கவிதா முரளிதரன்
1999ல் நெதர்லாண்ட்ஸில்தான் முதன்முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அங்கு அதற்கு பிக் பிரதர் என்று பெயர். ஜார்ஜ் ஆர்வல் எழுதிய 1984 என்கிற நாவலிலிருந்து அந்த பெயர் எடுக்கப்பட்டது. பிறகு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் இந்த நிகழ்ச்சி தொலைகாட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழுக்கு வர சரியாக 19 வருடங்கள் ஆகியிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சமூக ஊடகங்களின் பரவலாக்கத்துக்கு பின்னர் இது போன்ற நிகழ்ச்சி தமிழிலும் வெற்றி பெற பெரிய வாய்ப்பு இருப்பதை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சரியாகவே கணித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அடிப்படையில் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன. நிகழ்ச்சி ஒரு பிரச்னை என்றால் நிகழ்ச்சிக்கான எதிர்வினை இன்னொரு பிரச்னை.
தனி மனித சுதந்திரம், உரிமைகள் பற்றி வாய் ஒயாமல் பேசும் நாம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது பிரச்னையின் இன்னொரு பரிணாமம்.
முப்பதுக்கும் மேற்பட்ட கேமராக்களின் தொடர் கண்காணிப்பில் 14 பேர் 24 மணி நேரமும் இருக்கிறார்கள் என்பதும் அவர்களது நடவடிக்கைகள், அந்தரங்கங்கள் எல்லாம் நமது வரவேற்பறைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்தரங்கங்கள் வணிகமாக்கப்படும் ஒரு அவலமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ். அதன் நுகர்வோராக நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறோம் என்பது நம்மை அந்த வணிகத்தில் பங்குதாரர்களாக்குகிறது.
இந்த அந்தரங்க வணிகத்தில் வெறும் அவர்கள் உண்ணுவதும் உறங்குவதும் மட்டும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்காது என்பது எளிய யதார்த்தம். ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பை தூண்டுவதுதான் தயாரிப்பாளர்களின் நோக்கம். அது இரு நபர்களுக்கிடையில் நிலவும் `கவர்ச்சியாக` இருக்கலாம், அல்லது வசைகளாக இருக்கலாம். தமிழ் பிக் பாஸில் இது எதுவும் புதிதாக நடக்கவில்லை. இந்தி சேனலான கலர்ஸ்ஸில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வெவ்வேறு சீசன்களில் இரண்டு திருமணங்கள் நடந்திருக்கின்றன. பிக்பாஸ் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்களும் அந்த போட்டியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள். நிகழ்வில் பங்கு பெற்ற பிற ஆண்களுடன் இணைத்து பேசப்பட்ட பின், நிகழ்வு முடியும் தருவாயில் இருவரும் தத்தம் காதலர்களை வரவழைத்து அந்த இல்லத்திலேயே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது தமிழிலும் நடக்கலாம்.
இதுபோலவே சர்வதேச பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ஷில்பா ஷெட்டி பாலிவுட்டில் அதிக பிரபலமடைந்தார். ஆனால் அந்த பிரபலத்துக்கு அவர் கொடுத்த விலை அதிகம். பிக் பிரதர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அவர் இருந்தாலும் அதற்கு முன்பு இந்தியர் என்பதால் பிரிட்டனை சேர்ந்த சிலரால் (அவர்களும் அந்த வீட்டில் வசித்து வந்தவர்கள்) கடுமையான இனவாத தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த இனவாத தாக்குதல்களுக்கு பின்னர் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி சரிந்தது. பல விளம்பரதாரர்கள் பின் வாங்கினார்கள். இரு நாடுகளிலும் நாடாளுமன்றங்களில் விவாதிக்கப்படும் ஒரு பிரச்னை ஆனது.
இந்த அளவு `விளம்பரத்தை` நிச்சயம் நமது தமிழ் தொலைக்காட்சி விரும்பாது. ஆனால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் ஜூலியானா தமிழின் ஷில்பா ஷெட்டி ஆக மாற்றப்படுவதற்கான எல்லா சாத்திய கூறுகளும் தெரிகின்றன. இன்னொரு குடும்பத்துடன் இருக்கிறேன் என்று சொல்லும் ஜூலியானாவைப் பற்றி அவர் இல்லாத போது விமர்சிக்கிறார்கள் பிறர். பிரச்னைகள் தவிர்த்த ஷில்பா ஷெட்டியின் மறுபதிப்பாகதான் ஜூலியானா சம்பந்தப்பட்ட எபிசோடுகள் இருக்கும் என்பது இப்போதே தெளிவாக தெரிகிறது.
ஜூலியானாவின் மீது ஏவப்படும் வசைகள், அவமானங்கள் வணிகமாக்கப்படும் அவலம்தான் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்தது போல ஜூலியானாவுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால் அதன் பின்னாலிருக்கும் வணிகத்தை ஒரு பார்வையாளராக நாம் கணிக்கத் தவறினால் ஒரு சமூகமாக நாம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைவோம்.
இந்த நிகழ்ச்சியின் இன்னொரு பிரச்னை, நமது எதிர்வினை. இன்னொருவரது அந்தரங்கங்களுக்குள் நுழைவது பற்றிய எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாத நாம் தான் அதைப் பற்றி தொடர்ந்து சமூக ஊடங்களில் விவாதித்துக் கொண்டும் விமர்சித்துக்கொண்டும் இருக்கிறோம்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வெளிச்சம் பெற்ற ஜூலியான பிக் பாஸில் பங்கேற்பதும் அங்கு அவர் அணியும் ஆடைகளும் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் இளைஞர்கள் திரண்ட ஒரு போராட்டத்தில் ஜூலியானா மட்டும் ஏன் சமூக ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்று நாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை. அந்த கேள்விக்கான பதில்தான் பிக் பாஸில் அவரது பங்களிப்பு பற்றிய கேள்விக்கான பதிலாகவும் இருக்கும்.
ஜுனைத்துகள் கொலையுண்டு கிடக்கும் ஒரு காலத்தில் நாம் ஜூலியானாக்களின் ஆடை பற்றியும் பிக் பாஸின் வெற்றி தோல்விகள் பற்றியும் விவாதித்துக்கொண்டிருக்கும் அவலம்தான் நமது சமூகத்தின் ஆகப்பெரிய அநீதி.
இந்த அநீதியை வென்றெடுக்க வேண்டுமென்றால் அடுத்தவர் அந்தரங்கங்கள் பற்றிய சுவாரஸ்யங்களை கைவிட்டு தெருவில் ஓடும் ரத்தத்தை பற்றி பேச வேண்டும். தெருவில் ரத்தம் ஓடும் போது அதை பற்றிதான் எழுத முடியும் என்று நெருடா சொன்னார். தெருவில் ரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் போது நாம் பிக் பாஸின் படுக்கையறைகள் பற்றி சமூக ஊடகங்களில் எழுதிக் கொண்டிருந்தால் வரலாறு நம்மை சமூக விரோதிகளாகவே அடையாளம் காட்டும்.