Advertisment

பா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை!

இந்த கட்டுரையின் நோக்கம் வாஜ்பாய் அவர்களையோ எடியுரப்பாவையோ அல்லது அமித் ஷாவையோ விஷ்ணுவின் மறு அவதாரமாக பிரகடனப்படுத்துவதல்ல.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ediyurappaa - vajpayee

சூர்யா

Advertisment

காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு இரண்டு அவதாரங்கள் உண்டு. கடவுள் ஶ்ரீ ராமரும், பகவான் கிருஷ்ணரும் உலகிலுள்ள தீமைக்கு எதிராகவும், அநீதியை முடிவுக்கு கொண்டு வரவும் வேண்டி பூமியில் அவதரித்தவர்கள். அவர்கள் இருவரின் பாதையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் இந்த இருவரும் நாடெங்கிலும் வித்தியாசமான வடிவத்திலும், கலாச்சார முறையிலும் வழிபடப்படுகிறார்கள்.

ஶ்ரீ ராமர் ஒழுக்க விதிகளுக்கு இணங்கியிருப்பதை தேர்வு செய்தவர். அவர் கடவுளின் அவதாரமாக ​​​இருந்தாலும் உலகின் வலிகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு துன்புற்றார். எல்லா நிலையிலும் அவர் தர்மத்தை கடைப்பிடிக்க விளைந்தவர், ஆனாலும் இறுதியில் துன்பத்தை அனுபவித்தார். அவரின் இந்த குணம் அவருக்கு ‘மரியாதா புருஷோத்தம்’(ஹிந்தியில்) என்ற பெயரை பெற்று தந்தது.

பகவான் கிருஷ்ணர் தீமையை எதிர்க்க வேறொரு வித்தியாசமான பாதையை தேர்வு செய்திருந்தார். முறைகேடான தீய சக்திகளை எதிர்த்து போரிடுகையில் விதிகளை பின்பற்றி விளையாடுவதில் எந்த பயனுமில்லை என்பார். இந்த முறையை எதிரிகளை வீழ்த்துவதற்காக அவர் தொடர்ந்து கடைபிடித்து வந்தார்.

1996-ல் பா.ஜ.க அட்டல் பிகாரி வாஜ்பாயை மையமாக கொண்டிருந்தது. 1996 மக்களவை தேர்தலில் இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத தனி ​பெரும்​​​​​ கட்சியாக பா.ஜ.க உருவெடுத்தது. 1980-ல் ஆரம்பிக்கப்பட்ட பா.ஜ.க வெறும் 16 ஆண்டுகளில் இந்த சாதனையை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டது. அன்றைய ஜனாதிபதி ஷங்கர் தயால் ஷர்மா பா.ஜ.க-வை தனி பெரும் கட்சியாக அங்கீகரித்து பெரும்பான்மையை நிருபிக்க நேரமும் வழங்கியிருந்தார். ஆனால், எதிர்பாரா விதமாக அன்றைய பா.ஜ.க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அதனை தொடர்ந்து உணர்வுபூர்வமான உரையை வழங்கிய வாஜ்பாய் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அவருடைய உரையில் "​​எங்களை சுற்றி பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட போதும் நாங்கள் எந்த குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை" என்று கூறினார்​. மேலும் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை சுட்டி பேசிய விதம் அவர் பண மூட்டைக்கு பின் செல்லும் மனிதரல்ல என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

2018-ல் பா.ஜ.க கர்நாடகத்தில் எடியூரப்பாவை மையமாக வைத்து தேர்தலை சந்தித்தது. அன்று வாஜ்பாய் இருந்த சூழலில் தற்போது எடியூரப்பா இருந்தார். ஆனால் இவர் காங்கிரஸ் மற்றும் ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை இணங்க ​​வைக்க அனைத்து யுத்திகளையும் பயன்படுத்தி பார்த்து ​​விட்டார். இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமல்ல. கடந்த காலங்களில் கேள்விக்குட்பட்ட கூட்டணிகளை பல மாநிலங்களில் திரட்டிய வரலாறு பா.ஜ.க-வுக்கு உண்டு. அவர்கள் கருத்தியல் ரீதியாக பிணைக்கப்பட்டவர்களாக இல்லாத போதும் அவர்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்றிய ​சரித்திரம் பா.ஜ.க-வுக்கு உண்டு.​​

இதிலிருக்கும் வித்தியாசம் தெளிவாக புலப்படுகிறது. இந்த கட்டுரையின் நோக்கம் வாஜ்பாய் அவர்களையோ எடியுரப்பாவையோ அல்லது அமித் ஷாவையோ விஷ்ணுவின் மறு அவதாரமாக பிரகடனப்படுத்துவதல்ல. இதன் நோக்கம் பா.ஜ.க-வின் தெளிவான மற்றும் மறுக்க ​​முடியாத பரிணாம வளர்ச்சியை பறைசாற்றுவது. “மரியத புருஷோத்தமனாக” இருந்து “வெல்வதற்காக எதையும் செய்யலாம்” என்கிற நிலைக்கு வந்துள்ளதை சுட்டி காட்டுவதே நோக்கம்.

இந்த பண்பு மாற்றம் பா.ஜ.க-வை வாஜ்பாய் காலம் தொட்டே பின் தொடர்ந்து வரும் உண்மை விசுவாசிகளுக்கு ஆச்சர்யத்தை வழங்கலாம். கொள்கை ரீதியான ஆதரவாளர்களை இந்த சூழ்ச்சிமிகு அரசியல் அருவெறுப்பில் ஆழ்த்தலாம், குறிப்பாக இளைஞர்களை. ஆனால், அதே வேளையில் காங்கிரஸ் கட்சியின் தகாத சூழ்ச்சியால் விளைவிக்கப்பட்ட வடுக்களை சுமந்துக் கொண்டிருப்பவர்கள் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தை கண்டு மகிழ்ச்சியில் திளைத்து கொண்டல்லவா இருப்பார்கள்.

இந்த இரண்டில் எது சரியான பார்வை?

இதில் ஏதோவொன்றை மட்டுமே சரியென சொல்லிவிட முடியாது. ஹிந்து சமயம் இரண்டு பார்வைகளையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டு ஆதரவாளர்களையும் கடவுளென போற்றி கொண்டாடியுள்ளது. நிதர்சனத்தில் இரண்டு முறைகளும் நியாயப்படுத்தப்பட்டுள்ளன, இரண்டு உத்திகளுமே ஏற்கப்பட்டுள்ளன. இறுதியான இலக்கு என்னவாக இருக்கிறது என்பதை பொருத்தே நம் முடிவு இருக்க வேண்டும். நீங்கள் தர்மவானாக இருந்து விளையாட்டில் தோற்பவராக இருக்க வேண்டுமா? அல்லது உள்ளடங்கியுள்ள பிரச்சனைகள் அனைத்தையும் கணக்கில் கொள்ளாமல் வெற்றியின் பக்கம் நிற்க வேண்டுமா?

ஒரு தனி ​​மனிதராக, ஒரு குழுவாக, ஒரு சமூகமாக கடந்த காலத்திலிருந்து பாடம் கற்பது நம் கடமையில்லையா​​? கடந்த கால அனுபவத்திலிருந்து வளர்வதும் முதிர்ச்சியடைவதும் மனிதராக நம் உரிமையும் கடமையும் இல்லையா? எப்போதுமே சொல்லப்படும் கூற்று ஒன்று உண்டு: ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து வித்தியாசமான விளைவுகளை எதிர் ​பா​​​ர்ப்​பது​ முட்டாள்தனம்.

எதிர்கட்சிகள் இத்தனை நாளும் ​பா.ஜ.க-வுக்கு​ பயன்படுத்தி வந்த தந்திரங்கள் இன்று அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை நாளும் அவர்கள் கையாண்டு, நடைமுறைப்படுத்தி, பழம் தின்று கொட்டை போட்ட சூழ்ச்சிகள் அனைத்தும் இன்று அவர்கள் பக்கமே திரும்பியுள்ளது. அவர்கள் இதனால் அதிர்ந்து நிற்பது மட்டுமின்றி காயப்படுவார்கள் என்பது உண்மை தான். ஆம், பா.ஜ.க பரிணாம வளர்ச்சி அடைந்து ​வருகிறது, அரசியல் ஆட்டத்தில் சந்தர்ப்பவாதிகளை வீழ்த்த.​

(கட்டுரையாளர் சூர்யா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். வலதுசாரி சிந்தனையாளர்.)

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment