை எங்கும் இல்லை.

பொதுத் துறை வங்கிகளை சீர்திருத்தத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பார்த்தால் மிகவும் குறைவே. மூன்று முக்கிய சான்றுகள்.

1) பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஊழல் மற்றும் இதர பொதுத் துறை வங்கிகளில் நடந்துள்ள ஊழல்களும், பொதுத் துறை வங்கிகளில் எதுவுமே மாறவில்லை என்பதையே உணர்த்துகிறது.

2) இந்திர தனுஷ் திட்டத்துக்கு பிறகு, பல்வேறு எழுத்துச் சுருக்கங்களை படோடாபமாக இந்த அரசு அறிவித்து வருகிறது. EASE (Enhanced Access and Service Excellence), எளிமையான அணுகுமுறை மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவை. மற்றும் ஏழு கோண அணுகுமுறை என்றும் அறிவித்தது. இந்திரதனுஷ் என்ற அஸ்திரம் தவறாக எய்யப்பட்டதா அல்லது உண்மையில் எய்யப்பட்டதா என்பது யாருக்கும் தெரியாது.

3) பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து பல நாள் மவுனத்துக்கு பிறகு வாய் திறந்த பிரதமர், வங்கி அதிகாரிகள் மற்றும் தணிக்கையாளர்கள் இடையே நெறிமுறைகளை பின்பற்றும் வழக்கம் இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும், இது போன்ற விதிவிலக்கான நேர்வுகள் வருங்காலத்தில் தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளா. விதிவிலக்கா? அரசுக்கு அடுத்து என்ன செய்வது என்பதே புரியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

சீர்திருத்தம் என்பது, சரியான முறையில் உள்வாங்கி, முறையாக திட்டமிட்டு, அதன் முடிவுகளின் மீதான தொடர்ந்த கண்காணிப்போடு செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை. அதற்கு சில காலம் ஆகும். ஐந்து ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். இதற்காகத்தான் ஒரு அரசாங்கத்துக்கு ஐந்து ஆண்டுகள் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகள் விரயமாக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது ஆண்டும் விரயமாக்கப்படத்தான் போகிறது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 25.02.18 அன்று இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : ஆ.சங்கர்

P Chidambaram A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment