கவிதா முரளிதரன்
சமூக அநீதிகளுக்கு எதிராக புறக்கணிப்பு (boycott) எவ்வளவு பெரிய பேராயுதமாயிருந்திருக்கிறது என்பதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் இருக்கின்றன. பேருந்தில் வெள்ளையருக்கு இருக்கை மறுத்த காரணத்துக்காக ரோசா பார்க்ஸ் என்கிற கறுப்பின பெண் கைதான பிறகு பொது பேருந்துகளை ஒரு வருடம் புறக்கணிப்பு செய்த கறுப்பின மக்களின் போராட்டத்துக்கு சட்டரீதியான வெற்றி கிடைத்தது வரலாறு.
இந்த புறக்கணிப்பை தமிழ்நாட்டு ஊடகங்கள் ஒரு ஆயுதமாக ஏந்தி நிற்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களையும் பெண்களையும் மோசமாக பேசி வரும் பா.ஜ.க தலைவர்களான எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை தமிழ் ஊடகம் ஏன் புறக்கணிக்க கூடாது என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
வெகுஜன ஊடகத்தில் நமக்கு திரும்பத் திரும்ப சொல்லப்படும் ஒரு விசயம், சார்பின்மை. எந்த சார்பும் இல்லாமல் ஒரு செய்தியை தர வேண்டும் என்பது வெகுஜன ஊடகத்தின் நியதி.
ஆனால் இந்த நியதியை உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தை எச்.ராஜா கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார் ராஜா. விவசாயிகள் போராட்டம், அவர்களை பிரதமர் சந்திக்க மறுத்து வருவது பற்றிய நெருக்கடியான கேள்விகளை கேட்ட ஊடகவியலாளர்களை மிக மோசமாக எதிர்கொண்டார். பிரதமரை தரம் தாழ்த்துவதாகவும், ஆண்டி இந்தியன்(தேச விரோதி) என்றும் பேசினார். “உங்களது வரிப்பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன்” என்று ஒரு ஊடகவியலாளரை மிரட்டவும் செய்தார்.
ஊடகவியலாளர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் நெருக்கடியான கேள்விகளை கேட்கும் போதெல்லாம் சமூக விரோதிகள், தேச விரோதிகள் என்று அபாயகரமான முத்திரைகளை குத்துவது, தமிழ்நாட்டில் மட்டும்தான் பிரதமரை எதிர்த்து விவாதங்கள் நடத்தப்படுவதாக திரிப்பது, ஊடக முதலாளிகள் அழுகிச் சாவார்கள் என்று பேசுவது என்று ராஜாவின் ஊடகம் மீதான வன்மம் அவ்வபோது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரேயொரு நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் இருக்க கூடாது என்று கூறிய ஜிக்னேஷ் மேவானியை புறக்கணிக்கும் முடிவை பெரும்பாலும் ஆங்கில ஊடகங்களே இருந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எடுக்க முடிந்தது.
ஆனால் தமிழ் செய்தி ஊடகவியலாளர்களை தொடர்ந்து மிக கேவலமாக பேசி வரும் ராஜாவை எதிர்த்து மிக சமீபம் வரையில் எந்தவொரு நடவடிக்கையையும் ஊடகவியலாளர்கள் எடுக்க முடியவில்லை. (மிக சமீபத்தில் காவிரி தொலைக்காட்சி அந்த முடிவை எடுத்து பகிரங்கமாக அறிவித்திருக்கிறது)
எச்.ராஜாவையோ எஸ்வி சேகரையோ பகிரங்கமாக புறக்கணிப்பதில் உள்ள பிரச்னைகளாக ஊடகத்துறையில் உள்ள நண்பர்கள் சொல்வது 1) அது ஊடகவியலாளர்கள் செய்ய கூடிய விசயம் அல்ல, நிர்வாகங்களும் பொறுப்பு 2) இதனால் என்னவிதமான மாற்றம் வந்துவிடும் என்று தெரியவில்லை.
சமீபகாலங்களில் ஊடகங்கள் புறக்கணிப்பை கையாண்ட சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கடந்த வருடம் டிஸ்னி திரைப்பட நிறுவனம், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் என்கிற ஊடகம் தனது திரையிடல்களையும் நிகழ்வுகளையும் கவர் செய்ய தடை விதித்தது. காரணம், டிஸ்னி நிறுவனத்தின் தொழில் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதியிருந்தது லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ். இந்த தடையை தொடர்ந்து, டிஸ்னியின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை என்கிற முடிவை அங்கிருந்த திரை பத்திரிக்கையாளர்கள் எடுத்தார்கள். இந்த முடிவை எதிர்பார்க்காத டிஸ்னி நிறுவனம், தனது தடையை திரும்பப் பெற்றுக் கொண்டது.
மிக சமீபத்தில் ரஷ்யாவில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெண் பத்திரிக்கையாளர்களிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்ததை அடுத்து, அவர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தை கவர் செய்வதில்லை என்கிற முடிவை சில நிர்வாகங்கள் எடுத்திருக்கின்றன.
கத்துவாவில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை தொடர்ந்து அது பாலியல் வன்புணர்வு இல்லை என்று எழுதி வந்த டைனிக் ஜாக்ரன் என்கிற பத்திரிக்கை நடத்திய இலக்கிய நிகழ்வை பல ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும் புறக்கணித்திருக்கிறார்கள்.
ஊடகவியலாளர்கள் மோசமாக நடத்தப்படும் போதெல்லாம் புறக்கணிப்பை ஒரு எதிர்ப்பாக கையாளலாம் என்று ஊடகவியலாளர் உரிமை சார்ந்து பேசும் பலர் நினைக்கிறார்கள். யுகாண்டாவில் சமீபத்தில் காவல்துறையினர் ஊடகவியலாளர்களை மோசமாக நடத்திய பிறகு அங்குள்ள ஊடகவியலாளர் உரிமைகளுக்கான குழு ஒன்று இனி காவல்துறை நிகழ்வுகளை ஊடகங்கள் கவர் செய்ய கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது.
எச்.ராஜா, சேகருக்கும் இந்த புறக்கணிப்பு நியதி நிச்சயம் பொருந்தும். புறக்கணிப்பு பலன் தருமா? ஒரு வருடம் நீடித்த மாண்ட்கோமெரி பேருந்து புறக்கணிப்பு கறுப்பின மக்களுக்கு நீதியை வழங்கும் ஒரு சட்டத்துக்கு வழி வகுத்தது. தமிழ்நாட்டில் உள்ள ஊடக நிர்வாகங்கள் இந்த முடிவை எடுக்கும் போது புறக்கணிப்பு பேராயுதமாக நிச்சயம் மாறும். அவர்களுக்கு ஒரு நெருக்கடியையும் உருவாக்கும்.
ராஜா அல்லது சேகருக்கு பதில் அவர்கள் சார்ந்திருக்கும் பா.ஜ.கவையோ அதன் வேறு தலைவர்களையோ புறக்கணிப்பது வெகுஜன ஊடகங்களில் சாத்தியமில்லை. அதனால் ஊடகவியலாளர்களை மிக கொச்சையாக பேசி வரும் ராஜாவையும் சேகரையும் புறக்கணிக்கும் முடிவை மட்டுமாவது நிர்வாகங்கள் எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக செய்தியாளர் சந்திப்புகளில் அவதூறுகளையும் இது போன்ற அவமானங்களையும் சந்தித்து வரும் ஊடகவியலாளர்களுக்கு நிர்வாகம் செய்யக் கூடிய மிகச் சிறிய விசயம் இது. இது கூட செய்ய முன் வராத ஊடக நிர்வாகங்கள் பிற துறைகளில் உரிமைகள் பறிக்கப்படுவதன் அநீதி பற்றி பேச என்ன தார்மீக அடிப்படை இருக்க முடியும்?
கட்டுரையாளர் கவிதா முரளிதரன், சுய சார்பு பத்திரிகையாளர்