சென்னா ரெட்டியையும் மறந்துவிட்டார்கள், ஜெயலலிதாவையும் துறந்துவிட்டார்கள்!

பாஜகவில் இணைய வேண்டும். அல்லது மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் முதல் அமைச்சருக்கு வேண்டும். முதலாவது விஷயம் நடக்கலாமே தவிர, இரண்டாவது விஷயம் நடக்க...

ச.கோசல்ராம்

தமிழகத்தில் ஜனநாயகம் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது என்று எதிர்கட்சிகள் எல்லாம் ஓரே குரலில் சொல்ல, ஆளும் கட்சியினரும், பாஜகவினரும் அதை மறுத்துப் பேசி வருகிறார்கள். ‘கவர்னர் எங்களுடைய அதிகாரத்தை எடுத்துக் கொண்டார் என்று அமைச்சர்கள் சொல்லட்டும். நாங்கள் பதில் சொல்கிறோம்’ என்கிறார், பாஜக பிரமுகர் ஒருவர்.

எந்த பசைப் போட்டு ஒட்டினால் நாற்காலியில் இருந்து பிரிக்க முடியாது என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கும், தமிழக அமைச்சர்களிடம் இருந்து சின்ன முனங்கல் கூட வராது ஏன் என்பது அரசியலில் பால பாடம் மட்டுமே தெரிந்தவர்கள் கூட புரிந்து கொள்வார்கள்.

கவர்னர் புரோஹித், கோவை மாவட்டத்தில் அமைச்சர்களை அழைத்து ஆய்வு செய்தது, மாபெரும் குற்றமா? என்று கேட்டால் இல்லைதான். அரசியலமைப்பு சட்டம் அதற்கான வாய்ப்பை அவருக்கு கொடுத்துள்ளது. பல நேரங்களில் அதிகாரிகளை அழைத்து அவரும் பேசியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் படி கவர்னர் என்பவர் ஜனாதிபதியின் பிரதிநிதி. மாநிலத்தின் தலைமை நிர்வாகி. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் ஆலோசனையைக் கேட்டு மாநிலத்தை வழி நடத்துவார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது, தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது, டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களை நியமிப்பது, பல்கலை கழக துணை வேந்தர்களை நியமிப்பது, சட்டமன்றக் கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிடுவது. கூட்டத்தொடரின் முதல்நாள் உரையாற்றுவது போன்ற பணிகளை அவர் செய்வார். சட்டமன்றத்தில் அவர் என்ன பேச வேண்டும் என்பதைக் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே முடிவு செய்யும்.

மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவும் போது, கவர்னர் சுயமாக முடிவெடுப்பார். அப்படியான சூழலில்தான் அவர் தலைமை செயலாளர், டிஜிபி உள்பட அரசு அதிகாரிகளை அழைத்துப் பேசி முடிவுகளை சொல்வார். தமிழகத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அப்படியொரு சூழல் நிலவிய போது, அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ், தலைமை செயலாளர், டிஜிபி, போலீஸ் கமிஷனரை அழைத்து பேசியதுண்டு. அப்போதெல்லாம் சர்ச்சை எழவில்லை.

கவர்னரால், எந்த ஒரு அதிகாரியையும் சம்மன் அனுப்பி அழைத்துப் பேச முடியும். எல்லா நேரங்களிலும் இது சாத்தியமா? ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்த போது, சென்னாரெட்டி கவர்னராக இருந்தார். அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டது. (1991-1996 ஆட்சிகாலம்) ‘கவர்னர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்’ என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையிலேயே குற்றம் சுமத்தினார். அந்த காலகட்டத்தில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவை மீறி எந்த ஒரு அதிகாரியும் கவர்னரை சந்திக்கக் கூடாது. எந்த தகவலும் தரக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டிருந்தார், ஜெயலலிதா. அவரது பெயரைச் சொல்லி நடக்கும் ஆட்சியில்தான், அமைச்சர்கள் கோவையில் இருந்த போதிலும் அவர்களை அழைக்காமல், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார், கவர்னர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் ஆட்சியாளர்களும் இருக்கும் போது, கவர்னர் நேரடியாக நிர்வாகத்தில் தலையிடுவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் கவர்னர் சொல்வதை கேட்பதா? அல்லது முதல் அமைச்சர் சொல்வதை கேட்பதா? என்ற குழப்பம் ஏற்படும். அல்லது யார் சொல்வதை செய்வது என்ற பிரச்னையும் ஏற்படும். இரட்டை தலைமை இருந்தால், நிர்வாகத்தில் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பாக அமையும். ஏன் அதிகாரிகளே கூட இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்படுவார்கள். நிர்வாகம் ஸ்தம்பித்துப் போகவும் வாய்ப்பு உள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் கவர்னருக்கான அதிகாரம் இதுதான் என்று தெளிவாக வரையறை செய்யப்படாத நிலையில், கவர்னர்கள் எப்போதெல்லாம் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். இப்போது கூட டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் இது போன்று கவர்னர்களின் செயல்பாடுகள் இருக்கிறது.

தமிழக அரசு, மத்திய அரசோடு இணக்கமான போக்கையே கடைப்பிடிக்கிறது. ஜெயலலிதா ஆட்சி நடப்பதாக அவர்கள் சொன்னாலும், ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த, ‘நீட் தேர்வு, உணவு பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம்’ உள்பட ஐந்து திட்டங்களை ஆதரித்து வருகிறார்கள். டெல்லியில் இருந்து சொன்னால், கவர்னரே ஓடி வந்து, இரு அணிகளையும் இணைத்து வைக்கிறார்.

தமிழக எதிர்கட்சிகள் எல்லாம், ‘பாஜகவின் பினாமி அரசு’ என்று கடுமையாக விமர்சனம் செய்தாலும், ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் போதும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மாநில சுயாட்சி குறித்து தீவிரமாக பேசிய தமிழகத்தில், கவர்னர் நேரடியாக ஆய்வு செய்வது வளர்ச்சிக்கு உதவும் என்று சொல்லும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

பாஜகவை பொறுத்தவரையில் அவர்களில் நீண்ட நாள் கொள்கை, ‘ஓரே தேசம் ஓரே ஆட்சி’ என்பதுதான். அதற்காக பாதையில் தெளிவாக பயணிக்கிறார்கள். சின்ன வாய்ப்புக் கிடைத்தாலும், அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆட்சியை நிறுவிவிடுவார்கள். அதற்கு உதாரணம் கோவா. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதிலும், கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துவிட்டார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக, 4 முதல் 5 சதவிகித வாக்குகள் கொண்ட கட்சியாகவே உள்ளது. உடனடியாக தேர்தல் வந்தால் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு கட்சிக்கு பலம் இல்லை என்பதை தலைமை உணர்ந்தே உள்ளது. வரும் தேர்தலில் சவாரி செய்ய ஒரு குதிரை அவர்களுக்குத் தேவை. ஜெயலலிதா இறந்ததும், அதிமுக என்ற குதிரை தானாகவே அவர்களைத் தேடி வந்தது.

கடந்த பத்து மாத நிகழ்வுகள், இபிஎஸ் – ஓபிஎஸ்யை நம்பி சவாரி செய்ய முடியாது. அவர்களால் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற முடியவில்லை என்பதை பாஜக தலைமை உணர்த்துவிட்டது. எனவே தனது வியூகத்தை மாற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் வந்த தீர்ப்புக்குப் பின்னர் எந்த ஒரு மாநில ஆட்சியையும் கலைப்பது என்பது, சாத்தியப்படாத ஒன்று. எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்வதாக இருந்தால் அதை செய்யலாம். பாம்பையும் அடித்த மாதிரி இருக்க வேண்டும். பாம்பும் சாகக் கூடாது. கம்பும் உடையக் கூடாது என்றால், கவர்னரை வைத்து, மத்திய அரசே மறைமுகமாக ஆட்சி செய்யலாம். அப்படித்தான் புதுவை, டெல்லியில் செய்கிறார்கள். அதே ஃபார்முலாவை தமிழகத்திலும் பயன்படுத்துகிறார்கள். இது தெரிந்தும் ஆளும் அதிமுக ஆட்சியாளர்கள், கவர்னருக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்கள் பதவிக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதால்தான்.

இந்த சடுகுடு ஆட்டம் நிற்க வேண்டும் என்றால், அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சி பாஜகவில் இணைய வேண்டும். அல்லது மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் முதல் அமைச்சருக்கு வேண்டும். முதலாவது விஷயம் நடந்தாலும் நடக்கலாமே தவிர, இரண்டாவது விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை. இவர்கள் சென்னா ரெட்டியையும் மறந்துவிட்டார்கள், ஜெயலலிதாவையும் துறந்துவிட்டார்கள்.

×Close
×Close