எழுத்தாளர் அரியகுளம் பெருமாள் மணி, ஊடகவியலாளர்
‘வெல்கம் மிஸ்டர் பிரசிடெண்ட்’ என அமெரிக்க அதிபர் ட்விட்டரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வரவேற்று பதிவிட்ட டுவிட்டை பெரும்பாலானவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சர்வதேச அரசியல் புரிந்தவர்கள் இந்த டுவிட்டர் பதிவின் நுண்ணரசியலை உடனே புரிந்து கொண்டனர். உக்ரேனில் கடும் குளிர்காலம் ஆரம்பமாகிறது, இந்த நேரத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தில் உக்ரேன் அதிபர் பேசிக் கொண்டிருக்கிறார்.
பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவி கேட்டு உக்ரேன் அதிபர் அமெரிக்கா வந்துள்ளார். 50 சதவீதத்திற்கும் மேலான உக்ரேன் நாடு இருளில் மூழ்கி இருக்கிறது, ரஷ்யா உடனான யுத்தம் நீண்டு கொண்டே போகிறது. டேனிப்பர் நதிக்கரை மக்கள் ஒருபுறம் குளிரையும் மறுபுறம் போரின் வெப்பத்தையும் தாங்கியபடி நாட்களை கடத்துகின்றனர்.
ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் தனி நாடாக பிரிந்த பிறகு உலகின் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்தது. கோதுமையும் சூரியகாந்தி மலர்களும் செழித்து வளர்ந்தன, உலகெங்கிலும் இருந்து உயர்கல்வி கற்பதற்கு மாணவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு சில நாடுகளில் உக்ரேனும் ஒன்று. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய மொழி பேசுகிற மக்கள் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக கருதினர். உக்ரேனிய மொழிக்கும் ரஷ்ய மொழிக்கும் பெரிய வேறுபாடு கிடையாது, ஆனாலும் ஒரு பெரிய யுத்தத்திற்கான விதை இங்கே தான் தூவப்பட்டது.
2014 ஆம் ஆண்டு உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷ்யா தன்னுடைய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. தனக்கான கடல் வழிப் பாதைகளில் ஒன்றை திறந்து விடும் ரஷ்யாவின் முயற்சி இது என பாதுகாப்பு வல்லுநர்கள் அப்போது கருத்து தெரிவித்தனர்.
NATO நாடுகளின் அரவணைப்பிற்குள் உக்ரைன் செல்வதை ரஷ்யா உன்னிப்பாக கவனித்தது, வட அமெரிக்க நாடுகளின் ஆயுதங்கள் உக்ரேனை பலப்படுத்தின, இதற்கு மேல் பொறுமை காப்பது தகாது என எண்ணிய புதின் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.
உக்ரேன் நாட்டின் அதிபராக இருக்கிற ஜெலன்ஸ்கி ஒரு நகைச்சுவை நடிகராக இருந்து அதிபராக உருவெடுத்தவர். ரஷ்யா - உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட தாராளமாக இடமளித்தார் ஜெலன்ஸ்கி. உக்ரைன் வீரர்களை மேற்கத்திய நாடுகளின் தளபதிகள் போரில் வழி நடத்தினர், சர்வதேச அரங்கத்தில் மேற்கத்திய நாடுகளின் இத்தகைய செயலை ரஷ்யா கோபத்துடன் பதிவு செய்தது. டேனிப்பர் நதியின் ஒரு புறத்தை ரஷ்யா வெகு விரைவாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டது.
ரஷ்யா உக்ரேன் போர் சகோதர யுத்தம் போல தோன்றினாலும் உலக பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் அது பாதித்தது. கண்ணுக்குத் தெரியாத வகையில் உலகம் இரண்டாகப் பிளவு பட்டு நிற்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் கொடுப்பதற்காக நீண்ட எரிபொருள் குழாய் ஒன்றினை ரஷ்யா நிர்மாணித்து ஜெர்மனி வரை தன்னுடைய எரிபொருளை கொண்டு செல்கிறது, இரண்டாவது எரிபொருள் குழாயை ரஷ்யா நிறைவு செய்யும் வேளையில் போர் மூண்டது, போர் காரணமாக இரண்டாவது எரிபொருள் குழாயின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் யுத்தம் மேல் பரப்பில் நிலத்திற்கான யுத்தம் என்பது போல் தோன்றினாலும், உண்மையில் அது எனர்ஜி வார் எனப்படும் எரிபொருள் யுத்தம்.
உக்ரைன் போர் 300 நாட்களுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்க வந்துள்ளார் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி. அமெரிக்க பாராளுமன்றத்தில் ரூஸ்வெல்ட் கால அமெரிக்க யுத்தத்தையும் ஹிட்லரையும் நினைவுபடுத்தி அதுபோன்ற ஒரு யுத்தத்தை தற்போது தாங்கள் ரஷ்யாவிற்கு எதிராக இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நிகழ்த்திக் கொண்டிருப்பதாக உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.
ரஷ்யா உடனான இந்த போரில் தாங்கள் தாக்குப் பிடிப்பதற்கும் வெல்வதற்கும் ஆயுதங்கள் தேவை என்ற கோரிக்கையை எழுப்பிய ஜெலன்ஸ்கி, அமெரிக்கா தருகிற இந்த பணம் உலகின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் பயன்படுமே அன்றி அதைத் தானமாக கருத வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
யுத்தத்தால் சிதைந்து கிடக்கிற உக்ரைன் நாட்டு படை வீரர்கள் கையெழுத்திட்ட கொடி ஒன்றையும் அமெரிக்க பாராளுமன்றத்திற்கு உக்ரைன் அதிபர் பரிசளித்தார். போரின் அவலங்களை கோடிட்டு காட்டுவது போல இந்த பரிசு அமைந்திருந்தது.
அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் அமைதி நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டு அதிபர்களும் விரிவாக பேசினர். செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய வீரர்களை டெரரிஸ்ட் என்ற பதத்தால் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
குளிர்காலத்தை ஒரு ஆயுதம் போல ரஷ்யா பயன்படுத்துகிறது, மக்களை தனிமைப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டிய ஜெலன்ஸ்கி ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் உக்ரேன் சந்திக்க இருக்கிற ஆபத்துகளையும் பட்டியலிட்டார். அடுத்த கட்டமாக உக்ரைன் நாட்டிற்கு பேட்ரியாட் வகை ஏவுகணைகளை தர அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.
1.8 பில்லியன் டாலர் அளவிற்கான உதவிகளை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. பேட்ரியாட் வகை ஏவுகணைகள் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டவை என்பதால் போரின் அடுத்த கட்டம் கடுமையானதாக இருக்குமா? என்ற கேள்வி உலக நாடுகள் மனதில் எழுந்துள்ளது. ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் மீண்டும் ஒரு உலகப் போருக்கு வித்திடுமா? என்பதை இப்போது யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது, ஆனால் உக்ரைன் - ரஷ்ய யுத்தம் உக்கிரமடைய போகிறது என்பது தெளிவாகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.