அனலும் புனலும் : பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை அளிக்கலாமா?

ஆறு மாதக் காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக ஆகாவிட்டால்? அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம்.

குவியாடி

நாட்டிற்கான வரவுசெலவுகள் குறித்த விவரங்களைச் சட்ட மன்றத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் அளிப்பதை வரவு செலவுத் திட்டம் என்கின்றனர்.

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த பொழுது இப்பெயரை மாற்றினார். இது வெறும் வரவு செலவு விவரங்களை மட்டும் குறிப்பது அன்று. நிதிநிலை ஆதாரங்கள், நிதி இருப்பு, நிதிப் பற்றாக்குறை முதலான பல விவரங்களையும் அளிப்பது. எனவே நிதிநிலை அறிக்கை என்பதே பொருத்தமாக இருக்கும் என்றார்.

பழந்தமிழ் நாட்டில் இதனைப் பாதீடு என்றனர். நாட்டின் பொருள் செல்வத்தைப் பகுத்துப் பல துறைகளுக்கும் செலவிடும் முறைகளைக் குறிப்பதால் பாதீடு எனக் குறித்தனர். இலங்கையில் இச் சொல் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

ஆங்கிலத்தில் budget என்பது ஒருவகைத் தோல் பையைக் குறிக்கும். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர் முன் அளிப்பதற்காக எடுத்து வரப் பெற்ற அறிக்கையை என்ன சொல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே அறிக்கை எடுத்து வரப்பெற்ற பையின் பெயராலேயே budget என்று அழைத்தனர். ஒருவகைக் காரண ஆகுபெயரான அச்சொல்லே நிலைத்து விட்டது. எனினும் பொருள் பொதிந்த தமிழ்ச் சொல்லைக் கையாள்வதே முறையாகும்.

தமிழ் நாட்டின் வரும் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமாகிய பாதீடு அல்லது நிதிநிலை அறிக்கை நிதித் துறையைப் பார்க்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தால் வரும் 15/3 அன்று அளிக்கப்பட உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் பதவியே வினாக்குறியாக உள்ள பன்னீர் செல்வம் இதனை அளிப்பது முறைதானா என்னும் வினா மக்கள் முன் எழுந்துள்ளது.

அதிமுக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் பன்னீர் முதலான 11 சட்ட மன்ற உறுப்பினர்கள்.

சட்டமன்றக் கட்சித் தலைவரை – முதல்வரை – மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மடல் அளித்த சசிகலா ஆதரவாளர்களைத் தகுதி நீக்கம் செய்தது முறைகேடு என அரசியல் வல்லுநர் கூறுகின்றனர். அதைவிடப் பெரிய முறைகேடு அரசிற்கு எதிராக வாக்களித்த பன்னீரையும் ஆதரவாளர்களையும் நீக்காதது எனச் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பிற்காகக் காத்திருக்கிறது.

தீர்ப்பு பன்னீரைச் சேர்ந்த 11 பேருக்கு எதிராக வரும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு வந்தால் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கும் ஒருவர் எங்ஙனம் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை அளிக்க இயலும்?

இதை அறியாதவர்களா பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும்! அப்படியானால் சாதகமான தீர்ப்பிற்கு வழிவகை செய்து விட்டு நம்பிக்கையுடன் உள்ளார்களா? அல்லது எதிராகத் தீர்ப்பு வந்தால் மேல்முறையீட்டில் தடை வாங்கலாம் என்ற துணிவில் உள்ளார்களா?

எனவே, சாதகமான தீர்ப்பு வந்தால் சிக்கலில்லை. பாதகமான தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை!

சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்த பின் அற உணர்வு இருப்பின் விலகி இருப்பதே முறை. ஆனால், இன்றைய அரசியல்வாதிகளிடம் அற உணர்வை எதிர்பார்க்க முடியாதே!

அறமும் சட்டமும் வெவ்வேறாக உள்ளன. எனவே, அறம் தவறு என்று சொல்வதைச் சட்டம் சரி என்று சொல்லலாம். சான்றாகப் புலால் உண்பது அற நெறிப்படி தவறாகும். ஆனால் சட்டப்படி அது தவறல்ல. எனவே, தீர்ப்பு எதிராக வந்தால், தடை வாங்கிச் செயல்படுவது தவறாகாது.

ஒருவேளை எதிரான தீர்ப்பு வந்து மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டு இடைக்காலத்தடை விதிக்க மறுத்து விட்டால்?
அப்பொழுதும் பயப்பட ஒன்றுமில்லை. ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமலே 6 மாதக் காலம் அமைச்சராக இருக்கலாம். ஆறு மாதக் காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக ஆகாவிட்டால்? அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம். மீண்டும் ஆறு மாத வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும். இப்படியே தொடருவது சட்டப்படி எத்தவறும் இல்லை. இதற்கான முன் எடுத்துக்காட்டுகள் அதிமுக ஆட்சியிலேயே உள்ளன.

ஆகவே, நிதிநிலை அறிக்கையை அளிப்பதில் எச்சிக்கலும் இல்லை. ஆனால், எடப்பாடியார் அரசு கவிழ்ந்து விட்டால் ..? இவ்வினாவே எழாது.

×Close
×Close