அனலும் புனலும்: அதிகாரத்தில் மிதக்கும் ஆளுநர்

அரசியலமைப்பு விதிகள் 160, 356, 357 ஆகியவற்றின்படி குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினாலன்றி எச்சிக்கலான சூழ்நிலையிலும் ஆளுநருக்கு எவ்வதிகாரமும் கிடையாது.

குவியாடி

தமிழ்நாட்டில் நடைபெறுவது ஆளுநர் ஆட்சியோ என ஐயப்படும் வகையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன துணைவேந்தர் பணியமர்த்தங்கள். அமைச்சர் பெருமக்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள அமைதியாக இருக்கலாம்; ஆனால், மாநில உரிமைகள் பறிபோகும் பொழுது நாம் அமைதியாக இருந்தால், தமிழ்நாடு அயலவர் காடாகிவிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முறையாக இயங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு, பிரிவு 154இன்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநரிடம் அதிகாரம் உறைந்திருக்க வேண்டும். ஆனால், அவரை மாநிலத்தின் தலைவராக அரசமைப்பு கூறவில்லை. ஏனெனில், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட அமைச்சரவையின் கருத்திற்கேற்பவே செயல்பட வேண்டும். நெருக்கடி நிலை போன்ற எதிர்பாரா நேர்வுகளில் அவர் தன் முடிவுரிமைக்கு (discretion) ஏற்பச் செயல்படலாம்.

இயல்பான காலங்களில் ஆளுநர் அதிகாரம் என்பது அமைதியான நோக்குநர் (silent observer) என்ற வகையில்தான் அமைந்துள்ளது. எனவே தன் விருப்பிற்கேற்ப அவர் செயல்படுவது மக்களாட்சிக்கு எதிரானது.

ஆளுநரின் அதிகாரம் எத்தகையது என்பதற்கு ஒரு சான்று பார்க்கலாம். அரசியலலமைப்பு, பிரிவு 154 முதலமைச்சர் ஆளுநரால் அமர்த்தப்பட வேண்டும் எனக் கூறுகிறது. அதற்காக அவர் தன் மனம் போன போக்கில் சிறுமூர்த்தி அல்லது கூசா எனத் தான் விரும்பும் யாரையேனும் முதல்வராக்க முடியுமா? முடியாதல்லவா? அவர் சட்ட மன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவரைத்தானே முதல்வராக்க இயலும். எனவேதான், பிரிவு 154, (2) (ஆ)வில் எந்த அதிகாரத்தையும் ஆளுநருக்கு மாற்ற இயலாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, அமைச்சரவைக்குரிய அதிகாரங்களை அமைச்சரவைதான் செயல்படுத்த வேண்டுமே தவிர ஆளுநர் அவற்றைக் கைக்கொள்ளக்கூடாது.

மற்றோர் எடுத்துக்காட்டையும் பார்ப்போம். சட்டவரைவு (மசோதா) ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் பொழுது அதனை ஏற்காமல் அவர் திருப்பி அனுப்பலாம். ஆனால், சட்ட மன்றம் அதனையே திருப்பி அனுப்பினால், அவர் கையொப்பம் இட்டுத்தான் ஆக வேண்டும்.

சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றும் உரைகூட அவர் விருப்பத்திற்கேற்ப அமைய முடியாது. அரசு தரும் உரையைத்தான் அவர் வாசித்தாக வேண்டும். அவர் மனச்சான்றிற்கு அங்கே இடமில்லை.

ஆளுநரின் பணிகளாக அரசியலாளர் கூறுவது உடன்படுதல், ஊக்கப்படுத்தல், அறிவுரை வழங்கல் என மூன்றை மட்டுமே. அறிவுரை என்பது அரசு தவறான பாதையில் போகும்போது எச்சரிக்கும் வகையிலும் இருக்கலாம். ஆனால், ஆளுநரே அமைச்சரவையின் அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவருடைய கள ஆய்வு முதலிய பணிகள் அதிகார மீறல்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

குடியரசுத் தலைவரின் சார்பாளராகச் செயல்பட வேண்டிய ஆளுநர், மத்திய அரசின் விருப்பத்திற்கிணங்க அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது குடியரசுத் தலைவருக்கும் இழுக்கு தேடித்தருவதாகும்.

ஆளுநர் தான் வேந்தராக இருக்கும் பல்கலைக் கழகங்களுக்குக்கூடத் தலைவர் என்ற முறையில் செயல்படக்கூடாது. அரசின் பரிந்துரைக்கேற்பவே செயல்பட வேண்டும். துணைவேந்தருக்கான தேடல் குழுவின் பரிந்துரை அரசின் மூலமாகத்தான் ஆளுநருக்குச் செல்ல வேண்டும். ஆளுநர் நேரடியாக நேர்முகத்தேர்வு நடத்துவதும் முடிவெடுப்பதும் மக்களாட்சி முறைக்கு எதிரானது. அதிகாரத்தின் கீழ்நிலையில் உள்ளவர்கூடத் தான்தோன்றித்தனமாகச் செயல்படக்கூடாது; அவ்வாறிருக்க உயர்ந்த பொறுப்பில் உள்ள ஆளுநர் தன் விருப்பிற்கேற்பச் செயல்படுவது என்பது முறையாகாது.

வேந்தர் என்பது வழமையாக அன்றாட அலுவல்களில் ஈடுபடாத, ஏட்டளவில் தலைமை வகிக்கும் பதவி.( the chancellor is usually a ceremonial non-resident head of the university.) இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கு இந்தியக் குடியரசுத் தலைவரே வேந்தர். விசுவபாரதப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் தலைமயமைச்சர். ஆந்திராவில் தெலுங்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர். ஆனால், இவர்கள் யாரும் அன்றாடப் பல்கலைக்கழகப் பணிகளில் குறுக்கிடுவதில்லை. இது மதிப்பு நிலைப் பதவியேயாகும். குசராத்து பல்கலைக்கழகத் தளத்தில் வேந்தரின் அதிகாரம் எனக் குறிக்கப்படுவது ஊக்கப்படுத்திச் செயல் திட்டங்களில் வினையூககியாகச் செயல்படுவதேயாகும் (who would act as a catalysed).

உயர்கல்விக்கான இந்திய அரசின் முன்முறைச்சட்டக்குழு [The Model Act Committee of the Government of India (1964)] குடியரசுத்தலைவர் மத்தியப் பல்கலைக் கழகங்களின் பார்வையாளராகச் (visitor) செயல்படுவது போல் மாநில ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக இருக்க வேண்டும்; வேந்தராக இருக்கக்கூடாது எனக் கருத்து தெரிவித்துள்ளது.

வேந்தர் என்பவர் பல்கலைக்கழகங்களின் அதிகாரத் தலைவர் அல்லர் என்பதையே இவையாவும் மெய்ப்பிக்கின்றன. இவர், தன் கருத்தை அரசிற்குத் தெரிவிக்கும் வழிகாட்டியாகச் செயல்படலாம், ஆனால், தானே தலைவர் என்ற முறையில் செயல்படக்கூடாது.

ஆளுநர், பிற மாநிலத்தவரைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களாகப் பணியமர்த்திக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிக் கொள்கைக்கு எதிரானது ஆகும் இது. மாணாக்கர்களையும் ஆசிரியப்பெருமக்களையும் விலக்கி வைக்கும் செயல்பாடுமாகும். மாநில அரசைச் செயல்படாதிருக்கச் செய்யும் கேடுமாகும்.

தமிழக ஆளுநர் வேந்தர் என்பதை அதிபராக எண்ணிக் கொண்டு செயல்படுகிறார். இவர், தானாக இவ்வாறு செயல்படவில்லை என உறுதியாகக் கூறலாம். தமிழக அரசின் அதிகாரங்களைக் கையிலெடுக்கத் தூண்டும் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்கவே இவ்வாறு செயல்படுகிறார்.

பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவி, மாவட்ட நீதிபதி பதவிகள் என ஆளுநர் பணியமர்த்தப்பட வேண்டிய பதவிகள் பல உள்ளன. துணை வேந்தர் பதவிகளில் அமைதி காத்தால் அடுத்துத் தொடர்ச்சியாக எல்லாப் பணியமரத்தங்களும் ஆளுநரால்தான் மேற்கொள்ளப்படும் என்பதை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உணர வேண்டும்.

அரசியலமைப்பு விதிகள் 160, 356, 357 ஆகியவற்றின்படி குடியரசுத்தலைவர் அறிவுறுத்தினாலன்றி எச்சிக்கலான சூழ்நிலையிலும் ஆளுநருக்கு எவ்வதிகாரமும் கிடையாது. அமைச்சரவையின் அறிவுரைக்கிணங்கவே செயல்பட வேண்டும் என்ற அரசமைப்பு விதி ஆளுநரின் அதிகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. இதற்குப் பின்பும் ஆளுநர் அதிகாரத்தில் மிதப்பதும் அமைச்சர் பெருமக்கள் அடிமைத்தனத்தில் திளைப்பதும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கும் கேடுதான்.

ஆளுநர் உடனடியாகத் தான் அண்மையில் அமர்த்திய துணைவேந்தர்களை விலகச் சொல்லிவிட்டு முறைப்படிச் செயல்பட்டுத் தமிழக அரசின் வாயிலாகத் தமிழ்நாட்டவரைத் துணைவேந்தர்களாகப் பணியமர்த்தம் செய்ய வேண்டும். எவ்வளவு அடிததாலும் தாங்குகிறார்கள் என்று பெயர் வாங்க விரும்பாமல், உரிமைக்குக் குரல் கொடுத்துத் தமிழக அரசின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close