/tamil-ie/media/media_files/uploads/2017/12/sonia1.jpg)
நீரஜா சவுத்ரி
விடியற்காலையில் பல் துவக்கி காப்பி கோப்பையுடன் புத்தம் புது காலையை துவக்குவதுபோல், அரசியலுக்கு நுழைந்த அனுபவம் முதற்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகள் இருந்து, மகன் ராகுல் காந்தியிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வரை, சோனியா காந்தி மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். 1984ல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு `கட்சியின் தலைவர் பதவியை ஏற்க வேண்டாம்’ என ராஜிவ் காந்திக்கு ஆலோசனை கூறிய, நேரு – காந்தி குடும்பத்தின் வெளிநாட்டு மருமகள், நாட்டின் மிகப் பழைமையான காங்கிரஸ் கட்சியின் நீண்டகாலத் தலைவராக இருப்பார் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
கட்சிப் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றபோது, இந்திய அரசியல் நுணுக்கங்களை புரிந்து கொள்வாரா, கருணாநிதி, மாயாவதி, முலாயம் சிங் யாதவ், அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற தலைவர்களுடன் தொலைபேசியில் பேசுவாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இந்திய அரசியலில், கட்சிப் பணிகளுடன் மாற்றுக் கட்சித் தலைவர்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அரசியலில் தன்னுடைய வழியில் சோனியா காந்தி இவற்றை சமாளித்தார். மற்றவர்கள் பேசுவதையும் கேட்கக் கூடிய அவர், மாயாவதி உடன் இணக்கமான நட்பு கொண்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் மரியாதைக்கு உரியவரானார். தற்போதும், முரண்பட்ட கொள்கைகள் கொண்ட எதிர்க்கட்சிகள், கூட்டணி அமைக்கும்போது, அதன் சூத்திரதாரியாக சோனியா காந்தியையே முன்வைத்தனர்.
பல்வேறு சவால்கள் இருந்தபோதும், காங்கிரஸ் என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாக கட்டி காத்தது சோனியாவின் முக்கியமான பங்களிப்பாக கூறலாம். தற்போது ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்கும்போது உள்ளது போலவே, சோனியா காந்தி தலைவர் பதவியை ஏற்றபோது, கட்சியில் பல தேய்மானங்கள் இருந்தன. மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் சேரத் தொடங்கினர். சிலர் தனிக் கட்சி துவக்கினர்.
வெளிநாட்டைச் சேர்ந்த சோனியா காந்தி தலைவராக பொறுப்பேற்பதை எதிர்த்து வெளியேறிய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை துவக்கினார். அந்தக் கட்சியுடன் இணைந்து, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை சோனியா காந்தி அமைத்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை துவக்கினார். தெற்கில் வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சி, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கியது மிகப் பெரிய தவறாகிவிட்டது. இந்தி பேசும் உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலேயே கையைப் பிசையும் நிலையில் இருந்த நிலையில், அது தவறான முடிவாக, கட்சியில் ஒரு பிளவு ஏற்பட வாய்ப்பாக அமைந்தது.
பொருளாதார சீர்திருத்த ஆதரவாளர்களான மன்மோகன் சிங், ப. சிதம்பரம், மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், உரிமைகள் அடிப்படையிலான கொள்கை எடுத்தது சோனியாவின் முக்கியமான பங்களிப்பாகும். தகவல் அறியும் உரிமை, உணவு பாதுகாப்பு உரிமை, ஊரக வேலைவாய்ப்பு உறுதி, கல்விக்கான உரிமை என அவர் எடுத்த முடிவுகள், 2009 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைய உதவியது.
மேலும் இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை எதிர்த்த இடதுசாரி கட்சிகளை சமாளிக்கவும் அவருக்கு உதவியது. தேசிய ஆலோசனை கவுன்சில் மூலம், வெளிநாட்டவர் என்பதில் இருந்து ஏழை எளிய மக்களுக்கானவர் என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவும் அவை சோனியாவுக்கு உதவியது.
இந்திரா காந்தியைப் போல் நானில்லை என்பதை அவர் பலமுறை உணர்த்தியுள்ளார். வெளிப்படையாகவும் கூறியுள்ளார். புலோக் சாட்டர்ஜி, அகமது படேல் ஆகியோர் மூலம், அரசு மற்றும் கட்சியில் பல்வேறு முடிவுகள், நியமனங்களை அவர் எடுத்தார். இதன்மூலம், அரசியலமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமிக்கவராக அவர் இருந்தார்.
காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு பார்லிமென்ட் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் பிரதமர் பிரதமர் பதவியை நிராகரிக்க வேண்டியதாயிற்று. கூட்டணி என்பது தற்போது அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்பதாகிவிட்டது. என்றாவது ஒருநாள், மன்மோகன் சிங்கை பிரதமராக எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதை சோனியா காந்தி தெரிவிப்பார்.
பல்வேறு சிறப்புகள் இருந்தபோதும், இரண்டு முக்கியமான விஷயங்களில் சோனியா தோல்வியடைந்துள்ளார். ஹிந்துக்களின் மனநிலையை, ஹிந்துத்துவா வளர்ந்து வருவதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதை புரிந்து கொண்டதே, நரேந்திர மோடி, 2014 பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
2014 லோக்சபா தேர்தல் தோல்வி குறித்த காங்கிரஸ் நடத்திய ஆய்வு குறித்து, ஏ.கே.அந்தோணி கூறும்போது, சிறுபான்மையினருக்கு ஆதரவு என்ற பிம்பமே, காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்றார். அனைத்து சமுதாய மக்களுக்கான கட்சி என்ற நிலையில் இருந்து, சிறுபான்மையினருக்கான கட்சியாக காங்கிரஸ் மாறியது. அதனால் கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றில் தங்களுடைய வாய்ப்புகள் பறிபோவதாக ஹிந்துக்களிடம் ஏற்பட்ட மாற்றம், அது சரியோ தவறோ, தேர்தலில் எதிரொலித்தது. தற்போது கோவில்களுக்கு போவதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் மீதான பிம்பத்தை மாற்றுவதற்கு ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இரண்டாவது மிகப் பெரிய தவறு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தின்போது ஊழல்கள் மலிந்து போனதை தடுக்கவோ, நிறுத்தவோ, மீட்கவோ நடவடிக்கை எடுக்காதது. எப்போதும் அதிரடியாக நடவடிக்கை எடுக்காத சோனியா, சுதாரித்து நடவடிக்கை எடுக்க முயன்றபோது, அதற்கு முன்பே, மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அதிக பேரிடம் ஆலோசனைக் கேட்டு முடிவு எடுக்கும் சோனியா அதை மாற்றிக் கொண்டார்.
கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க மறுத்ததும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தலைமுறை இடைவெளி ஏற்படும் என, ராகுல் காந்தி தலைவராவதற்கு மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பலனளிக்கவில்லை. ராகுலின் நடவடிக்கைகளும் தலைமை பொறுப்பில் அவர் திறம்பட செயல்படுவாரா என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை.
கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல்கள், அதிக அளவிலான ஊழல்கள், விலைவாசி உயர்வு, இவற்றை தடுக்க சோனியா தலையிடாதது போன்றவை, லோக்சபா தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன.
கட்சி இருக்குமா என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், நேரு – காந்தி குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறை தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. சோனியாவுக்கு, வாஜ்பாய், அத்வானி போன்றோரை சமாளிக்க வேண்டிய நிலை இருந்தது. ராகுலுக்கோ மிகவும் பலம் பொருந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க இவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும், 2019 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் பார்லிமென்ட் குழுவின் தலைவராகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும் சோனியா தொடர்வார்.
சோனியா காந்தியை வரலாறு எப்படி பார்க்கும்?
132 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்தவர் என்றா, மிகவும் அரிதாக பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர் என்றா, வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாட்டில் சிறுபான்மையினரின் ஆதரவு பெற்றவர் என்றா, கட்சிக்கு எதிர்பாராத பல வெற்றிகளையும் அதே நேரத்தில் தோல்விகளையும் தேடித் தந்தவர் என்றா?
அல்லது அவருடைய தலைமையில் காங்கிரஸ் இருந்தபோது, நாட்டில் ஹிந்து தேசிய அமைப்புகள் அபிரிமிதமான வளர்ச்சிப் பெறுவதற்கு, வழிவிட்டவர் என்றா?
(கட்டுரையாளர் மூத்த பத்திரிகையாளர்)
தமிழில் -ஸ்ரீவித்யா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.