அரசியலற்ற அரசியல்வாதி கமல்ஹாசன் 2

கமல் அரசியல் பயணத்தைத் தொடங்கும் முன்னர் பினராயி விஜயனைச் சந்திந்தார். தேர்தல் அரசியலுக்கான மார்கிஸியப்பாதை கமலுக்குத் தெரியவில்லை.

விவேக் கணநாதன்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மிகக்குறைவான அதிகாரங்களை மட்டுமே விட்டுவைத்துள்ளது. இப்படி இருக்கும் அதிகாரமும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகார மையத்தின் இயல்புக்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே களத்தில் செல்லுபடியாகிறது.

ஆனால், அரசியலில் புதிதாக களத்திற்கு வரும் எவரானாலும் அவர்களுக்கு என்று ஒரு கனவு இருக்கும். பீய்ச்சிக் கொண்டு அடிக்கும் அவர்களின் கனவு உலகை கொட்டி நிரப்புவதற்கு மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரச்சட்டியில் இடம் இருப்பதில்லை.

இந்த அதிகாரப்பற்றாக்குறையை பார்த்த உடனே உடனடியாக, அவர்கள் வெறுப்புக்கு உள்ளாகின்றனர். எல்லாவற்றிலும் ஒரு தடைக்கல்லை உணரும் அவர்கள் அதிகார அலைக்கழிப்புக்கும், நெருக்கடிக்கும் உள்ளாகிறாகள். இந்த நேரத்திலும் அவர்களுக்கு சித்தாந்தம் தான் உதவுகிறது.

இதற்கும், இந்தியா முழுவதும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்குத் தெரிந்த நல்ல உதாராணம் அறிஞர் அண்ணா. காமராஜரையும், காங்கிரஸையும் வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட நாடு எனும் கனவு கொண்டிருந்தவர். அதாவது, ஒரு தனித்த தேசத்தை வளர்த்தெடுப்பதற்கான ஆற்றலும், கனவும் கொண்ட ஒரு நேர்மறை அரசியல்வாதி. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சரான அண்ணாவுக்கு கிடைத்தது இந்திய யூனியனில் மத்திய அரசு உறிஞ்சிய பிறகு கிடைக்கும் சக்கையான அதிகாரம் மட்டும் தான். இந்த அதிகாரத்தை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த அண்ணா தளர்ந்துவிடவில்லை. காராணம், அவரை வழி நடத்துவதற்கு என்று ஒரு சித்தாந்தம் இருந்தது. ஒரு லட்சியம் இருந்தது. எனவே, சித்தாந்தத்தின் வழி நின்று சிந்தித்த அண்ணா மாநில சுயாட்சி கோரிக்கையை எழுப்பினார்.

இதே காட்சிகளை அரவிந்த் கெஜரிவாலுக்கு பொருத்திப் பாருங்கள். கணிசமான எதிர்பார்ப்புகளோடு முதல்முறை ஆட்சிக்கு வந்த கெஜரிவால் மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார். ஏதுமில்லாத அதிகாரம் அவரை பதற்றப்படுத்துகிறது. வேறுவழியின்றி தெருவுக்கு வரும் கெஜரிவால் போராட்டம் செய்கிறார். கடைசியாக வெறுத்துப் போய் ஆட்சியை ராஜினாமா செய்கிறார்.

ஆனால், டெல்லி மீண்டும் கெஜரிவாலுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது. காரணம், பதவியை பொருட்டென நினைக்காதவனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இயல்பு டெல்லிவாசிகளுக்குப் பிடித்தது. ஆனால், இரண்டாவது முறையும் கெஜரிவாலிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை. மத்திய அரசு எனும் பேரதிகாரத்திடம் வலுவாகவும், நிலையாகவும் பேரம் நடத்தும் வலிமை அவருக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ இல்லை. மாறாக, தொடர்ச்சியாக மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்வதற்காக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தும் ‘என்.ஜி.ஓ அரசியல்வாதிகளாகவே’ அரவிந்த் கெஜரிவாலும், அவரது சகாக்கள் இருந்தனர்; இருக்கின்றனர். மாறாக, இந்தியாவுக்கோ அல்லது அவர்கள் சார்ந்த இயக்கத்துக்கோ, மாநிலத்துக்கோ மாற்றுப்பாதையை முன்வைக்கும் திராணியற்றவர்களாக்கியது.

இந்த திராணியின்மையின் விளைவுதான் கொஞ்சம் கொஞ்சமாக பூசலாகவும், உட்கட்சி அதிகாரப் போட்டியாகவும் மாற வினையூக்கியாக இருந்தது. ஒருகட்டத்தில் மக்களுக்கான அடிப்படைத்திட்டங்களைக் கூட சரியாக நிறைவேற்ற முடியாமல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆம் ஆத்மியினர் வரிசையாக தேர்தல் தோல்விகளையும் சந்திக்கத் துவங்கினர். டெல்லி உள்ளாட்சி மன்றத் தேர்தல், பஞ்சாப் தேர்தல் இரண்டிலும் ஆம் ஆத்மி அடைந்த தோல்வி இத்தகையது தான்.

இந்தத் தோல்விகளுக்கு அடிப்படை காரணம் ஆம் ஆத்மியின் சித்தாந்த பலமின்மை. ஒருவேளை சித்தாந்த பலம் இருந்திருந்தால், அண்ணா, கருணாநிதி செய்ததுபோல மாநில சுயாட்சி போன்ற மாற்றுத்திட்டங்களை முன்வைக்கும் முயற்சியை செய்து கொண்டே நிகழ்கால அரசியலில் அவர்கள் மத்திய அரசோடு பேரம் நடத்தியிருக்க முடியும். ஆனால், அரவிந்த் கெஜரிவால் அதை சித்தாந்த பிரச்சனையாக பார்க்கவில்லை. மாறாக, அதிகாரத்தைக் குவிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் செய்யும் நிர்வாக குளறுபடிகளாத்தான் நினைத்தார்.

அரவிந்த் கெஜரிவாலின் இந்த சிந்தனைதான் அவரைத் தீர்வு நோக்கி சிந்திக்கவைக்காமல், இடம்விட்டு இடம் நகரும் முடிவைத் தேடவைத்தது. நினைத்துப்பாருங்கள். ஒருவேளை அதிகாரம் போதவில்லை என்று அண்ணா தமிழ்நாட்டோடு சேர்த்து, ஆந்திராவிலும் போட்டியிட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

கெஜரிவால் அதைத்தான் செய்தார். டெல்லியில் முதலமைச்சராக இருந்து கொண்டே பஞ்சாப்புக்கு கணக்குப்போட்டார். டெல்லி மக்களின் வரிப்பணத்தில் பஞ்சாப் பத்திரிகைகளில் தனது டெல்லி அரசு குறித்து விளம்பரங்கள் கொடுத்தார். ஆனால், பஞ்சாப்பிலும் தோல்வியே கிட்டியது.

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில் இன்றைக்கு கெஜரிவாலுக்கு இந்திய அரசியலில் காத்திரமான பாத்திரம் என்று எதுவுமே கிடையாது. ஏதும் செய்ய முடியாத வெறுத்துப்போன அரசியல்வாதியாகவே அவர் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கெஜரிவாலுக்கு என்று எந்த பெரிய முக்கியத்துவமும் இல்லை. வெறும் ஐந்தே ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட சரிவு இது.

ஆனால், சித்தாந்தத்தின் வழி இந்தியாவை அணுகிய அண்ணா 60 ஆண்டுகளாக இந்தியாவுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னர் பொறுப்புக்கு வந்த கருணாநிதி 60 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

கட்சி பின்புலமும் உருவாக்கமும் இங்கே கணிசமான பங்காற்றுகிறது. கமலின் அரசியல் வருகையையும், புரிதல் இன்மைகளையும் நாம் இத்தகைய கட்சி – சித்தாந்த பின்புலத்தோடு சேர்த்துதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தேசியக்கட்சிகள் எப்போதும் மத்திய அரசின் அதிகாரத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, தேசியக் கட்சிகளில் இருந்து உருவாகி வரும் மாநில பிரதிநிதிகள் அதிகாரம் சார்ந்து பாகுபாடுகளை எதிர்த்து பெரிதும் குரல்கொடுப்பதில்லை. அப்படி குரல்கொடுக்கத் துவங்கினால் விரைவில் தனிக்கட்சித் துவங்கிவிடுவார்கள் அல்லது வேறு கட்சியில் இணைந்துவிடுவார்கள். இப்படி கட்சி மாறிய பிறகு அவர்கள் மத்திய அரசோடு அதிகார பேரங்களை நிகழ்த்துவதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.
நிகழ்கால அரசியலில் அப்படி இருப்பவர் மம்தா பேனர்ஜி.

மாறாக, அரசியல் வருகையின் போதே பிராந்திய உணர்வுகளோடு வருபவர்கள் மத்திய அரசோடு அரசியல் பேதங்களை நிகழ்த்துகிறார்கள். இதில் யார் சித்தாந்த பலத்தோடு இருக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து தாக்குப்பிடிக்கிறார்கள். சித்தாந்த பலமோ, பின்புலமோ இல்லாதவர்கள் மத்திய அரசோடு கலந்துவிடுகிறார்கள். அப்படி கலப்பவர்கள் மத்திய அரசிடம் இணக்கமான அதிகார பேரங்களை நிகழ்த்துவதற்கு பதிலாக, மத்திய அரசின் கருணையையோ, ஆசியையோ எதிர்பார்த்துதான் ஆட்சியில் இருக்கிறார்கள். இதற்கு நம் நிகழ்கால அரசியல் உதாரணம் சந்திரபாபு நாயுடு.

ஆனால், தேசியப்பார்வையோடு கட்சி தொடங்கி, டெல்லி என்கிற யூனியன் பிரதேசத்துக்குள் சுருங்கிய அரவிந்த் கெஜரிவால் முழுமையாக மம்தா பேனர்ஜியோ, சந்திரபாபு நாயுடுவோ ஆக முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே அரவிந்த் கெஜரிவாலுக்கு ஏற்பட்ட தள்ளாட்டத்திற்கான அத்தனை அறிகுறிகளும் கமலிடமும் தெரிகின்றன. தனது கட்சியின் சின்னத்தை ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடப் பிரதேசம் என கமல் சொல்கிறார். அந்த திராவிட நில எல்லைக்குள்ளும் ஒரேயொரு மாநிலத்திற்குள் சுருங்குகிறார். அந்த ஒரேயொரு மாநிலத்திற்குள்ளும் அதிகார பேரம் நிகழ்த்துபவராகவோ அல்லது இணங்கிப்போகக்கூடியவராக இல்லாமல் இரண்டும் கெட்டான் தனமாக தன்னுடைய பொதுப்புத்தி அரசியலைப் பேசுகிறார்.

கமல்ஹாசன் அரசியல் கட்சித் தொடங்குகிறார் என்ற போதும், அவருக்கு பொதுவெளியில் இருந்த பகுத்தறிவுவாதி – திமுக அனுதாபி பிம்பமும் அவர் ஒரு சித்தாந்த அரசியலை முன்னெடுப்பார் என எண்ணம் கொள்ள வைத்தது. ஆனால், கருணாநிதியிடம் ஆசிவாங்கிய கமல்ஹாசன் அரவிந்த் கெஜரிவாலிடம் இருந்து தனது இயக்க அரசியல் பாதையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
கண்ணுக்கு முன்னால் வீழ்ந்து கிடக்கும் ஒரு அரசியல் பாதைதான் கெஜரிவால் உடையது என்பதை உணர முடியாத அளவுக்கு அவர் சித்தாந்த வலுவற்றவராக இருக்கிறார்.

அதனால் தான் தமிழ்நாட்டின் ஆதாரப்பிரச்னையாக இருக்கின்ற காவிரி, நீட் தேர்வு, தமிழ்மொழி வளர்ச்சி என எந்த ஒரு விஷயத்திலும் சித்தாந்த ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் மாற்றங்கள் தேவைப்படுவதாக அவருக்குத் தோன்றவில்லை. அந்த மாற்றங்களுக்கான மையங்கள் மத்திய அரசதிகாரத்தோடு தொடர்பில் இருப்பதை அவர் உணரவில்லை.

மீண்டும் மீண்டும் அவர் இவை அனைத்துமே அவருக்கு தனிமனிதர்களான சில அரசியல்வாதிகளின் தவறுகள், அதிகாரப் போட்டிகள், அரசியல் சூதாட்டங்களால் ஏற்படும் பிரச்னைகள் என்றே பார்க்கிறார். அதனால் தான் காவிரி பிரச்னைக்கு அவருக்கு அமைப்பு ரீதியிலான சிக்கல்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. காவிரி மேலாண்மை என்கிற அமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற போராட்டம் கண்ணுக்குத் தெரியவில்லை. மாறாக, தனிமனிதர்கள் சிலர் உக்கார்ந்து பேசினால் பிரச்னை சரியாகிவிடும் என நம்புகிறார்.

மனிதர்களைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு வலுவான அமைப்புகளை உருவாக்குவதே தேவை என்பதை கமல் உணரவில்லை. மாறாக, அமைப்பின் சிக்கல்களைத் தாண்டி ‘நல்லது செய்யத் தவித்துக் கொண்டிருக்கும்’ தனி மனிதர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
அதனால் தான், 60 ஆண்டுகளாய் நடந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. 1991-ல் காவிரித் தீர்ப்பு வந்தபோது எழுந்த கலவரம் கண்ணுக்குத் தெரியவில்லை. நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது ஒரு லட்சம் தமிழர்களைக் கொல்வோம் என பிரகடனப்படுத்திய இனவாதம் கண்ணுக்குத் தெரியவில்லை. 2016 செப்டம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் போது எரிக்கப்பட்ட பல நூறுகோடி சொத்துக்களும், ஒரு மாதகால பதற்றங்களும் கண்ணுக்குத் தெரியவில்லை.

ஆனால், இதுவரை வரலாற்றில் யாருடைய கண்ணுக்குமே தெரியாமல் போன ஒரு உயர்ந்த லட்சியவாதம் கொண்ட, மானுட நேயமிக்க மனிதர்களைத் தேடிக் கண்டுபிடித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என்கிறார். தண்ணீருக்குப் பதில் ரத்தமே வாங்கித்தருவேன் என்று படுமோசமான அரசியல் பஞ்ச் வசனம் பேசுகிறார்.

தமிழ்மொழி வளர்ச்சி பற்றி பேசும்போது உலகமயமாக்கல் விடுக்கும் சவால்கள், பண்பாட்டு மாறுதல்கள் எதுவும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆட்சிமொழியாகவும், நிர்வாக மொழியாகவும் தமிழை கொண்டுவருவதன் மூலம் தமிழை வைத்து வியாபரத் தளத்தை விரிவாக்கக் கிடைக்கும் சாத்தியங்கள் குறித்தும், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்தும் அவருக்கு எந்த கவலையும் இல்லை. எல்லோரும் தமிழ் பேசுங்கள் சொல்லிவிட்டு கூசாமல் சிரிக்கிறார்.

அவருடைய பொதுப்புத்தித்தனமான அரசியல் இதுவரையிலான அரசியல் முன்னகர்வுகளை கேலிசெய்வதுடன், அடுத்தக்கட்டமாக எடுத்துச் செல்ல வேண்டிய பார்வைகளையும் குறுகிப் போகச் செய்கிறது.

ஆனால், கமலின் இந்தப் போக்கு ஆச்சரியப்படுத்துவதல்ல. கமலின் டிவிட்டர் அரசியல் தொடங்கியிருந்த நேரத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கமல்ஹாசன் சொல்கிறார் ‘இன்றைக்குத் தேவை மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள் அல்ல; தலைமை செயல் அதிகாரிகளைப் போன்று செயல்படக்கூடிய நிர்வாகிகள் தான்’ என்று சர்வசாதாரணமாக சொல்கிறார்.

ஒரு தலைமைச் செயல் அதிகாரிக்கு மதவாதம் பற்றி எந்தக்கவலையும் இருக்கத் தேவையில்லை. ஒரு தலைமைச் செயலதிகாரி சாதிவாதம் குறித்தும், வகுப்புவாதம் குறித்தும் வரலாற்றுப் பார்வையோடு இருக்கத் தேவையில்லை. வெறுமனே பேப்பரில் இருக்கும் விதிகளை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டு தலைமைச் செயலதிகாரியால் ‘தேமே; என இருக்க முடியும். ஆனால், கோடிக்கணக்கான மக்களை உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைத்து வழி நடத்த வேண்டிய ஒரு தலைவனுக்கு இவை எல்லாம் வேண்டும். அதற்கு மய்யவாதம் என்கிற பெயரில் செய்யும் கொள்கைப்பூர்வமான தப்பித்தல் உதவாது, காத்திரமான பார்வைகளோடு முன்வைக்கும் சித்தாந்த அரசியல் தான் உதவும்.

அரவிந்த் கெஜரிவால் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களிலேயே ஓரளவுக்கு வெளியில் பேசப்பட்ட திட்டம் சாலை வாகனங்களை முறைப்படுத்துவதற்கான ‘Odd Even’ திட்டம். ஆனால், அந்தத்திட்டமும் பெரும் சொதப்பலாகவே முடிந்ததது. சூழலியல் மாசுப்பாட்டையோ, பொது விழிப்புணர்வையோ அத்திட்டம் கொண்டுவரவில்லை.

இங்கேயும் அரவிந்த் கெஜரிவாலின் சிந்தனைப் போக்கு தனிமனிதர்கள் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் என்பதன் ஆதாரத்தில் இருந்தே எழுந்ததுள்ளதை புரிந்து கொள்கிறது. காற்றுமாசுப்பாட்டைக் கட்டுப்படுத்த பொதுவெளிகளில் எரிக்கப்படும் பல டன் குப்பைகள், டெல்லியைச் சுற்றியிருக்கும் பல ஆயிரம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றும் புகைமூட்டம் எதுவும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

டீசல் விற்பனை கார்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பதில் மனிதர்களை முறைப்படுத்தும் ‘டியூசன் மாஸ்டர்’ வேலையைத்தான் அரவிந்த் கெஜரிவால் பார்த்தார். அமைப்பின் மீதான புரிதல்கள் குறைவுதான் இந்திய அளவில் கவனம் பெற்ற அரவிந்த் கெஜரிவாலை இன்று ஒரு ‘சோட்டா’ அரசியல்வாதியாக மாற்றியிருக்கிறது.

ஒருகாலத்தில் ‘கிளர்ச்சிக்காரன்’, ‘இந்தியாவை சுத்தப்படுத்த வந்த மனிதன்’ என்றெல்லாம் அரவிந்த் கெஜரிவாலைக் கொண்டாடிய ஆங்கில பத்திரிகைகள் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் ‘அரவிந்த் கெஜரிவால் ஒரு ஷோ காட்டும் அரசியல்வாதி’ என விமர்சித்தன.
எந்தவிதமான சித்தாந்த அரசியல் களமும் இல்லாத டெல்லி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜரிவாலுக்கே அப்படி என்றால், தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் ‘மய்யவாதம்’ என்கிற பெயரால் எந்த ஆதார உணர்ச்சியும் இல்லாத அரசியலை முன்னெடுக்கும் கமல் என்ன ஆவார்?

நிகழ்காலம் விடுக்கும் சவால்கள் எதற்கும் நான் பதில் சொல்லமாட்டேன் என்கிற அடம்பிடித்தலோடுதான் ட்விட்டர் முதல் ஒத்தகடை மேடைவரை இருக்கிறார் கமல். அரவிந்த் கெஜரிவாலுக்காவது சூழல் கொஞ்சம் கை கொடுத்தது. கெஜரிவாலின் வருகையின் போது ஊழல், நிர்வாகக் கேடுகள் தான் பெரும் பேசுபொருள்களாக இருந்தன. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் முக்கியமான பேசுபொருள்களாகவும் சிக்கல்களாகவும் இருப்பவை இந்தியாவின் அடிப்படை ஆதாரத்தை அசைத்துப் பார்க்கும் பிரச்னைகள்.
இன்றைக்கு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தேவை கருணாநிதி போன்ற, அண்ணா போன்ற சித்தாந்த அரசியல்வாதிகள். இங்கே சித்தாந்த அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கலாம். புகார்கள் இருக்கலாம். பழிகள் இருக்கலாம். ஆனால், அவர்களது நிறைகுறைகளை அளவிட, விமர்சிக்க சித்தாந்தம் நமக்கு உதவுகிறது. தங்கள் மீதான விமர்சனங்களை, நிறைகுறைகளை அறிந்துகொண்டு திருத்திக்கொள்ள தலைவர்களுக்கும் வழிகாட்டுகிறது. அது அண்ணாவாக இருந்தாலும் சரி, பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி. இந்த அளவீடு நம் ஜனநாயகத்துக்கு உதவிக்கொண்டே இருக்கிறது.

ஆனால், இதுவும் இல்லை, அதுவும் இல்லை என்கிற பெயரில் வலது, இடதுக்கு நடுவில் இருப்பதாக சொன்னவர்கள் எதுவும் இல்லை என்று தான் ஆகியிருக்கிறார்கள். எது நல்லதோ அதைச் செய்வேன் என சொல்லும் மையவாதியை நோக்கி நாம் எந்தவிதமான விமர்சனத்தையும் வைக்க முடியாது. ஒரு தனிமனிதராக தன்னை திருப்திப்படுத்திக்கொள்ள எதாவது அரசியல் செய்வதைத்தவிர, சமூகப்பார்வைக்கோ விமர்சனங்களுக்கோ செவிகொடுக்காமல் போவதற்கான அபாயங்கள் அதிகம் இருக்கிறது.
அதற்கான ஆரம்பப்புள்ளிதான் இசங்களை மக்களை விரும்புவதில்லை என்றும், நிர்வாகத்தையே ஏற்கிறார்கள் என்றும் சந்திரபாபு நாயுடு சொன்னதாகவும் அதை ஏற்றுக்கொண்டதாகவும் கமல் சொல்வது.

இதே கமல் தான் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கும் முன்னர் பினராயி விஜயனைச் சந்திந்தார். அவரது நிர்வாகத்தைப் புகழ்ந்தார். தேர்தல் அரசியலுக்கான மார்கிஸியப்பாதையில் இருக்கும் பினராயி விஜயனின் நிர்வாகம் கமலுக்குத் தெரியவில்லை. ஆனால், சந்திரபாபு நாயுடுவின் நிர்வாகம் கண்ணுக்குத் தெரிகிறது.

ஏனெனில், கமல் அவருக்கு கொஞ்சமும் ஒத்துவராத எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க நினைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்காதவர்கள் இயல்பாகவே எந்தத்தரப்பிலிருந்தும் காத்திரமான எதிர்ப்பையோ, விமர்சனத்தையோ எதிர்கொள்வதில்லை. இதன்மூலம் ஏற்கனவே மைய அரசியலில் இருப்பவர்களின் எதிர்ப்புக்கோ, ஆதரவிற்கோ ஆளாகாமல் இயல்பாகவே ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். விமர்சனங்களிலிருந்தும், எதிர்ப்புகளிலிருந்தும் மையவாதிகள் பெற நினைக்கும் விலக்கு அவர்களை அரசியலிருந்தே விலக்கி விடுகிறது. தன் இயக்கத்தின் தொடக்கத்தையே இத்தகைய விலக்கிலிருந்துதான் கமல் தொடங்கியிருக்கிறார்.

ஒற்றை ஆட்சி, ஒற்றை அதிகாரம், ஒற்றை கலாச்சாரம், மதவியம், பெருந்தொழில் முதலாளித்துவச் சார்பு, பாசிசம் என இந்தியாவின் ஆன்மா இன்றைக்கு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதைப்பற்றி ஒருவார்த்தைகூட பேசமாட்டேன்; ஊழலை ஒழிப்பதுதான் என் நோக்கம் என வழுக்கை அரசியல் செய்வதும், மையவாதி என்கிற பெயரில் காத்திர அரசியலிலிருந்து விலகிச்செல்வதுமாக கமலின் அரசியல் ‘அடேங்கப்பா’ தனங்கள் மக்களுக்கல்ல, அவருக்கே உதவப்போவதில்லை!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close