/tamil-ie/media/media_files/uploads/2018/11/cats-25.jpg)
அந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர்
நித்யா பாண்டியன்
அந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர் : உலகின் பூர்வ குடிகள் அவர்களின் கலாச்சாரத்தையும் தொன்மையையும் தொலைத்ததிற்கு இருக்கும் காரணங்கள் மனித மனதின் தீராத தேடுதல் வேட்கை என்று தான் சொல்ல முடியும். கொலம்பஸ் மேற்கொண்ட பெரும் பயணம் தான் இன்று செவ்விந்தியர்களை வரலாற்றில் தேடித் திரிகின்றோம்.
தங்களின் நிலங்களை பெயர்த்தெடுத்துக் கொண்டு ஏதோ ஒரு மூலையில் தங்களை அனாதைகளாய் வாழச் சொல்லும் வெள்ளை இன மக்களுக்கு செவ்விந்தியத் தலைவர் துவாமிஷ் ஆற்றிய உரை இன்றும் செவ்விந்திய மக்களின் மனதில் நீங்காமல் இடம் பெற்றிருக்கும்.
ஐரோப்பியர்கள் அமெரிக்க மண்ணில் கால் வைத்த போது காணமல் போன முதல் இனம் டைனோ பூர்வ குடிகளுக்கானது. ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்த பெரும் நோய் லட்சக்கணக்கான பூர்வ கொடிகளை கொத்து கொத்தாக மடிய வைத்தது. எஞ்சியிருக்கும் இனத்தவர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டார்கள். பண்ணைகளில் வேலைக்கு பணிக்கப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் டைனோ இன மக்கள் வெறும் வரலாறானார்கள்.
“இந்த மண் எங்களின் பாத ஸ்பரிசத்திற்குத் தரும் அன்பு உங்கள் கால்களின் கீழ் உங்களுக்கு கிடைக்காது. ஏனென்றால் அது எங்கள் முன்னோர்களின் சிதைச் சாம்பல்தான். அதன் கருணையைப்பற்றி பிரக்ஞையுள்ளவை தான் எங்கள் பாதங்கள். அந்தளவு இந்த மண் எங்கள் இனத்தின் உயிரால் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று தங்களின் ஒட்டு மொத்த அங்கீகாரத்தினையும் அடையாளத்தையும் துறந்த துவாமிஷ் இனத்தலைவன் சியாட்டில் 1854ல் இப்படியாக ஒரு உரை நிகழ்த்தினான்.
அந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர்
இன்றைய செய்தித்தாள்களிலும், இணையங்களிலும் ஒரு இனத்தினை எவ்வளவு கொச்சைப்படுத்த இயலுமோ அப்படியாக கொச்சைப் படுத்தி பதிவுகள் வெளியாகின்றன. காட்டுவாசிகள், காட்டுமிராண்டிகள், நாகரீகம் சென்று சேர்ந்திடாத கடைசி மக்கள் என்று இந்த பட்டியல் நீள்கிறது.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்னும் பல்வேறு பழங்குடி இனத்தவர்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறார்கள். அவர்களுக்கென தனிக்கலாச்சாரம், பழக்க வழக்கம், பண்பாடு, உணவுகள் என்று தங்களுக்கான உலகில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு வெளி உலகத்தின் நாகரீகமும், தொழில்நுட்பமும் அதன் வளர்ச்சியும் அந்நியமானதாகவே இருக்கிறது. அவர்களுக்கு தேவையானது நாகரீக வளர்ச்சியும் மாற்றங்களும் இல்லை.
அவர்களின் எல்லைகளுக்குள் நிம்மதியாய் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு வெளியுலகத் தொடர்பு தேவையற்றது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமும் கூட. 300க்கும் மேற்பட்ட தீவுக்கூட்டங்களைக் கொண்ட அந்தமான் தீவுகளில் பல்வேறு இடங்களில் இன்னும் பழங்குடிகள் வசித்து வருகிறார்கள். 28 தீவுகளில் வெளிநாட்டவர்கள் நுழைய இந்திய அரசு தடை செய்திருக்கிறது. சுற்றுலா விரும்பிகளுக்கும் ஆர்வ கோளாறுகளுக்கும் அங்கு இடமில்லை என்பது தான் உண்மை.
வடக்கு சென்டினல் தீவு
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருக்கும் செண்டினல் தீவுகளிலும் இது போன்ற ஆதி பழங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். மற்ற பழங்குடி இனத்தவர்கள் போலே தங்களுக்கான இடத்தையும், உடமைகளையும் பொதுவெளியில் ஒன்றோடு ஒன்றாக கலக்க விரும்பாமல் பாதுகாத்து வருகிறார்கள். இங்கு இருக்கும் மக்கள் தொகை பற்றி யாருக்கும் தெரியாது. அடர்ந்த வனமும், சுற்றிலும் நீல நிறக் கடலும் திக்கென திகைக்க வைக்கும் போது தீவுகளுக்குள் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்க யாரால் இயலும்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/sentinel-759.jpg)
யாருக்கும் அனுமதி இல்லை :
வெளி ஆட்களுக்கு இந்த பகுதிகளில் அனுமதி இல்லை. வருபவர்களுக்கு மரணம் மட்டுமே பரிசளிக்கப்படும். இது அவர்களின் தவறல்ல. அந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர் பலருக்கு வெளியில் இருந்து தீவிற்குள் வரும் ஆட்களின் நோக்கம் நன்மை பயக்கக் கூடியதாகவே இருக்க வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லையே. மேலும் ஆங்கிலேயர்கள் இங்கு விரும்பப்படாத விருந்தாளிகள். 1859ல் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு எதிராகவும், காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் அபர்தீன் என்ற இடத்தில் போர் நடைபெற்றது.
ஆங்கிலேயர்களுடன் 10ற்கும் மேற்பட்ட அந்தமானைச் சேர்ந்த பூர்வ குடி இனங்கள் ஒன்றினைந்து போரிட்டு தோல்வியைத் தழுவினார்கள். 50 ஆயிரம் வருடத்திற்கும் மேலாக அந்நிய வாடை படராமல் இருந்த அந்தமானில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஓங்கியது. தெற்கு அந்தமானில் மிசனிரிகள் பெரிய வெற்றி அடைந்தன. ஆனாலும் வடக்கு அந்தமானில் வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. ஜராவா, ஓங்கே போன்ற இனமக்கள் தங்களின் பிடியை தளர்த்தினாலும் செண்டினல்களுக்கு இன்றும் அது அவர்களின் பயம் தரும் உள்ளுணர்வை தூண்டிவிடும் செயல் தான்.
கற்கால மனிதர்களுக்கும் முந்தைய இனத்தவர்கள்
ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் தோன்றிய போது இடம் பெயர்ந்த கறுப்பின ஆதிகுடிகள் 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான் நிக்கோபர் தீவுகள் உட்பட பல்வேறு ஆசிய பகுதிகளில் வாழத் தொடங்கினர். கற்காலத்திற்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதிகுடிகள் இவர்கள். செண்டினல் இன மக்கள் இந்த குடிகளில் ஒரு அங்கமாகும். இன்று வரை வில் அம்பு என்று வாழ்வியலை வாழ்ந்து வரும் வெளி உலக எல்லைகளை தொட விரும்பாத பூர்வ குடிகள் இவர்கள்.
அந்தமான் நிக்கோபர் பாதுகாப்புச் சட்டம் 1956
அந்தமான் நிக்கோபர் பாதுகாப்புச் சட்டம் 1956ன் கீழ் இம்மக்களின் தனியுரிமையை பாதுகாத்து வருகிறது இந்திய அரசு. இந்திய அரசின் அனுமதியின்றி இப்பகுதியில் யாரும் செல்லக் கூடாது. அப்படி செல்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அவர்களை சந்திக்க விரும்புதல், உணவு, உடைகள் போன்றவற்றை தர முயற்சித்தல் போன்றவை சட்ட விரோதமாகும். மேலும் வடக்கு செண்டினல் தீவுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் உள் நுழையக் கூடாது என்று 1990களில் மத்திய அரசு அறிவித்தது.
அந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர் மீது தொடுக்கப்படும் தொல்லைகள்
1980களில் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் சுற்றுலாத்துறையை விரிவு படுத்த பல்வேறு இடங்களில் சாலைகள் போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை எண் 223 போடப்படும் போது ஜரவா இன மக்கள், சாலை போட வந்தவர்களை அடித்து துரத்தினர். சில இடங்களில் மின் வேலி அமைத்து சாலைகள் போடும் பணி தீவிரம் செய்யப்பட்டது. சில ஜரவா இன மக்கள் இதனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 2002ம் ஆண்டு இந்த சாலையை மூடச் சொல்லி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2015ம் ஆண்டில் இருந்து கடல் மார்க்கமாக பல்வேறு தீவுகளுக்கு செல்லும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் அங்கு சுற்றுலா செல்லும் மனிதர்கள் அங்கிருக்கும் பூர்வ குடிகள் மீது உணவுவின் மிச்சங்களை வீசுதல், ஆடச் சொல்லுதல் போன்ற காட்டுமிராண்டித் தனங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று 2012ம் ஆண்டு தி கார்டியன் மற்றும் டெய்லி மிரர் இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தது. 2014ம் ஆண்டு ஜரவா பகுதியில் இருந்து அந்த இனப் பெண்கள் 8 பேரை கடத்திக் கொண்டு வந்துள்ளனர் அங்கு சுற்றுலா சென்றவர்கள். தங்கள் இன பெண்களுக்கு ஆபத்து வரும் சூழல்களில் எதிர் தாக்குதல் செய்யும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் பூர்வ குடிகள்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/north-sentinel-island-759.jpg)
அழிந்து வரும் அந்தமான் பழங்குடிகள்
100க்கும் குறைவான ஒங்கே இனத்தவர்களில் 15 பேர் 2008ம் ஆண்டு கடலில் அடித்து வரப்பட்ட கண்டெய்னரில் இருந்த பானத்தினை குடித்து உயிரிழந்தனர். 2010ம் ஆண்டு போவா இனத்தின் கடைசி பெண்ணும் உயிரிழந்தார். சில மாதங்களுக்கு முன்பு கோரா மற்றும் போரோ இனத்தின் இறுதி மக்களும் உயிரிழந்தனர். கிரேட் அந்தமானியர்கள் என்ற இனத்தவர்கள் 50க்கும் குறைவானவர்கள் தான் இன்று வாழ்ந்து வருகிறார்கள். 400க்கும் குறைவான ஜராவா இனத்தினர் தங்களில் வெளியுலகத் தொடர்பினை முடக்க நினைத்தாலும் NH 223 அந்த இனத்திற்கு அழிவின் பாதையாக நிற்கிறது.
அந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர் மீது ஈர்ப்பு கொண்ட அமெரிக்க பயணி
அமெரிக்க பயணி ஜான் ஆலென் காவ் ஐந்து முறைக்கும் மேலாக அந்தமானில் இருக்கும் செண்டினல் தீவில் இருக்கும் மக்களை சந்திக்க முயன்றிருக்கிறார். ஆனாலும் அவரின் ஆசை நிறைவேறவில்லை. 6 வது முறையாக அந்தமான் வந்தவர் சில மீனவர்களின் உதவியோடு செண்டினல் தீவிற்கு அருகில் சென்றிருக்கிறார். அங்கு கிருத்துவ மதத்தை பரப்புவது தான் தன்னுடைய வாழ்நாள் கொள்கையாக நினைத்திருந்தார் ஆலன் காவ்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/skynews-john-allen-chau_4495683.jpg)
350 அடி நீளம் வரை குறிபார்த்து எதிரிகளை தாக்கும் திறன் பெற்றிருக்கும் செண்டினல்கள் கூரிய ஆயுதங்களைக் கொண்டு ஆலனை தாக்க முயற்சித்தினர். ஆனால் முதல்முறை தப்பித்து தன்னுடைய கயாக்கிங் போட்டில் ஏறி தன்னை அழைத்து வந்த மீனவர்கள் படகு இருக்கும் பகுதிக்கு வந்தடைந்தார். பின்னர் 2 நாட்களாக படகிற்கும் தீவிற்கும் தன்னுடைய கயாக்கிங் போட்டில் சவாரி செய்தார்.
ஆலனின் இறுதி நாட்கள்
13 பக்க அளவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் ஆலன் ஜான் காவ். பின்னர் அங்கிருந்த மீனவர்களை திரும்பிப் போக சொல்லிவிட்டு கடற்கரையில் தங்க முயன்றிருக்கிறார். பின்னர் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் மீனவர்கள் அங்கு சென்று பார்க்கும் போது ஆலனின் உடலை கயிறு வைத்து இறுக்கி தீவிற்குள் இழுத்துச் சென்றனர்.
மேலும் படிக்க : தன் குடும்பத்தாருக்கு ஆலன் எழுதிய இறுதி கடிதம்
இதனை பார்த்த மீனவர்கள் அந்தமானில் இருக்கும் மத போதகர் அலெக்ஸ்சிடம் விசயத்தை கூறியுள்ளனர். தீவில் இறங்கி ஆலனின் உடலை கண்டுபிடிப்பது என்பது கனவிலும் நடக்காத விசயம். செண்டினல் தீவிற்கு அழைத்துச் சென்ற 7 மீனவர்களையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னையில் அமெரிக்க தூதரகம் ஜான் ஆலன் காணாமல் போனதாக அறிவித்துள்ளது.
2006ல் வழி தவறி செண்டினல் தீவிற்குள் சென்ற இரண்டு மீனவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. 1991ம் ஆண்டு மட்டும் இந்திய மானுடவியல் துறையை சேர்ந்த குழுவினை மட்டும் தாக்குதலுக்கு ஆட்படுத்தாமல் திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள் இந்த செண்டினல் இனத்தவர்கள். ஆலனின் உடலை தேடும் பணி இன்றும் தொடருகிறது. ஆனால் தீவிற்குள் கால் வைக்க யாருக்கும் துணிவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.