Advertisment

அழகிய பெரியவன் எழுதும் 'ஒவ்வொரு விரலிலும் உலகம்' - 1

Tamil writer Azhagiya Periyavan New Series about Knowing tamil: காங்கிரஸ் ஆண்டபோதும் சரி, பாரதிய ஜனதா ஆளும் தற்போதும் சரி இந்தி தேசிய மொழி என்று திரும்பத் திரும்ப உண்மைக்கு மாறாகச் சொல்லி திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Azhagiya Periyavan’s Tamil Indian Express series on TAMIL

Azhagiya Periyavan news in tamil

அழகிய பெரியவன்

Advertisment
  1. உனக்கு தமிழ் தெரியுமா?

இயந்திரத் தனமாகவும், இறுக்கமாகவும் போய்க்கொண்டிருக்கிற நமது வாழ்க்கையைத்தான் இயல்பு வாழ்க்கை என்று சொல்லிக் கொள்கிறோம். சில மனிதர்கள் இந்த இறுக்கத்தை தமது கருத்துகளால் அவ்வப்போது போக்கி, நம்மை நகைக்க வைக்கிறார்கள். நிர்பல் இந்தியன் சோஷிட் ஹமாரா ஆம்தள் என்ற கட்சியின் தலைவரும், உத்திர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சருமான சஞ்சய் நிஷாத், இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டே போய்விடவேண்டும். அவர்களைப் பிடித்து ஜெயிலில் போடவேண்டும் என்று பேசி சிரிப்பூட்டியிருக்கிறார்! பிராந்திய மொழிகளை மதிக்கிறேன். ஆனாலும் அவர்களில் இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு போய்விடவேண்டும் என்கிறார் அவர். அவர் விருப்பம் நிறைவேற வேண்டும் என்றால் முக்கால்பாகம் இந்தியா காலியாகிவிடும். அவர்கள் மொழி அகதிகளாகத்தான் போயாகவேண்டும்!

காங்கிரஸ் ஆண்டபோதும் சரி, பாரதிய ஜனதா ஆளும் தற்போதும் சரி இந்தி தேசிய மொழி என்று திரும்பத் திரும்ப உண்மைக்கு மாறாகச் சொல்லி திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தி என்பது நிர்வாக அலுவலுக்குப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஓர் இணைப்பு மொழி என்றே நமது அரசியலமைப்பு சொல்கிறது. இந்தச் சர்ச்சையில் எல்லா தலைவர்களையும் உள்ளே இழுக்கிறார்கள். அம்பேத்கரும் இதற்குத் தப்பவில்லை. அம்பேத்கர் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க விரும்பினார், இந்தியை வலியுறுத்தினார் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்படுகின்றன. அம்பேத்கர் வலியுறுத்தியது ஆங்கிலத்தை தான். ஆங்கிலம் ஒரு வளமான மொழி. கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அது பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்றார். இந்தக் கருத்து அவர் பெற்ற கல்வியால் வந்தது.

இது ஒருபக்கம் இருக்கட்டும். ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தி தெரியாது போடா என ஒரு ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் பிரபலமானது. அவ்வப்போது பயன்படுத்தப்படும் இது காட்டமான பதில் தான். இந்தி தெரியாது போடா என்ற இந்தப் பதிலைச் சொல்லும் அதே வேளையில், இதற்கு இணையாக நமக்கு நாமே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டால் என்ன என்று தோன்றியது.

உனக்குத் தமிழ் தெரியுமா?

என்று ஒரு கேள்வியை நாம் எழுப்பினால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியை தமிழ் பேசாதோரைப் பார்த்தும் கேட்கலாம். தமிழரைப் பார்த்தும் கேட்கலாம். தமிழை அறியாதவர்கள் இதற்கு, உண்டு இல்லை என்று பதில் சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால் நாம் அப்படி இதைக் கடக்க முடியாது. நமக்கு இக்கேள்வி, பேசுவது எழுதுவது தொடர்பானது மட்டும் அல்ல. அதைத் தாண்டி தமிழின் பொருண்மை தொடர்பானது. தமிழுக்கு வரலாறு இல்லை, தமிழ் தொன்மையானது இல்லை, தமிழுக்கு எழுத்துரு இல்லை, தமிழருக்கு வரலாற்றறிவு இல்லை, என்றெல்லாம் பல இல்லைகளை சிலர் தொடர்ந்து பொதுவெளியில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழின் பொருண்மையை முதலில் நாம் அறிந்தால் மட்டுமே இதற்கு பதிலளிக்க முடியும்.

நாம் எதிர்கொண்ட சில கேள்விகள் நீண்ட நாட்களுக்கு மறப்பதில்லை. அந்தக் கேள்வியை யார் கேட்டிருந்தாலும் சரிதான்! அறிவுப்பூர்வமான எண்ணமோ, அக்கறையோ அக்கேள்விகளுக்குள் இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அக்கேள்விகள் அபத்தமாகவோ, முட்டாள் தனமாகவோ கூட இருந்திருக்கலாம். ஆனால் அவை சிறப்புக்குரிய கேள்விகள் தான். அதில் சந்தேகம் வேண்டாம்!

இருட்டறையில் கிடைத்த ஒளிக் கதிரைப் போல, கிணற்றில் கிடைத்த கயிற்றைப் போல அந்தக் கேள்விகளின் நுனியைப் பிடித்துக் கொண்டே போனால் புதிய அறிவு, புதிய அனுபவம், புதிய புரிதல் என்கிற புதுஉலகத்தை கண்டடைய முடியும். அல்லது எதிர்படும் தடுப்புச் சுவரில் முட்டி தலை வீங்கியும் வரலாம்!

கொஞ்சம் நினைவை அசைபோட்டு பார்த்தால், நீங்கள் எதிர்கொண்ட ஓர் அபத்தக் கேள்வியையோ, அல்லது பொருள் பொதிந்த ஆழமான கேள்வியையோ உங்களால் நினைவுக்குக் கொண்டு வந்துவிட முடியும். அக்கேள்வியை நீங்கள் எதிர்கொண்டவிதம் பற்றியும் கூடவே யோசித்துப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். நம்மை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள் கேட்பவரின் அறிவுத்தரத்தை மட்டும் காட்டுவதில்லை. பதில் சொல்கிற நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதையும் சேர்த்தே காட்டுகின்றன.

ஊரில் ஒருநாள், பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தேநீர் கடைகளும், சலூன் கடைகளும் பணம் வாங்காமலேயே சமூக விஞ்ஞானத்தை போதிக்கும் பல்கலைக் கழகங்கள்! விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகள் அறிவித்திருந்த நேரம் அது. உலகமே பீதியில் ஆழ்ந்திருந்தது. ஒருவாரத்துக்கு இந்தப் பீதி நீடித்த பின்னர், அந்த விண்கல் திசைமாறி வியாழன் கோளை நோக்கிச் சென்று விட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்து மனிதர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.

எனக்கும் நண்பருக்கும் இதைப் பற்றித்தான் பேச்சு எழுந்தது. நமது பூமி ஆபத்திலிருந்து தப்பிவிட்டதாக நான் சொன்னேன். அதை ஏற்காத நண்பர், “நீ சொல்ற வியாழனும் நம்ம பூமியிலதான இருக்குது? அப்ப எப்படி ஆபத்து இல்லேன்ற?” என்று கேட்டார். எனக்கு, குடித்துக் கொண்டிருந்த தேநீர் ஆறிப்போன கஷாயமாக மாறிவிட்டது! அவருக்கு இதை நான் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் நண்பர் பட்டப்படிப்பு வரை படித்தவரும் கூட! பல நாட்களுக்கு இந்தக் கேள்வி உள்ளே இருந்து சிரிப்பை வரவழைத்தது.

ஆனால் பூமியையே பாயாகச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு கடலுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்ட அசுரனின் கதையையோ, நிலவை விழுங்கிடும் பாம்பின் கதையையோ, வெளிச்சம் உண்டாக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட சூரிய சந்திரர் கதையையோ பயபக்தியுடன் கேட்கும் போது நமக்கு வராத சிரிப்பு இப்போது மட்டும் ஏன் வருகிறது? இந்தக் கதைகளும், இதைப் போன்ற கதைகளும் உருவாக்கி வைத்திருக்கும் கருத்து அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலிருந்து தானே நண்பரின் கேள்வியும் முளைத்திருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஆனால் அப்படி வருவதற்கும் நான் சிறிது யோசிக்க வேண்டியிருந்தது!

என்னை யோசிக்கச் செய்த அந்த நண்பரின் கேள்வியால் நான் ஒன்றை உணர்ந்து கொண்டேன். எந்தக் கேள்வியும் பொருளற்ற கேள்வியல்ல. எந்தக் கேள்வியும் அலட்சியப் படுத்தக்கூடிய கேள்வியுமல்ல. ஒவ்வொரு கேள்வியும் தனக்குள்ளேயே சில அடிப்படைகளையும், தர்க்க நியாயங்களையும் கொண்டிருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டியது பதில் சொல்பவருடைய கடமை.

அண்மையில் வகுப்பறையில் கேட்ட கேள்வியொன்றும் என்னைச் சிரிக்கச் செய்து பிறகு சிந்திக்க வைத்தது. பொதுத் துறை, தனியார் துறை, ரூபாயின் மதிப்பு என்று போய்க் கொண்டிருந்த சமூக அறிவியல் வகுப்பில் சடாரென ஒரு மாணவி கேட்டாள்.

“ஏங்க சார் காந்தி தாத்தாவை மட்டும் ரூபா நோட்டுல போட்றாங்க? மத்தவங்கள ஏன் போட்றதில்ல?”

இதற்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் அந்த அடுத்தக் கேள்வி ஒரு மாணவனிடமிருந்து எழுந்தது.

“அம்பேத்காரும், காந்தி தாத்தாவும் சினிமாவுல நடிச்சிக்கிறாங்களா சார்?” நான் ஒரு கணம் தடுமாறி, பின் பதில் சொல்லி, பிறகு அவனிடமே ஓர் எதிர் கேள்வியைக் கேட்டேன்.

“எதுக்கு தம்பி இப்படி ஒரு கேள்வியக் கேட்ட?”

“இல்ல சார், நான் அவங்க ரெண்டுபேரையும் யூடியூபில பார்த்தேன்!”

என் நிலையை அவனுடைய பதில் மேலும் சிக்கலாக்கிவிட்டது. இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞரின் நிலை, அல்லது முக்கால்பாக சமூகத்தின் நிலை இது தானோ என்று நான் யோசிக்கத் தொடங்கினேன். பார்ப்பது, கேட்பது, செய்வது, படிப்பது என்ற கூட்டுச் செயல்களின் வழியாக அறிவைப் பெற்றுக் கொண்டிருந்த சமூகம் தடாலடியாக இன்று பார்ப்பதின் வழியாக மட்டுமே பெரும்பாலான அறிவைப் பெற்றுக் கொள்கிற சமூகமாக மாறிவிட்ட உண்மை பிடிபடத் தொடங்கியது.

கேட்பதிலும் படிப்பதிலும் மூளைக்கு வேலை அதிகம். ஒன்றை நன்றாக உள்வாங்கிப் புரிந்துகொண்டால் தான் இந்த இருமுறைகளின் வழியே நாம் பெறுபவை நினைவின் அடுக்குகளில் பதியும். காட்சிகளோ அப்படியல்ல. என்ன காட்சியை கண்கள் காண்கின்றனவோ அவை கைபேசியிலிருக்கும் மெமரிகார்டில் கணக்கற்ற செல்ஃபிகள் பதிவாவதைப்போல நினைவின் அடுக்குகளில் பதிவாகிவிடும். சொல்லப் போனால் மற்ற புலன்களைக் காட்டிலும் பர்ப்பதன் வழியாகத்தான் உலகை அதிகமாகப் புரிந்து கொள்கிறோம். ஆனாலும் இந்தப் பார்வைகள் எப்போதும் போதாமை உடையவைகளாகவே இருக்கின்றன. காட்சிகள் உண்டாக்கும் கிளர்சியில் கிறங்கிடும் மூளை அவற்றின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதேயில்லை. இந்தக் கேள்விகள் எங்கிருந்து முளைக்கின்றன? உண்மைக்கும் போதாமைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளிலிருந்து முளைக்கின்றன (மூர்க்கம், வன்மம், துடுக்குத்தனம், கேலி கிண்டல் ஆகியவற்றிலிருந்தும் கூட கேள்விகள் எழும்)

இந்த இடைவெளிகளை நிரப்ப வேண்டியது ஒரு சமூகக் கடமை. சமூகத்தில் இருக்கும் அரசு, கல்வி நிலையங்கள், அறிவுத்துறை, கலை இலக்கிய பண்பாட்டுத் துறைகள், ஊடகம் ஆகிய எல்லாவற்றுக்கும் இதில் பங்கு இருக்கிறது. நாம் உண்ணும் உணவு ஆறு வகையான சத்துப் பொருட்களால் ஆகியிருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள், நீர் என்ற ஆறு சத்துக்கள். இதுவே சரிவிகித உணவு. சரிவிகித உணவு இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக வளரும். இதையே நம்முடைய மூளைக்கும் பொருத்திக் கொள்ளலாம். அறிவுத்திறன் மேம்பட வேண்டும் என்றால் சரிவிகித அறிவு தேவை.

மீண்டும் நாம், உனக்குத் தமிழ் தெரியுமா? என்ற கேள்விக்கு வரலாம். இந்தக் கேள்வியை நாம் அழுத்திச் சொல்கிறபோது வாழைக் கன்றுகள் போல பல துணைக் கேள்விகளும் பெருகுகின்றன. நாம் தமிழை பிற மொழி கலக்காமல் பேசுகிறோமா? குறைந்த பட்சம், ஒருமை பன்மையையாவது சரியாகப் பயன்படுத்தி எழுதுகிறோமா, பேசுகிறோமா? இன்று நம் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது யார்? அவர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப் படுகின்றனவா? நமது பிள்ளைகள் தமிழ்ப் பெயர்களை ’ஓல்டு பேஃஷன்’ என்கிறார்களே, இந்தக் கருத்து அவர்களிடையே எப்படி உருவானது? தமிழ் வழியில் எல்லா பாடங்களையும் கற்கும் வாய்ப்புகள் இருக்கின்றனவா? தமிழ் வழியில் படித்தவர்க்கு வேலை வாய்ப்புகள் உண்டா?

நமக்கு தமிழின் வரலாறு கற்பிக்கப்பட்டிருக்கிறதா? தமிழின் இலக்கிய வரலாற்றை நாம் தெரிந்து வைத்துள்ளோமா? சிறப்பு மிக்க நம் பழந்தமிழ் நூல்களில் சிலவேனும் எத்தனைப்பேர் வீடுகளில் இருக்கும்? தமிழ்நாட்டில் இருக்கிற கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவையெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றனவா? இந்த வரலாற்று ஆவணங்கள் இளைய தலைமுறையினரிடம் சேரும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனவா? இந்தித் திணிப்பை எதிர்த்து 1935 லும், 1965 லும் நடந்த போராட்ட வரலாறை முழுமையாக அறிந்திருக்கிறோமா? உண்ணாவிரதம் இருந்தும், தாமே உயிரை மாய்த்தும், துணை ராணுவம் மற்றும் காவல் துறையால் சுடப்பட்டும் இறந்தவர்களின் முழுமையான பட்டியல் நம்மிடம் உண்டா? மொழிக்காக தமது இன்னுயிரை மாய்த்திட்ட அந்த தியாகிகளுக்கு அவரவர்தம் ஊர்களில் சிலைகளோ, நினைவுச் சின்னங்களோ அமைக்கப் பட்டுள்ளனவா? இளைய தலைமுறையினருக்கு மொழிப்போர் வரலாற்றை சொல்லித் தந்திருக்கிறோமா? இப்படியெல்லாம் சொல்லித் தந்தால், தந்திருந்தால் இன்று அவர்கள் ’இந்தி தெரியாது போடா’ என்று சொல்வதோடு மிகுந்த பெருமிதத்துடன், இன்னும் கெத்தாக, உனக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்பார்கள்!

தமிழ் மொழியின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய தாட்களை இணைக்க வேண்டுமானால் அரசும், கல்வித் துறையும், எழுத்தாளர்களும், ஊடகங்களும், ஆசிரியர்களும், தன்னார்வலர்களும், அருங்காட்சியகங்களும், ஆவணக் காப்பகங்களும், பண்பாட்டு அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும் ஒன்றிணைந்து இன்னும் முனைப்பாக வேலை செய்ய வேண்டும். ஆனால் நிலைமைகள் அவ்வாறு இல்லை. 

நாம் வெறுமனே நம்முடைய மனநிறைவுக்காகவும், தனித்துவத்துக்காகவும், எதிர்ப்புணர்வுக்காகவும் பதில்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறோம். எங்கள் பகுதியில் நான் கண்டுபிடித்த சில நடுகற்களை இனம் காண்பதற்கும், அருங்காட்சியகத்தில் சேர்ப்பதற்கும் முயன்றும் என்னால் முடியவில்லை. இதைப் பற்றி தனியாகத் தான் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இப்படிப்பல தனிக் கதைகள் உண்டு. குறைந்த பட்சம் தமிழின் அரிய நூல்களைக் கூட நாம் இன்னும் முழுமையாக ஆவணப்

படுத்திடவில்லை.

அண்மையில் இந்தி எதிர்ப்பை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட பாந்தளூர் வெண்கோழியார் இயற்றிய காக்கை விடு தூது என்ற நூலைப் படித்தேன். அரிய செய்திகள் உள்ள இந்நூலுக்கு உரையெழுதி பதிப்பித்திருப்பவர் முனைவர் கி.சிவா (இலட்சுமி பதிப்பகம், மதுரை-3).

1937 ல் இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அரசு தமிழ் நாட்டில் பதவி ஏற்றது. இந்தியை கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை 21.04.1938 ல் அவர் வெளியிட்டார். 1938-1940 வரையில் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1271 சிறைபடுத்தப் பட்டனர். இவர்களுள் 73 பேர் பெண்கள், 32 பேர் குழந்தைகள். சென்னை பெரம்பூர் நடராசனும், குடந்தை தாலமுத்துவும் சிறையிலேயே இறந்தனர். 1948-1952 வரை நடந்த இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ரயில் மறியலும், இந்தி எழுத்துகளை அழித்தலும் நடந்தன. இந்தியைத் திணிப்பதற்குத் துணை போன தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டப் பட்டது.

1965ல் நடந்த மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் இராணுவம் மற்றும் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர். ஒன்பது பேர் தீக்குளித்தும், நஞ்சுண்டும் இறந்தனர்.வேலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் ஊரான பேரணாம்பட்டில் 12.02.1965 அன்று இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அ.ஜான், சி.முருகேசன், சி.பாகிமுல்லா, அ.வீரன் என நான்கு பேர் பலியாகியுள்ளனர். இப்படி இறந்தவர்களின் பட்டியல் தமிழகம் முழுவதும் உண்டு.

வரலாற்றில் நடைப் பயணங்களுக்கு எப்பொழுதுமே முக்கிய இடம் உண்டு சீன புரட்சியில் செஞ்சேனையின் நடைப் பயணம் வரலாற்றுப் புகழ்ப்பெற்றது. அம்பேத்கர் மகத் குளத்தில் நீர் அருந்துவதற்காக நடத்திய பயணம். காந்தியடிகளின் தண்டி பயணம். இப்படி சில குறிப்பிடத்தகுந்த பயணங்களைச் சொல்லலாம். ஒன்றிய அரசின் வேளாண்மை சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை நோக்கி மேற்கொண்ட பயணம். கொரோனா காலத்தில் பிற மாநில தொழிலாளர்கள் தத்தமது இடங்களுக்கு மேற்கொண்ட நடைபயணம் ஆகியவை சமகால பயணங்கள். இதைப்போன்ற ஒரு பயணம் தமிழ்நாட்டில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்திருக்கிறது.

பாவேந்தர் கவிதை வழியே விடுத்த ’பட்டாளஞ் சேர்த்தல்’ என்ற அறைகூவலை ஏற்று இந்தி எதிர்ப்பு நடைபயணத்துக்கு விண்ணப்பித்தவர்கள் 500 பேர். அவர்களிலிருந்து 100 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்ட பின்னர், 01.08. 1938 அன்று திருச்சி உறையூரிலிருந்து இந்த நடைபயணம் தொடங்கியிருக்கிறது. அங்கங்கே தங்கி, கூட்டம் போட்டுப் பேசியபடி 234 ஊர்களின் வழியாக 577 மைல் தூரத்தைக் கடந்து 42 நாட்கள் கழித்து போராட்டக்காரர்கள் சென்னையை அடைந்திருக்கிறார்கள். இவர்கள் மழை வெய்யிலைப் பார்க்கவில்லை. உடல் உபாதைகளையும் நோயையும் பொருட்டாகக் கருதவில்லை. சென்னையில் சென்று சேர்ந்த பின்னர் இவர்கள் மறியலில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர்.

பாக்கிஸ்தான் ஆதிக்கத்தில் இருந்த பங்களாதேஷில் உருது திணிக்கப்படுகின்றது என்று போராட்டங்கள் வெடித்தன. இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகினர். அந்த நாளே ஐக்கிய நாட்டு சபையால் ஏற்கப்பட்டு ’உலகத் தாய்மொழித் தினமாக’ இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மொழிக்காக நூற்றுக்கணக்கில் பலியாகியுள்ளனர். இந்திய அளவிலோ அல்லது மாநில அளவிலோ ஓர் அடையாள நாள் கூட நம்மிடம் இல்லை. இதுதான் நமது பரிதாபத்துக் குரியதும், வரலாறை அலட்சியப் படுதுகின்றதுமான நிலை.

உண்மையான வரலாறு நமக்கு அடையாளத்தை மட்டும் தருவதில்லை. பொறுப் புணர்ச்சியையும் சேர்த்தே தருகிறது. வளமானதைப் பாதுகாப்பது, வளமானதை உருவாக்குவது என்ற பொறுப் புணர்ச்சிகளை. முற்றுப் புள்ளியைக் கொண்ட முற்று முடிவான பதில்களை நோக்கி போவதற்கு முன்னால், தொக்கி நின்று தொடரச் செய்திடும் கேள்விகளை நோக்கி நாம் போவோம்.

“நமக்குத் தமிழ் தெரியுமா?

(பேசுவோம்)

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 2

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment