Advertisment

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 9

Tamil writer Azhagiya Periyavan New Series about Teachers Tamil News: விளம்பரங்கள் எதுவுமே தேவையில்லாமல் செய்யப்படுவதில்லை. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற வித்தைதான் விளம்பரங்கள். இவற்றுக்குப் பின்னால் பெரும் வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது.

author-image
WebDesk
Jul 01, 2022 09:31 IST
New Update
Azhagiya Periyavan’s Tamil Indian Express series part - 9

Azhagiya Periyavan

*

காட்சி வன்முறை

*

நாம் தன்பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும் திடீரென ஒருவர் நம்மிடம் வந்து கேட்பார்.

Advertisment

”கருப்பா, குட்டையா, கனமா, சுருட்ட முடி வச்சிருப்பாரே அவரத் தெரியுமா?”

இன்னொருவர் நம்மை நைச்சியமாய்ப் பேசியோ, கையைப் பிடித்தோ கூட அழைத்துச் செல்வார்.

”அஞ்சி நிமிசம் வாரீக, இருக்கீக, போறீக! காசொன்னும் குடுக்க வேண்டா!”

வடிவேலு நகைச்சுவையைப் போலத்தான் இன்றைய விளம்பர உலகம் இருக்கிறது. அது விரிக்கும் வலையில் சிக்கிக் கொண்டால் பாதிப்புதான்.

விளம்பரங்கள் ஓயாமல் நம்மைத் துரத்துகின்றன. தொலைக்காட்சியில் விளம்பரங்கள். திரைப்படத்தில் விளம்பரங்கள். இணையத்தில் விளம்பரங்கள் (ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப்) எஃப்.எம் உள்ளிட்ட வானொலி சேவைகளில் விளம்பரங்கள். செய்தித் தாட்களில் விளம்பரங்கள். அதற்குள் விளம்பர நோட்டீசுகள் வேறு ஒளிந்திருக்கின்றன!

சாலையோர கட்டடங்கள், சுவர்கள், பெயர்ப் பலகைகள், போக்குவரத்து விதிகளைச் சொல்லும் அறிவிப்புப் பலகைகள் எதையும் விளம்பரங்கள் விடுவதில்லை. எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், பேனர்கள்! வாங்கும் பொருட்களின் மீது, கைப்பைகளில், தெருவில் வரும் குரல்வழியிலும் கூட விளம்பரங்கள்.

விளம்பர மிஸ்டு கால்களைத் தருகிறார்கள். நாம் அவசர வேலையாக போய்க் கொண்டிருக்கையில் பேங்க் லோன் வேண்டுமா எனக்கேட்டு கைபேசி அழைப்பு வந்து நம்மை நிறுத்துகிறது! ஒருமுறை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கும் இப்படி ஒரு அழைப்பு வந்ததாக செய்தி வெளியானது! எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் எல்லாவற்றிலும் விளம்பரங்கள் நிறைந்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

விளம்பர உலகம்

தங்களின் பொருட்களை விற்பதற்கு சிலரால் செய்யப்படுகின்றவையே விளம்பரங்கள் என்ற நிலைமைகள் எல்லாம் எப்போதோ கடந்துவிட்டன. தாங்கள் நினைக்கும் கருத்தை பொய்யாகவோ, திட்டமிட்டோ உருவாக்குபவை, மனிதர்களை திசை திருப்பி ஏமாற்றுகின்றவை, மூளைச்சலவைச் செய்பவை, சமூகத்தில் பிற்போக்குத் தனமான கருத்துகள் தொடர்ந்து நிலை பெற்றிருப்பதற்கு சேவை செய்பவை என்ற நிலைமைகளை அவை அடைந்துவிட்டன.

அண்மையில் ரேபிடோ என்கிற ’பைக் டாக்சி’ சேவைக்கு வந்த விளம்பரத்தை ஆந்திர அரசுப் பேருந்து ஊழியர்கள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்ததாக செய்தி வந்தது.

”பஸ்ல ஏறினா கொத்து பரோட்டாவப் போல உன்ன கொண்டு வந்து எறக்கிடுவாங்க. எதுக்கு பிரச்சின? ஏறிடு ரேபிடோ! விரைவாக. குறைவாக. நிறைவாக”

இது அந்த ரேபிடோ விளம்பரத்தின் வாசகம். அரசாங்க பஸ்சிலிருந்து நசுங்கியபடி இறங்கும் ஒருவனைக் காட்டிவிட்டு, அல்லு அர்ஜுன் பேசுவதைக் காட்டுகிறார்கள். தங்கள் சேவையை உயர்த்திச் சொல்வதற்காக பிறிதொரு சேவையை, அதுவும் கோடானகோடி எளிய மக்கள் நம்பியிருக்கும் அரசாங்க பேருந்து சேவையை, மட்டம் தட்டுகிற வேலை. இப்படித்தான் விளம்பரங்களில் நடக்கிறது.

ரேபிடோ பைக் சேவையில் உட்கார்ந்துக் கொண்டு போனாலும்கூட பேருந்துகள் போகும் அதே சாலையில் தான் எல்லாரும் போயாக வேண்டும். ரேபிடோ பைக்குகள் ஒன்றும் அந்தரத்தில் பறந்துகொண்டு போகப் போவதில்லை! எதிர்ப்பு வந்தவுடனே ரேபிடோ நிறுவனம், காட்சியில் வரும் பேருந்தின் அடையாளைத்தை மாற்றியது. இப்போது தமிழ்நாட்டில் பெரும்பாலும் அந்த விளம்பரம் வருவதில்லை. அல்லு அர்ஜுனுக்குப் பதிலாக ஜீவா வருகிறார். விளம்பரத்தின் வாசகங்களும் கூட மாற்றப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் எல்லாம் முறைப்படி நடக்கணும் என்று சொல்லும் தேநீர் விளம்பரம் ஒன்று. சாப்பாட்டு இலையைத் திருப்பி போடுதல், மணப்பெண் வலதுகாலை வைத்து வீட்டுக்குள் வருதல் போன்ற கட்சிகளை அதற்குக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கிற போதெல்லாம் இவர்களுக்கு வேறு கண்டெண்ட் கிடைக்கவில்லையா என்று தோன்றும். மரபு என்கிறதை ‘முறைப்படி’ என்ற சொல்லுக்குள் மறைத்து நவீனத்துக்கு எதிரான கருத்துகளை விளம்பரங்களின் வழியாக நுழைக்கிற வேலையைச் செய்கிறார்கள்.

மணமானபிறகு மணமகன் கூடத்தான் மாமியாரின் வீட்டுக்கு வாழப்போகிறார். அல்லது இரண்டு பேருமே புதுவீட்டுக்கு குடிபோகிறார்கள். ஆனால் இந்த விளம்பரங்களில் ஆண்களை ஏன் இப்படி மரபோடு முடிச்சு போட்டுக் காட்டுவதில்லை? வேறென்ன? பெண் என்பவள் குடும்பக் குத்துவிளக்கு. அவள்தான் வீட்டின், சமூகத்தின் மரபையும் பாரம்பரியத்தையும் கட்டிக்காப்பற்ற வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துவதற்குத் தான். பெண்கள் கட்டிக்காப்பற்ற வேண்டிய பாரம்பரியம், மரபு என்பதெல்லாம் என்ன என்று கேட்டுக்கொண்டால் அது வேறொரு இடத்துக்கும் நம்மை இட்டுச்செல்லும்.

டைடு சோப்பு, சர்ப்பு விளம்பரம் நடக்கவே முடியாத ஒன்றை காட்சியாகக் காட்டுகிறது. பலவகையான கறைகளைக் கொண்ட வெள்ளைத் துணியை அற்புதம் செய்வதைப் போல டைடு சோப்பு உறைந்த வெண்மையின் நிறமாக்கிவிடுகிறது.

முன்பும் இப்படி நிறைய விளம்பரங்கள் வந்திருகின்றன. உதாரணத்துக்கு சிலவற்றை இங்கு நினைவுக்கு கொண்டுவரலாம். ஹமாம் சோப்புக்கு வெளியான விளம்பரம் ஒன்றில் கருப்பான, அழுக்கடைந்த மாணவர்களுடன் ஆட்டோவில் பயணம் செய்து வரும் ஒரு சிறுவன், ஹமாம் போட்டு குளிப்பதைப்போல சித்தரிக்கப் பட்டிருந்தது. இதைப் போலவே ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரங்களில் கருப்பாக இருக்கும் பெண்களுக்கு மணமகனும் கிடைப்பதில்லை. வேலையும் கிடைப்பதில்லை என்று சித்தரிக்கப் பட்டிருந்தது.

ஓய்வு பெற்ற வயதில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மனைவியிடம் “இன்னொரு காபி கிடைக்குமா?” என்று கேட்கிறார். அவரை வருமானம் இல்லாதவர் என்று அவமதிக்கிறார் மனைவி. இவற்றையெல்லாம் பார்த்து மகள் புழுங்குகிறாள். அவள் கைகளில் ஃபேர் அண்டு லவ்லி கிரீம் கிடைக்கிறது. அதைப்போட்டு சிகப்பாக மாறுகிறாள். உடனே வேலை கிடைத்துவிடுகிறது! குடும்பமாக ஒரு உணவகத்தில் சாப்பிட்டு அந்த மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். அப்போது தந்தை கேட்கிறார். “இன்னொரு காபி கிடைக்குமா?” என்று!

இதே ஃபேர் அண்டு லவ்லி கிரீம் விளம்பரத்துக்கு இன்னொன்றும் வந்தது. கருப்பாக இருக்கும் பெண் ஃபேர் அண்டு லவ்லி கிரீமை பயன்படுத்தியதும் காதலன் ஒருவன் கிடைத்துவிடுகிறான். இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது, “ஜாதகம் சேந்துடுச்சி” என்று குரல்வருகிறது. டபுள் டமாக்கா என்பதைப்போல இரண்டு பிற்போக்குத்தனங்கள். கருப்பு அழகில்லை என்கிற ஒன்று, கல்யாணத்துக்கு ஜாதகமே முக்கியம் என்கிற மற்றொன்று. கடும் எதிர்ப்புகள் மற்றும் புகார்களுக்குப் பிறகு இந்த வகையான விளம்பரங்கள் ஓரளவுக்கு மட்டுப்பட்டன. ஆனல் முற்றிலும் நின்றுவிடவில்லை. இப்போதும் இவ்வகையான விளம்பரங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

விளம்பரமும் வணிகமும்

விளம்பரங்கள் எதுவுமே தேவையில்லாமல் செய்யப்படுவதில்லை. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற வித்தைதான் விளம்பரங்கள். இவற்றுக்குப் பின்னால் பெரும் வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது. 2020ல் இந்தியாவில் விளம்பரங்களின் வழியாக மட்டும் 596 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப் பட்டிருக்கிறது. இந்த வருவாய் 2023ல் 900 பில்லியனாகவும் உயரக்கூடும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். 2019ல் கூகுள் நிறுவனம் விளம்பரம் வழியே சம்பாதித்த தொகை 134 பில்லியன் அமெரிக்க டாலர். அதே ஆண்டில் முகநூலின் விளம்பர சம்பாதனை 69 பில்லியன் டாலர்.

இப்படி பணம் புழங்கும் விளம்பரத் துறையில், ஓயாமல் ஒரு மனிதனை விளம்பரங்களைப் பார்க்கச் செய்வதற்கென, ஓயாமல் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். எழுபதுகளில், ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 500 முதல் 1600 விளம்பரங்கள் வரைப் பார்த்ததாகச் சொல்லப்பட்டது. 2000க்கு பிறகு இது ஒரு நாளைக்கு 5000 என அதிகரித்தது. தற்போது இது 6000 லிருந்து 10000 மாக கூடியுள்ளது.செய்திகளுக்கு இடையில், செய்திகளுக்கு இறுதியில், இன்னும் ஒருபடி மேலே போய் முழு செய்தியையே வழங்குதல் என்ற நிலைக்கு இன்று தொலைக்காட்சி விளம்பரங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. விட்டால் முழுக்க முழுக்க விளம்பரங்களையே கூட பார்க்கச் செய்து விடுவார்கள். இருபத்து நான்கு மணிநேர விளம்பர சேனல்கள் கூட உருவாகலாம். அல்லது அப்படி ஏற்கெனவே இருக்கக் கூடும்! இணையத்திலோ இந்த விளம்பரங்களின் அராஜகம் அதிகம். நாம் தேடும் இணையப் பக்கங்களில் விளம்பரங்களே முதலில் நம்மை எதிர்கொள்கின்றன. நாம் அவற்றை அணைத்தாலும் எதற்கு பார்க்க மறுக்கிறீர்களென கேள்வி வேறு கேட்கின்றன. இது அப்பட்டமான தனிமனித உரிமை மீறல்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

விளம்பரக் கட்டுப்பாடுகள்

டிராய் என்று அழைக்கப்படும், Telecom Regulatory Authority of India, ஏ.எஸ்.சி.ஐ எனப்படும் Advertising Standards Council of India ஆகிய இரண்டு அமைப்புகள் இந்தியாவில் வெளியாகும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கொடுத்திருக்கின்றன.

டிராய், 2012, மே மாதம் கொடுத்த அறிவிப்பின்படி இலவசமாக ஒளிபரப்படும் சேனல்களில், ஒரு முழு அறுபது நிமிட நிகழ்ச்சியில் 12 நிமிடங்கள் விளம்பரங்களுக்கு இருக்கலாம் எனவும், கட்டண சேனல்களில் 6 நிமிடங்கள் விளம்பரங்களுக்கு இருக்கலாம் எனவும் அறிவுறுத்தியது. விளம்பரத்துக்கென்று அனுமதிக்கப்பட்ட அந்த நேர அளவிலும்கூட எண்பது சதவீதம் வியாபர நோக்கத்திற்காகவும், இருபது சதவீதம் சொந்த சேனல் விளம்பரத்துக்காகவும் இருக்கலாம் என்றது டிராய்.

ஆனால் சேனல்கள் இதை மதிப்பதில்லை. அவர்கள் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 14 நிமிடங்களுக்கு விளம்பரங்களை ஒளிபரப்புகிறார்கள். மாலை 7முதல் 11 மணி வரை பிரைம்டைம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் 20% விளம்பரங்கள் மட்டுமே இருக்கவேண்டும். ஆனால் இதற்கு மாறாக 35% விளம்பரங்களை முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. இது மொத்த ஒளிபரப்பு நேரத்தோடு ஒப்பிடுகையில் வருடத்துக்கு 47.4% என்றாகிறது.

சாதாரண நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்குப் பிறகும், திரைப்பட ஒளிபரப்பின்போது ஒவ்வொரு முப்பது நிமிட முடிவிலும் விளம்பரங்கள் இருக்கலாம். விளையாட்டுகளில் பிரேக் நேரத்தின் போது இருக்கலாம். அதுவும் முழு திரை விளம்பரமாகவே இருக்கவேண்டும் என்றெல்லாம் டிராய் சொல்லியிருக்கிறது. ஆனால் விளையாட்டு ஒளிபரப்பிலும், 24 மணிநேர செய்தி சேனல்களிலும் கால் திரை, கால் அரைக்கால் திரை விளம்பரங்கள் இன்றும் வந்துகொண்டுதான் இருகின்றன.

டிடிஎச் இணைப்புக்கு நேரடியாக பணம் செலுத்திப் பார்க்கும் நுகர்வோருக்கு கேள்வி இருக்கிறது. ”பணம் செலுத்தியே நிகழ்ச்சிகளைப் பார்க்கிறேன். பிறகு நான் எதற்கு விளம்பரங்களை பார்க்கவேண்டும்? இதற்கு பதில் இல்லை. ஆனால் டிராய் விதிமுறைகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவை என்று சொல்லி சேனல் அதிபர்கள் எதிர்க்கிறார்கள்! உண்மையைச் சொல்வதானால், பணம் கட்டி பார்க்கிற சேனல்களே விளம்பரங்கள் மூலம் 80% பணம் சம்பாதிக்கின்றன. டிராயின் விளம்பர நேரக்குறைப்பு அறிவிப்பால் சேனல்களுக்கு 5000 கோடியிலிருந்து 11,600 கோடி வரை வருவாயில் துண்டுவிழும். அதனால் நுகர்வோரின் கட்டணத்தொகை அதிகரிக்கும் என்று சேனல் அதிபர்கள் இதை திசை திருப்புகிறார்கள்.

விளம்பரங்களின் நேர அளவு வரையறைகளைத் தாண்டி, அவற்றின் பொருள் சார்ந்தும் ஏ.எஸ்.சி.ஐ சில விதிகளை (ASCI Code) சொல்லியிருக்கிறது. சட்டப்படி தடை செய்யப்பட்ட விளம்பரங்கள் என பல இருக்கின்றன.

சிகரெட் மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்கள். மனித உறுப்புகள் விற்பனை விளம்பரங்கள்.மந்திரங்களால் நோய்களும், குறைபாடுகளும் தீர்க்கப்படும் என்ற விளம்பரங்கள். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்கும் விளம்பரங்கள். தாய்ப்பாலுக்கு எதிரான விளம்பரங்கள். சீட்டு கட்டுதல் தொடர்பான விளம்பரங்கள். மருத்துவரின் தனிப்பட்ட விளம்பரங்கள்.

சட்டத்தை முன்வைத்து தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள். மதுபான விளம்பரங்கள். கணக்குத் தனிக்கை குறித்த விளம்பரங்கள். துப்பாக்கி விளம்பரங்கள். உணவு குறித்த தவறான கருத்துகளை பரப்பிடும் விளம்பரங்கள். குழந்தையின் பாலுணவு பற்றிய விளம்பரங்கள். சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள். இப்படி இன்னும் சில இருக்கின்றன. காண்டம் விளம்பரம் என்றாலும் முகம் சுளிக்கும் வகையில் பாலுறவு சித்தரிப்புகள் இருக்கக் கூடாது. அதைப் போலவே மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் விளம்பரங்கள் இருக்கக் கூடாது. பாலுறவு சேவை பற்றிய விளம்பரங்களும் கூடாது. இனம், சாதி, நிறம் அல்லது குடியுரிமை சார்ந்த தவறான கருத்துகளோ விளம்பரங்களில் இடம்பெறுவது கூடாது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

காட்சி வன்முறை

இத்தனை தடைகள் இருந்தாலும் விதிகளில் இருக்கும் ஓட்டைகளையோ, குழப்பங்களையோ பயன்படுத்திக் கொண்டும், விதிகளை மீறியும் விளம்பரங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அண்மையில் வரும் பெரும்பாலான திரைப்பட போஸ்டர்களில் ரத்தமும் வன்முறையும் தெறிக்கிறது. கதாநாயகர்கள் துப்பாக்கியையோ, கத்தியையோ வைத்திருக்கிறார்கள். அத்திரைப்படங்களை பார்க்கும் இளைஞர்களை இந்த விளம்பரங்கள் மறைமுகமாய் வன்முறையை நோக்கி இழுக்கின்றன.

சில விளம்பரங்களைப் பார்த்ததுமே எரிச்சல் வருகிறது. சில சோப்புகளுக்கு வரும் விளம்பரத்தில், சோப்பை வாங்கச் சொல்லும் மருத்துவரின் பெயரோடு சாதி ஒட்டிக்கொண்டிருக்கிறது (சோப்பால் சாதியழுக்கைப் போக்க முடியவில்லை!) சோப்பை எல்லோரும் தான் பயன் படுத்துகிறார்கள். ஆனால் அதற்கு விளம்பரம் தருகிறவர்கள் மட்டும் ஏன் சிவப்பானவர்களாகவும், மேல்தட்டு சாதியினராகவுமே இருக்கிறார்கள்?சாதி திருமண விளம்பரங்கள் மிக வெளிப்படையாக சாதி உணர்வைத் தூண்டுகின்றன. விளம்பரத்தின் வழியே சாதி ஒரு வணிகப் பொருளாகிவிட்டது. பாஜக அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து எதற்கெடுத்தாலும் வேதத்தை முன்னிலைப் படுத்துவது வழக்மாகிவிட்டது. வேதாந்தா, வேத்ஷக்தி என்று. கூடவே காவி நிறம்!

இவற்றோடு விளம்பரங்களில் வருகிற எல்லா முகங்களும் சிவப்பாகவே உள்ளன. இந்தியா வெள்ளையர்கள் வாழும் நாடா? இங்கு கருப்பு நிறமுள்ளவர்கள் யாருமே வாழவில்லையா? 99 சதவிகித விளம்பரங்களில் திராவிட தோற்றம் மர்றும் முக அமைப்பைக் கொண்டவர்களையே பார்க்க இயலவில்லை. இதையெல்லாம் தண்டி ஒன்றிரண்டு விளம்பரங்கள் ஆறுதலை தருகின்றன. ரின் வெளியிடும் விளம்பரங்களை பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

”இன்னும் ரெண்டு சக்கரம் தான் பாக்கி அங்கிள்”

”ஆமாம். முதல் முறை தான். கடைசி முறையல்ல”

போன்ற வசனங்கள் அடித்தட்டு மக்களின் மனவெழுச்சியை சொல்பவையாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

இந்த நாட்டில் இருக்கிற மிகக்குறைந்த சதவிகித மக்கள் மட்டும் வாங்குவதால் வணிக நிறுவனங்களுக்கு வருவாய் கிடைத்துவிடுவதில்லை. எந்த சேவையுமே ஏழை மற்றும் அடித்தட்டு மக்களாலேயே அதிகளவில் நுகரப்படுகின்றன. ஆனால் விளம்பரங்களில் மட்டும் அவர்களுக்கு இடமில்லை. அதோடு அவர்களுக்கு எதிரான கருத்துகளும் வாசகங்களும் இடம்பெறுகின்றன. இது பெரிய துரோகம் மட்டுமின்றி அம்மக்கள் மீது ஏவப்படும் காட்சி வன்முறை.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 10

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment