விவேக் கணநாதன்
கமலின் அரசியல் வருகையிலிருந்து நம் அரசியல் எவ்வளவு குழப்பமான கட்டத்தைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது என்பது தொடர்ந்து தெரிந்துகொள்ள முடிகிறது. மையவாதம் என்கிற பெயரில் இதுவரை வந்தவர்களும், இப்போதும் வந்திருக்கும் கமலும் செய்வது சுத்த தப்பித்தல் வாதம் தான். தான் இப்படியும் அல்ல, அப்படியும் அல்ல என சொல்லும் எவரும் தானும் குழம்பி மக்களையும் குழப்பவே செய்திருக்கிறார்கள்.
முதிர்ச்சியற்ற அரசியல் புரிதல்களும், ஆர்வமும் ,வேட்கையும் கொண்டவர்களையும், தெளிவான அரசியல் கண்ணோட்டமோ அல்லது ஆளுமை விருப்பமோகூட இல்லாமல் குழப்பங்களின் அடிப்படையில் கடைசிநேரத்தில் முடிவெடுக்கும் மக்களையும், இளைஞர்களையும் நோக்கித்தான் கமல் தன்னுடைய அரசியல் வருகையையும், இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார்.
அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்ப்பதும், மக்கள் சார்பில் நின்று குரல் கொடுப்பதும் எப்போதுமே விரும்பத்தக்க நாயக உணர்வுகள். அதிலும், தமிழ்நாடு போன்ற நாயகவாத பாசிசமும், பண்பாட்டுக்கூறுகளும் இருக்கும் ஒருமாநிலத்தில் சினிமா பிரபலங்கள் அதிகாரத்தை எதிர்ப்பது என்பது மக்களுக்கு மிக நெருக்கமான அரசியல் உணர்வாக இருந்திருக்கிறது.
கமல்ஹாசனின் ட்விட்டர் அரசியலுக்கு கிடைத்த பலத்த வரவேற்பு என்பது இந்த ரகம் தான்.
மிகப்பெரிய அறிவாளி. படைப்பாளி. உலக ஞானம் கொண்டவர். கடவுள் மறுப்புச் சிந்தனையாளராக முன்னிறுத்துக் கொள்பவர். பொது இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதவர். அநேக நேரங்களில் பொதுமக்கள் இயக்கத்திற்கு அன்னியமானவராகவும், அறிவுஜீவி வர்க்கத்துக்கு நெருக்கமானவராகவும் இருந்தவர்... அப்படிப்பட்ட கமல் நேரடியாக அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்விகேட்டதும், கிண்டல் செய்ததும், டிவிட்டரில் அரசியல் நடத்தியதும் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த ஆச்சரிய உணர்ச்சியிலிருந்து கிளைத்த ஆரவாரம் தான் கமல்ஹாசனின் அரசியல் கருத்துக்களை கவனம் பெறச் செய்தது.
ஆனால், அடிப்படையில் இருந்த ஒருநம்பிக்கை கமல் அரசியலுக்கு வரமாட்டார் என்பதுதான். ஏனென்றால், உலகமயமாக்கலின் இயக்கத்தாலும், நுகர்பொருள் - கொண்டாட்ட கலாச்சார வாழ்க்கையாலும் அரைகுறை புரிதல்களுடன் அரங்கேறிவரும் அரசியலற்ற அரசியல் கமல்ஹாசனை அப்படி நினைக்க வைத்தது. அந்த நம்பிக்கையின் ஆதாரம் அதிகமாக இருந்ததன் விளைவுதான் கமல்ஹாசன் எப்படியும் அரசியலுக்கு வரமாட்டார். எனவே, அவரை வெளிப்படையாக ஆதரிப்போம். அடிப்படையில் பெரும் அறிவாளியாக பார்க்கப்படும் கமல்ஹாசனை ஆதரிப்பதன் மூலம் பேஸ்புக், டிவிட்டரில் நமக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்கிற பேஸ்புக் லைக்ஸ் விருப்ப மனநிலை, பொது அரசியல் இயக்கத்தின் மீதான ஆய்வுப்பார்வையற்ற வெறுப்பு, தங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவற்ற நிலையில் அரசியலுக்கு பிரபலங்கள் யார் வந்தாலும் வாரது வந்த மாமணியாக கொண்டாடும் இயல்பு இவைதான் கமல்ஹாசனை நோக்கிய ஆச்சரியக்குறிகளை அதிகப்படுத்தியது. ஆனால், மக்களுக்குள் எழுந்த அந்த ஆச்சரிக்குறிகளுக்குள் அடிப்படையாக ஒரு எண்ணம் இருந்தது. ‘எப்படியும் கமல்ஹாசன் வரமாட்டார்’ என்று.
கமல்ஹாசனின் கருத்துக்களுக்கு சமூகவலைதளங்களில் குறைந்த ஆதரவு வீழ்ச்சியே இந்த உளவியலைத் தெளிவாக காட்டுகிறது. இப்போது, கமலின் அரசியல் இயக்கம் தொடங்கிவிட்ட நிலையில் எழும் விமர்சனங்கள் இந்த உளவியலின் இயக்கத்தையும், அதன் எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றத்தை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.
ரஜினிகாந்த் கூட ஆன்மீக அரசியல் என தனது அரசியல் பாதையை தெளிவாக வரையறுத்துவிட்டார். அவர் கட்சியின் சின்னமாக காட்டும் பாபா குறியீடு, இதுவரையிலான அவரது பாதை எல்லாம் அவருக்கான எதிரிகள் வட்டத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆனால், அரசியல் மூலதனமான இத்தகைய குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட கமல் இழந்துவிட்டு நிற்கிறார்.
நிகழ்காலத்தின் கேள்விகளுக்கு விடைசொல்லாத யாரும் அரசியலில் நிலைத்திருக்க முடியாது. அரசியலில் ஒவ்வொரு நொடியும் நிகழ்காலத்தோடு தொடர்ந்து உரையாட வேண்டும். அப்படி நிகழ்காலத்திற்கான கேள்விகளுக்கு உரிய பதில் எழுதாத எவரும் காலத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.
வரலாற்றைக் கவனித்தால் தெரியும். எப்போதெல்லாம் அரசியலில் குழப்பம் மிகுந்து, முடிவெடுக்கக்கூடிய அரசியல் தெளிவை மக்கள் இழந்திருக்கிறார்களோ அல்லது அரசியல் குழப்பம் மிக்க மக்கள்கூட்டம் மிகுந்திருக்கிறார்களோ அப்போதுதான் இதுபோன்ற ‘மையவாதம்’, நடுநிலைவாதம், சார்பின்மை வாதம் என்கிற பெயரால் அரசியல் வருகைகள் நிகழ்ந்திருக்கின்றன.,
2008ல் உலகப்பொருளாதாரம் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து, அமெரிக்கா கடும் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நிலையில் தன்னை ஒரு மையவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டார் அமெரிக்க மேனாள் அதிபர் ஒபாமா. இந்தியாவில் நாம் சமீபத்தில் அப்படி பார்த்த ஒரு தேசிய முகம் அரவிந்த் கெஜரிவால்.
ஆனால், அமெரிக்காவின் இயல்புக்கே உரிய வலதுநோக்கிய மையவாதத்தை கடைபிடித்த ஒபாமா தன் நிகழ்காலத்திற்கான தேவைகளை பூர்த்திசெய்து தப்பித்துக் கொண்டார். வலதும் இல்லாது, இடதும் இல்லாது தத்தளித்த அரவிந்த் கெஜரிவால் தோற்றுக்கொண்டிருக்கிறார்.
நிகழ்காலத்திற்கான தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அரசியலுக்கு நேர்மறை, எதிர்மறையாக நம் கண் முன்னால் அதற்கு இருக்கும் இரு மகத்தான சாட்சிகள் கருணாநிதியும், அரவிந்த் கெஜரிவாலும்.
சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தகாலத்தில் அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அவரது அரசியல் வருகையின் போது தேசியவாத எழுச்சியும், அதற்கு எதிராக இனவாத, மதவாத எழுச்சியும் நடந்துகொண்டிருந்தது. இன்றைக்கு கருணாநிதி ஓய்வுபெற்று அமர்ந்திருக்கிறார். இது இந்தியாவில் பாசிசவாதம் ஒரு பேரெழுச்சிக்குப் பிறகு மிக லேசாக தொய்வடைந்திருக்கும் காலகட்டம்.
இந்த மொத்த காலக்கட்டத்திலும், கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களுக்கு தன் உடல் ஒத்துழைத்த கடைசி நொடிவரை கருணாநிதியால் தன் நிகழ்காலத்தோடு உரையாடிக் கொண்டே இருக்க முடிந்தது. கருணாநிதி மீது ஏராளமான புகார்கள் உள்ளன. குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ஏழு தசாப்தங்களாக அவர் நிலைத்திருப்பதற்கு காரணம் நிகழ்காலத்துடனான காத்திரமான உரையாடல்.
அந்த உரையாடலை நிகழ்த்த அவருக்கு உதவிய ஊடகம் கருணாநிதியின் சித்தாந்தம். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையின் அத்தனை நொடிகளும் அவருடைய சித்தாந்த நிலைப்பாட்டோடு சேர்த்தே விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர் முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்கும் போதும், குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் போதும் கருணாநிதியை அளவிட, சீர்தூக்கிப்பார்க்க, விமர்சிக்க அவரது சித்தாந்தம் ஆகமுதன்மையான அலகாக இருந்தது.
அரவிந்த் கெஜரிவால் இதற்கு நேர் எதிர்ப்பதம். இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் காலகட்டத்தில் களத்திற்கு வந்தவர் அரவிந்த் கெஜரிவால். தாராளமயவாதத்தின் பயன்களால் எழுச்சியடைந்திருந்த இந்திய நடுத்தரவர்க்கம் தீவிரமான நுகர்வுவாழ்க்கைக்குள் நுழைந்திருந்த காலகட்டம் அது. மிகப்பெரும் நுகர்வு வாழ்க்கைக்குள் நுழைந்திருந்த இந்தியாவின் மத்திய மற்றும் முதல் தர நடுத்தரவர்க்கம் இதுவரை தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், தங்களுக்கான பொன்னுலகத்தைத் திறக்க ஒரு தலைவன் வருவான் என்றும் நம்பிக்கொண்டிருந்து.
இந்த காலத்தில் காங்கிரஸின் தேக்கநிலை, பாஜகவின் அதிதீவிர வலதுசாரித் தன்மை ஆகியவற்றோடு ஒத்துப்போக முடியாத மெலிந்த முற்போக்குவாதிகளான ஒரு படித்த வர்க்கத்துக்கு அரவிந்த் கெஜரிவால் நல்ல தேர்வாகத் தெரிந்தார்.
இதைச் சரியாகப்பயன்படுத்திக் கொண்ட கெஜரிவாலும் அரசியலில் தான் யார் என்பதைச் சொல்லாமல், தான் ஏன் வருகிறேன் என்பதை மட்டுமே சொன்னார். சித்தாந்த ரீதியாகவும், பொருளாதார கோட்பாடுகள் அடிப்படையிலும் தான் யாருக்கான அரசியலை முன்னெடுக்கிறேன் என கெஜரிவால் சொல்லவில்லை. மாறாக, ஒரு நிர்வாகிக்கான திறமையோடு தான் இருப்பதாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டு சாமானியர்களை உயர்த்தப் போவதாக அறிவித்துக்கொண்டார்.
பளபளக்கும் குர்தாக்களும், மேல் கோர்ட்டும் அணிந்துகொண்டிருந்த டெல்லி அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சாதாரணமான அரை- கை சட்டையும், பேரல் பேண்டும், ஆபிஸ் ஸ்லிப்பரும் போட்டு மக்கள் முன்னாடித் தோற்றம் கொண்டார். உச்சக்கட்டமாக, துடைப்பத்தை கட்சியின் சின்னமாகத் தேர்ந்தெடுத்த கெஜரிவால் ’ஆம் ஆத்மி’ (சாமானியர்களின் கட்சி) என கட்சிக்குப் பெயரிட்டார்.
எப்படி நடிகர்கள், பிரபலங்கள் வெறும் பொதுஜன பிம்ப கவர்ச்சிகரத்தை மட்டும் அரசியலுக்கு வந்தார்களோ, அதைப் போலவே நேர்மையான நிர்வாகம், தனிமனித அரசியல் ஒழுக்கம் என தனித்த ஆளுமைகளுக்கான அரசியலையே கொள்கையாக முன்வைத்தார். தான் நேர்மையானவன். நிர்வாக அறிவுடையவன். ஊழல், லஞ்சத்துக்கு எதிரானவன் என மட்டுமே திரும்பி திரும்பிச் சொன்ன கெஜரிவால் தன்னை கமலஹாசனைப் போலவே தன்னை ஒரு மையவாதியாகவே கட்டமைத்துக் கொண்டார்.
ஆனால், இந்த மையவாதம் அவரை ஆட்சியியலிலோ, நிர்வாகத்திலோ எந்த வகையிலும் தனித்துவப்படுத்திக் காட்டவில்லை.
ஒரு அரசியல் தலைவர் சித்தாந்த பின்புலத்தோடு வரும் போது அது நாட்டுக்கு மட்டுமல்ல, அவருக்கும் தனிப்பட்ட வகையில் பெரும் உதவி புரியும். தீவிரப்பிரச்னைகளை கையாளும்போதும், மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும் அவரால் தன் சித்தாந்தம் அளிக்கும் பார்வையில் கறாரான நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், ஒரு மையவாதியால் அப்படி ஒருபோதும் செய்ய முடிவதில்லை. அவர்கள் எது அதிகம் நன்மைபயக்கும் என்கிற சிந்தனை பேரத்தில் ஈடுபடத் துவங்குகிறார்கள். உண்மையிலேயே மிக நேர்மையான முடிவுகளை அவர் எடுத்தாலும்கூட நிச்சயம் ஏதாவது ஒருதரப்பின் எதிரியாகவும், பக்கச்சார்புள்ளவர்களாகவும் கருதப்படத் துவங்குவார்கள். மையவாதம் தரும் சிக்கலால் நிலைப்பாடுகளில் தேக்கம் அடையத் துவங்கும் இத்தகைய தலைவர்கள் விரைவிலேயே தேக்கத்தைச் சந்திக்கிறார்கள். அரவிந்த் கெஜரிவால் அப்படிப்பட்டவர் தான்.
இதைத்தவிர நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான இடம், இந்திய நிர்வாகவியல் குறித்த அவர்களது கண்ணோட்டமும், அரசியல் களத்தில் அவர்களுக்கு இருக்கும் கனவுகளும். இந்தியாவின் சாசுவதமான அரசியலமைப்பு அனுமதிக்கும் அதிகார எல்லைக்கும், புதிய அரசியல்வாதிகளுக்கு இருக்கும் கனவுகளுக்கும் இருக்கும் முரண் காலம்தோறும் நமக்கு சிலபாடங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
இன்று கமல் முன்வைக்கும் அரசியல் நமது கடந்தகால பாடங்களை மறுவாசிப்பு செய்வதற்கு நமக்கு உதவிசெய்கிறது. என்ன பாடங்கள் அவை?
-தொடரும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.