ப.சிதம்பரம் பார்வை : குடியரசு முறை சிதைக்கப்படுகிறதா?

தென்னகத்தில் பற்றிய தீயை அணைப்பதற்கு, அதிக மக்கள் தொகை கொண்ட வறிய மாநிலங்களோடு ஒப்பிடுவது சரியான நடவடிக்கை அல்ல. எல்லா மாநிலங்களிலும் வறுமை உள்ளது.

ப.சிதம்பரம்

கடந்த வாரம் நான் பயந்தது போலவே, 15வது நிதிக் குழுவுக்கான வரம்புகள் பற்றவைத்த தீ பரவியுள்ளது. அந்தத் தீயை அணைக்க எவ்விதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 280ன் படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும், அவற்றுக்கு உரிய வரி வருவாயை பெறுவதும், வரிகள் பிரித்தளிக்கப் படுகையில் நியாயமான பங்கை பெறுவதும் உரிமை. நிதிக் குழுவும் யாருக்கு கீழும் செயல்படும் அமைப்பு அல்ல. அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது. 14வது நிதிக் குழுவின்படி, மாநிலங்களுக்கான வரி வருவாயின் சதவிகிதம் 42. இந்த சதவிகிதம் குறையும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

நிதிக் குழுவின் மற்றொரு கடமை பிரிவு 280 (3) (பி)ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, “மாநிலங்களுக்கு மொத்த நிதி வருவாயை பிரித்தளிப்பதற்கான நடைமுறைகள்” கூறப்பட்டுள்ளன. இந்த ஷரத்தை பிரிவு 275 உடன் சேர்த்து படிக்க வேண்டும். 275 பாராளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் நிதி தேவைப்படும் மாநிலங்களுக்கு, மானியம் வழங்க வகை செய்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் நிதிக் குழு எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுகிறது. பாராளுமன்றம் அதை ஏற்றுக் கொண்டு மாநிலங்களுக்கு நிதி வழங்க வேண்டும்.

கேள்விக்குள்ளாகும் நிதிக் குழு வரம்புகள்

நிதிக் குழுவின் வரம்புகளில் பத்திகள் 2,3,4 மற்றும் 5 முக்கியமானவை. இரண்டாவது பத்தியில், தெளிவில்லாமல், குழப்பத்தையும், ஊகத்துக்கும் வழிவகுக்கும் பல வாசகங்கள் உள்ளன. நிதிக் குழு, மாநிலங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டால், மானியம் “வழங்கலாம்” என்று கூறுகிறது. பத்தி 3ல் வரும் துணை பத்தி (4) முக்கியமானது. “தேசிய வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியான புதிய இந்தியா 2022” என்று குறிப்பிடுகிறது. பத்தி 4 நிதிக்குழு பரிசீலனை செய்ய வேண்டிய பகுதிகளை குறிப்பிடுகிறது.

1) மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்

2) நேரடி மானிய திட்டத்தின் கீழ், எவ்வளவு சேமிப்பை மாநிலங்கள் செய்துள்ளன.

3) இலவச மற்றும் மானியத் திட்டங்களை குறைத்து அதனால் ஏற்பட்ட சேமிப்பு அல்லது அப்படி குறைக்காததனால் ஏற்பட்ட இழப்பு
பத்தி 5 முழுக்க முழுக்க பாரபட்சமானது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஐ அடிப்படையாகக் கொண்டு பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்க்கும் மாநிலங்கள்

15வது நிதிக் குழுவின் வரம்புகளை கவனமாக ஆராய்ந்த மாநிலங்கள் உடனடியாக எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளன. இதற்கான முதல் முயற்சியை தென்னக மாநிலங்கள் எடுத்து, அதற்கான ஒரு கூட்டத்தை கேரளாவிலே நடத்தியுள்ளன. 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா பங்கேற்கவில்லை. தமிழ்நாடு, பிஜேபியின் மீதான அச்சத்தால் பங்கேற்கவில்லை. தெலங்கானா, பிஜேபியோடு சேர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தினால் பங்கேற்கவில்லை. 15வது நிதிக் குழுவின் வரம்புகள் எழுப்பும் கேள்வியை நான் பட்டியலிடுகிறேன். மாநிலங்கள் இந்தக் கேள்விகளை மத்திய அரசிடம் கேட்க வேண்டும். பதிலளிக்குமாறு வற்புறுத்த வேண்டும்.

1) மத்திய அரசு நிதிக் குழுவிடம், வருவாய் மானியங்களை வழங்கலாமா வேண்டாமா என்று கேட்க முடியுமா? அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 280 (3) (பி)யின் படி, இது தொடர்பான கொள்கைகளை வகுப்பது நிதிக் குழுவின் கடமை. பிரிவு 275ன்படி, இத்தகைய மானியங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவது பாராளுமன்றத்தின் உரிமை. இந்த உரிமை மற்றும் கடமைகளை எப்படி மத்திய அரசு அபகரித்துக் கொள்ள முடியும்? இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.

2) புதிய இந்தியா 2022 என்றால் என்ன? தற்போது வரை, பிரதமரின் வெற்றுக் கோஷங்களில் இதுவும் ஒன்று. இது தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் திட்டங்களிலோ, பாராளுமன்றத்தின் விவாதங்களிலோ இடம் பெறவில்லை. 15வது நிதிக் குழு தன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பல நாட்கள் முன்னதாகவே ஏப்ரல் மே-வில் பாராளுமன்றத் தேர்தல் வரும். நிதிக் குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்க இறுதி நாள் 30 அக்டோபர் 2019. நிதிக் குழுவுக்கான வரம்புகளில், ஒரு அரசியல் கட்சியின் வெற்று கோஷம் எப்படி இடம் பெற முடியும்?

3) “மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கிய மாநிலங்கள்” இந்த அளவுகோலில் எந்த மாநிலங்கள் பயனடையும்? நிச்சயமாக, பல ஆண்டுகள் முன்னதாகவே சிறந்த திட்டங்களின் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதில் பயன்பெற வாய்ப்பில்லை. அம்மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, கல்வி, சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, ஆகியவற்றில் தங்கள் நிதியையும் நேரத்தையும் செலவிட்டுள்ளன. ஆனால் இப்படி செய்ததற்காக, தற்போது இவர்கள் அடிப்படை மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியை குறைவாகப் பெறப் போகிறார்கள்.

4) நேரடி மானியத் திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவை தொடர்ந்து விவாதத்துக்கு உள்ளாகிய விஷயங்கள். ஒரு மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கான உணவு தானியங்களை, அம்மாநிலம் நேரடி மானியத் திட்டத்தை எப்படி செயல்படுத்தியிருக்கிறது என்பதன் அடிப்படையில் முடிவு செய்யலாமா? டிஜிட்டல்மயமாக்கல் எந்த அளவுக்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது? இது போன்ற கேள்விகளை அந்தந்த மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும். நிதிக் குழு அல்ல.

5) பிரபலமான மக்கள் நல திட்டங்கள் என்றால் என்ன? காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அது வாக்குக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் இன்று அது நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் ஒரு திட்டம்.

6) 1971 மக்கள் தொலைக் கணக்கெடுப்பை நிராகரித்து விட்டு, 2011 கணக்கெடுப்பை அடிப்படையாக வைப்பதால் என்ன நடக்கும்? எகனாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லியில் இது குறித்து எழுதிய வி.பாஸ்கர் என்பவர், மாநிலங்கள், இந்த புதிய முறையினால் இழக்கும் நிதியை தெளிவாக பட்டியலிட்டுள்ளார். (அட்டவணையை பார்க்கவும்)
chid-graph - pchidambaram 16.4.18

தென்னகத்தில் பற்றிய தீயை அணைப்பதற்கு, அதிக மக்கள் தொகை கொண்ட வறிய மாநிலங்களோடு ஒப்பிடுவது சரியான நடவடிக்கை அல்ல. எல்லா மாநிலங்களிலும் வறுமை உள்ளது. குறைபாடுகள் உள்ளன. இது சரியான அணுகுமுறை கிடையாது. குடியரசுத் தத்துவத்துக்கு எதிரானதாக அல்லாத ஒரு வழிமுறையின் அடிப்படையிலேயே இதை தீர்க்க முடியும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 15.04.18 அன்று, இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஆ.சங்கர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close