பாலாஜி
15 போட்டியாளர்களுடன் 60 கேமிராக்களுடன் 100 நாட்கள் என்ன நடக்கிறது என்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியைக் காண தமிழ் பேசும் மக்கள் பலரும் தினமும் இரவில் தொலைக்காட்சி முன்பு தவம் இருக்கிறார்கள். கடந்த இரு சீஸன்களில் இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடம் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பைத் தொடர்ந்து அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டு பிக்பாஸ் சீசன் 3 தொடங்கப்பட்டது. இந்த சீசனையும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிரபலங்கள், கலவையான துறைகளைச் சேர்ந்தவர்கள், 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்குவதும் அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும், சம்பவங்களும், பிக் பாஸ் அளிக்கும் டாஸ்க்குகளும், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர்களும் என அனைத்தையும் கேமிரா கண்காணிப்பதை பார்வையாளர்களும் பின் தொடர்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு, இந்த நிகழ்ச்சி ஏன் இவ்வளவு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது? இந்த நிகழ்ச்சி மக்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விவாதிப்பது அவசியம்.
பிக் பாஸ் சீசன் 1 தொடங்கும்போது அதற்காக செய்யப்பட்ட விளம்பரம் பலரையும் பிரமிக்கவைக்கும்படி இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கான புரமோ விளம்பரத்தில் “வணக்கம்! நான் சினிமாவில் நிறைய வேஷம் போட்ருக்கிறேன். நாயகனா.. வில்லனா.. குள்ளனா.. காதலனாக.. காவலனாக.. பெண்ணாக.. அமெரிக்கனாக… இந்தியனா வேஷமும் போட்ருக்கேன் வாழ்ந்துகிட்டிருக்கேன்.. ஆனால், ஹ.. ஹா.. என்னைவிட அதிக வேஷம் போட்டது யாரா இருக்கும் சொல்லுங்க… அரசியல்வாதின்னுவிங்க இல்லை.. ஹூஹ்ம்.. நீங்க.. யா!.. வீட்ல ஒரு முகம்.. வெளிய ஒரு முகம்.. ஓட்டுப்போட காசு வாங்கும்போது ஒரு முகம்.. ஓட்டுப்போடும்போது ஒரு முகம்.. தனிமையல ஒரு முகம்.. நண்பர்களிடம் ஒரு முகம்.. ஃபேஸ்புக்ல ஒரு முகம்.. இதுல எது உண்மையான ஒரு முகம்… ஹஹா.. பிக் பாஸ் 14 பிரபலங்கள் 100 நாட்கள் 30 கேமிரா ஒரே வீட்டில்.. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஐ வில் பி வாட்சிங்.. பிக் பாஸ் ஹஹ்ஹஹா…
பிக்பாஸ் சீசன் 2
சாலையில் ஒரு சிறுவன் கால்பந்தை கைகளில் தட்டிக்கொண்டு வருகிறான்.. அந்த இடத்தில், ஒரு பெண் பழங்களை வாங்கிக்கொண்டு வருகிறார்.. அப்போது திடீரென ஒரு இளைஞர் அந்த பெண்ணை இடித்துவிட்டு ஓடுகிறார்… இந்த நேரத்தில் கமல்ஹாசன்.. “யார் இவர் எதுக்கு இப்படி இடிச்சுட்டு ஓடறாரு.. திருடனா இருக்குமோ? இல்லை பொம்பள சேட்டை.. ரைட்.. ஒரு ஆளை பாத்ததும் அடுத்த செகண்டே முடிவு பண்ணிடறதா? கரெக்டா சொல்லனும்னா எல்லாமே நாம பார்க்கிற பார்வையிலதான் இருக்கு..” என்று கூறுகிறார். இதையடுத்து, அந்த இளைஞர் கார் மோத இருந்த அந்த சிறுவனை காப்பாற்றுகிறார். ஒரு போக்குவரத்து காவலர் “என்ன ஆச்சு?” என்று கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர் “ஒன்னுமில்லை.. ஒன்னுமில்லை..” என்று கூறுகிறார். இதையடுத்து கமல்ஹாசன் “பாத்தீங்க இல்ல..” என்று கூறிவிட்டு ஒரு ஆப்பிளை கடிக்க முயல்வார். ஆனால், அது மறைந்துவிடும். பின்னர், அவர், பிக் பாஸ் சீசன் 2.. 15 பிரபலங்கள்.. 60 கேமிராக்கள்.. ஒரே வீட்டில்.. நல்லவர் யார்? கெட்டவர் யார்? வி வில் பி வாட்சிங்.. பிக் பாஸ்..
பிக் பாஸ் சீசன் - 3
பிக் பாஸ் சீசன் 3-இல், ஒருவர் சோர்வாக ஷோஃபாவில் அமர்வார் எதிரே உள்ள டிவியில் அவருடைய முகம் கோமாளியாக தோற்றமளிக்கும்.. ஒரு சைவ மெஸ்ஸில் உணவு பரிமாறுபவர் வாடிக்கையாளர்களின் உணவு மேசையில் இருந்து திரும்புவார்.. அப்போது அங்கே உள்ள டிவியில் அவர் முகமூடி அணிந்து தோற்றமளிப்பார்.. சீட்டாட்டத்தின்போது ஒருவர் எதிரில் இருப்பவரை அடிக்க கையை ஓங்குவார். அப்போது அங்கே இருக்கிற டிவியில் அவர் தலையில் கொம்புகள் முளைத்து காட்சி அளிப்பார். அப்போது கமல்ஹாசன் குரல்.. 2 வருஷமா பார்க்கிறோம்.. பிக் பாஸ் ஷோல.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம்.. ஆனால்.. பாக்க பாக்கத்தான் புரியுது.. காட்றது அவங்களோட முகம் மட்டுமல்ல நம்முடைய உண்மையான முகமும்கூட.. பிக் பாஸ்… 15 பிரபலங்கள்.. 60 கேமிராக்கள்.. ஒரே வீட்டில்.. இது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்..
முதலில் இது நீங்களும் நடிக்கிறீர்கள் என்று பார்வையாளர்களை குற்றம் சாட்டுகிறது. அதே போலதான், இந்த போட்டியாளர்களும். கண்காணிப்பின் மூலம் அவர்களின் சுயரூபம் வெளிப்படுவதை தெரிந்துகொள்ளலாம். அதே போலத்தான் நீங்களும் அதனால், நான் கண்காணிப்பேன் என்கிறது பிக் பாஸ்.
அடுத்து, நல்லவர் யார்? கெட்டவர் யார் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிடாது. கண்காணிப்பின் மூலமே அதை தெரிந்துகொள்ள முடியும். அதனால், ஒருவரை நல்லவரா? கெட்டவரா என்று தெரிந்துகொள்ள நாம் கண்காணிப்போம் என்கிறது பிக் பாஸ்.
இதையடுத்து, பிக் பாஸ் போட்டியாளர்கள் வேறு இல்லை. பார்வையாளர்கள் வேறு இல்லை என்று கூறுகிறது. எல்லோருக்கும் முகமூடி உள்ளது; அது கண்காணிப்பின்போது தெரியவரும் என்று கூறி கண்காணிப்பை அனுமதிக்க உரையாடுகிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் புரமோக்கள் இப்படியாகத்தான் பொருள் கொள்ளவைக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வாறு கண்காணிப்பை சகஜமாக்குகிறது.
இன்று நாம் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கண்காணிப்பு வலைப்பின்னலுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம். கண்காணிப்பு என்பது பாசிச நடவடிக்கைகளில் ஒன்று. அப்படி, இருந்தும் இந்த பாசிச நடவடிக்கையை நாம் ஏன் அனுமதிக்கிறோம்? என்றால், அதற்கு பாசிசத்தின் பதில் மிகவும் தந்திரமானது.
முதலில் அரசு அல்லது ஏதேனும் நிறுவனம் உங்களின் நலனுக்காகத்தான் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்று மக்களை நம்ப வைக்கும். பின்னர், அதை அனைவரின் சம்மதத்துடன் நடைமுறைப்படுத்தும். கண்காணிப்பு தவிர்க்க முடியாது என்று உறுதிப்படுத்தும். இதைத்தான் மார்க்ஸிய அறிஞர் அண்டோனியோ கிராம்சி, “பாசிசம் அடக்கி ஆளுதலை ஒருபோதும் வற்புறுத்தியோ பலவந்தமாகவோ நடைமுறைப் படுத்துவதில்லை. பெரும்பான்மை மக்களின் முழு ஒப்புதலுடன்தான் அதை நடைமுறைப்படுத்துகிறது” என்று குறிப்பிடுகிறார்.
அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சி கண்காணிப்பை சமூகமயமாக்கி, அதற்கு சமூக ஏற்பு வழங்குகிற பணியை சிறப்பாக செய்து வருகிறது. இறுதியில், நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சகஜமாக கண்காணிக்க தொடங்கிவிடுவோம்.
ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் ஒரு சிலை எல்லா இடங்களிலும் கண்காணித்துக்கொண்டே இருக்கும். அதன் கண்காணிப்பில் இருந்து தப்பவே முடியாது. இந்த கண்காணிப்பு என்பது குழந்தைகளே பெற்றோர்களை கண்காணித்து அரசுக்கு தகவல் அளிக்கும் அளவுக்கு சென்றுவிடும். கண்காணிப்பின் அவலத்தை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு அரசியல் புனைவாக்கியிருப்பார். நாவலில் வரும் சிலைக்கு பதில், இன்று உலகமெங்கும் கேமிராக்கள் அனைவரையும் கண்காணித்துக்கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு புனைவைப் போல, கண்காணிப்பு நம்முடைய பாதுகாப்புக்குதான் என்று நம்பத் தொடங்கிவிட்ட காலத்தில், கண்காணிப்பை மையமாகக் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியும் மக்களுக்கு சுவாரசியமாகத்தானே இருக்க வேண்டும். இதில் சுவாரசியம் என்பது வேறொன்றும் இல்லை பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற வெகுஜன மக்களிடையே உள்ள ஆர்வம்தான். இதன் மூலம், கண்காணிப்பை சமூகமயமாக்குகிறது பிக் பாஸ். அதன் பிறகு நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.