ஸ்வாதி நாராயணன்
ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முட்டை
இந்தியாவில் ஐந்தில் மூன்று குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முட்டை ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் மிக முக்கியமான உணவாகும்.
வாஷிங்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி ஆகும் என்று கூறியுள்ளது.
ஆனால் இன்று பாஜக ஆட்சியின் கீழ் செயல்படும் 19 மாநிலங்களில் 14 மாநில மாணவர்களுக்கு பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் முட்டை மறுக்கப்படுகிறது.
மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய பெருமை, இந்தியாவில் தமிழகத்திற்கு மட்டும் தான் இருக்கிறது. 1950களில் கல்விக் கண் திறந்த காமராஜர் அவர்களால் உருவாக்கப்ட்டது தான் இந்த திட்டம். அவரைத் தொடர்ந்து, இருபது வருடங்கள் கழித்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், இந்த திட்டத்தினை பரவலாக்கினார்.
திராவிடக் கொள்கைகளை தீவிரமாக பின் தொடர்ந்து வந்த திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வந்தது. அதில் திமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கான மத்திய உணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வாரத்திற்கு ஐந்து நாட்களும் மசலா முட்டை மற்றும் மிளகு முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதிய உணவு அளிப்பதிலும் இந்துத்துவா கொள்கைகள்
ஆனால், இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருக்கும் பல பள்ளிகளில் மதிய உணவில் முட்டைகள் மறுக்கப்படுகின்றன. முக்கியமாக பாஜக ஆட்சியின் கீழ் அமைந்துள்ள மாநிலங்கள்.
காவிக் கொள்கைகளுடன் கலந்து கொள்ளும் பிராமணர்களின் சைவ உணவுக் கொள்கையும் கூட இதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம்.
இந்தியாவில் இருக்கும் பிராமண சமூகத்தினரில் 27% மட்டுமே அசைவ உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். 94% இஸ்லாமியர்கள்,
77% பழங்குடியினர், 77% தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 61% மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 59% பொதுப் பிரிவினர் அசைவ உணவு உட்கொள்பவர்கள் தான். இதில் குறிப்பிட்ட வகுப்பினர் பின்பற்றும் சைவ உணவுக் கொள்கைகளை அனைத்து மாநிலங்களிலும் திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.
முட்டைக்கு மாற்று
பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் முட்டைக்குப் பதிலாக பால் பொருட்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் பாஜக மாநில அரசுகள். அதன்படி மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது.
வெள்ளைப் புரட்சிக்கு பெயர் பெற்ற குஜராத்தில் அதுவும் கூட இதனை நடைமுறைப்படுத்தவில்லை.
பாஜக ஆட்சியின் கீழ் செயல்படும் மாநிலங்களின் மதிய உணவு திட்டங்கள்
மத்தியப் பிரதேச மாவட்டத்தில் இருக்கும் குழந்தைகளில் 43% ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு சைவ உணவாக இருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு, மதிய உணவில் முட்டை சேர்க்கலாமா என்று வினவிய போது, பிடிவாதமாக மறுத்துவிட்டார் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்.
பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதியான ஜார்கண்ட் மாநிலத்தில் சிவில் சொசைட்டி மூலமாக 2014 மற்றும் 2015ஆம் கொண்டு வரப்பட்ட அண்டா அபியான் திட்டத்தின் மூலமாக பள்ளிகளுக்கும் அங்கன்வாடிகளுக்கும் முட்டை தரப்பட்டது.
உத்திரகாண்ட், திரிபுரா, அசாம் மாநிலங்களில், மாநில அரசு இதற்காக நிதி உதவி அளிக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
பிஹார் மாநிலத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே முட்டை வழங்கப்படுகிறது.
வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் இருக்கும் ஏனைய குடும்பங்கள் சைவ உணவை உட்கொள்பவர்கள் என்ற காரணத்தினால் பள்ளிகளில் முட்டை மறுக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
ஆனால் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைத் தவிர அப்பகுதிகளில் இருக்கும் 45% குடும்பங்கள் மாதத்திற்கு ஒருமுறையாவது அசைவ உணவினை எடுத்துக் கொள்கிறார்கள்.
அதிக அளவு பழங்குடி மக்களைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் 78% மக்கள் அசைவ உணவினை உட்கொள்பவர்கள். ஆனால் பாஜக ஆட்சி செய்யும் அம்மாநிலத்தில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டையை இன்னும் சேர்க்கவில்லை.
பிற மாநிலங்களில்
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நிலை வேறாக இருக்கிறது. மாநில அரசின் நிதியில் இருந்து தான் மதிய உணவு மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இருந்தாலும் தெலுங்கானா அரசு, வாரம் ஒன்றுக்கு 4ல் இருந்து 7 முட்டைகள் வரை தர உள்ளது.
ஒடிசாவில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் தரப்படுகிறது.
மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், மற்றும் லட்சத்தீவுகளில் முட்டையுடன், மீன், மற்றும் கோழிக்கறி ஆகியவை மதிய உணவாக பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
சைவ உணவு முறை என்பது இந்தியாவின் கலாச்சாரமே இல்லை என்பதால், ஏன் இத்தனை பாகுபாடுகள் ஒரே நாட்டுக்குள். உணவிலும் கூட இந்துத்துவா கொள்கைகளா?
தமிழில் நித்யா பாண்டியன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.