இந்தி பற்றிய விவாதம்: பிரமிக்க வைக்கும் நெடிய வரலாறு

Debates On Hindi status in Constitution assembly: ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு, 1949 செப்டம்பர் 12 முதல் 14 வரை, இந்திய அரசியலமைப்புச்...

Debates On Hindi status in Constitution assembly: உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தன்று (செப்டம்பர் 14) இந்தியா முழுவதும் ஒரே மொழி வேண்டும் என்று அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவைப் போன்ற வேறுபட்ட ஒன்றியத்தின் அலுவல் மொழி குறித்து கருத்து வேறுபாடு இருப்பது இயல்பானது என்றாலும், அரசியலமைப்பின் நிர்ணயத் தந்தையர்கள் அரசியலமைப்பு அவையில் நடைபெற்ற அனைத்து வாதங்களையும் மதிப்பீடு செய்து, இந்தியை “ராஜ் பாஷா” என்று ஏகமனதாக ஒப்புக் கொண்டனர் என்று அமித்ஷா கூறினார்.

ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு, 1949 செப்டம்பர் 12 முதல் 14 வரை, இந்திய அரசியலமைப்புச் சபை இந்தியாவின் மொழிகளின் நிலையைப் பற்றி விவாதித்தது. விவாதிக்கப்பட்ட பிரச்னைகளில் அலுவல் மொழி என்பதற்குப் பதிலாக தேசிய மொழி என்ற வாரத்தைப் பயன்பாடு இருந்தது. இந்திக்கு எதிராக பெங்காலி, தெலுங்கு, சமஸ்கிருதம் அல்லது இந்துஸ்தானி போன்ற மொழிகள் விவாதிக்கப்பட்டது. அதே போல, தேவநாகரி வரிவடிவமா ரோமன் எழுத்தா என்றும் விவாதிக்கப்பட்டது. உயர் நீதித் துறையிலும் நாடாளுமன்றத்திலும் பயன்படுத்தப்பட வேண்டியது சர்வதேச எண்களா அல்லது தேவநாகரி வரிவடிவமா என்றும் விவாதிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் விவாதத்தின் ஆரம்பத்தில் விமர்சனத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்: முழு அரசியலமைப்பிலும் வேறு எந்தப் பொருளும் இல்லை, அவை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்தப்பட வேண்டும்… நாம் (கிடைத்தாலும்) பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்ட ஒரு குறிப்பிட்ட முன்மொழிவு, எந்தவொரு கணிசமான பகுதியினரின் ஒப்புதலையும் பூர்த்தி செய்யாவிட்டால்… அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான பிரச்சினையாக மாறும்” என்று கூறினார்.

அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் சிலர் கூறியவற்றின் சுருக்கப்பட்ட பகுதிகள் இவை. இதில் பல வாதங்கள் இன்றும் எதிரொலிக்கின்றன.

என்.கோபால்சாமி அய்யங்கார், வரைவுக்குழுவின் உறுப்பினர். ஆரம்ப மற்றும் முதல் திருத்தத்தை முன்வைத்தார். அது தேவநாகரி எழுத்தில் இந்தி அலுவல் மொழியாக இருக்க வேண்டும். ஆனால், ஆங்கிலம் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. “இந்த (மொழி) திட்டம் ஒரு பெரிய விவாதம் மற்றும் சமரசத்தின் விளைவாகும். நான் அதை வலியுறுத்தினால் அது ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை. நீங்கள் அதன் ஒரு பகுதியைத் தொட்டால் மற்ற விஷயங்கள் துண்டுதுண்டாக கீழே விழும்” என்று கூறினார்.

செத் கோவிந்த் தாஸ், ஒரு மொழி ஒரு வரிவடிவம் என்பதற்காக வாதிட்டார். மேலும் அவர் “ஆரம்பத்திலேயே ஆங்கிலத்தின் இடதில் இந்தியை மாற்றவேண்டும்” என்று கூறினார். “பெரும்பான்மை கருத்து மதிக்கப்படும்போதுதான் ஜனநாயகம் செயல்பட முடியும். ந்தவொரு பிரச்சினையிலும் நாங்கள் வேறுபடுகிறோம் என்றால், அதை வாக்குகளால் மட்டுமே தீர்மானிக்க முடியும். பெரும்பான்மையினரால் எந்த முடிவு வந்தாலும் அது சிறுபான்மையினரால் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்… நாங்கள் நம் நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக ஏற்றுக்கொண்டோம். ஆனால், அந்த ஏற்றுக்கொள்ளல் பன்முக கலாச்சாரங்களின் தொடர்ச்சியான இருப்பை ஏற்றுக்கொள்வதை குறிக்கிறது என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்தியா ஒரு பண்டைய வரலாற்றைக் கொண்ட ஒரு பண்டைய நாடு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே கலாச்சாரம் இங்கு கிடைத்திருக்கிறது. இந்த பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்காகவே, முழு நாட்டிற்கும் ஒரு மொழியையும் ஒரு வரிவடிவத்தையும் விரும்புகிறோம். இங்கே இரண்டு கலாச்சாரங்கள் உள்ளன என்று கூறப்படுவதை நாங்கள் விரும்பவில்லை ”

நஸிருத்தின் அஹமது இதற்கு மாறாக வலியுறுத்தினார். அவர் “நாம் அகில இந்திய மொழியை ஒரே நேரத்தில் அறிவிக்கக் கூடாது. அகில இந்திய மொழி உருவாகும் காலம் வரை ஆங்கிலம் அது பயன்படுத்தப்பட்ட அனைத்து நோக்கங்களுக்காகவும் அலுவல் மொழியாக தொடர வேண்டும். அது விஞ்ஞானம், கணிதம், இலக்கியம், வரலாறு, தத்துவம், அரசியல் போன்ற பல்வேறு பாடங்களில் உள்ள எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்…” என்றார்.

எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவ், ஆங்கிலம் இருக்க வேண்டும், எதிர்கால நாடாளுமன்றம் இந்த விஷயத்தில் முடிவு செய்ய வேண்டும் என்றார். இந்தி, பல தென்னிந்திய மொழிகளை விட தாழ்ந்ததாக இருந்தது. “இந்தி மற்றும் இந்துஸ்தானி கேள்வி முற்றிலும் வடக்குக்கானது. ஆனால், நாங்கள் இந்தியை ஏற்கத் தயாராக இருக்கிறோம். நாட்டின் பெரிய நலன்களில் உணர்வுகள் குறையும்போது ஒரு உணர்ச்சி மிக்க சூழ்நிலையில் தீர்மானிக்க வேண்டும்.” என்று கூறினார்.

மொஹத் ஹிஃப்ஸூர் ரஹ்மான் இந்திக்கு பதிலாக இந்துஸ்தானி வேண்டும் என்று வாதிட்டார். இது மகாத்மா காந்தி விரும்பிய மொழி, மற்றும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. இது பீகாரில் இருந்து எல்லைப்புறம் வரை பேசப்பட்டது. இந்திக்கான கூச்சல் பிரிவினையின் எதிர்வினை. இந்த வருத்தத்திலும் கோபத்திலும்… அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறார்கள். அரசியல் மத சகிப்பின்மை சூழலில் அவர்கள் மொழி கேள்வியை தீர்க்க விரும்புகிறார்கள். அவர்கள் இந்த பிரச்னையை ஒரு நாட்டின் மொழிப் பிரச்னையாக தீர்க்க விரும்பவில்லை” என்று கூறினார்.

ஆர்.வி.துலேகர், ராம்தாஸ் முதல் துளசிதாஸ் வரையிலும், சுவாமி தயானந்த் முதல் மகாத்மா வரையிலும் அனைவரும் இந்தியில் எழுதி, பலமாக வாதிட்டனர் என்று நினைவு கூர்ந்தார். நீங்கள் வேறொரு தேசத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், நான் இந்திய தேசத்தைச் சேர்ந்தவன், இந்தி தேசம், இந்து தேசம், இந்துஸ்தானி தேசம் . இது தேசிய மொழி அல்ல என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் எங்கள் பள்ளிகள் மற்றும் எங்கள் கல்லூரிகள் மற்றும் நமது விஞ்ஞானிகள், சுயராஜ்யம் அடைந்த பிறகும், ஆங்கில மொழியில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் நான் நடுங்குகிறேன். மெக்காலே பிரபு பேய் என்ன சொல்லும்? ‘ஓல்ட் ஜானி வாக்கர் இன்னும் வலுவாக இருக்கப் போகிறது’ என்று கூறுவார்.

ஃபிரான்க் அந்தோனி “பல காரணங்களால் ஆங்கிலம் இந்த நாட்டின் தேசிய மொழியாக இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் திணிக்கப்பட்ட இந்தி பொது மக்கள் பேசும் மொழியிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்று எச்சரித்தார். “ஒரு தூய்மைப்படுத்தும் செயல்முறை தற்போதையதாகிவிட்டது …, இந்த தற்போதைய வெறித்தனமான இயக்கத்தில் ஒரு புதிய வகையான இந்தி, தெருவில் இந்தி பேசும் இந்துவுக்கு புரியாதது … அதிக சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தி திணிக்கப்படும். … நீங்கள் ஒருபுறம் வாய்ப்புகளின் சமத்துவத்தைப் பற்றி பேசுகிறீர்கள். மறுபுறம் நீங்கள் வாய்ப்புகளின் சமத்துவத்தின் கொள்கையை மறுப்பதற்கான விரைவான கொள்கைகளை செயல்படுத்துகிறீர்கள்.” என்று கூறினார்.

காஸி சையத் கரிமுத்தின் இந்துஸ்தானிக்காக பேசினார்: “அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இங்கேயே இருக்க வேண்டும் என்று நீங்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டீர்கள். அப்படியானால், உருது எழுத்துக்களைத் தடை செய்வதன் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளை ஏன் மறுக்கிறீர்கள்? ? உங்களுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது, எனவே அதை முற்றிலுமாக தடை செய்ய முயற்சிக்கிறீர்கள். அதை தீர்க்க முயற்சிக்கிறீர்கள். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் தங்களை எளிதில் வெளிப்படுத்திக் கொள்ளும் மொழி மட்டுமே அது… அது பொதுவான உறவின் மூலம் உருவாகியுள்ளது. அதாவது இந்துஸ்தானி தேசிய மொழியாக மாற்றப்பட வேண்டும்.” என்று கூறினார்.

லட்சுமிநாராயண் சாஹு இந்தி தேசிய மொழியாக மாற்றப்பட வேண்டும் என்று வாதிட்டார். “ஒரியாவிற்கு நான் இதே அந்தஸ்தைக் கோர முடியும். அது வங்காளத்தையும்விட பழமையானது. தெற்கிலிருந்து எனது நண்பர்கள் அவர்களுடைய மொழி மிகவும் பழமையானது என்று கூறுவார்கள். (ஆனால்), பண்டைய அல்லது இடைக்காலத்தில் எந்த கேள்வியும் இல்லை. சிலர் ஆங்கிலத்தில் அதிகம் காதல் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் அலுவல் மொழியாக பயன்படுத்தாவிட்டால், அவர்கள் தங்கள் இருப்பை இழக்க நேரிடும் என்று நினைக்கிறார்கள்… முழு தேசத்தின் மற்றும் நாட்டின் நலன்களுக்காக நாம் முன்னேற வேண்டும், ஒரு சிலருக்கு சிரமமாக இருந்தால் அவர்கள் அதை சமாளிக்க வேண்டும்.” என்று கூறினார்.

என்.வி.காட்கில் சமஸ்கிருதத்தை தெசிய மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், ஆங்கிலத்தை ஒரு நூற்றாண்டுக்கு மேலாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அவர் இந்தி ஒரு மாகாண மொழி என்று கூறினார். இலக்கியத்தில் மிகவும் வளமான மொழிகள் உள்ளன. இருப்பினும் நாம் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொண்டோம்.” என்று கூறினார்.

டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் “இது மிகவும் கடினமான கேள்வி… அநேகமாக தெற்குக்கு வாழ்வா சாவா என்ற பொருள் கொண்டது.” என்றார். செட்டியார் தனக்கு இந்தி பேசும் மக்கள் மீது மிகுந்த அபிமானம் இருப்பதாகக் கூறினார். நம்முடைய இலக்கியம் போன்ற விஷயங்களுக்காக நமக்கு நம்முடைய மொழி மீது காதலும் கொஞ்சம் தேசபக்தியும் இருக்கலாம் என்பதை அவர்கள் உணரவேண்டும்.” என்று கூறினார். மேலும், அவர், “இந்தி தேசிய மொழி என்று அழைக்கப்படுவதை அவர் ஏற்கவில்லை. ஆங்கிலத்தைவிட அல்லது மற்ற எந்த மொழிகளையும்விட இந்தி எங்களுக்கு தேசிய மொழி அல்ல. தெற்கு விரக்தி அடைந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். மேலும், அவர் தென் இந்திய மொழிகளுக்கும் ஒரு இடம் கேட்டார். “தெற்கில் உள்ள மக்களுக்கு நாட்டோடு ஏதாவது தொடர்பு இருப்பதாக உணர நடவடிக்கை எடுக்காவிட்டால், தெற்கு எல்லாவற்றிலும் திருப்தி அடையும் என்று நான் நினைக்கவில்லை. … அது எதை வழிநடத்தக்கூடும் என்பதை, தற்போது சொல்வது எளிதல்ல.” என்று கூறினார்.

சதிஷ் சந்திர சமந்தா, இந்தியைவிட வங்காள மொழியை தேசிய மொழியாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். காரணம் அது ஒரு வளமான மொழி. சர்வதேச அளவில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சுதந்திரப் போராட்டத்தை ஊக்கபடுத்திய வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் இருந்தது என்று கூறினார்.

அல்கு ராய் சாஸ்திரி, “சமஸ்கிருதம் இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றும், “அதன் மூத்த மற்றும் மூத்த மகள் (இந்தி) மட்டும் இன்று தேசிய மொழியாக இருக்க முடியும்” என்றும் கூறினார்.

சியாமா பிரசாத் முகர்ஜி, “இந்தியாவுக்கு ஒரு மொழி, ஒரே மொழி மட்டுமே இருக்கும் என்ற நாளைப் பற்றி பேசுபவர்களின் பார்வையை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை” என்று கூறினார். “பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் முக்கிய குறிப்பாகும். இது புரிந்துணர்வு மற்றும் சம்மதத்தின் ஒரு செயல்முறையால் அடையப்பட வேண்டும், அதற்காக ஒரு சரியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். “பெரும்பாலான மக்கள் இந்தியை ஏற்றுக்கொண்டனர். ஏனெனில், அது இந்த நாட்டில் இன்று மிகப்பெரிய ஒற்றை பெரும்பான்மையினரால் புரிந்து கொள்ளப்பட்டது. இந்தியை முன்னெடுப்பவர்கள் அநேகமாக அவர்களுடைய கோரிக்கையிலும் இந்தியை அமல்படுத்துவதிலும் மூர்க்கமாக இல்லாதிருந்தால் அவர்கள் விரும்பியதை பெற்றிருப்பார்கள். ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக, தன்னிச்சையாக மற்றும் விருப்பத்துடன் இந்தியாவின் மொத்த மக்களும் ஒத்துழைத்திருப்பார்கள்.”

அரசியலமைப்பு சபையின் தீர்மானத்தால் ஒரு மொழியின் மேலாதிக்கத்தை தீர்மானிக்க முடியவில்லை, என்று அவர் குறிப்பிட்டார். நீங்கள் உண்மையில் இந்தி அகில இந்திய நிலையை ஆக்கிரமிக்க வேண்டும் என்று விரும்பினால், சில அலுவலக ரீதியான காரணங்களுக்காக நீங்கள் ஆங்கிலத்தை மாற்றக் கூடாது. அதன் மூலம், நீங்கள் இந்தியை அந்த நிலைக்கு தகுதியுடையதாக்குகிறீர்கள். மேலும், அதை இயற்கையான செயல்முறை சொற்கள், மற்றும் வழக்குகளை சமஸ்கிருதத்திலிருந்து மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற சகோதரி மொழிகளிலிருந்து பெறுவதை அனுமதிக்க வேண்டும். எனது சொந்த வங்காள மொழியில் நான் இந்தி பேச முடியும். மகாத்மா காந்தி அவருடைய வழியில் இந்தி பேசினார். சர்தார் பட்டேல் அவருடைய குஜராத்தி வழியில் இந்தி பேசுகிறார். பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து என்னுடைய நண்பர்கள் அவர்களுடைய தரமான இந்தி என்று கூறினால்… அது இந்திக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மோசமான விஷயமாக இருக்கும்.” என்று கூறினார்.

பி.டி.சாக்கோ, ஒரு தேசிய மொழி அதுவாகவே தன்னை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது செயற்கையாக உருவாக்கப்படக் கூடாது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்கான தேசிய மொழி… நவீன நாகரிகத்தின் அனைத்து தேவைகளையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்;… அதற்கு விஞ்ஞான இலக்கியங்கள் அதிகம் இருக்க வேண்டும்.” இதற்குப் பதிலாக, மிக அவசரமான பிரச்னைகளான சுதந்திரப் போராட்ட வீரர்கள் உணவு மற்றும் இருப்பிடத் தேவைக்காக உயிரிழப்பது பற்றியும் நாளுக்கு நாள் வணிகமும் வர்த்தகமும் மந்தமாவதைப் பற்றியும், பரவலானா வேலைவாய்ப்பின்மை மற்றும் வடக்கில் காஷ்மீர் பிரச்னை மற்றும் தெற்கில் கம்யூனிஸ்ட் தொந்தரவு, அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தக் கோரினார்.

டாக்டர் பி.சுப்பராயன் ரோமன் எழுத்தில் இந்துஸ்தானியை ஏற்றுக்கொள்ள பரிந்துரைத்தார். 20% மட்டுமே பிரிட்டிஷ் தீவுகளைச் சேர்ந்தவர்கள் உள்ள அமெரிக்கர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்போது இங்கே ஆங்கில மொழி மீது ஏன் வெறுப்பு இருக்கிறது என்று அவர் ஆச்சரியப்பட்டார்.

குலதர் சாலிஹா, அஸ்ஸாமைச் சேர்ந்தவர். அவர் சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டும், ஏனெனில் “சமஸ்கிருதமும் இந்தியாவும் விரிவானவை”. இந்தி ஒரு “சமரச தீர்வாக இருந்தது. ஏனெனில், அது இந்தியாவுக்கு நல்லது. காரணம் இந்தி ஒரு நல்ல மொழி என்பதால் அல்ல. இருந்தாலும், இந்துஸ்தானி இன்னும் சிறந்த தேர்வாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ரெவரண்ட் ஜெரோம் டிசௌசா, அய்யங்கரின் திட்டத்தின் பரந்த வெளிப்பாட்டை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார், ஏனெனில் “இது பொதுவான பொதுவான ஒப்பந்தத்தை உள்ளடக்கியது” என்று கூறினார். ஆனால், அவர் பிரெஞ்சு மொழி கூறுவதை “எல்லா மனிதர்களுக்கும் இரண்டு மொழிகள் உள்ளன. அவர்கள் சொல்கிறார்கள். முதலில் அவர்களுடைய மொழி. பிறகு இனிமையான பிரெஞ்சு மொழி” என்று நினைவுகூர்ந்தார். மேலும், அவர் “ஒருவேளை, ஒரு நாள் ‘எல்லா மனிதர்களுக்கும் இரண்டு மொழிகள் உள்ளன என்றால் அவர்களின் சொந்த மொழி முதலில் பின்னர் இந்தியாவின் இனிமையான மொழி என்று முழு நாகரிக உலகமும் சொல்லும்போது வரலாம்.” என்று கூறினார்.

ஜவஹர்லால் நேரு, இந்த விஷயத்தில் காந்தியின் பார்வையை நினைவு கூர்ந்தார். ஒன்று, “ஆங்கிலம் ஒரு சிறந்த மொழியாக இருக்கும்போது (அது)… எங்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறது… ஒரு வெளிநாட்டு மொழியின் அடிப்படையில் எந்த தேசமும் பெரியவர்களாக மாற முடியாது”. இரண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மக்களின் மொழியாக இருக்க வேண்டும். அது கற்றறிவர்களின் மொழியாக மட்டுமே இருக்க கூடாது. மூன்று, “இந்த மொழி இந்தியாவின் கூட்டு கலாச்சாரத்தை குறிக்க வேண்டும்.” எனவே நேரு காந்தி ‘இந்துஸ்தானி’ என்ற வார்த்தையை அந்த கலப்பு மொழியைக் குறிக்கும் பரந்த பொருளில் பயன்படுத்தினார் என்று கூறினார்.

இருப்பினும், இந்தியாவின் அனைத்து மக்கள் மீதும் இந்தி கட்டாயப்படுத்தப்படுவதை எதிர்த்து நேரு எச்சரித்தார். “உங்கள் அணுகுமுறை ஒரு ஜனநாயக அணுகுமுறையா அல்லது… சர்வாதிகாரமா?” என்று அவர் கேட்டார். இந்தி ஆர்வலர்களின் அவருடைய சில உரைகளில், ஒரு சர்வாதிகாரத் தொனியையும் பெரிய அளவில் இந்தி பேசுகிற பகுதியின் தொனி இந்தியாவின் மையமாகவும் மற்றவர்கள் விளிம்பாகவும் இருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

“இது தவறான அணுகுமுறை மட்டுமல்ல, இது ஒரு ஆபத்தான அணுகுமுறை” – எந்தவொரு மொழியையும் எதிர்க்கும் மக்களை அல்லது குழுவை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது.” என்று நேரு கூறினார்.

பண்டிட் ரவி ஷங்கர் ஷுக்லா, பேரர் மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்தவர். கேஷப் சந்திர சென் 1874-இல் ஒரு அன்றாட மக்கள் மொழி இல்லாமல் இந்தியாவுக்கு ஒற்றுமை சாத்தியமில்லை என்று கூறிதாக வாதிட்டார். இந்தியாவில் இப்போது பயன்பாட்டில் உள்ள பல மொழிகளில் இந்தி உள்ளது என்று ஷுக்லா கூறினார். இந்தி கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நடைமுறையில் உள்ளது; எனவே இந்தி இந்தியா முழுவதும் பொதுவான மொழியாக மாற்றப்பட வேண்டும். தெற்கில் இருந்து வரும் நண்பர்கள் சீக்கிரம் இந்தி கற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ஏனெனில் அவர்கள் விரைவாக இந்தி கற்கவில்லை என்றால் அவர்கள் பின்னால் விடப்படலாம்.” என்று கூறினார்.

ஜி.துர்கா பாய், மெட்ராஸைச் சேர்தவர் , இந்துஸ்தானியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும், அவர் தேவநாகரி எழுத்தில் இந்தி தள்ளப்பட்ட விதத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். “ஒரு மாகாண மொழிக்கு ஒரு தேசிய தன்மையை வழங்குவதற்கான உங்கள் அணுகுமுறை இந்தி அல்லாத மொழி பேசும் மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்கு பொறுப்பாகும். இந்தி எண்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மொழி கொடுங்கோன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் உச்சம்” என்று அவர் கூறினார்.

ஷங்கரராவ் தியோ பம்பாயைச் சேர்ந்தவர். “ஒரே கலாச்சாரம் என்பது ஆபத்தான தாக்கங்களைக் கொண்டுள்ளது ”என்றும்,‘கலாச்சாரம் ’என்ற சொல் ஆபத்தானது என்றும் எச்சரித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் கலாச்சாரம் என்ற பெயரில் முறையிடுகிறார். சில காங்கிரஸ்காரர்களும் கலாச்சாரம் என்ற பெயரில் முறையிடுகிறார்கள். ‘கலாச்சாரம்’ என்ற சொல்லுக்கு சரியாக என்ன அர்த்தம் என்று யாரும் சொல்லவில்லை. இன்று, அது விளக்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுவதால், இதன் பொருள் பலவற்றில் சிலரின் ஆதிக்கத்தை மட்டுமே குறிக்கிறது… நீங்கள் ஒரு கலாச்சாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்தினால், எனக்கு அது இந்தியாவின் ஆன்மாவைக் கொல்வதாகும். இந்தியா பன்மைத்தன்மைக்காக நிற்கிறது. அதுதான் நம்முடைய செழுமை… நீங்கள் நாட்டு முழுவதற்கும் ஒரெ மொழி தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்ற பொருள்கொண்டால் நான் அதற்கு எதிரானவன்” தியோ கூறினார்.

சர்தார் ஹுகாம் சிங், இந்தி மற்றும் தேவநாகரிக்காக எப்போதும் தனது ஆதரவைப் பெறாது. அதை நமது நாட்டின் மொழி அல்லது ராஷ்டிரபாஷா என்று வழங்கியதாகவும் ஆனால், வெறுமனே அதை ஆதரிப்பவர்களின் வெறி மற்றும் சகிப்பின்மை காரணமாக தனது மனதை மாற்றிக்கொண்டதாகவும் கூறினார். இப்போது அவர் ரோமன் எழுத்தில் இந்துஸ்தானியை விரும்பினார். இது இந்த சபையில் உள்ள விரோதத்தை நீக்குகிறது. மேலும், நமது தெற்கு நண்பர்களுக்கு மொழியை எளிதாக கற்றுக்கொள்ள உதவும்” என்று கூறினார்.

ஜெய்பால் சிங் பீகாரைச் சேர்தவர். அரசியலமைப்பில் முண்டாரி, கோண்டி மற்றும் ஓரான் ஆகிய பழங்குடி மொழிகளை அங்கீகரிக்க வலியுறுத்தினார்.

புருஷோத்தம் தாஸ் டாண்டன், ஒருங்கிணைந்த மாகாணங்களைச் சேர்ந்தவர், அய்யங்காரின் வரைவில், ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஆங்கிலத்தை தவிர இந்தி பயன்படுத்தாமல் இருப்பது தொடர்பாக ஒரு கமிஷன் பரிந்துரை செய்யும் வரை மற்றும் அந்த பரிந்துரை குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளும் வரை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கடினமானது நிபந்தனை. மேலும், தேவநாகரி எண்களை அவற்றின் சர்வதேச வடிவத்திற்காக கைவிடுவது ஒரு கொடூரமானது ஆகும். நான் சர்வதேசவாதம் ஒரு வாதமே இல்லை என்று கூறுகிறேன். எங்கள் மக்களை திடீரென்று இந்த வழியில் தங்கள் சொந்த எண்களைக் கொடுக்கும்படி கேட்கப்படுவது நியாயமில்லை” என்று கூறினார்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத், பொதுவான மொழி இல்லாதது ஆங்கிலத்துக்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிப்பதில் முக்கிய தடையாக உள்ளது. இந்துஸ்தானி மீதான காங்கிரஸ் தனது ஒருமித்த கருத்தை கைவிட்டதில் அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைவரை குறுகிய மனப்பான்மை உயர்ந்துள்ளது. … குறுகிய மனப்பான்மை என்பது மனச்சோர்வு மற்றும் மனஇறுக்கம் மற்றும் உயர்ந்த, உன்னதமான மற்றும் தூய்மையான எண்ணங்களை ஏற்க மறுப்பது. … இந்த குறுகிய மனப்பான்மையே… பண்டைய இந்தியாவின் மகிமையையும் முன்னேற்றத்தையும் இருளில் புதைத்திருந்தது… இந்துஸ்தானிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாதங்களிலும், இந்துஸ்தானி ஏற்றுக்கொள்ளப்பட்டால் உருது மொழியும் இருக்கும் என்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இடமளிக்க வேண்டு. ஆனால், உருது இந்தியாவின் மொழிகளில் ஒன்று. அது இந்தியாவில் பிறந்து வளர்க்கப்பட்டது. இது இந்த நட்டின் லட்சக் கணக்கான இந்து முஸ்லிம்களின் தாய்மொழி” என்று கூறினார்.

– தமிழில் பாலாஜி எல்லப்பன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close