மகா கவி பாரதியார், நாம் அறியாத நபர் அல்ல! ஆனால் பொதுத்தளத்தில் அவரைப் பற்றி அதிகம் பேசப்படாத பக்கங்களை இங்கே புரட்டிக் காட்டுகிறார், எழுத்தாளர் அ.பெ.மணி. மகாகவியின் நினைவு தினம் இன்று!
அ.பெ.மணி
பாரதி சில தேசிய தலைவர்களை வியந்து கவி பாடி உள்ளார். தனது உரைநடைக் குறிப்புகளிலும் சுதந்திர போராட்ட கால தலைவர்கள் குறித்தும் எழுதி உள்ளார். பாரதியின் கவி மனம் நுட்பமானது, அதன் நேசமும் விமர்சனமும் கூர்மையானவை.
மஹாகவி ரவீந்திரநாத் தாகூரால் மகாத்மா என விளிக்கப்பட்ட காந்திக்கும் பாரதிக்குமான உறவின் புள்ளிகள் ஒவ்வொன்றும் ஒரு விதமானவை. புதுசேரியில் இருந்து இந்தியா பத்திரிகையில் பாரதி எழுதிக் கொண்டிருந்த காலகட்டங்களில் உத்தமர் காந்தி தென் ஆப்பிரிக்காவில் ஏழை தொழிலாளர் துயர் துடைக்க போரடிக் கொண்டிருந்தார். காந்தியாரின் அந்த நேரத்து போராட்டங்களை பாரதி வியந்து போற்றி பாராட்டுகிறார்.
இந்தியா வந்த பிறகான காந்தியின் சமூக பொருளாதார கொள்கைகளுடன் பாரதி முரண் படுகின்றார், காந்தியை முழுமையாக ஏற்றுக் கொள்ள பாரதியின் மனம் தடுமாறுகிறது. ஆனாலும் உள்ளூர காந்தியை நேசிக்கவே செய்கின்றார். பெரிய சிக்கல் காந்தியின் அகிம்சை கொள்கையுடன் பாரதிக்கு உண்டாகிறது.
அகிம்சையை எப்படி ஒரு மனிதனால் முழுமையாக கடை பிடிக்க முடியும்? என்ற ஐயம் பாரதியின் மனதில் தொக்கி நிற்கிறது. அகிம்சை என்பது எதிரியின் அணுகுமுறையை பொறுத்தது என்றே பாரதி பதிவு செய்கின்றார்.
காந்தியை 1919 பிப்ரவரி மாதம் சென்னையில் சந்திக்கின்றார் பாரதி அப்போது ராஜாஜியும் உடன் இருந்தார், காந்தியார் ஆரம்பிக்க இருந்த ஒத்துழையாமை இயக்கத்தை ஆசிர்வதிப்பதாக பாரதி காந்தியிடம் கூறினார். அதற்கு அடுத்த நாள் வாழ்க நீ எம்மான் என்று காந்தியை வாழ்த்திப் பாடினார் பாரதி.
காந்தி பெருமகன் கலந்து கொள்ளாத அந்த நிகழ்ச்சியில் அவரை மிக உயர்வாக ஏத்தி பாடுகின்றார் மகாகவி பாரதி. கொடிய வெந் நாக பாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கிறார். முடிவிலாக் கீர்த்தி பெற்றாய், புவிக்குள்ளே முதன்மை யுற்றாய் என்று மனதார புகழ்ந்து பாடி மகிழ்கிறார் பாரதி.
பாரதி போலவே சுதந்திரப் போராட்ட காலத்தில் புதுச்சேரி வந்து சேர்ந்த இன்னொரு பெரிய ஆளுமை அரவிந்தர். உண்மைநிலை கண்டுறங்கும் யோகப் பாம்பே என்று அரவிந்தரை விளிக்கின்றார் பாரதி, தனது கவிதைக்கு அரவிந்தப் பாம்பு என்றே பெயரிடுகின்றார். கீழைத்தேய மெய்யியல் மரபில் பாம்பு முக்கியமான ஆன்மீக குறியீடு என்பதை கவனத்தில் நிறுத்த வேண்டும்.
அரவிந்தர் வங்கத்தில் பிறந்து இங்கே வந்த மகான், அரவிந்தரின் பிறந்த நாளான ஆகஸ்டு 15 அன்று பாரதி இந்த கவிதையை எழுதி அவருக்கு மொழி பெயர்த்தும் காட்டி உள்ளார், அரவிந்தருடன் நெருங்கிப் பழகி உள்ளார் பாரதி. கவிக்குயில் என பாரதி பற்றி சுத்தானந்த பாரதியார் எழுதிய நூலிலும் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. திண்மை நிலை கொண்டிருக்கும் தெய்வப் பாம்பே என்று அரவிந்தரை நன்கு அறிந்ததாலேயே பாரதியால் கவி பாட முடிகின்றது.
பாரதி தனது முதல் இரண்டு புத்தகங்களை யாருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என அறிய ஆச்சர்யம் மேலிடும், சகோதரி நிவேதிதைக்கு 1908 ல் எழுதிய ஸ்சுவதேச கீதங்கள், அடுத்த ஆண்டு எழுதிய ஜென்மபூமி இரண்டையும் சமர்ப்பித்துள்ளார். அன்பினுக்கோர் கோயிலாய், அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் விளங்கியவர் என்று வானுயர சகோதரி நிவேதிதையை போற்றி பாடுகின்றார் மகாகவி. 1906 கல்கத்தா காங்கிரஸ் சென்ற போது இவரை பாரதி சந்தித்திருக்க வேண்டும்.
திலகர், வஉசி இருவரை பற்றியும் பாடி உள்ளார், கோவை கொடும் சிறையில் இருந்த வஉசியை புகழ்ந்து பாடி நான்கு கவிதைகளை அவருக்கு கொடுத்து அனுப்பி உள்ளார் பாரதி. சிந்தை சிதம்பரமாம் செம்மலுமே என்கிறார். திலகரை, திலகன் என்று விளித்து நரகம் ஒத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே என்று அவரை வாழ்த்துகிறார் கவி பாரதி.
தாபாய் நவ்ரோஜி, லாலா லஜபதிராய் ஆகியோரை புகழ்ந்தும் பாடி உள்ளார். பேரன்பு செய்தாரில் யாவரே, பெருந்துயரம் பிழைத்து நின்றார் என்று லஜபதி ராய் க்காக பாரதி பாடுவது கவிதையின் உச்சம்.சுவாமி விவேகானந்தரின் தம்பி பூபேந்தரை குறித்து பூபேந்திர விஜயம் என்றொரு கவி புனைந்துள்ளார். கண்ணாகக் கருதியவன் புகழோதி வாழ்த்தி மனம் களிக்கின்றாரால் என்ற பாரதியின் வரி அவரது மென்மையான மனதை நமக்கு சொல்கின்றது.
தேசத்தின் பால் கொண்ட அன்பின் நிமித்தம் தேசத்தலைவர்களை பாரதி மனதார கவி இயற்றி கொண்டாடி மகிழ்கின்றார், காலா என் காலருகே வாடா என விழித்த பாரதி தனது நாற்பது வயதை கூட பார்க்காமல் அகாலத்தில் தேகாந்திரமான நாள் இன்று.