Advertisment

அனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்?

மடங்களில் ஒழுக்கக்கேடும் கொலையும் நடக்கின்றன என்றால் காரணம் என்ன? கருவறையிலேயே தேவநாதன் போன்றோர் பெண்களைச் சிதைக்கின்றனர் என்றால் காரணம் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanimozhi MP

Kanimozhi MP

குவியாடி

Advertisment

உலகில் தோன்றிய மக்களுக்குத் துன்பமும் அச்சமும் வந்தபொழுது இறைநம்பிக்கையும் வந்துள்ளது. துன்பம் தீராதபொழுதும் அச்சம் தேவையற்றது என உணர்ந்த பொழுதும் இறைமறுப்பும் வந்துள்ளது. உலகெங்கும் இறைநம்பிக்கையும் இறை மறுப்பும் காலந்தோறும் இருக்கத்தான் செய்கின்றன.

உலகளாவிய தற்சார்பு வலைமத்தின் (Worldwide Independent Network) 2014 ஆம் ஆண்டிற்கான ‘சமயமும் நாடுகளும்’ என்னும் புள்ளிவிவரப்படி உலகில் மக்கள்தொகை அடிப்படையில் கிறித்துவம், இசுலாமிற்கு அடுத்து 3-ஆவது இடத்தில் இருப்பது இறை மறுப்பாளர் எண்ணிக்கைதான். எனவே, பகுத்தறிவும் இறைமறுப்பும் பெரியாரால் வந்ததாகவும் திராவிட இயக்கங்களால் பரவியதாகவும் நம் நாட்டில் மட்டும் இருப்பதாகவும் பலரும் கருதுவது தவறே!

தமிழ்நாடு இறைநெறியில் ஊறிய நாடு. ஆனால், பகுத்தறிவுடன் இறைநெறி பேணிய நாட்டில் அயலவர் சமயங்களால் மூடநம்பிக்கைகள் புகுந்து மக்களைச் சிதைத்து வருகின்றன.

இக்காலப் பகுத்தறிவு வளர்ச்சிக்குப் பெரியார் ஈ.வெ.இராமசாமிதான் காரணம். ஆனால், அவர் வழியில் நடப்பவர்களிலும் நடப்பதாகக் கூறுபவர்களிலும் அனைவருமே இறை மறுப்பாளர்கள் அல்லர். இறைமறுப்பாளர்களும் உள்ளனர். போலி இறைமறுப்பாளர்களும் உள்ளனர். தன்மான உணர்வால் பகுத்தறிவு எண்ணமும் அதே நேரம் இறைநம்பிக்கை கொண்டும் உள்ளவர்களும் உள்ளனர்.

நடிகர் திலகம் சிவாசி கணேசன் திருப்பதிக்குச் சென்றதால் திமுக கொந்தளித்தது ஒரு காலம். அதே கட்சியிலும் அக்கட்சியைவிட மிகுதியாகவும் அதிலிருந்து பிறந்த அதிமுகவிலும் இறைநம்பிக்கை மூட நம்பிக்கையுடன் கோலோச்சுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரே இறைநம்பிக்கையில் ஊறிப்போய்விட்டனர். தம் குடும்பத்தினரின் இறை நம்பிக்கையை ஏற்கும் தலைவர் கருணாநிதி, திமுகவில் உள்ள பிறர் பொட்டுவைத்திருந்தால்கூட இறைமறுப்புப் பழமாக மாறிக் கண்டிப்பார்.

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற உலக இறைமறுப்பாளர்(நாத்திகர்) மாநாட்டில் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேச்சினிடையே குறிப்பிட்ட நிகழ்விற்காக மதவெறியர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதுபோல் நடந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் கலந்து கொண்ட கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு திருப்பதி சென்றது பற்றிப் பேசும்போது, “நாங்கள் நாடாளுமன்றஉறுப்பினர்கள் என்பதால் சிறப்பு வழிபாட்டிற்காக அழைத்துச் செல்லப்பட்டோம். கடவுளின் முன் எல்லாரும் சமம் என்கிறார்களே அது பொய். அதிகக் காசு கொடுத்துச் சீட்டு வாங்கினால் சிறப்புப் பார்வை. இல்லையென்றால் பத்து மணி நேரம் நிற்க வேண்டும். நாங்கள் உள்ளே நிற்கும்போது இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர், ‘இத்தனை ஆயிரம் பேர் கடவுளைப் பார்க்க காத்திருந்து வருகிறார்கள். அவர்கள் கேட்டதையெல்லாம் கடவுள் கொடுக்கிறார். ஆனால், நீ எப்படிக் கடவுளை நம்பாமல் இருக்க முடியும்?’ என்று என்னிடம் கேட்டார்.

நான் திரும்பிக் கேட்டேன். ‘கடவுளின் கண்ணில்படும் அளவுக்கு இதோ ஓர் உண்டியல் இருக்கிறதே! அதற்குத் துப்பாக்கி ஏந்திய ஆள் பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுள் இந்த உண்டியலைப் பாதுகாப்பார் என்று கடவுள் நம்பிக்கையுள்ள உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், நான் எப்படி நம்புவது?’ என்று கேட்டேன்”

இதுதான் அவரின் பேச்சு.

அவலங்களையும் துன்பங்களையும் கடவுள் துடைத்தாரா எனக் கேட்பதும் கோயில்களில் திருடும் கொள்ளையும் நடக்கும் பொழுதும் கடவுள் பார்த்துக் கொண்டிருந்தாரா? தடுக்கவில்லையா எனக் கேட்பதும் புதியதல்ல! கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்கூட இதுபோல் திரைப்படங்களில் கேட்டுள்ளனர். ஆனால் இப்பொழுது மதவெறியர்கள் ஆர்ப்பரிப்பதன் காரணம், இப்பொழுது ஆர்.எசு.எசு.ஆட்சி நடப்பதுதான்!

கனிமொழியின் கருத்திற்காகக் கண்டிப்பதும் வெறிபிடித்துப் பேசுவதும் வழக்கு தொடுப்பதும் சரியல்ல! கனிமொழி பொதுவெளியில் இறை மறுப்பாளராகப் பேசிவிட்டுத் தன்வீட்டில் இறை ஏற்பாளராக இருந்தால் அதுகுறித்து எள்ளி நகையாடலாம்!

அனைத்து வல்லமை மிக்க கடவுள் எனப் பேசுபவர்களும் அதில் முழுநம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எனவேதான், தீயதேவதை, சாத்தான், பிசாசு, பேய் என்றெல்லாம் போட்டியாளரையும் உலகெங்கும் உள்ள மதவாதிகள் படைத்துள்ளனர். அன்றைய புராணங்கள் முதல் இன்றைய திரைக்காட்சிகள் வரை அவ்வாறுதானே கதைகள் எழுதுகின்றன. ஒரு வகையில் பார்த்தால் இறைவனுக்கு எதிரான ஆற்றல் இருப்பதாகக் கூறுவதும் தவறுதானே!

“ஈழத்தில் இனப்படுகொலைகள் நடந்த பொழுது – கொத்துக்குண்டுகள் எரிகுண்டுகள் வீசப்பட்டபொழுது எத்தனைக்கடவுள்களை அழைத்திருப்பர்? தாங்கள் சார்ந்த மத்த்தின் கடவுள்களை வேண்டியிருப்பர்! எந்தக் கடவுள் யாரைக் காப்பாற்றியது? உலகெங்கும் இனப்படுகொலைகளும் கொலைகளும் கோவில்களுக்குச் செல்லும்பொழுதும் சென்று திரும்பும் பொழுதும் விபத்தில் இறப்புகளும் நிகழ்கின்றனவே! தன்னை நம்பியிருக்கும் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போவது ஏன்?” இது போன்ற வினாக்கள் எழுந்து கொண்டுதான் வருகின்றன. அதே நேரம், துன்பங்களிலிருந்து காப்பாற்றி வருபவர் கடவுள்தான் என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இறை ஏற்பும் இறை மறுப்பும் வெவ்வேறு கொள்கைகளாக உலகத்தில் உள்ளன. ஆதலின் தத்தம் கொள்கையைப் பரப்புவதை விட்டு விட்டு மாற்றுக் கொள்கையினருடன் மோதுவதோ மல்லுக்கட்டுவதோ தேவையில்லை.

மத்திய ஆட்சியின் ஆதரவால் “நாக்கை வெட்டுவேன், தலையைச்சீவுவேன், உயிரை எடுத்தால் கோடிப்பணம்கொடுப்பேன்” என்று பேசிப் பயனில்லை. உண்மையான இறைப்பற்று உள்ளவர்கள் அன்பாலும் அருளாலும்தான் மக்களை மாற்ற வேண்டும்!

உண்மையில் கடவுளை நம்பாதவர்கள் கடவுள் பெயரால் வணிகம் நடத்தும் மடாதபதிகளே! மடங்களில் ஒழுக்கக்கேடும் கொலையும் நடக்கின்றன என்றால் காரணம் என்ன? கருவறையிலேயே தேவநாதன் போன்றோர் பெண்களைச் சிதைக்கின்றனர் என்றால் காரணம் என்ன? தவறு செய்பவர்களைக் கடவுள் தண்டிக்க மாட்டார் அல்லது தண்டிப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் கடவுள் என ஒருவர் இல்லை என்ற நம்பிக்கைதானே! எனவே, கடவுள் பெயரைச்சொல்லுபவர்கள் ஒழுக்கமாக இருந்தாலே கடவுள் நம்பிக்கை பரவும்! தங்களின் முறையற்ற செயல்பாடுகள் மூலம் கடவுள் இல்லை எனக் காட்டுபவர்களைவிடக் கடவுள் எங்கே காக்கிறார் எனக் கேட்பவர்கள் நல்லவர்கள்தாமே!

எனவே மத வெறியர்களுக்கு வேண்டுகோள்!

மதத்தைத் திணிக்காதீர்கள்!

தமிழ் வழிபாடுமட்டும் இருக்க வகை செய்யுங்கள்!

இறை சார்ந்த மூடநம்பிக்கைளை அகற்றுங்கள்!

உலகில் அன்பும்அறமும் நிலைக்கச் செய்து இறைநம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!

Analum Punalum Kuviyadi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment