scorecardresearch

வெற்றிகரமாக தோற்ற மோடியின் தளபதி

குஜராத் மாநிலங்களவை தேர்தல் அமித் ஷாவுக்கும் அகமது பட்டேலுக்கும் இடையே நடந்த வார். அமித் ஷா தேர்தலில் ஜெயித்தாலும், கொண்டாட முடியவில்லை. ஏன்?

கதிர்

குஜராத் தேர்தல் முடிவை அப்படிதான் சொல்ல முடியும். இது காங்கிரசின் வெற்றியும் அல்ல, பாரதிய ஜனதாவின் தோல்வியும் அல்ல. பிஜேபி தலைவரின் தனிப்பட்ட தோல்வி.

தேர்தல் வியூகங்கள் அமைப்பதில் ஷாவுக்கு நிகர் எவரும் இல்லை என்றார்கள். குருஷேத்ரம் போரில் கண்ணன் வகுத்த வியூகங்களுக்கு நிகரானது ஷாவின் நேர்த்தி என்றார்கள்.

இன்று அவரே குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கிறார். அதனால் அவரோடு இங்கிருந்து தேர்வான ஸ்மிருதி இரானியும் தன் கொண்டாட்டத்தை மட்டுப்படுத்த நேரிட்டது.

ஒவ்வொரு வெற்றிக்காகவும் ஷாவுக்கு பாராட்டு குவியும். பிரதமரின் அற்புதமான வழிகாட்டலே காரணம் என்று பெருந்தன்மையோடு ஷா விட்டுக் கொடுப்பார். இந்த முறை மோடி மேல் பழியை போட முடியாது. ஆரம்பம் முதலே மோடிக்கு நம்பிக்கை இல்லை. நிச்சயம் முடியும் என்று ஷா அடித்துச் சொன்னதால் வியூகத்துக்கு அனுமதி அளித்தார் மோடி.
எல்லா மாநிலத்திலும் ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு எம்.பி.க்களை தேர்வு செய்யும் தேர்தல் இது. பெரும்பாலும் எந்த சலசலப்பும் பரபரப்பும் இருக்காது. ஏன் என்றால், ஒவ்வொரு கட்சியும் தனக்கு இருக்கும் ஆதரவை கணக்கிட்டு, அதற்கு ஏற்றபடி வேட்பாளரை நிறுத்தும். கொறடா கட்டளையை மீறி வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால் பதவி பறிக்கப்படும் என்பதால் தப்பு நடக்க வாய்ப்பு குறைவு.

குஜராத்தை பொருத்தவரை சட்டசபை மொத்த பலம் 182. இதில் 2 சீட் காலி. எனவே 180. ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் ஒருவருக்கு மொத்த எம்.எல்.ஏ.க்களின் கால் பங்கு + 1 ஆதரவு தேவை. 180ல் கால் பங்கு 45. அதோடு ஒன்று கூட்டினால் 46. இந்த 46 ஓட்டு கிடைத்தால் வெற்றி. அப்படி பார்க்கும்போது 3 பேர்தான் வெற்றி பெற முடியும்.

கட்சி வாரியாக பார்த்தால் ஆளும் கட்சியான பிஜேபி 2 பேரை ஜெயிக்க வைக்கலாம். எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் ஒருவர் ஜெயிக்கலாம். அப்படி 3 பேருக்கும் குறைந்தபட்சமான 46 ஓட்டுதான் கிடைத்தது என்றால் 42 ஓட்டு மீதமாகும். அது யாருக்கும் பயன்படாது. எனவே கட்சிகள் தம்மிடம் உள்ள மொத்த ஓட்டுகளையும் தங்கள் வேட்பாளருக்கே போட எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டளை பிறப்பிக்கும்.

இங்குதான் சிக்கல் பிறக்க வழி கிடைக்கிறது. இந்த உபரி ஓட்டுகளுடன், மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளை விலைக்கு வாங்கி சேர்த்து விட்டால் இன்னொரு ஆளையும் ஜெயிக்க வைக்கலாம் என்று சில ஆளும் கட்சிகள் திட்டமிடுவது உண்டு. அப்படி நடக்கும்போது எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் தோல்வியை சந்திக்க நேரும். இதற்கு வசதியாக ராஜ்யசபா தேர்தலில் முன்னுரிமை ஓட்டு என்கிற முறை அமலில் இருக்கிறது. அது குழப்பமானது. இந்த செய்திக்கு அவசியம் இல்லாதது.

இந்த உத்தியை பிரயோகித்து காங்கிரசை வீழ்த்த திட்டமிட்டார் அமித் ஷா. காங்கிரசை என்பதைவிட அகமது படேலை என்பது சரியாக இருக்கும். அகமது படேல் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளர். குஜராத் காரர். தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வருபவர். இவர் மீது அமித் ஷாவுக்கு தனிப்பட்ட கோபம் உண்டு. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது அரசில் உள்துறை அமைச்சராக இருந்தார் அமித் ஷா. அப்போது அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். போலீஸ் அதிகாரிகளை ஏவி விட்டு அரசியல் எதிரிகளை காணாமல் ஆக்குவது, தாதாக்களின் தொழிலுக்கு இடையூறாக இருப்பவர்களை போட்டுத் தள்ளுவது, ஆள் கடத்துவது, பணம் பறிப்பது என எல்லாமே சீரியஸ் குற்றச்சாட்டுகள்.

ஷொராபுதீன் என்கவுன்டர் அப்போது அவர் சொல்லி நடந்ததுதான் என புகார் எழுந்தது. டெலிபோன் உரையாடல்கள், சாட்சியங்கள் அடிப்படையில் சி.பி.ஐ அமித் ஷாவை கைது செய்தது. அவரை குஜராத்தில் இருந்து வெளியேற்ற கோர்ட் உத்தரவிட்டது. 2012ல் சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியதும் குஜராத் திரும்பி தேர்தலில் ஜெயித்து மீண்டும் மோடியின் வலது கரமாக அதிகார மண்டபத்துக்கு வந்த பிறகுதான் எதிர்ப்பாளர்கள் குரல் அடங்கியது.

தனக்கு நேர்ந்த தொல்லைகள் எல்லாவற்றுக்கும் தூண்டுதலாக இருந்தது அகமது படேல்தான் என ஷா நம்புகிறார். அகமது படேல் டெல்லியில் வாசம் செய்தாலும் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் புள்ளிகள், சாதகமான அதிகாரிகள், தொழிலதிபர்கள் மூலமாக பிஜேபிக்கு எதிராக காய் நகர்த்தியபடி இருக்கிறார் என்பது ஷாவின் நெடுங்கால சந்தேகம். சோனியாவின் நிழல் என்பதால் அகமது படேல் பேச்சுக்கு குஜராத்தில் எப்போதுமே மரியாதை அதிகம். அவரை பழி வாங்க கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை அமித் ஷா.
ஆனால் மோடி இதற்கு மசிவாரா? அதற்கும் வழி கண்டார் அமித் ஷா.

வாஜ்பாய் அரசு 1999ல் கவிந்தது. அந்த ஏப்ரல் 17ம் தேதி பிஜேபியால் என்றென்றும் மறக்க முடியாத நாள். நம்பிக்கை ஓட்டு கோருகிறார் பிரதமர் வாஜ்பாய். பிஜேபிக்கு சொந்த பலம் இல்லை. சிறிய கட்சி, பெரிய கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரோடும் பேசி ஆதரவு திரட்டியது. எம்.பி.க்களுக்கு தாராளமாக விலை வைத்து இரவு பகலாக பேரம் பேசி முடித்திருந்தார் பிரமோத் மகாஜன்.

விவாதத்தில் பேசும்போது பல்டி அடித்தார் மாயாவதி. பகுஜன் சமாஜ் ஆதரவு அரசுக்கு இல்லை என அறிவித்தார். ஆனால் பிஜேபி அசரவில்லை. வேறு ஏற்பாடுகளை செய்து முடித்து விட்டதாக அத்வானிக்கும் வாஜ்பாய்க்கும் தைரியம் அளித்திருந்தார் மகாஜன்.
ஓட்டெடுப்பு நடந்தது. அரசுக்கு ஆதரவு 269. எதிர்ப்பு 270. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அரசு கவிழ்ந்தது. அறிவிப்பு பலகையை பார்த்த பிரதமர் முகத்தில் ஈயாடவில்லை. விஜயராஜ சிந்தியா வெடித்து அழுதார். அத்வானி முகத்தை திருப்பிக் கொண்டார். மகாஜனை நோக்கி கோப பார்வைகள்.

அரசை ஆதரித்த காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் ஒரு எம்.பி தன் கட்சியின் கட்டளையை மீறி விட்டார். ஒடிசா முதல்வராக இருந்தவர், எம்.பி.யாக இருக்கும் உரிமையை பயன்படுத்தி வாஜ்பாய்க்கு எதிராக ஓட்டு போட்டு விட்டார்.

ஆக, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் எப்படியும் ஜெயித்து விடுவோம் என கணக்கு போட்டிருந்த பிஜேபி, அதே வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வாஜ்பாயும் அவரது கட்சியினரும் இன்றுவரை மறக்க முடியாத அவமானம் அந்த தோல்வி.

அன்று ஒடிசா முதல்வரை டெல்லிக்கு அழைத்து ஓட்டு போட வைத்தவர் சோனியா. காஷ்மீர் எம்.பி.யை கட்சி மாறி ஓட்டு போட வைத்தவர் சோனியா. அதற்கான ஆலோசனை வழங்கியவர் அகமது படேல்.

இந்த நினைவூட்டலுக்கு பிறகு மோடி ஏன் மறுக்கப் போகிறார். ஷா திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டினார். குஜராத்தில் பணியை தொடங்கினார் ஷா.
காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலாவை வளைத்தார். வகேலா ஏற்கனவே வருத்தமாக இருந்தார். பஞ்சாபில் அமரிந்தர் சிங்குக்கு அளித்த சுதந்திரத்தை சோனியா தனக்கு வழங்கவில்லையே என்ற வருத்தம். அப்படி வழங்கினால் நவம்பர் தேர்தல் காங்கிரசை ஜெயிக்க வைத்து அமரிந்தர் போல முதல்வராகலாம் என்பது அவர் ஆசை. ஆனால் சோனியா சம்மதிக்கவில்லை. வகேலாவின் பழைய வரலாறை ஞாபகப்படுத்தி அகமது படேல் தடுத்து விட்டார்.

பழைய வரலாறு என்ன? வகேலா பிஜேபியில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர். மோடி மீதான கோபத்தில் அங்கிருந்து வெளியேறி காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் ஆனவர். ஆக, இரு கட்சிகளிலுமே அவர் மீது சந்தேகம் இருந்தது. அவருக்கு அகமது படேல் மீது கோபம் இருந்தது. அதை ஷா பயன்படுத்திக் கொண்டார். பிஜேபிக்கு வந்தால் நீதான் அடுத்த முதல்வர்; ஆனால் காங்கிரசில் இருந்து இப்போதே எம்.எல்.ஏ.க்களை இழுத்து வா என்றார்.

காங்கிரசில் 57 பேர் இருந்தனர். தான் சொன்னால் 15 பேர் ஒரு மணி நேரத்தில் வருவார்கள்; 30 பேர் அப்புறம் வருவார்கள் என்றார் வகேலா. ஷா தலையாட்டினார். வகேலா காங்கிரசை விட்டு வெளியே வந்தார். அவர் அழைப்பை ஏற்று 5 பேர் மட்டுமே சட்டசபையில் இருந்து வெளியே வந்தனர். அகமது படேல் வேகமாக செயல்பட்டார். அவர் யோசனைப்படி காங்கிரஸ் அந்த ஐவரையும் கை கழுவியது. அவர்கள் பதவி இழந்தனர்.

ஷாவும் விடாமல் வகேலாவை உசுப்பினார். மேலும் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நவம்பர் தேர்தலில் பிஜேபி டிக்கெட் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி ஓடி வந்தனர். அவர்களில் ஒருவரான வகேலாவின் நெருங்கிய உறவினர் பல்வந்த்சிங் ராஜ்புத்தையே பிஜேபியின் மூன்றாவது வேட்பாளராக அறிவித்தார் ஷா. ராஜ்புத் காங்கிரஸ் கொறடாவாக இருந்தவர். ஆனாலும் அவருடன் யாரும் வரவில்லை.

அதோடு வருகை நின்றதால் பேரம் 15 கோடிக்கு உயர்த்தப்பட்டது. இதற்கு மேல் இங்கிருந்தால் கடத்தல் நிச்சயம் என்ற சூழல் உருவானது. அகமது படேல் அவசரமாக 44 எம்.எல்.ஏ.க்களை திரட்டி – ஒருவர் போகவில்லை – பாதுகாப்புடன் தன் கட்சி ஆட்சி நடக்கும் கர்நாடகாவுக்கு அனுப்பினார். அங்கே ரிசார்ட்டில் அவர்களை பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பு கர்நாடகா அமைச்சர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஷா சும்மா இருப்பாரா? நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடனும் பிரதமர் மோடியுடனும் பேசினார். எம்.எல்.ஏ.க்கள் தங்கிய ரிசார்ட்டையும் அமைச்சர் சிவகுமார் வீட்டையும் வருமான வரி அதிகாரிகள் குழு சூழ்ந்தது. அமைச்சர் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரின் செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்து. தகவல் தொடர்பு தடை பட்டதால் எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களில் பதட்டம் சூழ்ந்தது. கோர்ட் தலையிட்டு ரிசார்ட்டில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்று சட்ட நடவடிக்கையும் தொடங்கியது.

நிலைமை கை மீறி போகலாம் என்ற கவலையில் எம்.எல்.ஏ.க்களை குஜராத்துக்கே திருப்பி கொண்டுவர ஏற்பாடு செய்தார் அகமது படேல். ஆனாலும் ஆமதாபாத் அருகே ஒரு ரிசார்ட்டில் அவர்கள் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்தார். இத்தனை கெடுபிடியிலும் ஒரு நல்லது நடந்திருப்பதாக அவர் கணக்கிட்டார். அதாவது, எம்.எல்.ஏ.க்கள் நீக்கம், ஓட்டம் காரணமாக அவர் பெற வேண்டிய ஓட்டுகள் 44 ஆக குறைந்திருந்தது.

குஜராத் ரிசார்ட்டிலும் அமித் ஷாவின் ஆட்கள் ஊடுருவி 2 எம்.எல்.ஏ.க்களை வெற்றிகரமாக சரிக்கட்டி விட்டார்கள். ஆனால், பிஜேபிக்கு ஓட்டு போட்டதாக நிரூபித்தால்தான் பேசிய பணம் தரப்படும். இல்லை என்றால் வீட்டில் கொடுத்த அட்வான்சோடு முடிந்தது. இருவரும் அதற்கும் தலையாட்டினார்கள். நிரூபிப்பது எப்படி என்பதில் மட்டும் சிறிதாக ஒரு குழப்பம். அவர்களுக்குள் பேசி அதையும் தீர்த்துக் கொண்டார்கள்.

தேர்தல் விதிப்படி, ஒரு எம்.எல்.ஏ தான் கையெழுத்திட்ட ஓட்டுச் சீட்டை பெட்டியில் போடுமுன் தன் கட்சியின் கொறடா அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஏஜன்டிடம் காட்ட வேண்டும். கட்டளையை மீறி வேறு கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்வதற்காக அந்த ஏற்பாடு. மேற்படி இரு எம்.எல்.ஏ.க்களும் அதற்கு மாறாக பிஜேபி ஏஜன்ட் பக்கம் திரும்பி சீட்டைக் காட்டிவிட்டு பெட்டியில் போட்டனர். இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.

மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை. தனது எம்.எல்.ஏ.க்கள் இருவர் ஓட்டு சீட்டை பிறருக்கு காட்டக்கூடாது என்கிற விதியையும் மீறி விட்டதால், அவர்களின் ஓட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டுதான் எண்ணிக்கை தொடங்க வேண்டும் என்று அகமது படேல் தரப்பில் ஆட்சேபம் பதிவு செய்யப்பட்டது.

கூச்சல் குழப்பம் பெரிதாகி, தேர்தல் அதிகாரி டெல்லிக்கு தகவல் சொன்னார். எல்லா தகவலையும் இங்கே அனுப்புங்கள் என கமிஷன் ஆணையிட்டது. சீன் டெல்லிக்கு மாறியது. அமித் ஷா ஆடிப் போனார். பட்ட கஷ்டமெல்லாம் வீணாகி விடுமோ என்ற கவலை பிடித்துக் கொண்டது. டெல்லிக்கு போன் போட்டார். பிரதமரிடம் சில யோசனைகளை முன்வைத்தார். அவர் உடனே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மின்சார அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை தேர்தல் கமிஷனுக்கு விரைய சொன்னார்.

நிர்வாச்சன் சதன் என்ற பெயர் கொண்ட தேர்தல் ஆணையத்தின் மாளிகையில் பதட்டம் தொற்றிக் கொண்டது. ஒரு மாநில ராஜ்யசபா தேர்தல் பிரச்னைக்காக இந்திய அரசாங்கத்தின் டாப் அமைச்சர்கள் படையெடுத்து வருவது வரலாற்றில் இதுதான் முதல் தடவை.

சோனியாவும் சளைக்கவில்லை. சட்டமும் தேர்தல் நடைமுறைகளும் நன்கு அறிந்த குலாம் நபி ஆசாத், பி. சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஆர். எஸ். சூரஜ்வாலே, ஆர்.பி.என்.சிங் ஆகியோரை காங்கிரஸ் குழுவாக அனுப்பினார்.

இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் வாதங்களால் மோதினர். தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி அலட்டிக் கொள்ளவே இல்லை. ’உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள். சந்தேகங்களை கேளுங்கள். பதில் சொல்கிறோம். ஆனால் எங்களுக்கு வந்திருக்கும் ஆவணங்கள், ஆதாரங்கள், தகவல்கள், விதிகள் அடிப்படையில்தான் முடிவு எடுப்பேன். இத்தனை மணிக்குள் முடிவை சொல்ல வேண்டும் என்கிற கெடுவுக்கு எல்லாம் நான் கட்டுப்பட முடியாது’ என்று மென்மையான குரலில் ஆனால் உறுதியாக தெரிவித்து விட்டார்.

ஜேட்லி தலைமையிலான பிஜேபி குழு முன்வைத்த வாதங்கள் சிறுபிள்ளைத் தனமாகவும் ஆணவமாகவும் இருந்தன. ஜோதி கூலாக ஒவ்வொன்றுக்கும் பதிலளித்து வாதங்களை தகர்த்தார்.

பிஜேபி: ஓட்டு சீட்டை பெட்டியில் போட்டதும் தேர்தல் முடிந்து விடுகிறது. அதற்கு பிறகு தேர்தல் கமிஷனுக்கு வேலை இல்லை. எனவே நீங்கள் தலையிட உரிமை இல்லை.

தேர்தல் கமிஷன்: ஓட்டுகளை பாதுகாத்து, எண்ணி, முடிவு அறிவித்து சர்டிபிகேட் கொடுக்கும் வரையில் எங்கள் வேலை முடிவதில்லை.

பிஜேபி: ஓட்டு சீட்டை வேறு நபருக்கு காட்டியதை தேர்தல் அதிகாரி பார்த்திருந்தால் அங்கேயே சொல்லி இருக்கலாம். காங்கிரசும் அப்போதே ஆட்சேபித்து இருக்கலாம். தோற்கப் போகிறோம் என தெரிந்து ஓட்டு எண்ணும் நேரத்தில் ஆட்சேபம் கிளப்புகிறார்கள். ஆகவே நீங்கள் அனுமதிக்க கூடாது.

தே.க: தேர்தல் அதிகாரி பார்த்திருந்தாலும், காங்கிரஸ் ஆட்சேபித்து இருந்தாலும் அதிகாரி அந்த தகவலை எங்களுக்குதான் தெரிவிப்பார். இதில் என்ன செய்ய வேண்டும் என நாங்கள் ஆலோசனை சொல்வோம். அதுதான் நடைமுறை. ஆகவே இதில் தவறு இல்லை.

பிஜேபி: ஏஜன்டுக்கு ஓட்டு சீட்டை காட்டலாம் என்று விதி சொல்கிறது. ஓட்டு சீட்டை இன்னொருவருக்கு காட்டினால் அதன் பிறகு அதில் ரகசியம் என்ன இருக்கிறது? ரகசிய ஓட்டு என்பது அங்கே அடிபட்டு போகிறது. ஆகவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவரும் தப்பு செய்யவில்லை.

தே.க: கொறடா கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க மட்டுமே அவரது பிரதிநிதிக்கு சீட்டு காட்டப்படுகிறது. மற்றபடி இது ரகசிய ஓட்டுதான். வேறு நபருக்கு காட்டுவது சட்டப்படி தவறுதான்.

பிஜேபி: ஓட்டு சீட்டை சொந்தக் கட்சி ஏஜன்டிடம் காட்ட வேண்டும் என்றுதான் விதி சொல்கிறதே தவிர அவரைத் தவிர வேறு யாருக்கும் காட்டக் கூடாது என்று சொல்லவில்லை.

தே.க: (ஏஜென்டுக்கு) மட்டும் என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் விதியின் அர்த்தம் அதுதான்.
பிஜேபி: தேர்த்ல் முடிந்த பிறகு அதில் தலையிட கோர்ட்டுக்குதான் அதிகாரம் உண்டு. தேர்தல் கமிஷனுக்கு கிடையாது.

தே.க: தேர்தல் முடிவதே ரிசல்ட் அறிவித்த பிறகுதான். அதன் பிறகு வேண்டுமானால் கோர்ட் வரலாம். அதுவரை நாங்கள்தான் முடிவு செய்வோம். அதுதான் சட்டம்

இப்படியாக ஆளும் கட்சியின் அபத்தமான வாதங்களை கேட்டு அதிகாரிகள் மட்டுமின்றி காங்கிரஸ் குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். ஷாவின் கவுரவ பிரச்னையாக குஜராத் தேர்தல் மாறியதுதான் மோடி இவ்வளவு தீவிரமாக தேர்தல் கமிஷனுடன் மோத காரணம் என்பதை செய்தியாளர்களிடம் காங்கிரஸ் குழுவினர் சுட்டிக் காட்டினர்.

விடியோ ஆதாரம் ஒன்றே போதும் என்ற நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு சில நிமிடங்கள் முன்னால் தீர்ப்பை அறிவித்தது தேர்தல் கமிஷன். ஓட்டு சீட்டை வேறு கட்சியின் பிரதிநிதிக்கு காட்டியதால் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளும் செல்லாது என கமிஷன் அறிவித்தது.

அதன் பிறகே ஓட்டு எண்ணிக்கை குஜராத்தில் தொடங்கியது. 2 ஓட்டு செல்லாமல் போனதால், வெற்றிக்கு தேவையான ஓட்டுகள் 43 ஆக குறைந்தன. அமித் ஷா, ஸ்மிருதி இரானி தலா 46 ஓட்டுகளும், அகமது படேல் 44 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர். காங்கிரஸ் பலம் 43 ஆக குறைந்த பிறகு அதற்கு 44 ஓட்டு கிடைத்தது எப்படி?

இப்போது அமித் ஷா விடை தேடிக் கொண்டிருக்கும் கேள்வி அதுதான்.

வெற்றியும் சில சந்தர்ப்பங்களில் தோல்விக்கு சமமாக கருதப்படும். குஜராத்தில் பிஜேபி இன்று பெற்றிருப்பது அத்தகைய வெற்றிதான். வாஜ்பாய், அத்வானி காலத்தில் இதுபோன்ற அடாவடிகள் பிஜேபிக்கு பழக்கமில்லை.

எனினும், மோடி – அமித் ஷா கூட்டணியின் முதல் அதிரடியாக இதை கணக்கிடவும் கூடாது. உத்தராகண்ட், அருணாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் வேறு கட்சியின் ஆட்சியை கபளீகரம் செய்தபோது சுப்ரீம் கோர்ட் தலையிட்டு காப்பாற்ற வேண்டியிருந்தது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும் பிஜேபி முந்திக் கொண்டு குதிரை பேரம் மூலம் ஆட்சி அமைக்க முடிந்தது. அந்த வரிசையில் குஜராத்திலும் முயன்று பார்த்தனர்.

இது அவர்களின் முதல் தோல்வி. நவம்பரில் நடக்க இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் இது தொடர்ந்தால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக அது எதிரொலிக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Amit shahs worst defeat

Best of Express