அரவிந்தன்
தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்க கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த மூன்று வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு வழக்குகள், 29 எம்.எல்.ஏ.க்களின் பதவி தப்புமா, பறிபோகுமா என்பது பற்றியவை என்பதால், ஆட்சியின் ஆயுள் வழக்கின் முடிவைப் பொறுத்து அமையக் கூடியது. இதனால் தான் இந்த வழக்குகளின் தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆளும் கட்சிக்குள் பதற்றத்தையும், கவலையையும் தோற்றுவித்துள்ளது.
அ.தி.மு.க.வில் திருமதி சசிகலாவின் தலைமை தொடர்வதை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள், தற்போது சசிகலா சிறையில் இருப்பதால், டி.டி.வி. தினகரனின் தலைமையில் இயங்கி வருகிறார்கள். இவர்கள் கடந்த 2017இல் அன்றைய பொறுப்பு ஆளுநர் வித்யாசகராவைச் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார்களை அடுக்கி, ‘முதலமைச்சரை மாற்ற வேண்டும்’ என்று ஒரு மனு கொடுத்தார்கள். ‘முதல்வரை மாற்றுவது சட்டமன்றக் கட்சியின் வேலையே தவிர, ஆளுநர் அதை எப்படிச் செய்ய முடியும்?’ என்பது அவர்களுக்கு தெரியாததது அல்ல. எனினும், ஓ. பன்னீர்செல்வத்துடன் சமசரம் செய்து கொண்டு, சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டுச் செயல்படத் தீர்மானித்த எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட விரும்பிய சசிகலாவின் முடிவைச் செயல்படுத்த, இந்த 18 எம்.எல்.ஏ.க்கள் இந்த உத்தியைக் கையாண்டார்கள்.
‘அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் இந்த எண்ணிக்கை அதிகரித்துவிடக் கூடாது; அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கருதிய ஆளும்கட்சி, இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு விலகிச் செயல்படுவதாகக் கூறி, சபாநாயகர் மூலம் அவர்களது செயலுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி, அதன் தொடர்ச்சியாக, அவர்களின் எம்.எல்.ஏ. பதவியை கடந்த செப்டம்பரில் பறித்தும் விட்டது. ‘சட்டசபைக்குள் கொறடா உத்தரவை மீறி எதுவும் செய்யாத நிலையில், முதல்வர் மீது அதிருப்தியைத் தெரிவித்ததற்காக மட்டும் இந்த 18 பேரின் பதவியைப் பறித்துவிட முடியுமா?’ என்ற கேள்வி, இப்பிரச்சினையில் பலராலும் எழுப்பப்பட்டுள்ளது.
பதவிப் பறிப்பை எதிர்த்து அந்த 18 பேரும் ஹைகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் தரப்பும் சரி, எம்.எல்.ஏ.க்கள் தரப்பும் சரி, ஒரு மணி நேரம் வாதாட பல லட்சங்களை ஃபீஸாக வாங்கக் கூடிய நாட்டின் பிரபல வழக்கறிஞர்கள் படையையே சென்னைக்குக் கொண்டு வந்திருந்தனர். வாதங்கள் முடிவுற்று, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இது.
இந்த 18 எம்.எல்.ஏ.க்கள், ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தபோது, சட்டசபையில் அவரை ஆதரித்து வாக்களித்தவர்கள். அந்த வாக்களிப்பின்போது, சசிகலாவால் முதல்வர் பதவியை இழந்து, கட்சிக்கு வெளியே இருந்த (அல்லது ‘நான்தான் உண்மையான அ.தி.மு.க.’ என்று கூறிக் கொண்டிருந்த) ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.
‘கவர்னரிடம் முறையிட்டதற்காக 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகர், சட்டசபைக்குள்ளேயே கட்சிக் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி. உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அந்த 11 பேரின் பதவியைப் பறிக்க வேண்டும்’ என்று தி.மு.க. சட்டமன்ற கொறடா சக்ரபாணி தனியாக ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கிலும் விசாரணை முடிந்து, தீர்ப்பு அறிவிக்கப்படாமல் உள்ளது. டி.டி.வி. வகையறா எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, ஓ.பி.எஸ் அணியினர் பற்றிய வழக்கு இவற்றின் முடிவு ஆட்சியின் ஆயுளைத் தீர்மானிக்க வல்லது.
மூன்றாவது ஒரு வழக்கு - அ.தி.மு.க. ஆட்சியின் மீது கறையைப் பூசியிருப்பதோடு, உயர் போலீஸ் அதிகாரிகள் சிலரை தூங்க விடாமல் செய்திருப்பது. ‘தடை செய்யப்பட்ட போதை வஸ்துவான குட்கா விற்பனை, அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆதரவோடு நடைபெற்று வந்துள்ளது; அவர்களுக்கு பெரும் தொகைகள் தரப்பட்டிருப்பதாக டைரி பதிவு ஒன்று உள்ளது’ என்று வருமான வரித் துறை கண்டறிந்து வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் அமைந்த வழக்கு இது. ‘மாநில சுகாதாரத் துறை அமைச்சர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பெயர் குட்கா வியாபாரிகளால் பலனடைந்தோர் பட்டியலில் இருப்பதால், இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்து முடித்துள்ளது.
இவ்வழக்கு விசாரணையின் இடையே ஒரு கட்டத்தில், தலைமை நீதிபதி குறுக்கிட்டு, ‘இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பதை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதைப் பார்த்தால், இது ஆழமாக ஆராய வேண்டிய விஷயமோ என்று தோன்றுகிறது’ என்று கூறி, ஆட்சியாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார்.
இப்படிப்பட்ட பரபரப்பான இந்த மூன்று வழக்குகளின் முடிவுக்காக ஆளும்கட்சி கவலையுடனும், எதிர்க்கட்சி ஒருவித எதிர்பார்ப்புடனும், மீடியா ஆர்வமுடனும் காத்திருப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்?