பைசன் முஸ்தஃபா, அய்மின் முகமது
சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரத்தில், ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒவ்வொரு பிரிவினரையும் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறது.
மத சுதந்திரத்தில் தலையிடுவதைப்போல நீதிமன்றம் கட்டாயம் எதையும் கூறக்கூடாது. வழக்கின் தீர்ப்பையே நம்பிக்கையின் அடிப்படையில் தீர்மானிப்பது, மிகக் கடினமான ஒரு வெளிப்பாடாகும்.
சர்ச்சைக்குரிய அயோத்தி இடப்பிரச்னை வழக்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பின் மூலம், ஒவ்வொரு தரப்பையும் திருப்திப்படுத்த உச்ச நீதிமன்றம் முயற்சிசெய்திருக்கிறது. எந்த இடத்தில் 1528-ம் ஆண்டுக்கும் (6 டிசம்பர்) 1992-ம் ஆண்டுக்கும் இடையில் பாபர் மசூதி நின்றுகொண்டிருந்ததோ, அதே இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிக்கொள்ள இராமபக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
புதிய கோயிலை அமைக்கும் டிரஸ்ட்டில் நிர்மோகி அகாரா அமைப்புக்கு இடமளிக்கப்படும் என்பதால், அவ்வமைப்பு தீர்ப்பை வரவேற்றுள்ளது. சன்னி வக்ஃப் வாரியம்கூட தீர்ப்பில் திருப்தி அடைந்திருக்கவேண்டும். ஏனெனில், பாபர் மசூதி அமைந்திருந்த இடமானது சியா பிரிவினருக்கானதோ வக்ஃப் சொத்தாகவோ இல்லை; சன்னி தரப்புக்குதான் சொந்தமானது எனும் அவர்களின் மையமான வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இராமர்கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்படவில்லை என்றும் கூறியதன் மூலம், பாபர் மசூதியைப் பற்றிய இந்துத்துவ வலதுசாரிக் கதையாடலை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அயோத்தி விவகாரம், 1528-ல் முகலாய ஆட்சியின் நிறுவனரான பாபருடன் தொடங்கியது அன்று; பாபர் மசூதியின் வெளிப்புறத்தில் கட்டப்பட்ட முற்றப்பகுதி குறித்து 1886-ல் பிரித்தானிய நீதிமன்றங்களில் வழக்கானதிலிருந்துதான் உண்மையிலேயே சிக்கல் தொடங்கியது. மகந்த் ரகுவர்தாஸ் என்பவர்தான் 1850-களின் பின்பகுதியில் இந்த கட்டுமானத்தைச் செய்தவர். தொடர்ந்து அந்த முற்றத்தின் மேலே கூரை அமைக்க அவர் முயன்றபோது, பிரித்தானிய அரசு அதைத் தடுத்தது. அதை எதிர்த்து மூன்று நீதி அமைப்புகளை அணுகினார், தாஸ். ஒவ்வொரு முறையும் ’நடப்பு நிலைமை’யே தொடரவேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டது. அதாவது, பாபர் மசூதிக்கு உள்ளே முசுலிம்கள் வழிபாடுசெய்துகொள்ளலாம்; சபுத்திரா எனப்படும் சுற்றுமுற்றத்தில் ஒரு மட்டுக்குள் இந்துக்கள் வழிபாடுநடத்திக்கொள்ளலாம் என்பதுதான் அது. இப்போது தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றமோ அதிசயமாக முசுலிம்களின் வழிபாட்டிட ஆதாரத்தைக் கேட்டு, அவர்களின் உரிமையை நிராகரித்திருக்கிறது. இங்கு மட்டுமல்லாமல் நிறைய கோயில்கள், மசூதிகளுக்கும் விரும்பத்தகாத விளைவுகளை இத்தீர்ப்பு ஏற்படுத்தக்கூடும். வருவாய்த் துறையின் பதிவேடுகளையும் அரசிதழ்களையும் உரிய ஆதாரமாக ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிரித்தானிய ஆட்சிக் காலத்து மானிய ஆவணங்கள், மசூதியைப் பராமரிப்பதற்கான சான்றுகள் மட்டுமே என்றும் கூறிவிட்டது.
சட்டத்தில், ’நடப்பு நிலைமை’ என்பதற்கு, தீர்ப்பு கூறப்படும் சமயத்தில் உள்ள நிலைமை மாற்றப்படக்கூடாது என்று பொருள். பாபர் மசூதி வழக்கானது, ’நடப்புநிலைமை’யையே மாற்றிவிட்ட விவகாரம் ஆகும். 1949 டிசம்பர் 22-23 இரவு நேரத்தில், பாபர் மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இராமர் சிலையை வழிப்போக்கர்கள் வைத்துவிட்டார்கள். சில நாள்களுக்குப் பிறகு, உள்ளூர் நீதிமன்றங்கள் புதியதொரு 'நடப்பு நிலைமை’யை சட்டபூர்வமாக்கி நிலைநாட்டியது; அதாவது: மசூதிக்கு உள்ளே முசுலிம்கள் தொழுவதற்கு அனுமதி இல்லை. வைக்கப்பட்ட புது சிலை அங்கிருந்து அகற்றப்படாது. இந்துக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வழிபாட்டு உரிமை உண்டு; பூசாரிகள் அன்றாட வழிபாட்டை உறுதிப்படுத்தவேண்டும். இப்படியாக குற்றவழியிலான ஓர் அத்துமீறலானது, மசூதியை கோயிலாக மாற்றியமைத்தது.
1986 பிப்ரவரி 1 அன்று மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே என்பவரோ, மசூதிக்குள் இருக்கும் சிலைக்கும் அதை வழிபடும் பக்தர்களுக்கும் இடையிலான கதவுகள் தடையாக இருக்கின்றன; அவற்றைத் திறந்துவிடவேண்டும் என ஆணையிட்டார். அப்போதைய பிரதமர் இராஜீவ்காந்தியின் ஆசிர்வாதமும் இதற்கு இருந்தது. இதைத் தொடர்ந்து, பிற்போக்கான முசுலிம் தலைவர்களைத் திருப்திப்படுத்த,’சா பானு’ வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கும்வகையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டவரைவை அவர் கொண்டுவந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
மசூதி இடிக்கப்பட்ட 1992 டிசம்பர் 6ஆம் நாளானது, சட்டத்தின் ஆட்சியைச் சீர்குலைத்த நாளும்கூட. உச்சநீதிமன்றமானது அதனால் அறிவிக்கப்பட்ட ‘நடப்பு நிலைமை’யை அத்துமீறியிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டதுடன், அதை சரியாக விமர்சிக்கவும்செய்துள்ளது. மசூதி இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் தற்காலிகமான கோயில் அமைப்பை அங்கே கொண்டுவரப்பட்டது. மசூடி இடிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அந்தக் கோயிலில் வழிபாடுநடத்த அனுமதி அளித்தது. அயோத்தியில் கைபற்றப்பட்ட குறிப்பிட்ட நிலப்பகுதி சட்டம் தொடர்பாக, 1994-ல் உச்ச நீதிமன்றம் ‘கடைசி நடப்பு நிலைமை’யைப் பாதுகாப்பதற்கு ஆணையிட்டது. 'மசூதில் இல்லை, தற்காலிகக் கோயில் உண்டு; அந்த இடத்தில் வழிபாட்டுக்கு சட்டபூர்வ அனுமதி உண்டு’ என்பதே அந்த ‘நடப்பு நிலைமை’.
2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்துக்கு கூட்டுரிமை எனும் அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படவேண்டும்; முசுலிம்கள், குழந்தை இராமன், நிர்மோகி அகாரா என மூன்று தரப்புக்கும் சமமாக அந்நிலம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது.
எந்தவிதமான நம்பிக்கையையும் வைத்து தீர்ப்பு வழங்கப்படமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஒரு சாதாரண சொத்துப் பிரச்னையில் மதநம்பிக்கையை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது; இத்துடன் நிற்காமல், நம்பிக்கையை வைத்தே சர்ச்சைக்குரிய சொத்தை குறிப்பிட்ட வழிபாட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம், சட்டத்தின் ஆட்சியை நம்பிக்கைத்தனம் வெற்றிகொண்டதாகவே, இந்தத் தீர்ப்பு நினைவுகூரப்படும். சுருங்கச் சொன்னால், அரசமைப்புச் சட்ட உரிமையை மதத்துக்கு வழங்கப்பட்ட நாளாக - முக்கியமானதாகக் கருதப்படுகிறது; ஆனால், இது, வெவ்வேறு தரப்பினரிடமிருந்து ஆதாரத்தை நிறுவியாகவேண்டிய சுமையை ஏற்படுத்தி, சொத்துரிமைச் சட்டத்திற்கும் சான்றுச் சட்டத்துக்கும் பின்னடைவாக அமையும்.
சட்டத்தை வெற்றிகொண்ட நம்பிக்கை எனும் தலைப்பில், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் கடந்த 10-ம் தேதி வெளியான கட்டுரை, இது.
* முஸ்தபா, ஐதராபாத், நால்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.
* முகமது, அதே பல்கலை.யின் தகைசால் ஆய்வாளர்.
தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.