Advertisment

முடிவை எட்டியுள்ள இந்துத்துவ மறுகட்டமைத்தல்

இந்த அரசியல் வெற்றித் தருணமானது இராமனின் உள்வேதனையைத் தீர்ப்பதாக இருக்குமா? அல்லது அதை மேலும் மோசமாக்குவதாக மட்டும் இருக்குமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ayodhya verdict supreme court babri masjid case - முடிவை எட்டியுள்ள இந்துத்துவ மறுகட்டமைத்தல்

ayodhya verdict supreme court babri masjid case - முடிவை எட்டியுள்ள இந்துத்துவ மறுகட்டமைத்தல்

பிரதாப் பானு மேத்தா

Advertisment

இராமாயணத்தின் உருவாக்கம் என்பது நாம் அறிந்தவகையில் ஒரு துன்பகரமான நடப்பு. வால்மீகி முனிவர் நீராடி மகிழ்ந்துகொண்டிருந்தபோது இரு நாரைகள் கலந்துமகிழ்வில் இருந்தன. அப்போது, ஆண் நாரை மீது நிடத நாட்டு வேட்டுவர் ஒருவர் எய்த அம்பு பாய்ந்துவீழ்த்த, பெண் நாரை கதறி ஓலமிட்டது. தன் இணையின் பிரிவைத் தாங்கமுடியாமல், அதுவும் உயிரை இழந்தது. குற்றத்தின் இந்த முதன்மைக் காட்சி, அது ஏற்படுத்திய கோபாவேசம், வால்மீகியை இராமாயணம் இயற்றச் செய்தது. ஆனால், இந்த குற்றத்தின் ஆழ்ந்த துக்கமானது கதையை உழலச்செய்கிறது. இராவணனை வெற்றிகொண்டது, இராமராச்சியத்தை நிறுவியது என இராமனுக்கு வெற்றிமயம். அவன் எப்போதுமே தன் கடப்பாடுகளில் ஊன்றிநிற்கிறான்; சில உயர்வான இலட்சியங்களால் அவனுடைய தனிப்பட்ட விருப்பங்கள் பொருத்தமற்றுப் போய்விடுகின்றன. அதுதான் இராமனின் மகத்துவம். உள்ளார்ந்த அமைதியை அவன் கண்டதில்லை எனும் உண்மை தப்பித்துக்கொள்ளவும் முடியாது.

இயல்பான கருணையைத் தாண்டி, அரச கடமைக்காக அதை ஒதுக்கிவைத்து, ஓர் அரச தலைவனாக நடந்துகொள்ளும்போது, அவனுடைய உள்வேதனையான தருணங்கள் துலக்கமாக வெளிப்படுகின்றன. சீதையைக் காட்டுக்கு அனுப்பியது போன்ற அவனுடைய செயல்பாடுகள் இயல்புக்கு மீறியவையாக உள்ளன. அரசியல்ரீதியாக அவன் நடந்துகொள்ளும்போதுதான் அவனுடைய துக்கம் அதிகமாகப் பேசப்படுகிறது. சில சமயங்களில் அவனுடைய அரசியல் நடவடிக்கைகள் தவறானசெய்கைகளைச் செய்கிறோமோ எனும் குற்றவுணர்வுக்கும் ஆளாக்குகிறது. எட்டாம் நூற்றாண்டு நாடகாசிரியரான பவபூதி குறிப்பிட்டதைப்போல, சீதையின் மன்னிப்பால்தான் இராமன் காப்பாற்றப்படுகிறான். அதாவது, கடைசியாக இராமனுக்குதான் கருணை தேவையாகிறது. இராமன் அரசியலாக வெற்றிபெறுகிறான் என்பது நெறிப்படி அவன் மீண்டுகொள்கிறான் என்றோ முழுமையடைகிறான் என்றோ ஆகிவிடாது.

ஆகையால் அரசியலாக இராமன் வெற்றிபெற்றிருக்கிறான். உச்ச நீதிமன்றமானது குழந்தையின் உருவில் இராமனுக்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு இறைமை உரிமை கொண்டவன் என அறிவித்திருக்கிறது. அவ்விடத்தை உரிமைகோரியோரில் குறிப்பாக வக்ஃப் வாரியமானது எதிரிடையான ஆளுகையைக் கோரமுடியாது. இந்துக்களின் மனங்களில் இருந்துவந்த இராமராச்சியம் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மறுக்கப்படமுடியாத முக்கியத்துவம் கொண்ட நம்பிக்கையின் தளமும் வழிபாட்டுக்குரிய ஒரு பொருளும் ஆகிறான். அவனை மறுப்பவர்களை, அவனுடைய இருப்பை மறுத்தவர்கள், அவனுடைய கோயில்களை அழிக்க முயற்சி என்பதை மறுத்தவர்கள் அனைவரையும் அரசியலாக வென்றுவிட்டான். இராமனின் இடத்தை நிர்வகிக்க , அவனுடைய புனிதத்தைக் குறிப்பிடுவதற்காக பிரம்மாண்டமான ஒரு கட்டடத்தை உருவாக்க, மைய அரசுக்கு வழிசமைக்கப்பட்டுவிட்டதன் மூலம் அவன் வெற்றிபெற்றிருக்கிறான். அவனுடைய இறைமை, அவன் மீதான நம்முடைய நம்பிக்கை இப்போது சட்டபூர்வமானதாக உறுதிசெய்யப்பட முடியும்; கற்களில் பொறிக்கப்படமுடியும்.

உச்சநீதிமன்றத்திடம் இருந்த பணி, கடினமானது. சர்ச்சைக்குரிய இடத்தில் 1991-க்கு முந்தைய ‘நடப்புநிலைமை’யே தொடரவேண்டும் என்ற எண்ணம், ஆரம்பத்திலிருந்தே மறுக்கப்பட்டதானது, இந்திய அரசியல் நிலவரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. பாபர் மசூதியை மீளக்கட்டியெழுப்பவேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தால், இந்திய அரசியல் எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப்பார்க்க கடினமாக இருக்கிறது. வேறு இரண்டே வாய்ப்புகள் என்றால் இந்துக்களுக்கு ஒரு வெற்றியாகவோ, சர்ச்சைக்குரிய இடத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து உரிமைக் கோரிக்கையாளர்களுக்கும் சம நீதி என்கிறபடியான ஒரு கற்பனைத் தீர்வு ஆகியவையே! அலகபாத் உயர் நீதிமன்றமானது முன்னர் வழங்கிய தீர்ப்பில் ஒரு வெளிப்படையான சமன்படுத்தும் முயற்சியின் மூலமாக பிழையை இழைத்துவிட்டது. அதாவது, சர்ச்சைக்குரிய இடத்தை பிரிப்பது, அனைத்துவித நம்பிக்கைகளுக்கும் மரியாதை, கடந்த காலத்தை தூரப்போடுவது என்று..! இடத்தைக் கோருபவர்கள் அது எதிரிடையான உடைமை என்பதை நிறுவமுடியவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் வன்முறை மூலம் பாபர் மசூதியை இடித்துத்தள்ளினார்கள் எனக்கூறி அங்கீகரிக்கிறது. வக்ஃப் வாரியத்துக்கு அது இழப்பீடு நிவாரணத்தை வழங்குகிறது. ஆனால், தீர்ப்பின் இறுதியுரையானது, அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அதாவது, சொத்துப் பிரிப்பு இல்லை; ஒருதரப்பின் நம்பிக்கையைவிட இன்னொரு தரப்பின் நம்பிக்கைக்கு முன்னுரிமை தந்திருப்பது, புதிய சட்ட நிறுவல்கள் மூலம் நீண்டகாலமாகச் செய்யப்பட்டுவந்த தவறுகள் தொடரமுடியும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறபடியாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த அரசியல் வெற்றித் தருணமானது இராமனின் உள்வேதனையைத் தீர்ப்பதாக இருக்குமா? அல்லது அதை மேலும் மோசமாக்குவதாக மட்டும் இருக்குமா? தீர்ப்பானது இடதோ வலதோ அது பிரச்னையை அரசியலற்றதாக்கிவிடும் என்று நாம் நம்புகிறோம். இதைக் கடந்து சென்று மறுபடியும் முதலிலிருந்தே தொடங்கவேண்டும் என்பது இந்திய மதச்சார்பின்மைக்கு சிறந்த தெரிவாகும். ஆனால் உளரீதியாக, நிறுவனரீதியாக, அரசியலாக மூன்று வகைகளில் இந்தப் பிரச்னை பதற்றம் அளிப்பதாகும். இந்துத்துவ தேசியவாதிகளுக்கு, இது ஒரு நீண்ட வரலாற்றுப் போராட்டத்தின் ஒரு கட்டம். அவர்கள், இந்துக்களை ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஒரு துப்புரவாக்கம் என்பதும் கோயிலைக் கட்டுவதை நெடுங்காலமாக அழுத்தப்பட்டுக்கிடக்கும் ஒரு நாகரிகத்தின் சிக்கலுக்கான தீர்வாகவும் அடையாளப்படுத்துகிறார்கள்.

துப்புரவாக்கத் தேவை இப்போது முழு திருப்தியை அளித்துள்ளதா அல்லது இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான பேரழிவான மோதலே அரசியலெனக் கருதுபவர்களை இன்னும் கூடுதலாக தங்களின் பெருமிதத்தை அதிகரிப்பதற்கு தைரியப்படுத்துகிறதா என்பது ஒன்று. மற்றது, பொதுப்படையாக நாம் அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் ஒருமித்த பார்வையை மதிக்கிறோம். ஆனால், இந்த விவகாரத்தில் இல்லாவிட்டாலும் பரந்தநோக்கில் நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையானது சந்தேகத்துக்கு இடமாகியிருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. இதன் மூலம் இந்தியாவின் நீதிபரிபாலனம் போன்ற நிறுவனங்களின் மீதான நம்பிக்கை இழந்துபோவதாக விளிம்புநிலை மக்கள் கருதுவார்களா, இல்லையா? அரசியலாக, அரசியல்- மதப் பிணைப்பை இந்தத் தீர்ப்பானது இன்னும் வலுவாக்குகிறதா? சில வழிகளில், சிறிது காலமாக, நிறுவனரீதியான பிணைப்பு வலுவாகிக்கொண்டுவருகிறது. அரசியல், சட்ட, மத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டுவருகின்றன. ஆனால், கோயிலைக் கட்டுவதற்கான மைய அரசின் டிரஸ்ட்டில், அரசு என்பது இந்துத்துவ இறைமையானது வழிநடத்தப்படுகிற ஒரு கருவியாகி இருக்கிறது. ஆன்மீகத் தன்மையைவிட அரசியல் மோலேங்கிய இந்துத்துவ அரசியலின் மறுகட்டமைப்பானது இப்போது முழுமையடைந்துள்ளது.

இந்தியா முன்னோக்கிச் செல்லவேண்டும் என அனைவரும் அதிகமாக விரும்புகிறோம். தீர்வானது இந்துக்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது போன்ற மனப்பான்மைகளையும் பிரச்னையுடன் கணக்கில்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இது இங்கு அயன்மையானதாகக் கருதப்படுகிறது. அரசாங்கத்தின் ஒரு டிரஸ்ட்டுதான் இனி அந்த இடத்தில் எப்படி வழிபாடு நடத்தவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். இப்போதைய நிலையிலேயே கோயில் இருக்கப்போகிறது எனும்போது, இராமனின் அரசியல் புகழுக்கான வெற்றிகரமான நினைவுச்சின்னமாக இது அமைவது சாத்தியமா? இராமனின் மகத்துவத்துக்கு ஏற்ப நேர்மையாக எதையாவது கட்டியெழுப்பமுடியுமா? வரலாற்றுப் பழிவாங்கலாகவோ குழு அடையாள நாசீசமாகவோ அன்றி புதிய வகை புனிதம் எனக் கூறப்படுவதைக் கட்டமைக்கமுடியுமா? கடந்தகாலப் புகழ்ச்சியாக அல்லாமல், வருங்காலத்துக்கான விடியலாக அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய ஒரு வழிபாட்டு முறையை உருவாக்க நம்மால் முடியுமா? ,

மென்மேலும் கற்பனைசெய்யக்கூடிய மனங்கள் வேறுபடுவதற்கு இது எதுவாகவும் இருக்கலாம். ஆனால், சட்டத்தின் வெற்றிப்படி அப்படியான ஒன்று நிலைமையை இன்னும் மோசமாக்கவேசெய்யும். இது, பெரும்பான்மைவாதத்துடன் அடையாளப்படுத்துவதிலிருந்து மதச்சார்பின்மையையும் பெருமிதப்படக்கூடிய அடையாளப்படுத்தலிலிருந்து இந்துமதத்தையும் பாதுகாக்கும். நீதிமன்றத் தீர்ப்பு இந்த வாய்ப்பை முன்னரே வெளிப்படுத்தவில்லை; அது இராமகருணையின் பக்கமே சார்ந்துநின்றது. இராமனிடம் யாருக்கும் சர்ச்சை இல்லை. ஆனால், 2.77 ஏக்கர் நிலத்தின் விதியைத் தீர்மானிப்பது வேதியியலில் லிட்மஸ் தாள் கரைசலைப் போன்றது; ஒரு நாகரிகத்தின் விதியானது இந்துமதத்தின் மீதான வன்முறையாக இருந்தது. வால்மீகி இராமயணத்தைப் போலவே, இங்கு இராமனின் அரசியல் வெற்றியானது போரில் அவனுடைய கருணையுள்ள சுயத்தைப்போல, உள்ளார்ந்த வேதனையுடன் அவனை விட்டுவிடக்கூடாது.

(இக்கட்டுரையின் ஆசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியன் எக்ஸ்பிரஸில் பங்களிப்பு ஆசிரியராக உள்ளார். அவர் அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், புதுடெல்லியின் மைய கொள்கை ஆராய்ச்சித் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் சமகால விவகாரங்களில் ஈடுபடத் தொடங்குவதற்கு முன்பு, ஹார்வர்டிலும், ஜே.என்.யுவிலும் அரசியல் கோட்பாட்டைக் கற்பித்தார். அறிவார்ந்த வரலாறு, அரசியல் கோட்பாடு, சட்டம், இந்தியாவின் சமூக மாற்றம், உலக விவகாரங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். இன்போசிஸ் பரிசு, ஆதிஷேஷியா பரிசு மற்றும் அமர்த்தியா சென் பரிசு பெற்றிருக்கிறார்.)

தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்

Ayodhya Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment