‘குட் பை’ பாஜக? நாயுடு முதல் ரஜினி, எடப்பாடி வரை..!

மோடி வெளிப்படுத்தும் சிக்னல்கள் அடிப்படையில் பாஜக தங்களுடன் கூட்டணி அமைக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புரிந்திருக்கிறார்கள்.

ச.செல்வராஜ்

பாரதிய ஜனதாவின் சரிவு ஆரம்பித்துவிட்டதாக தேசிய அளவில் கட்சிகள் கணிக்க ஆரம்பித்துவிட்டன. அதன் எதிரொலிதான் பல கட்சிகளின் பின்வாங்கும் படலம்!

பாரதிய ஜனதாக் கட்சி கடந்த 2014-ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலக் கட்சிகள்தான் தீவிர பாஜக எதிர்ப்பு நிலையை முன்னெடுத்தன. ஆனால் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக.வின் செல்வாக்கு சரிவு, உத்தரப்பிரதேசத்தில் பாஜக.வின் கோட்டையான கோரக்பூரில் தோல்வி ஆகிய நிகழ்வுகளுக்கு பிறகு பாஜக.வை எதிர்க்கும் தைரியம் பல கட்சிகளுக்கும் வந்துவிட்டது.

பாரதிய ஜனதாவின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த சந்திரபாபு நாயுடு விலகியது, இந்த ரகம்தான். மூன்றே முக்கால் ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியது, அடுத்த சில நாட்களில் மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது ஆகியவை மாநிலத்தில் நிலவும் பாஜக எதிர்ப்பு மனநிலையை தனக்கு சாதகமாக திருப்பும் ஒரு தந்திரம்தான்!

பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு முனகல் சத்தம் கூட வெளியிடாத அதிமுக.வில் இருந்தும் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம்’ என கூறிய அதிமுக செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமியை கட்சியை விட்டு இபிஎஸ்-ஓபிஎஸ் நீக்கினர். இந்த அளவுக்கு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் தைரியத்தை அதிமுக பெறவில்லை என எடுத்துக் கொள்ளலாம்.

அதேசமயம், பட்ஜெட் உரையிலேயே, ‘நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்திற்கு அநீதி இழைத்திருக்கிறது’ என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டது கடுமையான ஒரு விமர்சனம்தான்! நாடாளுமன்றக் கூட்டத்தை இரு வாரங்களாக புறக்கணித்து வரும் அதிமுக எம்.பி.க்கள் சார்பில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், ‘மத்திய அரசு எங்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை’ என வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறார்.

பாரதிய ஜனதா மீதான சீண்டலின் அடுத்தகட்டம்தான் மார்ச் 21-ல் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை! ‘பாஜக.வுடன் எங்களுக்கு உறவும் இல்லை, அந்தக் கட்சிக்கு ஆதரவு இல்லை’ என திமுக எம்.எல்.ஏ. பிச்சாண்டியின் பேச்சுக்கு பதில் தெரிவிக்கும்போது கூறினார் எடப்பாடி பழனிசாமி!

கடந்த ஓராண்டு காலத்தில் ஓரிரு முறை பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘அதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்’ என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு வந்திருக்கிறார். முதல் முறையாக பாஜக குறித்து நெகடிவ் கமெண்ட் அவரிடம் இருந்து வந்திருக்கிறது.

இதன் பின்னணி என்னவென்றால், ஆர்.கே.நகரில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இரட்டை சிலை சின்னத்தை பெற்ற பிறகும் இபிஎஸ்-ஓபிஎஸ் டீம் ஜெயிக்க வில்லை. அதன்பிறகே மத்திய பாஜக தலைமை, இவர்கள் மீதான அணுகுமுறையை மாற்றியிருக்கிறது. ரஜினிகாந்த் வேகமாக அரசியலை நோக்கி நகர ஆரம்பித்ததும் அதன்பிறகுதான்! தேவையில்லாமல் அதிமுக தலைவர்களை சந்திப்பதை மோடி குறைத்துக் கொண்டதும் அதன் பிறகே!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவப் படம் திறப்புவிழாவில் பங்கேற்க அதிமுக தரப்பு வைத்த கோரிக்கையை நரேந்திர மோடி ஏற்கவில்லை. பாண்டிச்சேரி விழாவுக்கு போகிற வழியில் தமிழ்நாட்டில் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தது மட்டும்தான் மோடியிடம் இருந்து கிடைத்த ஒரே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்!

வர்தா புயலில் இருந்து ஓகி வரை தமிழ்நாடு அரசு கேட்ட நிதி எதுவும் டெல்லியில் இருந்து கிடைக்கவில்லை. ஓகி சம்பந்தமாக டெல்லியில் பிரதமரை சந்திக்கவே ‘அப்பாய்ன்மெண்ட்’ கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாவட்டம் வாரியாக கொண்டாடிய தமிழக அரசு, இன்னும் சென்னையில் அந்த விழாவை நடத்தவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் அந்த விழாவை சென்னையில் நடத்துவதாகவும், அதில் மோடியை பங்கேற்க செய்வதாகவும் திட்டம் இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கடந்து போய்விட்டது. சென்னையில் மட்டும் இன்னும் விழா நடக்கவில்லை. காரணம், மோடி அப்பாய்ன்மென்ட் கிடைக்கவில்லை. இனி விழாவே நடக்குமா? என்பதும் தெரியவில்லை.

ஆக, கடந்த சில மாதங்களாக மோடி வெளிப்படுத்தும் சிக்னல்கள் அடிப்படையில் பாஜக தங்களுடன் கூட்டணி அமைக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புரிந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையிலேயே சட்டமன்றத்தில், ‘பாஜக.வுடன் எங்களுக்கு உறவு இல்லை’ என போட்டு உடைத்திருக்கிறார் எடப்பாடி!

ஆனால் அதிமுக அணிகள் இணைப்பு நடந்தபோது இரு தரப்பையும் பிரதமர் மோடி அடுத்தடுத்து சந்தித்தது, ‘மோடி கூறியதால்தான் இணைந்தோம். அமைச்சர் பதவியையும் ஏற்றேன்’ என ஓபிஎஸ் கூறியது எல்லாம் பாஜக.வுடன் அல்லது மோடியுடன் உறவில் இருந்ததற்கான அடையாளங்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. மதுரையிலும், திருச்சியிலும் சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர்களே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்த நிகழ்வுகள், இவர்கள் பாஜகவுடன் மட்டுமல்ல சங் பரிவார்களுடனும் உறவு பேண ஆசைப்பட்டார்கள் என்பதற்கான அடையாளங்கள்!

இன்று பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தேர்தலில் இணைந்து நின்று வெற்றி பெறும் நம்பிக்கையில் இல்லை. 2014-ல் பாஜக அணி அமைக்க விரும்பியபோதும், நாசூக்காக அதை மறுத்து அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. இப்போது பாஜக சில விஷயங்களில் காட்டிய அலட்சியம், கண்டுகொள்ளாமை ஆகியவற்றால் ஏற்பட்ட விரக்தியில் ‘உறவு இல்லை’ என அறிவிக்கிறார் எடப்பாடியார்!

எடப்பாடி பழனிசாமி அறிவித்தது, பாஜக.வுக்கு ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் முழுக்க பாஜக பின்னணியில் அரசியலுக்கு வருவதாக கூறப்படும் ரஜினிகாந்தும் சொன்னார் பாருங்கள்… ‘எனது பின்னால் மக்களும் ஆண்டவனும்தான் இருக்கிறார்கள்’ என்று! ‘பாஜக உங்கள் பின்னால் இருப்பதாக கூறப்படுகிறதே?’ என்கிற கேள்விக்கு ரஜினியின் பதில் இது!

விஜயகாந்த் அடிக்கடி, ‘மக்களோடுன் கடவுளோடும் கூட்டணி’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார். அதே வார்த்தைகளைத்தான் ரஜினி வேறு வடிவில் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்த வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டே ஒரு முறை அதிமுக.வுடனும், மற்றொருமுறை பாஜக மற்று, ம் மக்கள் நலக் கூட்டணியுடன் அணி சேர்ந்தார் விஜயகாந்த். ரஜினிகாந்த் மட்டும் அப்படி செய்யமாட்டாரா என்ன? பாஜக.வின் நம்பிக்கை இது!

 

×Close
×Close