Advertisment

தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கிலோ - இந்தியர்கள்: ஒவ்வாமையும் ஓர்மையும்

இதனை அரசியல் பிரச்சினையாக பார்ப்பதை விடவும் பண்பாட்டு ரீதியான பிரச்சினையாக பார்க்கலாம். பிரிட்டீஷாருக்கும் இந்தியர்களுக்கும் இவர்களிடமிருந்து 'விலக்கம்' வந்தமைக்கான காரணம் பிறப்பில் கலப்பு ஏற்பட்டது தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கிலோ - இந்தியர்கள்: ஒவ்வாமையும் ஓர்மையும்

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

Advertisment

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் (2011) படத்தில் கதாநாயகியின் பெயர் ஐரின் (டாப்ஸி).உள்ளூர் பெண்களின் தோற்றத்தில் அவர் இருப்பதில்லை. ஆங்கிலமும் தமிழும் கலந்த நடையில் பேசுகிறார்.சட்டை அல்லது கவுன் அணிந்திருக்கிறார். கதைப்படி அவர் ஆங்கிலோ- இந்திய பெண் என்பதாலேயே இத்தகைய சித்தரிப்பு.பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை (2021) படத்திலும் ஆங்கிலோ-இந்தியர் தம்பதியினர் காட்டப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்த ஐரோப்பிய ஆண்களுக்கும் இந்திய பெண்களுக்கும் பிறந்து இந்தியாவில் வாழ்ந்தவர்களே ஆங்கில இந்தியர்கள்.ஐரோப்பிய வாழ்க்கை முறையை உள்வாங்கிய இவர்கள், பிரிட்டிஷார் வெளியேறிய பின்னரும் இந்தியாவிலேயே வாழ்ந்தனர்.இந்தியாவின் பெருநகரங்களில் சிறுபான்மையாக வாழ்ந்து இன்றைக்கு அருகி வரும் சமூகம் இது.மதத்தால் கிறித்தவர்களான (ரோமன் கத்தோலிக்கம்,மெதாடிசம், பாப்டிசம்) இவர்கள் பிரிட்டிஷார் உண்டாக்கிய நவீன உத்தியோக தளங்களான பள்ளி, ரயில்வே,மருத்துவமனை, அஞ்சல் துறை போன்றவற்றில் பணியாற்றினர்.

பிரிட்டிஷ் வாழ்க்கை முறையும் உள்ளூர் வாழ்க்கை முறையும் கலந்தது இவர்களுடையது.1பிரிட்டிஷ் ஆட்சி இருந்த வரையிலும் பாதுகாப்பாக உணர்ந்த அவர்கள்,1947க்கு பிறகு தனிமையாக உணரத் தொடங்கினர்.பிரிட்டிஷ் காலத்தில் மதிப்பு இருந்தது என்றாலும், அவர்களும் இவர்களை இந்தியர்களோடு இணைத்தே பார்த்தனர். இந்தியர்களோ இவர்களை பிரிட்டிஷாரோடு வைத்து இனங்கண்டனர்.எனவே இரண்டுக்கு நடுவே ஊசலாடும் நிலை இவர்களுடையதானது. இந்த நிலையை கருத்தில் கொண்டு இந்திய அரசியல் சட்டம் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இவர்கள் தரப்பு பிரதிநிதிகளுக்கு நியமனவாய்ப்பு தந்தது. பிரிட்டிஷார் காலத்தில் பணிவாய்ப்பு பெற்றிருந்த இவர்கள்,அவர்கள் வெளியேறிய பின்னரும் உள்ளூர் உத்தியோகங்களில் தொடர்ந்தனர். இன்றைக்கும் மிஸ்ஸியம்மா,நர்ஸ்ம்மா போன்ற பெயர்கள் அவர்களை குறிப்பதாகவே இருக்கின்றன.2தொடக்கக் காலத்தில் யுரேசியர்கள் என்றழைக்கப்பட்ட இவர்களில் பெண்களை குறிப்பதற்கு மட்டும் நிறைய சொற்கள் இருக்கின்றன.பெண் அடையாளம் எந்த அளவுக்கு பண்பாட்டு அளவுகோலாகவும், அவற்றிலிருந்து மாறியிருப்பது ஒவ்வாமையாகவும் இருந்தது என்பதை இச்சொற்களின் பெருக்கம் காட்டுகின்றன. மிஸ்ஸியம்மா என்கிற மதிப்பான பெயரில் தொடங்கி சட்டைகாரிகள், பீட்டர்,ஆப்பகாரங்க,கவுன், விக்,லிப்ஸ்டிக் போன்றவை அவர்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பிற பெயர்களாகும். அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் இந்தியர்களோடு வாழ்பவர்களாக இருந்தனர். ஆனால் மாறிவந்த அரசியல் சூழ்நிலையில் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பணிவாய்ப்புகள் உறுதியாகவில்லை. பின்னர் தனியார் பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களாகவும், தனியாக அல்லது பள்ளிகளில் நடனம் மற்றும் இசை கற்றுத் தரும் ஆசிரியர்களாகவும் மாறினர்.நாளடைவில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றும் குடியேறத் தொடங்கினர். இவற்றையெல்லாம் மீறி வெகுசொற்பமானவர்கள் இப்போதும் இந்தியாவில் வாழ்கின்றனர்.

இதன்படி தான் ஆங்கிலோ- இந்தியர்கள்,உள்ளூர் மக்களோடு இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றனர். இதன்படி இரண்டு தரப்புக்கும் இடையே தொடர்புகளும் கலப்புகளும் நடந்திருக்கின்றன. உள்ளூரை நம்பி வாழ வேண்டி வந்தாலும் நவீனமான வாழ்க்கை முறையால் இங்கிருப்பவர்களைக் காட்டிலும் சற்று 'மேலே ' இருப்பவர்களாக ஆங்கிலோ-இந்தியர்கள் பார்க்கப்பட்டனர். அவர்களைப் பொறுத்து உள்ளூர் மக்களுக்கு இரண்டு அணுகுமுறைகள் இருந்தன எனலாம்.நவீன வாழ்க்கை முறை அவர்களுடையது என்ற விதத்தில் ஒருபுறம் ஏக்கம்; மறுபுறம் உள்ளூரில் பழகி வந்த 'பண்பாட்டு'க்கு ஏற்ற வாழ்க்கை முறை இல்லை என்பதால் வந்த ஒவ்வாமை.இந்த ஒவ்வாமை அச்சத்தாலும் சந்தேகத்தாலும் பிறப்பவை.இந்த இரண்டு அணுகுமுறைகளும் வேறுவேறானதில்லை. ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள் தாம்.

இதனை அரசியல் பிரச்சினையாக பார்ப்பதை விடவும் பண்பாட்டு ரீதியான பிரச்சினையாக பார்க்கலாம். பிரிட்டீஷாருக்கும் இந்தியர்களுக்கும் இவர்களிடமிருந்து 'விலக்கம்' வந்தமைக்கான காரணம் பிறப்பில் கலப்பு ஏற்பட்டது தான். அது பிறப்பு சார்ந்து மட்டுமல்லாது வாழ்க்கை முறை முழுவதும் நடந்திருக்கும் கலப்பு சார்ந்ததாகவும் இருக்கிறது. எனவே ஆங்கிலோ- இந்தியர்கள் மீதிருந்தது பண்பாட்டு ஒவ்வாமை. இவ்வாறு குறிப்பிட்ட காலம் வரையில் ஆங்கிலோ-இந்தியர்கள் இங்கு வாழ்ந்தனர் என்ற வகையில் கலை இலக்கியப் பிரதிகளில் அவர்கள் பற்றிய பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் திரைப்படம் பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.

திரைப்படங்கள் :

பழைய தமிழ்ப் படங்களில் ஆங்கிலோ-இந்தியர்கள் டைப்பிஸ்ட்கள், டான்ஸர்கள் போன்ற துண்டு பாத்திரங்களில் தோன்றிருப்பதை பார்க்கலாம்.தொடக்க கால இந்திய சினிமாக்களில் டான்ஸர்களாக ஆங்கிலோ இந்திய பெண்களே நடித்தனர்.ஹெலன் ரிச்சர்ட் கான் என்ற ஆங்கிலோ- பர்மிய பெண் இந்திப் படங்களிலும்,தமிழ்ப் படங்களிலும் நடனம் ஆடியுள்ளார்.பிரிட்டிஷ் தந்தைக்கும் இந்திய தாய்க்கும் பிறந்த மந்தாக்கினி என்பவர் இந்தி படங்களில் தோன்றியுள்ளார்.

ஆங்கிலோ இந்தியர்கள் இல்லாத பட்சத்தில் அவர்களின் தோற்றத்தை போலச் செய்து இந்திய நடிகைகள் தோன்றினர். ஆங்கிலோ இந்தியர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பிற்காலம் வரையிலும் டான்ஸர்களின் பெயர்கள் ரோஸி,ஜூலி என்றிருந்தன.மௌனப் படக்காலம் தொடங்கி பேசும் படம் நிலைபெற்ற காலத்திற்கு பின்னரும் கூட, தயாரிப்பாளர்கள் சந்தித்து வந்த மிகப்பெரும் பிரச்சனை என்றால் அது பெண் நடிகர்கள் தட்டுப்பாடு தான். படங்களில் நடிப்பது ஒழுக்கவியல் பிரச்சனையாக பார்க்கப்பட்டது.எனவே பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்று நடித்தார்கள்.மெல்ல மெல்லவே பெண்கள் நடிக்க வந்தனர்.நடிக்க வருவதற்கே பெண்கள் தயங்கிய நிலையில் டான்சர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலோ- இந்தியர்கள் டான்ஸர்களாக தோன்றினர்.

டான்ஸர்கள் பலரும் காணும்படி பொதுவில் நடனமாடுவோராவர்; உடைகள் கவர்ச்சியானதாக இருக்கும்; மொத்தத்தில் இவை பொதுவெளியோடு தொடர்புடையது.இந்த வகையில் இப்போக்கு குடும்ப அமைப்பிற்குள் புழங்கும் பெண்களுக்கு புறம்பானதாக கருதப்பட்டது. இவ்விடத்தில் ஆங்கிலோ இந்திய பெண்களின் 'எதார்த்தம்' என்ற பெயரில் இந்த நடனங்கள் காட்டப்பட்டாலும்,அவற்றில் சொல்லப்படாத ஒரு இளக்காரம் உருவாகி விடுகிறது.அதாவது குடும்பத்திற்குள் x குடும்பத்திற்கு வெளியே என்கிற எதிர்மறை ஒழுக்கம் X ஒழுக்கமின்மை என்கிற எதிர்மறைக்கு இணையானதாகி விடுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கல்கியின் நாவலை தழுவி கே. சுப்பிரமணியத்தால் இயக்கப்பட்ட தியாக பூமி (1939) படத்தில் நாயகியான சாவித்திரியின் கணவன் ஸ்ரீதரன் பகட்டோடு வாழ்கிறான். மனைவியான சாவித்திரியை தவிர்த்து சுகி என்கிற காதலியோடு இருக்கிறான்.அவளோடு அளவில்லாமல் நேரத்தை செலவழிக்கிறான். இவ்வாறு கதையாடலில் பொறுப்பான மனைவி X உல்லாசமான காதலி என்கிற எதிர்மறை அமைகிறது.அந்த சுசி ஆங்கிலோ- இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

மிஸ்ஸியம்மா:

ஆங்கிலோ-இந்திய பெண்களை விளிக்க உள்ளூரில் வழங்கப்பட்ட பெயரைத் தாங்கி வெளியான படம் மிஸ்ஸியம்மா. எல்.வி. பிரசாத் இயக்கினார். பெயரைத் தாங்கியிருந்தாலும் படத்தில் ஆங்கிலோ- இந்திய பாத்திரங்கள் இல்லை.ஆனால் ஆங்கிலோ-இந்திய பெண்ணை இந்திய பெண்ணாக போலச் செய்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆங்கிலோ- இந்திய பெண்களின் அடையாளத்தை உள்ளூர் பெண் மீது ஏற்றி அவரை கதாநாயகி ஆக்கியுள்ளனர்.புறமெய் இந்திய பெண், உள்மெய் ஆங்கிலோ- இந்தியப் பெண்.ஆங்கிலோ_ இந்தியப் பெண்ணை கதையின் மையப்பாத்திரமாக (கதாநாயகியாக) கொள்வதிலிருந்த தயக்கமே இம்மாற்றத்திற்கு காரணமாகியிருக்க வேண்டும்.நாயகியை ஆங்கிலோ-இந்திய பெண்ணாக இருந்து இந்திய ஒழுங்கோடு காட்டுவதிலிருந்த பண்பாட்டு தடுமாற்றம் என்று கூட இதைக் கூறலாம்.வெகுமக்களின் உளவியலுக்கு ஒவ்வாத ஒன்றை காட்டி, வர்த்தகத்தை இழக்கக்கூடாது என்று கருதியிருக்கக்கூடும்.

படித்து வேலை இல்லாமலிருக்கும் பாலு மேரி என்போர் படத்தின் நாயகி நாயகி.அவர்களில் ஒருவர் கிறிஸ்துவர், மற்றொருவர் இந்து என்பதை பெயர்களே காட்டி விடுகின்றன. கணவன் மனைவியாக இருப்பவருக்கே பள்ளியில் வேலை என்ற விளம்பரத்தைக் கண்டு இருவரும் கணவன் மனைவியாக நடித்து வேலை பெறுகின்றனர். பள்ளிக்கூடத்தில் ஆசிரியை ஆவதால் மேரி மிஸ் என்றழைக்கப்படுகிறாள்.ஆனால் "நான் மிஸ்ஸியம்மா" என்று ஒரே ஒரு இடத்தில் தான் நாயகி கூறுகிறார்.மற்றபடி படத்தில் மிஸ்ஸியம்மா என்ற பெயர் எங்குமே சொல்லப்படுவதில்லை.

மிஸ்ஸியம்மா என்ற பெயரில் படம் வெளியான காலத்திலும் (1955) பின்னரும் ஆங்கிலோ- இந்திய பெண்களை அழைப்பதற்காகவே இப்பெயர் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் படத்தில் நாயகி ஆங்கிலோ-இந்திய பெண் இல்லை என்றாலும்,நாயகி அவர்களை குறிக்கும் பெயராலேயே அழைக்கப்படுகிறாள். படத்தின் தலைப்பும் அதுவாகவே ஆக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ஆங்கிலோ இந்திய பெண்ணின் அடையாளத்தை உள்ளூர் பெண் பாத்திரம் மீது சுமத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது என்கிறோம். மிஸ்ஸியம்மாவின் பெயர் மேரி.இவ்விடத்தில் ஆங்கிலோ-இந்திய பெண்களுக்கான குறியீடாக கிருத்துவ மதம் இருக்கிறது.

குழந்தையில் மகாலட்சுமி என்ற பெயரோடு காணாமல் போன இந்து பெண்ணே இப்போது மேரியாக இருக்கிறாள் என்பதை படம் சொல்லினாலும்,அவள் மேரியாக ஆன பின்னரே படித்தவளாகவும்,ஆசிரியர் உத்தியோகத்திற்காக வெளியே செல்லுபவளாகவும் மாறுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இவை ஆங்கிலோ-இந்திய பெண்களுக்கு வாய்த்த வாய்ப்புகளாகும்.

பெற்ற தந்தை (இந்து) வளர்த்த தந்தையை (கிறித்தவர்) பார்க்கும் போது "மகாலட்சுமி உங்ககிட்ட வளர்ந்ததால் தான் படித்து பாஸாகி பி.ஏ. பட்டம் வாங்கியிருக்கிறாள் " என்று மெச்சுகிறார்.அதேவேளையில் தங்களிடம் வளர்ந்த இளையமகளின் படிப்பின்மையைக் காட்டி "எங்ககிட்ட வளர்ந்திருந்தால் இப்படித் தான் ஆகியிருப்பாள்" என்கிறார்.ஆங்கிலோ- இந்திய மற்றும் கிருத்துவ வாழ்க்கைத் தந்த வாய்ப்பை இக்கதை நேர்மறையாக பார்த்திருப்பதும், தங்களிடம் வளர்ந்த பெண்ணை இரண்டாம் பட்சமாக கருதுவதும் குறிப்பிடத்தக்க பதிவாகும். 1955 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஒரு பெண்ணை பி.ஏ. படித்தவளாக காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு காரணம் மேரி பாத்திரத்தின் உள்மெய்யாக ஆங்கிலோ- இந்திய மிஸ்ஸியம்மா இருந்தது தான்.

இவ்வாறு சாதகமான பதிவு இடம்பெற்றிருந்தும் ஏதோயொருவகையில் பண்பாட்டு ஒவ்வாமை வெளிப்பட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.அது மதத்தின் பெயரால் வெளிப்பட்டிருக்கிறது. இந்து மதத்தைச் சேர்ந்தவரின் வீட்டு விழா ஒன்றுக்கு சென்று வீடு திரும்புகிறாள் மேரி.அங்கு தன் மீது பூசப்பட்ட மஞ்சள் குங்குமம் பற்றி பாலுவுடன் அங்கலாய்க்கிறாள். ஆனால் அவனோ மேரியை மகாலட்சுமி மாதிரி இருப்பதாக புகழ்கிறான். மேலும் அவன் "எங்க மதத்தின் மகிமையே இதுதான். இந்த ஆச்சாரத்தில் தான் ஆரோக்கியம் இருக்கிறது. மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்களேன். அது கிருமிகளை கொல்லும்; அழகை அபிவிருத்தி செய்யும். உங்க பவுடரை விட எவ்வளவோ மேலானது " என்று சிலாகிக்கிறான். இவ்விடத்தில் எங்க மதம் X உங்க மதம் என்ற எதிர்மறை உண்டாகி விடுகிறது. எங்கள், உங்கள் என்பவை பண்பாட்டுப் பொருளில் உள்ளே, வெளியே என்ற எதிர்மறையை தனக்குள் கட்டமைத்துக் கொள்கிறது. மஞ்சளை எங்க மதம் தொடர்பானது என்று கூறும் நாயகன், பவுடரை உங்க மதம் சார்ந்தது என்று கூறி எதிர்மறையை கட்டமைக்கிறான். இதன்படி மஞ்சளும் பவுடரும் உள்ளூர் மற்றும் வெளி பண்பாட்டை குறிக்கும் குறியீடுகளாகின்றன. மஞ்சளை உயர்ந்தது என்று கூறுவதன் மூலம் இந்திய பண்பாடு மேலானதாக்கப்படுகிறது. இது மதம் சார்ந்த உரையாடலாக உள்ள அதே வேளையில் உள்ளீடாக ஆங்கிலோ- இந்தியர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.இந்த எதிர்மறையே பின்னாளைய திரைப்படங்களில் கிருத்துவர் X மற்றவர் என்பதாகவும், நகரம் X கிராமம் என்பதாகவும் அமைந்தன. கிறித்துவ பெண்ணை மையமான பாத்திரமாக காட்டிருப்பினும் உள்ளார்ந்து நவீனம், நாகரிகம் என்பதை அச்சுறுத்தலாக பார்த்திருக்கிறது இப்படம்.

publive-image

நாகேஷ் ஏற்ற ஆங்கிலோ- இந்தியர் வேஷங்கள் :

ஆங்கிலோ-இந்தியர்கள், டான்சர் திருமணம் தாண்டிய காதலுறவு என்று துண்டு பாத்திரங்களாக காட்டப்பட்டு வந்த சூழலில் நகைச்சுவை பாத்திரங்களாகவும் கையாளப்பட்டதை பரவலாக பார்க்கிறோம். அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளை விலகி பார்த்து வந்த உள்ளூர் மனதிற்கு அவர்களை நகைச்சுவை பாத்திரங்களாக காட்டுவது பொருந்திப் போயிருக்க வேண்டும். குறிப்பாக அவர்களின் உச்சரிப்பு .இந்தவகையில் ஆங்கிலோ- இந்திய நகைச்சுவை பாத்திரங்கள் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் நாகேஷ் தான்.இந்த வேடமேற்று அவர் நடித்த படங்களில் உடனே நினைவுக்கு வருவது பச்சை விளக்கு (1964), அதே கண்கள் (1967) ஆகிய இரண்டு படங்களாகும்.பச்சை விளக்கை ஏ.பீம்சிங்கும், அதே கண்களை ஏ.சி. திரிலோகச்சந்தரும் இயக்கியிருந்தனர். நாகேஷ் பச்சை விளக்கு படத்தில் ஆங்கிலோ இந்தியராகவும் அதே கண்கள் படத்தில் ஆங்கிலோ இந்திய பெண் போன்று வேடமிட்டும் நடித்தார்.

பச்சை விளக்கு படத்தில் நாயகன் சாரதி (சிவாஜி) ரயில்வே பணியாளர். அவர் கீழ் பணியாற்றும் ஆங்கிலோ இந்தியரே நாகேஷ். அவர் பெயர் ஜோசப். பொதுவாக ரயில்வே துறையில் அதிகம் பணியாற்றியவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் என்ற முறையில் இப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கதைப்படி ஜோசப் நற்பண்புகள் கொண்டவனாக காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் ஆணை நல்லவனாக காட்டி விட்ட இக்கதை, அதற்கு பதிலாக ஜோசப்பின் மனைவி மேரி மீது இந்திய பண்பாடு என்னும் பெயரில் தன் ஒவ்வாமையை பிரயோகித்துள்ளது. பண்பாடும், அதை காப்பதும் பெண்ணை மையமிட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்கிலோ- இந்திய ஆண்களை விட பெண்கள் மீது தான் அதிக ஒவ்வாமை காட்டப்பட்டது. இந்த அரசியலை புரிந்து கொண்டால் இந்த சித்தரிப்பு ஏன் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

ஓரிடத்தில் ஜோசப் தன்னுடைய மேலதிகாரியான சாரதி குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்காக ஜீசஸிடம் வேண்டுகிறான். அப்போது அங்கு வரும் அவனுடைய ஆங்கிலோ-இந்திய மனைவி வேண்டுவதற்கான காரணம் கேட்கிறாள். தன்னுடைய மேலதிகாரி பாசம் வைத்திருக்கும் அவருடைய தங்கை சுமதி படித்தவள். ஆனால் அவள் படிக்காத பசுபதி என்பவரை மணக்கும் படியாகிவிட்டது. அந்த குடும்பம் இனி எப்படி நன்றாக நடக்கும்? என்று கவலைப்படுகிறான். அதற்கு மேரி "அதற்கென்ன, பசுபதியை டைவர்ஸ் பண்ணிவிட்டு சுமதியை வேறு கல்யாணம் பண்ணிக்க சொல்லு" என்கிறாள். அதாவது அவளுக்கு விவாகரத்து செய்வது சாதாரணமென்று கூறுகிறது கதை. அதற்கு ஜோசப் "அவர்கள் உன்னை மாதிரியானவர்கள் இல்லை. புருஷன் எலும்பே ஆனாலும் அவனை கூடை மேல வச்சி, தல மேல தூக்கி தெருத்தெருவாக போவார்கள். எங்கள் சீப் (அதிகாரி) ஒரு கதை சொன்னார். நளாயினி என்ற பெண் தன் புருஷனுக்காக சன் ரைசையே ஸ்டாப் பண்ணுச்சாம். ஆனால் நீ ஸ்விட்ச் போட்டால் கூட லைட் எரியறது இல்ல" என்கிறான். ஏறக்குறைய இந்திய பெண்கள் பெருமையானவர்கள் என்பதை ஆங்கில பண்பாட்டுக்கு எடுத்துரைக்கும் பகுதியாக இந்த உரையாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. கற்பு, கணவனை சார்ந்திருத்தல் என்பவற்றை இந்தியப் பண்பாக கூறுகிறார்கள். அதோடு நில்லாமல் இவையெல்லாம் இல்லாத பெண்களாக ஆங்கிலோ இந்திய பெண்களை நுட்பமாக சுட்டி செல்கிறது இவ்வுரையாடல்.இந்த விதத்தில் ஆங்கிலோ - இந்தியர்களின் கலாச்சாரம் X இந்திய பெண்களின் கலாச்சாரம் என்ற எதிர்மறை முன்வைக்கப்பட்டு,அதில் இந்திய பெண்களின் கலாச்சாரமே உயர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த உரையாடல்களெல்லாம் முடிந்ததும் மேரி ஜோசப்பிடம் பையை கொடுத்து கடைக்கு போய் "ஒரு வீசை ஆட்டுக்கறி வாங்கிட்டு வா" என்கிறாள். இங்கு மாட்டுக் கறிக்கு பதிலாக ஆட்டுக்கறி சொல்லப்பட்டுள்ளது என்று கூட வைத்துக் கொள்ளலாம். எப்படியிருப்பினும் அக்கால படமொன்றில் அசைவ விரும்பியான ஒரு பாத்திரத்தை/பெண்ணை கூற முடியுமென்றால் அது ஆங்கிலோ - இந்திய பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்ற நிலை இருந்தது என்று கூறலாம். ஆங்கிலோ- இந்தியர்களின் ஆங்கிலம் கலந்த பேச்சு நடை, மேக்கப், விக் போன்றவை மீதான கேலி நகைச்சுவைக்கு ஏதுவாக இருந்தன.

அதே கண்கள் படத்தில் நாயகன், வாடகை வீடு தேடும் போது வீட்டு உரிமையாளரான ஆங்கிலோ இந்திய தம்பதியினர் திருமணமானவருக்கு தான் வீடு தருவோம் என்கின்றனர். திருமணமாகாதவனான நாயகனின் நண்பர் மனைவியாக (நாகேஷ்) வேசம் இடுகிறார். அது ஆங்கிலோ இந்திய மனைவி வேடம். அதன்படி இருவரில் கணவன் உள்ளூர்காரர், மனைவி மட்டுமே ஆங்கிலோ இந்தியர். வீட்டு உரிமையாளர்களான தம்பதிகளில் கணவன் மட்டும் உள்ளூர்காரர். மனைவி ஆங்கிலோ - இந்தியர். அவள் கணவனை பெயர் சொல்லி அழைக்கிறாள். தன் வயது, அழகு பற்றி பீற்றிக் கொள்பவர். இப்படத்தில் நேரடியாக பண்பாட்டு ஒவ்வாமை காட்டப்படவில்லை. மாறாக அவர்களின் நடை உடை பாவனைகளை நகைச்சுவைக்கான கச்சா பொருட்களாக ஆக்கிப் பார்க்க முடியும் என்கிறது படம். நாகேஷின் ஆங்கிலோ இந்திய பெண் வேடம் நகைச்சுவைக்காக படைக்கப்பட்டிருக்கிறது.

ஓ…. மானே மானே:

இந்த பின்னணியில் முழுக்க ஆங்கிலோ - இந்திய பாத்திரங்களை கொண்டு வெளியான ஒரு படத்தை இங்கே பார்க்கலாம்.

1984 ஆம் ஆண்டு ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் தமிழில் வெளியான படம் ஓ மானே மானே. இது தமிழில் வெளியானாலும் கூட இந்திய அளவிலான படம் என்று கூறி விடலாம். ஏனெனில் ஆங்கிலோ இந்தியர்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியே வாழ்ந்தார்கள், ஒரே மாதிரியே எதிர் கொள்ளப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு மலையாளத்தில் சேது மாதவன் இயக்கத்தில் வெளியான சட்டைக்காரி என்ற படம் அடுத்த ஆண்டு ஜூலி என்ற தலைப்பில் இந்தியில் எடுக்கப்பட்டது. அது ஒருபுறம் இருந்தாலும், மலையாளத்தில் வெற்றி பெற்றதை ஒட்டி தான் இக்கதை தெலுங்கு கன்னடம் மொழிகளில் படமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியில் தான் தமிழிலும் ஓ மானே மானே என்ற தலைப்பில் படம் உருவானது. மலையாளத்தில் பம்மன் என்பவரால் எழுதப்பட்ட சட்டைக்காரி என்ற நாவலே இக்கதைகளின் மூலம். தமிழின் ஓ மானே மானே படத்தில் மூலக்கதை பம்மம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஜார்ஜ் விக்டோரியா தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். மூத்த மகன் வெளிநாட்டில் இருக்கிறான். ரெண்டாவது மகள் ஸ்டெல்லா. மூன்றாவதாகவும் நான்காவதாகவும் ஒரு பெண்ணும் பையனும் இருக்கிறார்கள். ஆங்கிலோ- இந்திய குடும்பம். இதில் ஸ்டெல்லா தான் கதையின் நாயகி. அவள் தந்தை ஜார்ஜ் ரயில் நிலையத்தில் பணியாற்றுகிறார். ஆங்கிலோ - இந்தியர்களின் பெரும்பான்மை பணி இங்கு தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. கதாநாயகன் பெயர் மகேஷ், பிராமண குடும்பம். அவன் தந்தை, கதாநாயகியின் தந்தை ஜார்ஜ் பணியாற்றும் ரயில் நிலையத்தில் மேலதிகாரி. இந்தநிலையில் படித்துவிட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருக்கும் மகேஷுக்கும் படித்தவளான ஸ்டெல்லாவுக்கும் காதல். காதலுறவினால் திருமணத்திற்கு முன்பே ஸ்டெல்லா கர்ப்பமாகி விடுகிறாள். இதற்கிடையில் வேலை கிடைத்து சென்னை சென்றுவிட்டிருக்கும் மகேஷுக்கு இதனை அவளால் தெரியப்படுத்த முடியவில்லை. கர்ப்பம் பற்றி தெரிந்து கொண்ட தாய் விக்டோரியா, குடும்பத்தினரிடம் வேறு காரணம் சொல்லிவிட்டு வெளியூரில் ஆங்கிலோ இந்திய பெண் நடத்தும் காப்பகத்தில் ஸ்டெல்லாவை சேர்த்து விடுகிறார். பிறகு பிறந்த குழந்தையை காப்பகத்தில் விட்டு விட்டு ஸ்டெல்லாவை மட்டும் அழைக்கிறாள். இதற்கு ஸ்டெல்லா மறுத்தாலும் குழந்தையோடு வந்தால் ஊரில் எழும் ஏச்சு பேச்சுகள், அடுத்திருக்கும் தங்கையின் திருமண வாழ்விற்கு வரும் பாதிப்பு போன்ற எதார்த்தங்களை சொல்லப்பட்டு அவள் இணங்க வைக்கப்படுகிறாள். பிறகு சென்னையிலிருந்து ஊருக்கு வரும் மகேஷ் நடந்தவற்றை தெரிந்து கொள்கிறான். ஸ்டெல்லாவை மணப்பதற்கு தன் குடும்பத்தின் அனுமதியை வேண்டுகிறான். சட்டைக்காரிகள் மீதான ஒவ்வாமை கருதி அனுமதி தர மறுக்கிறது அவன் குடும்பம். ஆனால், தொடர்ந்து போராடி குடும்பத்தை சம்மதிக்க வைக்கிறான். இதற்கிடையில் நாயகி குடும்பத்தினரின் நீண்ட கால திட்டத்திலிருந்த லண்டனில் செட்டிலாவது என்ற முடிவுக்கு நேரம் நெருங்கி வருகிறது. அவர்கள் லண்டன் கிளம்புவதற்குள் குழந்தையோடு வரும் மகேஷ் குடும்பம், அவர்களை தடுத்து இருவரையும் சேர்த்து வைக்கிறார்கள்.

சட்டைகாரிகள் பற்றி உள்ளூரிலும் கலை இலக்கியப் பகுதிகளிலும் அதுவரை காட்டப்பட்டு வந்த சித்தரிப்புக்கு மாறாக இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது. அதாவது உள்ளூர் அணுகுமுறைக்கும், ஐரோப்பிய அடையாள அணுகுமுறைக்கும் இடையே ஊடாடிய ஆங்கிலோ- இந்திய குடும்பங்கள் இங்கிருந்த பண்பாட்டுச் சூழலில் நடத்தி வந்த இறுதிப் போராட்டத்தை சித்தரித்திருக்கிறது இப்படம். இந்திய பண்பாட்டில் வைத்து அவர்களை மதிப்பிடுகிறது. ஐரோப்பிய வாழ் முறையை கொண்டிருந்தாலும் இந்திய மனப்பான்மையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறி அவர்களுக்கு ஒரு 'உயர்வை' வழங்க விரும்புகிறது. அடையாள சிக்கலினால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல விரும்பும் குடும்பங்களுக்கு இந்திய மனப்பான்மை இருந்தது என்று கூறுவதன் மூலம் அவர்களை இங்கேயே இருத்த விரும்புகிறது. அதற்காக சட்டைக்காரிகள் மீதான உள்ளூரின் ஏளன பார்வையை படம் சொல்லவில்லை என்று அர்த்தமல்ல. மாறாக அப்பார்வையை சொல்லியவாறே அவர்களின் மேன்மையை சொல்ல முற்பட்டிருக்கிறது இப்படம்.

பிராமணரான மகேஷ் வீட்டு வழிபாட்டில் அழகை பார்க்கிறாள் ஸ்டெல்லா. நாயகனின் தங்கையும் ஸ்டெல்லாவோடு களங்கமற்று பழகுகிறாள். போதாததற்கு மகேசும் ஸ்டெல்லாவும் காதலிக்கிறார்கள். ஆனால் கடந்த தலைமுறையினரான இரண்டு குடும்பத்தினரும் அடையாளம் சார்ந்து ஒவ்வாமை காட்டுகிறார்கள். ஸ்டெல்லாவின் தோற்றத்தை பார்க்கும் ஐயர் வீட்டு மாமி ஒருமுறை "வெட்கமில்லாமல் துணிய மாட்டிகிட்டு, செருப்பை மாட்டிக்கிட்டு வந்துட்டாள்" என்கிறாள். தன் வீட்டில் இயேசுவை இந்து மத கடவுளை போல ஊதுபத்தி ஏற்றி ஸ்டெல்லா வணங்க முற்படும் போது (அது இந்து மத மரபு என்பதால்) அவளது தாய் கண்டிக்கிறாள்.

இந்நிலையில் காதலிப்பது தெரிய வரும்போது இரண்டு வீட்டிலும் எதிர்க்கிறார்கள். இதில் முதன்மையாக வெளிப்படுவது பண்பாட்டு ஓவ்வாமை தான். மதம், ஜாதி குறித்த நம்பிக்கைகளே இந்த ஒவ்வாமையின் அடித்தளம். குறிப்பாக சட்டைக்காரிகள் மீது உலவும் பாலியல் ஒழுக்க மதிப்பீடுகளே உயர் ஜாதி இந்துக்களை அசூயை கொள்ள வைக்கின்றன. அம்மதிப்பீடுகள் தங்கள் மீது வந்து விடக்கூடாதென்றும், அது அடுத்தடுத்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் பதட்டப்படுகிறாள் நாயகியின் தாய். "கவுன் போட்டிருப்பவர்கள் என்றால் என்னவென்று (இளக்காரமாக) நினைத்து விட்டார்கள்?" என்று பேசுகிறாள் ஸ்டெல்லா. அவர்களுக்கும் அழுத்தமான குடும்ப மதிப்பீடுகள் உண்டென்றும், அது இந்திய மரபினால் உருவானதென்றும் வாதிடுவதே இக்கதையின் நோக்கம்.

இரண்டு தாய்கள் :

இந்த விதத்தில் மகேஷின் தாய் (இந்தியர் -பிராமணர் ) ஸ்டெல்லாவின் தாய் (ஆங்கிலோ -இந்தியர்) என்ற இரண்டு பாத்திரங்களை தனித்து பார்க்க முடியும்.

1)ஸ்டெல்லாவின் தாய் விக்டோரியாவிடம் இருக்கும் எதிர்ப்புக்கு காரணம் ஆச்சாரம் அல்ல. மாறாக தங்கள் சமூகத்தை இங்கிருப்போர் எதிர்மறையாக பார்த்து அணுகுவது குறித்த ஓர்மை. அதனால்தான், அவள் மிதமிஞ்சிய எச்சரிக்கையோடு நடந்து கொள்கிறாள். அவளுக்கு இருப்பது இந்திய மனம் என்பதனால் மட்டுமல்ல இந்திய மனம் கொண்ட உள்ளூர் காரர்களிடையே வாழ வேண்டும் என்பதாலும் தான் இந்த எச்சரிக்கை. தங்கள் சமூக நிலை குறித்து அவளுக்கு அச்சம் இருக்கிறது. ஆங்கிலோ - இந்தியர்களுக்கு இந்தியாவில் பொதுவாக இருந்து வந்த அச்ச உணர்வை எடுத்தே ஒரு பெண் பாத்திரத்தின் மீது ஏற்றி அவர்கள் இந்திய மனம் கொண்டவர்களே என்று தன் 'விருப்ப கற்பிதத்தை' முன்வைத்திருக்கிறது படம். பிரிட்டிஷார் வெளியேறிய பின்னால் இந்திய அரசியல் சட்டத்தால் ஆங்கிலோ - இந்தியர்களுக்கான அரசியல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பினும் மாறிவந்த தேர்தல் வழி அதிகார அரசியலால் இத்தகைய அச்சம் எழுவதற்கான சூழல் உண்டானது. படத்தில் ஒரு முறை நாயகியின் தாய் விக்டோரியா தங்களைப் பற்றி சொல்லும்போது "அப்போ (து) இருந்த நிலை இப்போ (து) இல்லை" என்கிறார். இந்த ஒரு வரி எல்லா மாற்றங்களையும் விளக்கி விடுகிறது எனலாம். மென்மேலும் சிறுபான்மையாகி வந்த நிலையில் இந்த அச்சம் எழுந்திருப்பதற்கான நியாயம் இருக்கிறது.

2)நாயகனின் தாய்க்கு வேறு பிரச்சனை. குடும்ப மானம், அடுத்து மணம் புரியும் வயதிலிருக்கும் பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பது என்கிற சிக்கல்கள் தாம். விக்டோரியாவுக்கிருக்கும் பிரச்சனைகள் இவருக்கு கிடையாது. விக்டோரியாவுக்கிருக்கும் அச்சம் பண்பாட்டு தூய்மை சார்ந்ததாக இருக்க முடியாது.ஆனால் இவருக்கு இருப்பதோ பண்பாடு தரும் அதிகாரம், அது குலைவது தொடர்பான அச்சம் போன்றவை தாம். தன் மகன் ஆங்கிலோ - இந்திய பெண்ணை மணக்க விருப்பம் தெரிவிக்கும் போது தன்னை தாயாக மட்டுமல்லாது பிராமணராகவும் கருதியே மறுக்கிறாள். ஒரு சாதிக் கெட்டவளை, சட்டைக்காரியை ஏற்கக் கூடாது என்கிறாள். ஸ்டெல்லாவை பார்த்து தன் மகனை மறந்து விட வேண்டுமென்கிறாள். அவ்வாறு கூறும் போது"நீ கெட்டுப்போனாலும் மற்றொரு பெண்ணை சுயசாதியில் திருமணம் செய்து வைத்துவிடுவாள் உன் அம்மா. எனக்கிருப்பது ஒரு மகள். நான் அப்படி செய்ய முடியாது" என்கிறாள். இந்த கூற்றில் ஆங்கிலோ- இந்தியர் குறித்த இந்திய பார்வையை பார்க்கிறோம். ஆங்கிலோ - இந்தியர்கள் பாலியியல் ஒழுக்கத்தை கருதாதவர்கள் போலவும், இந்திய பெண்கள் கற்பொழுக்கமே முக்கியமென்று இருப்பவர்கள் போலவும் கூறப்படுகிறது. இது கிறித்துவம் x இந்து, மேல் சாதி x தாழ்த்தப்பட்ட சாதி, மேல்நாடு x உள்நாடு என்கிற எதிர்மறைகள் உருவாகவும் காரணமாகிறது. ஆங்கிலோ - இந்தியர்கள் மீதான இத்தகைய குற்றச்சாட்டு என்கிற 'எதார்த்தத்தின் ' மேல் தான் இத்திரைபிரதி அவர்களும் இந்திய மனப்பான்மை கொண்டவர்களே என்ற கருத்தை முன்வைக்க முயலுகிறது.

அவர்களுக்கு இத்தகைய அங்கீகாரத்தை தருவதற்கு ஈடாக இக்கதையாடல் எதையெல்லாம் விலையாக கேட்கிறது என்பதை இனி பார்க்கலாம். முதலில் ஆங்கிலோ-இந்தியர்களும் இந்திய பண்பாட்டில் தங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தையும் சேர்த்தே வழங்குகிறது இக்கதையாடல். அவை வலியுறுத்தலாக இல்லாமல் கதைச்சட்டகத்தின் ஊடாக இயல்பாக இணைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆங்கிலோ-இந்தியர்களுக்கிருந்த இருத்தல் பதட்டத்தை முன்வைத்த இப்படம் அச்சிக்கலை விரிந்த பரப்பிற்கு கொண்டு செல்லாமல் இந்திய பண்பாடு, இந்திய தேசம், இந்து மதம் என்கிற எல்லைக்குள் சுருக்கி விடுகிறது.இந்திய பண்பாடாக அது கூறுவதெல்லாம் இங்கிருக்கும் அதிகார சாதிகளின் பண்பாடுகளேயாகும். ஆங்கிலோ-இந்தியர்களை இங்கேயே தக்க வைக்க அவர்கள் இந்திய பண்பாட்டில் தான் இருக்கிறார்கள் என்ற செய்தி உள்ளூர்காரர்களுக்கு சொல்லுகிறது. பொதுவாக அவர்களுடைய சொந்த அடையாளங்களோடு இங்கிருப்பது பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பரிந்து பேசவரும் இத்திரைப் பிரதியும் அவற்றை மறுக்காமல் அவர்களை இந்திய பண்பாட்டிற்குள் இருத்தி அங்கீகாரம் தர விரும்புகிறது. அவர்கள் இந்திய பண்பாட்டில் தான் இருக்கிறார்கள் என்றச் செய்தியை உள்ளூர்காரர்களுக்கு மட்டுமல்லாமல், அவ்வாறு தான் இருந்தாக வேண்டும் என்கிற செய்தியை ஆங்கிலோ இந்தியர்களுக்கும் சேர்த்தே இத்திரைப்பிரதி வழங்குகிறது. இது கண்ணுக்கு புலப்படாத நிர்பந்தமாகும். இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலோ- இந்தியர்களுக்கு மேன்மை தருவதே அவர்கள் இந்திய பண்பாட்டில் இருப்பதாக கூறுவதால் தான்." அப்படி, இப்படி இருந்தாலும் சொந்த சாதியில் இருந்தே மருமகள் வரவேண்டும்" என்கிற அளவிற்கு துணிகிறாள் நாயகனின் தாய். அந்த தாய் விரும்பும் மதம், பண்பாடு போன்ற சொல்லாடல்களின் உள்மெய்யாய் நடைமுறையில் இருப்பது சாதியேயாகும்.

இந்திய பண்பாட்டுச் சொல்லாடல்களுக்கு உள்ளடக்கி சட்டைக்காரிகளின் உன்னதத்தைப் பேசும் இப்படம், அதற்காக இங்கிருந்தே ஒரு எதிர்மறை பாத்திரத்தை உருவாக்கி ஒப்பிட்டுக் கொள்கிறது. ஒன்றிற்கு உயர்வை தர வேண்டுமானால் மற்றொன்றோடு ஒப்பிடாமல் வழங்க முடிவதில்லை. இங்கிருக்கும் பண்பாட்டை நிறுவ ஒரு எதிர்மறை பாத்திரம் தேவைப்படுகிறது. சட்டைக்காரிகளை கதைப்படி எதிர்மறையாக ஆக்க முடியாத போது, சட்டைக்காரிகளின் பண்போடு இங்கிருக்கும் பாத்திரமொன்று படைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதாவது நாயகன் மகேஷுக்கு சென்னையில் அவன் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளி மகளை மணந்து கொள்ளும் வாய்ப்பு வருகிறது. ஸ்டெல்லா மீது கொண்டிருந்த காதல் காரணமாக அந்த வாய்ப்பை மறுக்கிறான். முதலாளி மகளோ நகரத்துப் பெண்; படித்தவள்; நவ நாகரீகமானவள். அவள் உடனே மற்றொரு ஆணை தேர்வு செய்து "பழகி பார்த்துவிட்டு பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்கிறேன்" என்கிறாள். இது மகேஷின் ஆண் மனம் உள்ளிட்ட யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவரின் இந்த தேர்வை பண்பாட்டு கெடுதியாக காட்டுகிறது படம். இந்த 'ஒழுக்கக் குறைவை' சுட்டிக்காட்டி, தான் முன்கூட்டியே தப்பித்து விட்டதாக தன் தாயிடம் கூறுகிறான் நாயகன். இந்த சுய தேர்வை பண்பாட்டுப் பிழையாக பார்க்கிறது பிரதி. சமூகத்தில் ஆங்கிலோ- இந்தியர்கள் மீது என்னென்ன காரணங்களால் பண்பாட்டு ஒவ்வாமை கடைபிடிக்கப்படுகிறதோ அதே ஒவ்வாமையை ஆங்கிலோ இந்தியர் இல்லாவிட்டாலும் தானொரு பாத்திரத்தை உருவாக்கி அதன் மீது பிரயோகிக்கிறது இப்பிரதி. ஆங்கிலோ- இந்தியர் மீதான ஒவ்வாமையை அழிப்பது என்கிற அரசியல் சரித்தன்மைக்காக நேரடி பொருளில் அவர்களை மோசமாக சித்தரிக்காத இப்பிரதி, உள்ளார்ந்து ஆங்கிலோ இந்தியர் மீதான உள்ளூர்காரர்களின் ஒவ்வாமையை வேறு ஒரு பெயரில் பிரயோகிக்கிறது. ஸ்டெல்லா X முதலாளி மகள் என்கிற எதிர்மறை அதன்படியானது தான். மொத்தத்தில் இந்திய பண்பாட்டில் வாழ்வதன் உன்னதம் சொல்லப்பட்டிருக்கிறது.

சட்டைக்காரிகள் மீதான அசூயையை எதிர்கொண்டிருப்பது, கதையாடல் ஏற்படுத்திக் கொண்ட ஒரு அரசியல் நிலைபாடு. ஆனால் இது அரசியல் ரீதியான ஓர்மை மட்டுமே.கதையின் மேலெழுந்து போக்காகவே இது இருக்கிறது. ஓர்மையில்லாத -இயல்பான தருணங்களே எதார்த்தமானவை. இக்கதையாடல் மையக்கதை என்பதில் ஓர்மையோடு செயல்பட்டாலும் , அத்தகு ஓர்மையில்லாத தருணங்களிலும் சட்டைக்காரிகளை எவ்வாறு அணுகி இருக்கிறது என்று பார்ப்பது முக்கியம்.

கதையோடு தொடர்பில்லாத நகைச்சுவை தொடரொன்று படத்தில் இருக்கிறது.அத்தொடர் சட்டைக்காரிகள் தொடர்பானது. ரயில்வேயில் பணியாற்றும் சட்டைக்கார பெண் ஒருவர் உள்ளூர் மளிகை கடைக்காரர் காதலிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மளிகை கடையில் வேலை பார்க்கும் பையனும் அப்பெண் மீது ஏக்கம் கொண்டிருக்கிறான். இந்த மூவருக்குள்ளும் நடக்கும் உரையாடல்களே படத்தின் நகைச்சுவை காட்சிகள். இதில் சட்டைக்காரியின் பெயர் மன்றோ (மனோரமா ). இப்பெயரை சூட்டியிருப்பது மூலம் தன்னை மர்லின் மன்றோவாகவே நினைத்துக் கொண்டு பகட்டு காட்டுகிறாள். இது அவர்கள் மீது உள்ளூருக்கு இருக்கும் அசூயையின் பிரதிபலிப்பு. இதில் அந்த மளிகை கடை உரிமையாளருக்கு ஏற்கனவே திருமணமும் ஆகிவிட்டது.அதைப் பற்றி கவலையில்லாமல் மன்றோ அவரை காதலிக்கிறார்.அதோடு அவரின் திருமண வாழ்வை முறித்துக் கொண்டு வந்து மணம் புரிவதற்காக காத்திருக்கிறாள்.அதில் மன்றோவுக்கு எந்த சங்கடமும் இருப்பதில்லை. படத்தின் மையக்கதையோ அரசியல் ஓர்மையோடு தொடர்புடையது. ஆங்கிலோ இந்தியர்களை மதிப்பாக காட்ட வேண்டும் என்ற அரசியல் ஒருமை அது. ஆனால் நகைச்சுவை பகுதி கதையின் மையம் அல்ல. நகைச்சுவைக்காகவே அக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓர்மையுடன் கூடிய மையக்கதை தரும் மதிப்பு, ஓர்மை இல்லாத துண்டு நகைச்சுவை காட்சிகளால் தலைகீழாக்கப்பட்டுள்ளன. இப்படம் எடுக்கப்பட்ட எல்லா மொழிகளிலும் இதே போல வைக்கப்பட்டுள்ளனவா என்றுத் தெரியவில்லை. ஆனால் தமிழில் இப்படம் இவ்வாறு தான் இருக்கிறது.3 இவ்வாறு நாவல் காட்ட விரும்பிய கதையிலும் சிக்கல், திரைப்படம் காட்டிய துண்டுக்காட்சிகளிலும் சிக்கல்.

ஆங்கிலோ இந்தியர்களை இன்ன சாதி என்று சொல்ல முடியாது. எனவே அவர்களை இப்பிரதிகள் சாதியத்தோடு இணைத்து பார்க்காததில் வியப்பில்லை.அதேவேளையில் சாதிய அணுகுமுறை நேரடியாக இல்லையே ஒழிய, வேறு மாதிரி வேறு வடிவில் செயல்பட்டிருக்கிறது என்பதையும் இவ்விடத்தில் பார்த்தாக வேண்டும். ஆங்கிலோ இந்தியர் மீதான பண்பாட்டு ஒவ்வாமையில் சாதிய சட்டகம் மறைமுகமாக இணைந்து கிடக்கிறது. அவற்றை தான் அறிந்தோ அறியாமலோ உள்ளூர் வெளிப்படுத்தி வந்தது. இந்த நாவலின் திரைப்பட பிரதிகளிலும் அத்தகைய அம்சங்கள் மறைமுகமாக எஞ்சி நிற்கின்றன. குறிப்பாக ஓ மானே மானே படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணை உள்ளூர் பெண் சாதி கெட்டவள் என்று சாடுவதை பார்க்கலாம். குறிப்பாக அவர்கள் கலப்பினமாக இருப்பதே பண்பாட்டு ஒவ்வாமைக்கான வேராகி விடுகிறது. மாட்டு இறைச்சி உணவு,'ஒழுங்கிற்குட்படாத ' வாழ்க்கை நடைமுறைகள், ஒப்பிட்ட அளவில் சுதந்திரமான வாழ்வு ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட சாதிகள் கொண்டிருந்தனர். உள்ளூரானது அவர்கள் மீது வெளிப்படுத்தி வந்த 'விலக்கத்தை' ஆங்கிலோ இந்தியர்கள் மீதும் நீட்டித்துக் கொண்டது. இதனையே மறைமுகமான சாதிய சட்டகம் என்கிறோம். ஆங்கிலோ இந்தியர்கள் இந்திய சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டமைக்கு இச்சட்டகம் முக்கியமான காரணம்.உடலாலும் உள்ளத்தாலும் தலித்துகளாக இல்லாவிட்டாலும் இந்திய சமூகம் அவர்களை தலித்துகளின் நிலையை நோக்கி தள்ளியது. அவற்றிலிருந்து தப்பவே வெளிநாடுகளுக்கு ஏகினர் எனலாம். பிறப்பினாலும், திணிக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களாலும் தலித்துகள் தீண்டப்படாதவர்களாக தீர்மானிக்கப்படுகின்றனர். இவை இரண்டும் ஆங்கிலோ இந்தியர்களுக்கு இல்லை. ஆனால் நடைமுறையில் பின்பற்றிய பண்பாட்டு பழக்கவழக்கங்களை வைத்து அவர்களை அணுகியதில் சாதிய சட்டகத்தை கையாண்டது உள்ளூர்.

அடி குறிப்புகள் :

1) ஐரோப்பிய இந்தியர்கள் ஒரே வகையானவர்கள் இல்லை. குறிப்பாக மூன்று பிரிவினரை குறிப்பிட முடியும். ஐரோப்பியர்களில் முதலில் வந்தவர்கள் போர்ச்சுகீசியர்கள். அவர்களுக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் திருமணம் நடந்தது. இன்றைக்கும் கோவா பகுதியில் அந்த வம்சாவளியினர் உண்டு. அவர்கள் போர்ச்சுகலும் இந்தியாவில் எங்கு வாழ்ந்தார்களோ அந்த பகுதியின் மொழியையும் பேசினர். பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு பின்னால் போர்ச்சுகலும் ஆங்கிலமும் பேசினர். மற்றொரு பிரிவினர் ஆங்கிலோ இந்தியர்கள். பிரிட்டீஷாருக்கும் இந்தியருக்கும் இடையேயான இணைப்பில் பிறந்த இவர்களே பெரும்பான்மையினர். இன்றைக்கு இந்தியாவில் இருப்பவர்களிலும் பெரும்பான்மையினர் இவர்களே. சட்டைக்காரர்கள் பற்றிய இந்தியர்களின் பிம்பம் இவர்கள் வழி உருவாக்கிக் கொள்ளப்பட்டவையே. இவ்விரு வகையினரில் போர்ச்சு-இந்தியர்கள் பிரிட்டிஷ் இந்தியர்களை விட தங்களை ஒரு படி மேலாக கருதி கொள்வது உண்டு. இந்தியாவிற்கு முதலில் வந்தவர்கள் என்பதாலும், பிரிட்டிஷ் இந்தியர் குறித்த உள்ளூரின் ஒவ்வாமையிலிருந்து விலகிக் கொள்ளவும் இவ்வாறு செய்தனர். மூன்றாவதாக பிரெஞ்சு இந்தியர்கள். பிரெஞ்சுக்காரர்களை திருமணம் செய்து கொண்டவர்களை இப்பெயர் குறிக்கும். இந்தியாவிலிருந்து வெளியேறும் போது பிரெஞ்சு இந்தியாவுக்கும், தங்களுக்கும் இடையே தக்க வைத்துக் கொண்ட பரிவர்த்தனை காரணமாக பிரஞ்சு இந்திய தொடர்பு ஆங்கிலோ இந்தியர்கள் விட சுமுகமாக தொடர்கிறது.

2)ஆங்கிலோ- இந்தியர்களுக்கு பல பெயர்கள் உண்டு. அப்பெயர்கள் பெயர்களாக மட்டுமில்லாமல் 'வெளியிருக்கும்' பண்பாட்டை உள்ளூர் எவ்வாறு புரிந்து கொண்டது என்பதற்கான சான்றுகளாக விளங்குகின்றன. மேலும் இங்கு நடந்த மாற்றங்களை குறிப்பிடும் சொற்களாகவும் இருக்கின்றன.

மிஸ்ஸியம்மா என்பதிலுள்ள மிஸ் என்பது ஆசிரியையையும், நர்ஸம்மா என்பதிலுள்ள நர்ஸ் என்பது செவிலியரையும் குறிக்கும். ஆங்கிலோ இந்தியர்களை குறிக்க இந்தியர்கள் வழங்கும் பெயர்களில் மதிப்பானவை இவை. உள்ளூரில் வழங்கப்படும் அம்மா என்னும் மதிப்பு மிகு விளியை சேர்த்து இப்பெயர்களை வழங்கி இருக்கின்றனர். இன்றைக்கும் ஆசிரியைகளாக, நர்ஸ்களாக இருக்கும் யாரையும் குறிக்கும் பொதுப் பெயர்கள் இவை. நம் சமூகத்தில் ஆரம்ப காலத்தில் ஆங்கிலோ இந்தியர்களே இப்பணிகளில் இருந்தனர். அவர்களை குறிப்பிடுவதற்காக வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கான பெயர்களாகவே நிலைத்து விட்டன.

இதே போல்தான் சட்டைக்காரிகள் என்ற பெயரும். சட்டை என்ற ஆடையை முதலில் அணிந்தவர்கள் இப்பெயரால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதிலும் பெண்கள் சட்டை அணிந்தது புதுமையாகவும் ஒவ்வாமையாகவும் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல இங்கிருப்பதற்கு மாறாக கவுன் அணிந்தவர்கள் என்பதனால் கவுன் என்று அழைக்கப்பட்டனர். பொதுவாக 'அளவுக்கு மிஞ்சி'அலங்காரம் செய்வதை எதிர்மறையாக குறிப்பாக குடும்ப பெண்களுக்கு எதிரானதாக பார்ப்பது இங்கிருக்கும் பார்வை . இதனால் தான் ஆங்கிலோ இந்திய ஆண்களைவிட பெண்களை நோக்கி இப்பெயர்கள் அதிகம் சூட்டப்பட்டு இருக்கின்றன. ஆடை ,அலங்காரம் சார்ந்து அதிக பெயர்கள் குறிப்பாக பெண்களை நோக்கி இருப்பதை கவனிக்கலாம். விக், லிப்ஸ்டிக் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டமை இவ்வாறு தான். அவர்களவில் இயல்பான அலங்கரிப்பாக கருதப்பட்டவை இங்கிருப்போரால் பகட்டாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் உருவான பெயர்கள் இவை எனலாம்.

'ஆப்பக்காரங்க' என்கிற பெயராலும் குறிப்பிடுவர். இச்சொல்லின் வேர்ச்சொல் ஆங்கிலம். Half என்கிற ஆங்கிலச் சொல்லே வழங்கும் போக்கில் நீண்டு ஆப்பக்காரங்க என்ற உள்ளூர் சொல்லாகி இருக்கிறது. ஆங்கிலோ இந்தியர்களின் பிறப்பு, ஆங்கிலேயர்கள் பாதி இந்தியர்கள் பாதி என்றமைந்தது. இவ்வாறு பாதியை குறிப்பதற்காக வழங்கத்தொடங்கி பிறகு ஆப்பக்காரர்கள் என்று மாறியிருக்கிறது.இச்சொல் கலப்பினத்தை தனித்து வழங்குவதற்கு நம் சமூகம் கண்டு கொண்டது எனலாம்.

3)அனுதீப் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியிருக்கும் படம் பிரின்ஸ் (2002).தமிழ்ப் பகுதியில் வாழும் பிரிட்டிஷ் குடும்பத்திற்கும், தமிழ் குடும்பத்திற்குமான உறவும் முரண்தான் இப்படத்தின் கதை. நாயகி ஆங்கிலேய குடும்பம். லண்டனிலிருந்து வந்து இங்கு குடியேறிய குடும்பம். எனவே அதனை ஆங்கிலம் இந்திய குடும்பம் என்று சொல்ல முடியாது என்பதாலும், ஆங்கிலோ-இந்திய குடும்பத்தின் சட்டகத்தை இப்படம் பிரதிபலிக்க என்பதாலும் இக்கட்டுரையின் எல்லைக்குள் கொணரப்படவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment