அடித்துக் கொன்றது புலி என்றால் காட்டுக்குள் அனுப்பி வைத்தது யார்?

சமூக, பொருளாதார அம்சங்களைக் கொண்டதே தவிர ஏமாற்றுதல் என்பது கிரிமினல் நோக்கத்தில் நடக்கவில்லை என அறிக்கை அனுப்பியுள்ளார்.

கதிர்

மதுரை, ராமநாதபுரம் வட்டாரத்தில் எழுபது எண்பது வயது தாண்டியவர்களை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து ஊறவிட்டு, குளிர்ந்த தண்ணீரை குடம் குடமாய் ஊற்றி குளிப்பாட்டி, புளித்த தயிரை புகட்டி ஜன்னியில் விழவைத்து பரலோகத்துக்கு அனுப்பும் பழக்கம் இருப்பதாக நண்பர்கள் சொல்வதுண்டு.

இப்போது அப்படி சித்ரவதை எல்லாம் கிடையாது. எந்த அமாவாசை என்று மட்டும் கம்பவுண்டருக்கு சொல்லிவிட்டால் ஊசி மருந்தோடு வீட்டுக்கு வந்து விடுவார். குடும்பத்தார் எல்லாரும் பெருசின் காலில் விழுந்து திருநீறு பூசிக் கொண்ட பிறகு ஊசி போடுவார். காலையில் ஆரம்பித்தால் ராத்திரிக்குள் மயானத்தில் இருந்து திரும்பி விடலாம் என்றும் சொல்கிறார்கள்.

இத்தனை வயதாகியும் கிழடுகள் உயிர் போகாமல் நம் உயிரை வாங்கிறதே என்ற சலிப்பில் சில குடும்பங்கள் செய்கின்றன.

தீர்க்க முடியாத நோயால் அவதிப்படுவதை காணச் சகிக்காமல் இப்படி விடுதலை கொடுத்து அனுப்புகின்றன சில குடும்பங்கள்.

சொத்து கைக்கு வராமல் இழுத்துக் கொண்டே போகிறதே என்ற ஏக்கத்தில் சில குடும்பங்கள் முடிவு கட்டுகின்றன.

இனிமேல் இருந்து யாருக்கும் சல்லிக்காசு பிரயோசனம் இல்லை. அனுப்பி வைங்கடா என்ற புலம்பலை நிறைவேற்றுகின்றன சில குடும்பங்கள்.

திட்டமிட்டு ஊரறிய நடத்தப்படும் இந்த சமூகக் கொலைக்குத் தப்பி இரவோடு இரவாக சொத்துப் பத்திரங்களுடன் வீட்டைவிட்டு வெளியேறி தெரிந்தவர் வீடுகளில் அடைக்கலம் புகும் பெருசுகளையும் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை இந்தக் கொடுமை. அகில இந்தியாவிலும் வெவ்வேறு ரூபங்களில் நடக்கிறது.

வன விலங்குகள் குற்றத் தடுப்பு மையம் என்ற மத்திய அரசு நிறுவனம் சமீபத்தில் தொகுத்துள்ள தகவல் அறிக்கைகளில் சில பகீர் விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

வன விலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் ஆகியவற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் விலங்குகள் நுழைந்து மனிதர்களை அடித்து அல்லது கடித்துக் கொன்றால், வனத்துறை அந்தக் குடும்பத்துக்கு இழப்பீடு தருவது வழக்கம்.

உண்மையில் பல குடும்பங்கள் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களை இத்தகைய காட்டுக்குள் வலுக் கட்டாயமாக அனுப்பி, அங்கே யானை புலி சிங்கம் காட்டெருமை அடித்துக் கொன்ற பின், சடலத்தை கிராமத்துக்கு தூக்கி வந்து வனத்துறைக்கு புகார் கொடுத்து இழப்பீடும் நிவாரணமும் பெறுகிறார்கள் என்று இந்த ஏஜன்சிக்கு வந்துள்ள சில தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேசத்தில் மூன்று புலிகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பில்பிட் சரணாலயம். ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட காடுகள். இவற்றை ஒட்டி ஏராளமான மலைக் கிராமங்கள் இருக்கின்றன. எந்த தொழிலும் கிடையாது. எப்போதும் ஏழ்மைதான்.

இங்குள்ள சில கிராமங்களில் புலிகள் நுழைந்து ஆட்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் திடீரென்று அதிகரித்தன. புலியால் கொலையாகிற நபரின் குடும்பத்துக்கு நிவாரணம் ரூ.5 லட்சம் என உயர்த்தப்பட்ட பிறகு கொலைகளும் அதிகமானதை அதிகாரி ஒருவர் கவனித்தார்.

சில கேஸ் ஃபைல்களை எடுத்துக் கொண்டு நேரடி விசாரணையில் இறங்கினார் கலிம் அத்தார் என்ற அந்த அதிகாரி. சம்பவம் நடந்ததாக குடும்பத்தினர் சொன்ன இடம், காட்டு எல்லையில் இருந்து அது இருக்கும் தூரம், புலியின் கால் தடம், எச்சம், தாக்கப்பட்டவரின் உடல் அல்லது உடையில் இருந்து கிழிந்த பாகங்கள், சடலத்தை பார்த்ததாக சொன்ன நேரடி சாட்சிகள், கிராம முதியவர்கள் என்று பல முனைகளிலும் ஆராய்ந்து விசாரணை நடத்தினார் அத்தார்.

புலி நடமாட்டம் நிச்சயம் என்று தெரிந்த காட்டுப் பகுதிக்குள் வயதான அம்மா அல்லது அப்பாவை தனியாக அனுப்பி விட்டு, அவரை புலி அடித்து விட்டது என தெரியும் வரை காத்திருந்து, அது தெரிந்ததும் சிறு டிராக்டருடன் காட்டுக்குள் சென்று சடலத்தை எடுத்து வந்து வீட்டருகே அல்லது வயலில் கிடத்தி விட்டு வனத்துறைக்கு தகவல் கொடுக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்தார்.

அவர் சந்தித்த ஒரு பெண், காட்டுக்குள் போகுமாறு மகன்கள் தன்னை வற்புறுத்தி வருவதாகவும், அவர்கள் பேச்சைக் கேட்டால் உயிர் போய்விடும் என்று தெரிந்தாலும், மகன்களே அவ்வாறு சொன்ன பிறகு தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் காட்டுக்குள் போக தீர்மானித்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

கிராமத்து இளைஞர்கள் சிலர் அவரிடம் சொன்ன காரணம் வேறு மாதிரியானது.

வயதாகி விட்டது. உழைக்க உடம்பில் திடம் இல்லை. யாருக்கும் பயன் இல்லாமல் வாழ்வதைக் காட்டிலும் இந்தக் காட்டுக்குள் போய் ஏதோ விலங்கிடம் அடிபட்டு சாகிறேன். அதனால் கிடைக்கும் 5 லட்சம் ரூபாயைக் கொண்டு நீங்களாவது நல்லபடி வாழுங்கள் என்று அப்பாக்கள் சொல்லிப் புலம்புவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அடிப்படையில் இந்த விவகாரம் சமூக, பொருளாதார அம்சங்களைக் கொண்டதே தவிர ஏமாற்றுதல் என்பது கிரிமினல் நோக்கத்தில் நடக்கவில்லை என்ற ரீதியில் மேலதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார் அத்தார்.

அதை நீயோ நானோ தீர்மானிக்க முடியாது. அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு அறிக்கையை அனுப்பியிருக்கிறார் வனவிலங்கு குற்றங்கள் தடுப்பு மையத்தில் கூடுதல் இயக்குனர் திலோத்தம வர்மா.

ஊருக்குள் புகுந்த யானை, புலி அடித்துக் கொன்றது என வரும் தகவல்களை இனிமேல் கவனமாக ஆராய அறிவுரை வழங்கியுள்ளது வனத்துறை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close