குவியாடி
உடலுறுதி, உற்சாகம், வீர தீரப் பயிற்சி எனப் பல வகைகளிலும் சிறந்தது மலையேற்றப் பயிற்சி. மலைப்பகுதிகளுக்குப் போக்குவரத்து வசதி இல்லா முந்தையக் காலக்கட்டங்களில் மலையேற்றம் என்பது இயல்பான ஒன்றாக இருந்துள்ளது. பின்னர்ப் படைத்துறையினருக்கு உரியதாக மலையேற்றம் அமைந்தது.
காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றில் சில சிறப்புப் பிரிவினருக்கும் மலைப் பகுதியில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே மலையேற்றப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தே.ப.ப.( என்.சி.சி.) மாணவர்களுக்கும் மலைப்பகுதியைச் சார்ந்த பிரிவினருக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாலும் பயிற்சியின் தரம் மாறுபடும்.
தொலைக்காட்சி வாயிலாக மலையேற்றக்காட்சிகளைப் பார்க்கும் மக்களுக்கு மலையேற்றத்தில் ஆர்வம் வந்துவிட்டது. மக்களுக்கு ஆர்வம் இருப்பின் அதனை விலையாக்குவதுதானே வணிகர்கள் வழக்கம். எனவே மலையேற்றப் பயிற்சி அளிப்பதாக வணிக மையங்கள் பெருகிவிட்டன.
அரசு இதனை ஒழுங்குமுறை படுத்தாமையும் கட்டுப்பாடுகள் விதிக்காமையும் மலையேற்றம் குறித்த முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தாமையுமே குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற பலரின் உயிரைக் காவு கொடுத்துவிட்டது. மற்றும் பலரின் உடல்கள் தீக்கு இரையாகி உயிர் நிலைக்கப் போராடிக் கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி என்னும் மலைப்பகுதி ஊரில் மலையேற்றம் என்பது இயல்பான ஒன்றுதான். மலைப் பகுதிகளில் அவ்வப்பொழுது காட்டுத் தீ பரவுவதும் இயற்கையே! தீ பரவும்பொழுது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகளை மலையேறும் குழுவினர் அறிந்திருக்க வேண்டும். மலைப்பாதைகளையும் தீத் தடுப்பு முறைகளையும் காப்பு முறைகளையும் அறிந்த உள்ளூர்வாசிகள் துணையுடனும் செல்ல வேண்டும்.
இப்பொழுது குரங்கணிக்கு மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற சென்னை மலையேற்றக் குழு 17 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஆனாலும், முன்னரே சில இடங்களில் சிலர் இறப்பையும் சந்தித்துள்ளதாகச் சில செய்திகள் கூறுகின்றன. அவ்வாறு இருப்பின் இவ்வமைப்பு இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
சென்னையிலிருந்து 27 பேரும் ஈரோட்டிலிருந்து 12 பேருமாகச் சென்ற குழுவினர் கொழுக்குமலையிலிருந்து குரங்கணிக்குத்
திரும்போது தான் தீ நேர்ச்சியில் - விபத்தில் - சிக்கியுள்ளனர்.
ஒருவேளை இயற்கைத் தீயாக இல்லாவிட்டாலும் மலைமக்கள் தங்கள் தேவைக்காக உருவாக்கும் செயற்கைத் தீயாக இருக்கலாம். சதிச்செயலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவே!
எவ்வாறிருப்பினும் பொதுமக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பினும் அமைச்சர் பெருமக்களும் உயர் அதிகாரிகளும் தீயின் தீவிரத்தைத் தொடக்கத்தில் உணர்ந்த்தாகத் தெரியவில்லை.
பெரியகுளத்தில் துணை முதல்வர் பங்கேற்கும் அவர் மகன் நடத்திய நலத் திட்ட உதவிகள் வழங்கல் விழாவில்தான் அரசு இயந்திரம் கவனம் செலுத்தியுள்ளது. உதவி வழங்கும் பொறுப்பை வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு ஆட்சியர்( collector) முதலான உயர்அதிகாரிகளுடனும் கட்சிப் பொறுப்பாளர்களுடனும் குரங்கணிக்குச் சென்றிருக்கலாம். அவ்வாறு சென்றிருந்தால் துயரப்பாதிப்புகள் குறைந்திருக்கும்.
சேலம் விழாவில் கருத்து செலுத்திய முதல்வர் குரங்கணியின் பக்கம் பார்வையைச் செலுத்தியிருந்தாலும் தீயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்திருக்கும்.
காலந்தாழ்த்தி நடவடிக்கை எடுத்துவிட்டு முறையான இசைவு பெறாமல் மலையேறியதுதான் காரணம் என்பது ஏற்கத்தக்கதல்ல. அவ்வாறு இசைவு பெறாதது உண்மை என்றே கொள்வோம். நுழைவுக் கட்டணம் பெற்ற அரசு, மலையேற்ற இசைவு, தீக்காப்பு ஏற்பாடு முதலியன குறித்து அறியாதது தவறுதானே!
துயரநிகழ்வு நேரும்பொழுதுமட்டும் அரசு, விழிப்புடன் நடவடிக்கை எடுப்பதுபோல் அறிவிக்கும். அறிவிப்புகள் காற்றோடு கலப்பதும் துயரங்கள் தொடர்வதும் தொடர்கதை ஆகும்.
திருவரங்கம் (திருச்சி) திருமணமண்டபத் தீ நேர்ச்சி உயிரிழப்புகள்(2004), கும்பகோணம் பள்ளித் தீ நேர்ச்சி உயிரிழப்புகள்(2004), முகலிவாக்கம் அடுக்குமாடி இடிபாடு உயிரிழப்புகள்(2014) என எண்ணற்றோர் உயிர்களை அரசு விலையாகப் பெற்றும் செம்மையான பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
வரும் முன் காக்க அரசு பாடம் படிப்பதற்கு மக்கள் இன்னும் எத்தனை உயிர்களை விலையாகக் கொடுக்க வேண்டுமோ? தெரியவில்லையே!