Advertisment

அதிமுகவின் ஒரு ஆண்டு ஆட்சி - ஓர் அலசல்

ஒரு பெரும்பான்மை அரசுக்கு இருக்கக் கூடிய மக்கள் ஆதரவும் அதனிடமிருந்து வெளிப்படும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் தற்போதைய அரசிடம் துளிக்கூட இல்லை

author-image
WebDesk
May 24, 2017 11:53 IST
New Update
அதிமுகவின் ஒரு ஆண்டு ஆட்சி - ஓர் அலசல்

கண்ணன்

Advertisment

மே23, 2016 அன்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. 2011-2016வரை ஐந்தாண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்துவிட்டு 2016 தேர்தலிலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது. அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் விதமாக 500 மதுக்கடைகளை மூடியது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே நிறைவேற்றினார். அதோடு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்தினார். இவை தவிர நீண்ட காலப் பிரச்சனைகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் எதையும அவரால் செயல்படுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆர் மறைந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்ட முதல்வர் என்ற இறவாப் புகழைப் பெற்ற ஜெயலலிதா அது நடந்து ஆறு மாதங்களுக்குள் இறந்துவிட்டது பெரும் சோகம்.

குறுகிய கால நம்பிக்கையளித்த ஓபிஎஸ்

ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவடைந்த சில மணிநேரங்களில் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதற்குச் சில நாட்களில் வர்தா புயல் சென்னையைத் தாக்கியது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு புயலின் தாக்கத்தைப் பெருமளவு குறைத்தது என்று மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் நல்லபெயர் கிடைத்தது. முதல்வர் பன்னீசெல்வம் மீட்புப் பணிகளில் நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டுப் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.

ஒட்டுமொத்த தேசத்தையும் வியக்க வைத்த ஜல்லிகட்டுப் போராட்டத்தையடுத்து பிரதமரை நேரில் சென்று சந்தித்து தீர்வைப் பெற்றுத் தந்தார் ஓ.பி.எஸ். ஆனால், அரசு தீர்வை முன்வைத்த பிறகும் தொடர்ந்த போராட்டத்தை அரசு ஒடுக்கிய விதம் பரவலான கண்டனங்களைப் பெற்றது. போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டு வழக்குகள் பதியப்பட்டன. இவையெல்லாம் அரச வன்முறையின் மற்றொரு உதாரணமாக மனித உரிமைச் செயல்பாட்டாளர்களாலும் போராட்டத்துக்கு ஆதரவு மனநிலையில் இருந்த பெரும்பான்மை மக்களாலும் உணரப்பட்டது.

இவற்றைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக எடுத்த முயற்சியால் கட்சியை விட்டு வெளியேறிய பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதால் முதல்வராகும் வாய்ப்பை இழந்த சசிகலா, தன் சார்பில் எடப்பாடி.கே.பழனிசாமியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தார். அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது.

கூவத்தூர் கூத்து

பன்னீர்செல்வம் கட்சியைவிட்டு வெளியேறிய நாளிலிருந்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சியையும் தங்கள் பதவிகளையும் தக்கவைப்பதிலேயே குறியாக இருந்தனர். சில வாரங்களுக்கு அனைத்து ச.ம.உக்களும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்ட அவலம் அரங்கேறியது. சசிகலாவின் தலைமையைத் தக்கவைக்க அமைச்சர்கள் அனைவரும் வாரக் கணக்கில் பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்டனர்.

சசிகலா சிறை சென்றுவிட்ட நிலையில் பழனிச்சாமியும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் ஒரு பெரும்பான்மை அரசுக்கு இருக்கக் கூடிய மக்கள் ஆதரவும் அதனிடமிருந்து வெளிப்படும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் தற்போதைய அரசிடம் துளிக்கூட இல்லை. அரசுப் பணிகள் எந்தத் தடையும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். ஆனால் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமானவை ஸ்தம்பித்து நிற்கின்றன.

விவசாயத்தின் வீழ்ச்சியும் தொழில்துறையின் தேக்கமும்

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருக்கிறது. தில்லியில் போராடிய விவசாயிகள் முதல்வரின் வாக்குறுதியை ஏற்றுப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கின்றனர். சில கடன்களைத் தள்ளுபடிசெய்யும் நடவடிக்கைகளைத் தவிர அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை..

தொழில்துறையிலும் சொல்லிக்கொள்ளும்படி வளர்ச்சி இல்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது, உலகளாவிய பொருளாதாரச் சூழல்தான் இதற்கு முக்கியக் காரணம் என்றாலும் புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் வரவில்லை.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை நாடத் தொடங்கிவிட்டன. அதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள அரசியல் குழப்பம்தான் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

மத்திய அரசுக்குப் பணிவதில் போட்டி

மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பாஜக, இந்த பலவீனமான அதிமுக அரசைப் பயன்படுத்தி மறைமுக ஆட்சி செலுத்த முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக அதிமுகவின் இரு பிரிவுகளும் மத்திய அரசுடன் நெருக்கம்காட்டுவதில் போட்டி போடுகின்றன. ஜிஎஸ்டி, நீட் தேர்வு, உதய் மின் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டுக்கு முரணான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷயங்களில் மாநில அரசு மத்திய அரசுக்குப் பணிந்துள்ளது.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு முதல்வர் முன்னிலையிலேயே மாநில அரசை மிரட்டும் தொனியில் பேசியதும். தலைமைச் செயலகத்துக்கு வந்து ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியது இந்தப் பணிதலின் உச்சம்.

வலுக்கும் சந்தேகம்

அதிமுக இரு பிரிவுகளை இணைக்கும் முயற்சியே இழுபறியில் இருக்கும் நிலையில், இந்த அரசு எப்போது ஸ்திரத்தன்மையுடன் இயங்கத் தொடங்கும் என்ற கேள்விக்கு பதிலே தெரியவில்லை. இந்த அரசு மீதமுள்ள நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுப்பெற்றுவருகிறது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றிருக்கும் பன்னீர்செல்வமே தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

சிறு நம்பிக்கைக் கீற்று

இந்த அவநம்பிக்கை நிறைந்த சூழலிலும் பள்ளிக் கல்வித் துறையில் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. 10,12ஆம் வகுப்புகளின் ரேங்க் பட்டியலை வெளியிடக் கூடாது என்ற முடிவு, 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகம், 11,12ஆம் வகுப்புத் தேர்வுகளில் மொத்த மதிப்பெண்களை 1200லிருந்து 600ஆகக் குறைப்பது எனத் தொடர் நடவடிக்கைகள் கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறை செயல்பாட்டாளர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன. இது, இந்த ஒரு துறையில் மட்டுமே அரசு செயல்படுகிறது என்பதற்கான தெளிவான அத்தாட்சியாக விளங்குகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment