அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற இ.பி.எஸ் முன் உள்ள சவால்கள்!

இ.பி.எஸ்-சின் கடந்த பரிணாம வளர்ச்சியைத் திரும்பிப் பார்த்தால், அவர் தலைவராக உருவான விதம் போற்றுவதற்கான ஒரு முன் மாதிரி வழி அல்ல. அரசியலைப் பார்க்கும் இளைஞர்களுக்கு இவருடைய வளர்ச்சி அரசியல் அறத்தின் அடிப்படையில் முன் மாதிரி அல்ல.

Edappadi K Palaniswami, AIADMK General Secretary Edappadi K Palaniswami, AIADMK, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் இ.பி.எஸ், இ.பி.எஸ் முன் உள்ள சவால்கள் - AIADMK General Secretary Edappadi Palaniswami, EPS faces challenges and questions
எடப்பாடி பழனிசாமி

ஒரு நீண்ட போராட்டத்துகுப்பின் சட்டப்பூர்வமாக, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க-வில் ஒரு சாதாரணத் தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தை தொடங்கி அமைச்சர், முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகி இருக்கிறார். இது பொதுவாழ்க்கையில் ஒரு தலைவரின் முக்கியமான முன்னேற்றம்.

அதிலும், கடந்த 7 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பரிணாம வளர்ச்சி பலரும் எதிர்பாராதது. தற்போது அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக ஒற்றைத் தலைமையாக உருவெடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் ஒரு தலைவராக எப்படி உருவாகி இருக்கிறார் என்பதை திரும்பி பார்ப்போம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்-ஐ மாற்றிவிட்டு முதலமைச்சராக வேண்டும் என முயற்சி செய்த சசிகலா, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சிறை செல்வதற்கு முன், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இன்றைக்கும் அ.தி.மு.க எதிர்ப்பாளர்களால் பகிரப்படும் அந்த வீடியோவில், எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழுந்ததைப் பார்த்த எவரும் இவர் சசிகலாவின் விசுவாசியாக இருப்பார் என்று துளி அளவேனும் கருதியிருக்கலாம். ஆனால், விரைவிலேயே, அரசியல் ஆட்டம் அரங்கேறியது.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்தது. சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஒ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவி அளித்தார். அப்போதே, இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் லகானைக் கையில் பிடித்துவிட்டார் என்றே கூற வேண்டும். அ.தி.மு.க-வினர் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரையும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று அழைத்தார்கள். ஆனால், விசை இ.பி.எஸ் வசம் இருந்தது.

ஜெயலைதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க-வின் அடுத்த கட்ட தலைவர்களும் தொண்டர்களும் தாய்க்கோழி இல்லாத கோழிக்குஞ்சுகளைப் போல ஆகிவிட்டார்கள் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் கருதிய நிலையில், செல்லூர் ராஜுவின் மொழியில் சொல்வதென்றால், அ.தி.மு.க-வினர் யாரும் எதிர்பாராத வகையில் காக்கா கூட்டமாகிவிட்டார்கள். சேர்ந்து செயல்பட்டார்கள். தங்களைத் தாங்களே பாதுகத்துக்கொண்டார்கள். அதற்கு காரணம், ஜெயலலிதா இருந்தபோது, கட்சிக்காக உழைத்தால், தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் அங்கீகாரம் தேடி வரும் என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கி வைத்திருந்தார். அதனால்தான், அ.தி.மு.க நிர்வாகிகள் நிகரில்லா கள செயற்பாட்டாளர்களாக திகழ்கிறார்கள்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் தோற்றாலும் அதோடு நடந்த 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தேவையான தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்.

கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள், சர்ச்சைகள் நிறைய இடர்பாடுகள் இருந்தாலும், பா.ஜ.க தலைமையின் ஆதரவுடன் 4 ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் இ.பி.எஸ்.

2021 சட்டமன்றத் தேர்தலில், இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு கூட்டணி அமைத்து காய் நகர்த்தினார். வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு. தோற்றாலும், மோசமாக தோற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இ.பி.எஸ்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், இ.பி.எஸ் தலைமையில் சட்டப்பேரவையில் அ.தி.மு.க ஒரு வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இ.பி.எஸ் எதிர்க்கட்சித் தலைவரானார். அப்போதே, அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்-சின் பிடி முழுவதுமாக கை நழுவிப்போய்விட்டது என்று கூறலாம்.

இறுதியாக இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை பொதுச் செயலாளர் பதவியைக் குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டார். ஓ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்தாலும், இன்று சட்டப்பூர்வமாக அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராகி இருக்கிறார் இ.பி.எஸ்.

தமிழ்நாட்டின் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைமையாக உயர்ந்துள்ளார். முதலமைச்சராக இருந்தபோது தன்னை நிரூபித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக இ.பி.எஸ், ஆளும் தி.மு.க-வுக்கு இன்னும் போதுமான அழுத்தத்தை தரவில்லை என்று கூறலாம்.

இன்று அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக உயர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியை அரசியல் சாணக்கியர், வெற்றியாளர், அரசியல் ராஜதந்திரம், அரசியல் சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் என்று என்ன கூறினாலும், இ.பி.எஸ்-சின் கடந்த 7 ஆண்டுகால பரிணாம வளர்ச்சியைத் திரும்பிப் பார்த்தால், இந்த வளர்ச்சி, அவர் தலைவராக உருவான விதம் போற்றுவதற்கான ஒரு முன் மாதிரி வழி அல்ல. அரசியலைப் பார்க்கும் இளைஞர்களுக்கு இவருடைய வளர்ச்சி அரசியல் அறத்தின் அடிப்படையில் முன் மாதிரி அல்ல.

அரசியலில் இதெல்லாம் நடக்காததா? தி.மு.க-வில், வேறு எந்த கட்சியில் நடக்காததா என்று கேட்கலாம். இந்த வாதம் மிகவும் மோசமான ஒன்றைவிட மோசமான நாங்கள் பரவாயில்லை என்று கூறுவதாகவே இருக்கும். அ.தி.மு.க-வின் நிறுவனர் எம்.ஜி.ஆர் இப்படி உருவாகவில்லை. ஜெயலலிதா இப்படி உருவாகவில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் வெற்றிகரமான முதலமைச்சராக, அடுத்து பலமான எதிர்க்கட்சித் தலைவராக, நீண்ட போராட்டத்துக்குப் பின், ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு மாபெரும் கட்சியின் பொதுச் செயலாளராக ஒற்றைத் தலைமையாக உருவெடுத்திருக்கிறார். அவரை அரசியல் சாணக்கியர், சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர், வெற்றியாளராக ஜொலிக்கிறார் என்று பாரட்டலாம். இ.பி.எஸ் தனது இந்த இடத்தை சாதுரியத்தால் அடைந்திருக்கிறார் என்று திருமாவளவன் கூறியது சரிதான். ஆனால், அவருடைய அரசியல் ஆளுமையில் சில விடுபடல்களும் இடைவெளிகளும் சவால்களும் இருக்கவே செய்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் வெற்றிகரமான முதலமைச்சர் என்று நிரூபித்த இ.பி.எஸ், தேசிய அளவில் ஒரு ஆளுமை மிக்க மாநிலத் தலைவராகத் பரிமளிக்கத் தவறிவிட்டார். அதற்கான வாய்ப்புகளும் சூழலும் இருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மாநிலத் தலைவராக இருந்தாலும் தேசிய அளவில் ஈர்ப்புமிக்க தலைவர்களாக, ஆளுமையாக இருந்தார்கள்.

அ.தி.மு.க தொண்டர்களின் டி.என்.ஏ-வில் இருக்கும் ஒரு முக்கியமான தன்மை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற கவர்ச்சிகரமான தலைவர்களால் ஈர்க்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தற்காலிக திருப்தியை அளித்திருக்கிறார். ஏனென்றால், இ.பி.எஸ் எம்ஜி.ஆர், ஜெயலலிதா அல்ல. தலைமையின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு பழக்கப்பட்ட அ.தி.மு.க தொண்டர்களை தக்கவைத்துக்கொள்ள, மக்களை ஈர்க்கும் காந்தத் தன்மையை இ.பி.எஸ் எப்படி தனது ஆளுமையில் கொண்டுவரப்போகிறார்?

ஆளும் தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவராக போதுமான அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்ட இ.பி.எஸ் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஆன பிறகாவது வேகம் காட்டுவாரா?

தேசிய அளவில் ஆளுமை மிக்க தலைவராக எப்போது பரிணமிக்கப் போகிறார்? அதற்கு விவசாயி இமேஜும் சாதுரியமும் மட்டும் போதாது. பா.ஜ.க-வின் ஆதரவால்தான், அ.தி.மு.க இருக்கிறது என்ற தோற்றத்தை எப்போது மாற்றப்போகிறார்? ஏனென்றால், பா.ஜ.க என்னதான் சலசலப்பை ஏற்படுத்தினாலும், அவர்களை அ.தி.மு.க பொருட்படுத்துவதில்லை.

இ.பி.எஸ் தலைமைக்கு வந்த பிறகு, எல்லா தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்திருந்தாலும், இ.பி.எஸ் இனிவரும் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், அந்தப் பணியை தி.மு.க இந்த ஐந்தாண்டு ஆட்சியில் செய்து முடிக்கும் என்பது உறுதி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Aiadmk general secretary edappadi k palaniswami faces challenges and questions

Exit mobile version