Advertisment

காஷ்மீரில் இருந்து மீண்டும் ஒருமுறை வெளியேறும் பண்டிட்கள்

தவ்லீன் சிங்: குறிவைக்கப்பட்டு நடத்தப்படும் கொலைகள் காரணமாக காஷ்மீரி பண்டிட்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர், முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய பயங்கரமான நினைவுகளை மீண்டும் இவை நினைவூட்டுகின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காஷ்மீரில் இருந்து மீண்டும் ஒருமுறை வெளியேறும் பண்டிட்கள்

ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே பள்ளி ஆசிரியை ரஜனி பாலா கொல்லப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீநகர்-புத்காம் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். (பிடிஐ/கோப்பு)

Advertisment

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற எட்டாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அவரது மூத்த அமைச்சர்கள் எழுதிய பல வெற்றிகரமான கட்டுரைகள் செய்தித்தாள்களில் சமீபத்தில் வெளிவந்தன. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்பியதுடன், இந்தியாவுக்குப் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது என்பதாக  அரசனிடம் பொன்முடி பெறுவதற்காக வலிந்து புகழ்பாடும் புலவர்களைப் போல பாடினர். அப்படியான ஒரு நேரத்தில்தான் பள்ளத்தாக்கில் இந்துக்களைக் குறிவைத்து கொலைகள் அதிகரித்து வருகின்றன என்பது சோகமான முரணாக இருக்கிறது.

கடந்த வாரம் ஒரு ஆசிரியரும் வங்கி மேலாளரும் அடுத்தடுத்து  பலியாகினர். விஜய் பெனிவாலின் கொலை வங்கியின் பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பார்ப்பதற்கு இயலாத கொடூரமான சம்பவமாக அது இருந்தது. முகமூடி அணிந்த ஒருவர் வங்கிக்குள் நுழைகிறார், பெனிவால் தனது மேசையில் அமர்ந்திருப்பதை நோட்டம் பாரத்தார். திரும்பிச் சென்ற அந்த நபர், சிறிது நேரம் கழித்து ஒரு கைத்துப்பாக்கியுடன் திரும்பி வந்து அந்த இளம் வங்கி அதிகாரியின்  முதுகில் சுடுகிறான். ரஜனி பாலா என்ற ஆசிரியையும் இதேபோன்ற கோழைத்தனமான முறையில் கொல்லப்பட்டார். அவர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரே காரணம் அவர்கள் இந்துக்கள் என்பதுதான்.

குறிவைத்து நடத்தப்படும் இந்த கொலைகள் காரணமாக காஷ்மீரி பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர், இவை முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய பயங்கரமான நினைவுகளை மீண்டும் நினைவுப்படுத்துகின்றன. இந்த மாதிரியான கொலைகள்தான் முன்பு இந்துக்களின் வெளியேற்றத்தை தொடங்கி வைத்தன. இதுதான் இந்தியாவில் இன அழிப்பு சம்பவமாக மாறியது. இந்த வெட்கக்கேடான இடப்பெயர்வை மாற்றியமைப்பதில் எந்த பிரதமரும் வெற்றி பெறவில்லை, மோடி நியாயமாக மற்றவர்களை விட கடுமையாக முயற்சி செய்தார்.  சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வது ஒரு துணிச்சலான மற்றும் வரலாற்று நடவடிக்கையாகும்,  ஒரு புதிய காஷ்மீர் கொள்கையை உருவாக்காமல் அல்லது காஷ்மீரை முன்னெடுத்துச் செல்லும் ஒரு பாதையை வரைவு செய்யாமல் செய்யப்பட்டது என்ற தெளிவு தாமதமாகத்தான் புலப்பட்டது. .

இதற்கு மாறாக பள்ளத்தாக்கில் ஜிஹாதி பயங்கரவாதம் எவ்வாறு 'முடிக்கப்பட்டது' என்பது பற்றி உயர் அதிகாரிகளிடம் திமிர்த்தனமான பேச்சு உள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளில் தீவிர இந்துத்துவாவைப் பின்பற்றுபவர்களால் உருவாக்கப்பட்ட வெறுப்பு சூழ்நிலையில் இது நேர்த்தியாகப் பொருத்தப்பட்டது. அதனால் ஏற்படும் விளைவுகளுக்குத் தயாராகாமல் மோடியின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் இதைப் பொறுப்பேற்று வழிநடத்தியுள்ளனர், காஷ்மீரில் இந்துக்கள் குறிவைத்து கொல்லப்படுவது அது போன்ற விளைவுகளின் வெளிப்பாட்டில் முதலாவதாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

இந்தச் சூழலில் கடந்த வாரம் மோகன் பகவத்தின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. தற்செயலாக, இது போன்ற கட்டுரை ஒன்றில் நான் கடைசியாக ஆர்எஸ்எஸ் தலைவரைப் புகழ்ந்தபோது, ​​இடதுசாரிகள் மற்றும் போலி தாராளவாதிகளின் கடுமையான விஷத் தாக்குதலுக்கு ஆளானேன். இது மீண்டும் நிகழும் அபாயம் உள்ள சூழலில் மீண்டும் ஒருமுறை பகவத்தை பாராட்டுகின்றேன். ஒவ்வொரு மசூதியிலும் 'சிவலிங்கம்' தேடத் தொடங்குவது முட்டாள்தனம் என்று இந்துத்துவா முகாமில் உள்ள கடுமையான போக்குக் கொண்டவர்களை  எச்சரித்ததற்காகவும், நீதிமன்றத்திற்கு  சென்று புதிய சண்டைகளைத் தொடங்குவதற்கு பதில்   மக்கள் ஒன்றாக அமர்ந்து ஒருமித்த கருத்துக்கு வருவது நல்லது என்றும் அவர் பரிந்துரைத்திருக்கிறார். .

அறிவுக்கு பொருந்தாத தருணத்தில் இது ஒரு நல்லறிவைக் கொண்டுவருமா என்று சொல்வது மிகவும் கடினம், ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர் பிரதமரின் பின்னணியில் இருப்பவர் என்பதால் அதனை நாம் நம்ப வேண்டும். இந்த நாட்களில் மோடிக்கு ட்விட்டரில் செலவழிக்க நேரமில்லாமல் இருக்கலாம், ஆனால் காஷ்மீரில் குறிவைக்கப்பட்டு கொலைகள் நடைபெறத் தொடங்கியதில் இருந்து சாதாரண இந்துக்களிடமிருந்து வந்த கருத்துகளை அவரது ஊடக மேலாளர்கள் ஆராய வேண்டும். முஸ்லீம்கள் அனைவரும் ஜிகாதிகள் மற்றும் துரோகிகள் என்பதால் அவர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்பதே இவர்கள் கூறுவதன் சாராம்சம். பிரைம் டைம் அரட்டை நிகழ்ச்சிகளில் பாஜக செய்தித் தொடர்பாளர்களால் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மீதான விரோதம் மற்றும் வெறுப்பு தினமும் தூண்டப்படுகிறது, எனவே இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் அனுமதி உள்ளது என்பதில் சிறிது சந்தேகம் இருக்கலாம்.

இஸ்லாத்தை வெறுப்பது என்பது பன்முகத்தன்மை கொண்ட குடிசைத் தொழிலாக மாறிவிட்டது. சமூக ஊடகங்களில் காவி அங்கி அணிந்த சாதுக்களும் சாத்விகளும் இங்கு திரும்பத் திரும்பச் சொல்ல முடியாத வார்த்தைகளால் நிரப்பப்பட்ட பாடல்களைப் பாடும் இசை வீடியோக்களைப் பார்க்க முடிகிறது. காஷ்மீர் ஃபைல் திரைப்படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் வரலாற்றையும் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து இந்து மன்னர்களை அழிக்கப்பட்டதையும்  விளக்கி வருகின்றனர். இத்தகைய தவிர்க்க முடியாத சூழலில்தான் இந்த வரலாற்றுக் குறைகளின் வெளிப்பாட்டிற்கு வெளிப்படையான இலக்காக  காஷ்மீர் பள்ளத்தாக்கு மாறியுள்ளது. இத்தகைய சூழலானது பலனளிக்கும் ஒரு காஷ்மீர் கொள்கையை உருவாக்குவதை மேலும் கடினமாக்கியுள்ளது.

காஷ்மீர் அரசியல்வாதிகள் அனைவரும் பள்ளத்தாக்கை ஒரு சிறிய இஸ்லாமியக் குடியரசாக மாற்ற விரும்பும் ஜிஹாதிகள் என்பதால்,

அரசியல் தீர்வைக் காண எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்று பெரும்பாலான மோடி பக்தர்கள் நம்புகிறார்கள். இது உண்மையல்ல. இசுலாமியத்தை எதிர்த்துப் போராடி தங்கள் வாழ்நாளைக் கழித்த காஷ்மீர் அரசியல்வாதிகள் ஏராளமாக உள்ளனர், மேலும் சிலர் இதற்காக பெரும் விலையைக் கொடுத்துளனர்.  ஒரு அரசியல் செயல்முறையின் புதுப்பித்தலின் ஒரு பகுதியாக அவர்கள் மாற்றப்பட்ட வேண்டிய தருணம் இதுவாகும். அதற்கான செயல்முறை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது முதல் படியாகவும், இரண்டாவதாக தேர்தலும் நடத்தப்பட வேண்டும்.

பிரதமர் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வழியைப் பின்பற்றி, தற்போது இந்துத்துவ மனநிலையை வரையறுக்கும் வெறுப்பு மற்றும் விரோதப் பிரசாரத்திற்கு எதிராகப் பேசாத வரை இவை எதுவும் மாற்றத்தை ஏற்படுத்தாது.

இந்துத்துவா வெறியின் அளவைக் குறைக்காமல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே இந்திய மாநிலத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை நீங்கள் எப்படி  கொண்டு வர முடியும்? இதற்கிடையே குறிவைத்து நடத்தப்படும் இந்த கொலைகள் மீண்டும் ஏன் தொடங்கியுள்ளன என்பதற்கு யாராவது பதிலளிக்க வேண்டும் என்ற தேவையும் எழுந்திருக்கிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு மத்திய  உள்துறை அமைச்சரின் நேரடி பொறுப்பின் கீழ் வருகிறது. எனவே என்ன தவறு நடந்திருக்கிறது என்பதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும். ஜிஹாதிகள் தெளிவான காஷ்மீர் கொள்கையைக் கொண்டுள்ளனர். இந்திய அரசு அது போன்ற கொள்கையை கொண்டிருக்கவில்லை. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து, நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்தும், வழிகாட்டுதல் இல்லாத திக்கு தெரியாத  இடையூறான படிகள் மட்டும்தான். காஷ்மீர் பள்ளத்தாக்கை ராணுவ முகாமாக மாற்றுவதைத் தாண்டிய ஒரு ஒத்திசைவான கொள்கைதான் நமக்கு அவசரமாகத் தேவை. இதற்கு முன்பு முயற்சி செய்தும் அது சரியாக வரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழில்; ரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment