Advertisment

அனலும் புனலும் : இசுலாத்தை பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா?

பெண்கள், இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களின் மனித உரிமை மறுக்கப்பட வேண்டுமா? அவர்களது இல்லற வாழ்வு சிதைக்கப்பட வேண்டுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Triple Talaq Bill

Triple Talaq Bill

குவியாடி

Advertisment

அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிமனித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை!

சீர்திருத்தம் என்பது எல்லாச் சமயத்திலும் நடைபெற வேண்டும். இந்துச்சமயத்தில் இருந்த உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகள் சட்டத்தின் மூலம்தானே நிறுத்தப்பட்டன. அதே வழியில் இசுலாமியப் பெண்களின் முறையற்ற மண முறிவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் என்ன தவறு?

பாசகவின் காவி முகம் இதனைக் கண்மூடித்தனமாகப் பலரையும் எதிர்க்கத் தூண்டுகிறது.

சமயப் பண்டிகைகளின் பொழுது துறைசார் கூட்டம் நடத்துதல், இசுலாமியர் தொடர்பான திட்டங்களுக்கான நல்கைகளை நிறுத்துதல் போன்ற பாசக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மும்முறைச் சொல்லி மணவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான சட்டம் குறித்தும் ஐயத்தை எழுப்புகின்றது. ஆனால், இதற்காக இசுலாமியப் பெண்களுக்குத் தேவைப்படும் உரிமை வாழ்வைத் தடுக்கக்கூடாதல்லவா?

முதலில், ‘முத்தலாக்கு’(triple talaq) என்றால் என்ன என்று பார்ப்போம்.

‘தலாக்கு’ என்பது அரபிச்சொல். விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் எனப் பொருள்கள் உள்ளன. மனைவியைக் கைவிடுவதற்கு வாழ்க்கைத் துணையை விலக்கி வைப்பதான பொருளில், இச்சொல்லை மூன்று முறை – மும்முறை – சொல்வதன் மூலம் திருமண உறவு முறிவிற்கு வந்துவிட்டதாகப்பொருள். எனவே ‘முத்தலாக்கு’ என்கின்றனர். தமிழும் அரபியும் கலந்த இச்சொல்லை – மும்முறை விலக்கி வைப்பதாகக் கூறுவதால் - ‘முவ்விலக்கு’ என்று குறிப்பிடலாம்.

இசுலாமில் ஒருவர் பலரைத் திருமணம் செய்துகொள்ளலாம். இவ்வாறு இசைவளிக்கும் பலதார முறையைத் தடைசெய்தாலே திருமண முறிவு குறையும். பார்க்கின்ற பெண்கள்மீது ஆசை வைத்துத் திருமணம் புரிவதால் இருக்கின்ற மனைவியை விலக்கி வைக்கின்றனர். எனவேதான், தேசிய முசுலிம் மகளிர் அமைப்பினர் மத்திய அரசிடம் பல தாரத்திருமணத்தைத் தடைசெய்யச்சட்டம் இயற்ற வேண்டுகின்றனர். தேசிய முசுலிம் அமைப்பு( Muslim Rashtriya Manch-MRM) என்பது ஆர்.எசு.எசு. என அழைக்கப்பெறும் தேசியத் தொண்டர் அமைப்பின் சார் அமைப்பாகத் திசம்பர் 24, 2002 இல் உருவானது. எனவே இதன் வேண்டுகோள் நெருடலாக இருந்தாலும் அதிலுள்ள உண்மைகளை நாம் மறுப்பதற்கில்லை.

வழக்கறிஞர் இந்திரா(செய்சிங்கு) முவ்விலக்கு சொல்லித் திருமண உறவை முறித்துக் கொள்பவர்க்குச் சிறைத்தண்டனை என்றால் திருமண உறவே நிலைக்காது என்று கூறியுள்ளார். இம்முறையே தவறு என்னும் பொழுது அவ்வாறு சொல்லி மனைவியையும் அவர்வழித் தன் பிள்ளைகளையும் கைவிடுவோரையும் சிறைக்கு அனுப்புவதில் என்ன தவறு? இப்பொழுதும் கட்டாய மணக்கொடை – வரதட்சணை – கேட்போருக்குச் சிறைத்தண்டனை உள்ளதே! இதன் நோக்கம் அச்சுறுத்தியாவது இயல்பான வாழ்க்கையை ஏற்படுத்துவது என்பதுதான். எனவே, தவறல்ல. தவறு என எண்ணினால் மாற்றுக் கருத்து கூற வேண்டுமே, தவிர இச்சட்ட முறையையே எதிர்க்க வேண்டிய தேவையே இல்லை.

முவ்விலக்கு என்பது உடனே சொல்லப்படுவதில்லை. ஒவ்வொரு மாத இடைவெளியில், 3 மாதவிலக்குகளுக்குப் பின்னர் சொல்லப்பட வேண்டியது எனச் சிலர் குரானை எடுத்துக்காட்டாகக்கூறி முவ்விலக்கை எதிர்க்க வேண்டாம் என்கின்றனர். ஆனால் நடைமுறையில் ஒரே நேரத்தில் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக மும்முறை தெரிவித்து மண விலக்கை நடைமுறைப்படுத்தி வருவதைக் காண்கிறோம். எனவே, ஏட்டில் என்ன இருந்தாலும் நடைமுறையில் உள்ள தவறான வழக்கத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றுவதில் தவறில்லை.

முவ்விலக்கிற்குப் பின்னர், கணவனும் மனைவியுமாக இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேரலாமாம். அதற்கு அப்பெண் மற்றொரு ஆடவருடன் உடலுறவு கொண்டு அவரை விலக்கு செய்து முன்னவரை மணக்கலாமாம். மீள்இணைவு(ஃஅலாலா) என்று சொல்லப்பெறும் இம்முறை பெண்களை இழிவு படுத்துவதாகும்.

இந்த முறை இசுலாமில் இல்லை என்று சிலர் எழுதி வருகின்றனர். ஆனால், குரான் 2.230.இல் இது முதற்கணவனை மறுமணம் செய்து கொள்ளும் வழியாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

முவ்விலக்கிற்குத் தடை கோரியவர்களின் முதன்மையானவர்கள இசுலாமியப் பெண்களே! சயரா பானு, அஃபுரீன் இரகுமான், இசுரத்து சஃகான், அதியா சபுரீ, குல்சன் பர்வீன் ஆகிய ஐந்து பெண்களே முவ்விலக்குக் கொடுமைக்காக நீதிமன்றப் படிகளை எதிர்த்து இப்பொழுது வெற்றி காண்கிறார்கள்.

இலங்கை, பாக்கித்தான், வங்காளத் தேசம், துனிசியா, துருக்கி, சைப்பிரசு, அல்சீரியா, மலேசியா, ஈரான், சோர்டான், சூடான், கத்தார், மொராக்கோ, ஈராக்கு, புரூனே, ஐக்கிய அரபு நாடுகள் என இசுலாமிய நாடுகள், பிற சமய நாடுகள் எனப் பலவும் முவ்விலக்கைத் தடைசெய்துள்ளன. இசுலாமிய நாட்டிலேயே தடை செய்யப்பட்டதைச் சமயச் சார்பற்ற நாடு என அறிவிக்கப்பெற்ற இந்தியாவில் தடை செய்வதில் என்ன தவறு?

சட்டத்தில் குறைகள் இருந்தால், இசுலாமியப்பெண்களுக்கு நலம் பயக்க்கும் வகையில திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டுமேயன்றி, அவர்களுக்கு எதிரான திருத்தங்கள் மேற்கொள்ளக்கூடாது.

பெண்கள், இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களின் மனித உரிமை மறுக்கப்பட வேண்டுமா? அவர்களது இல்லற வாழ்வு சிதைக்கப்பட வேண்டுமா? உற்றார் உறவினர் முன்னிலையில் ஊரறிய நடத்தப்பட்ட திருமணம் யாருமறியாமல் ஒற்றைச் சொல்லை மும்முறை தெரிவிப்பதால் முறிக்கப்பட வேண்டுமா?

இந்தியாவில் பொதுக்குடிமைச்சட்டமே எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவான சட்டமாக இருக்க வேண்டும். இதனைச் சிறுபான்மையரை ஆதரிப்பதாக எண்ணி எதிர்க்கும் போக்கு கைவிடப்பட வேண்டும்.

Analum Punalum Triple Talaq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment