வப்பலா பாலசந்திரன்
தீவிரவாதம், முற்போக்கு அரசியல், கிளர்ச்சி, மற்றும் பயங்கரவாதம் - இதற்கான அடிப்படை புரிதலை நாம் அடைவதற்கு அதிக காலம் தேவைப்படுகின்றது. இந்தியாவில் கிளர்ச்சி, போராட்டம், முற்போக்குத்தன்மை குறித்து முன்வைக்கப்படும் கருத்துகள் பெரும்பாலாக குற்றமாக கருதப்படுகின்றது. ஆனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் வன்முறையற்ற கருத்துப்பதிவுகள், பேச்சுகள் மற்றும் கூட்டங்களை தண்டனைக்குரிய குற்றமாக கருதுவதில்லை. ஆனால் இந்தியாவில் கிளர்ச்சி மற்றும் போராட்டங்கள், பயங்கரவாதமாகவும் தீவிரவாதமாகவும் அரசியல் மற்றும் மத ரீதியான காரணங்கள் மாற்றி அமைத்துவிடுகின்றன.
தீவிரவாதியாக நம்மால் அடையாளம் காட்டப்படும் ஒருவர் நம் நாட்டைச் சேர்ந்தவராகவோ வெளிநாட்டவராகவோ இருக்கலாம். தீவிரவாத நடவடிக்கைகளை தீவிரவாத அமைப்புகள் மேற்கொள்ள உள்ளூர் மக்களின் ஆதரவு தேவையில்லை. ஆனால் கிளர்ச்சி என்பது தம் மக்களின் தேவைக்காக தாமே முன்னின்று நடத்தும் போராட்டங்களாகும். நமக்கான தேவை என்பதால் மக்களின் ஆதரவு அந்த போராட்டங்களுக்கு என்றுமே இருந்து கொண்டே இருக்கின்றது. இது போன்ற எழுச்சிகளுக்கான மூலம் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வந்தாலும் கிளர்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் என்பது தடுக்க இயலாத ஒன்றாக மாறிவிடுகின்றது. மக்களின் தேவைகளுக்காக அவர்கள் போராடும் பட்சத்தில் அவர்களை தீவிரவாதிகள் போல் நடத்துவது சரியான தீர்வாகாது.
தீவிரவாதத்தை எதிர்த்து நடத்தப்படும் நடவடிக்கைகள் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் வகையில் நடத்தப்படும் நடவடிக்கைகளில் இருந்து என்றுமே வித்யாசப்படும் என்பதை நமக்கு வரலாறு உணர்த்தியிருக்கின்றது. 9/11ற்கு பின்னால் இஸ்லாமிய தேசங்களில் நடத்தப்பட்ட தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையானது முற்றிலும் வேறுபட்டது. பிலிப்பைன்ஸின் ஹக்பலஹப் கிளர்ச்சி (1946-54), மலாயா (1948 - 60), கென்யாவின் மவ் மவ் (1952-60), வடக்கு அயர்லாந்து (1969-1996), மற்றும் சீக்கிய, நாகா, மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிகள் அனைத்தும் தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை.
இது போன்று தான் காஷ்மீரிலும் ஜூலை, 2016ல் கிளர்ச்சிகள் உருவானது. ஆனால் இராணுவம் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளால் இந்த கிளர்ச்சிகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டன. இப்படியாகவே 60 ஆண்டுகளுக்கு முன்பு நாகா இன மக்கள் தங்களுக்கென தனி நாடு கேட்டு போராடத் தொடங்கினார்கள். ஆனால் 2015ல் ஒரு அமைதி ஒப்பந்தம் மூலம் இந்த நீண்ட போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆளும் மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் மீதான வெறுப்பின் வெளிப்பாடகவே இந்த கிளச்சிகளை அணுகவும் கையாளவும் வேண்டும்.
லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமைத் தளபதி அபு துஜனா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இருவரையும் ஹக்ரிபோரா கிராமத்தில் இராணுவம் மற்றும் காவல் துறையினர் கடந்த வருடம் சுட்டுக் கொல்ல, வன்முறை வெடித்தது. மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல்கள் நடத்தினார்கள். ஆப்கானிஸ்தான், ஈராக், மற்றும் சிரியா போன்று தீவிரவாதத்தினால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் கூட இது போன்று மக்களின் ஆதரவினை எந்த அமைப்பும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மூத்த பிஜேபி தலைவரான யஷ்வந் சின்ஹா காஷ்மீர் மக்களிடம் பேசும் போது, அம்மக்கள், அரசாங்கம் போராட்டக்காரர்களை "பாகிஸ்தானின் கை பொம்மைகள்" என்று வர்ணிப்பதை வெறுப்பதாக வெளிப்படையாக பேசுகின்றார்கள். 2017ல் சின்ஹா "நாம் உணர்வுப்பூர்வமாக காஷ்மீர் மக்களை இழந்துவிட்டோடும்" என்று குறிப்பிட்டார்.
ஆளும் மத்திய அரசு, முன்னாள் உளவுத்துறை அதிகாரியாக இருந்த தினேஷ்வர் சர்மா அவர்களிடம் இது குறித்து காஷ்மீர் நடுநிலையாளர்களிடம் பேச அழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காஷ்மீரில் தொடர்ந்து பாதுகாப்பு படைவீரர்கள் கொல்லப்பட்டு வந்தார்கள். 2012 - 2015 வரை தோராயமாக 166 படைவீரர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். 2016ல் 267 ஆகவும், 2017ல் 358ஆகவும், 2018, ஏப்ரல் 8 வரை 96 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. 2015 வரை பாதுகாப்பு படைவீரர்கள் மீதான அதிக தாக்குதல்களை மாவோயிஸ்ட் இயக்கமே செய்து வந்தது. 2015ல் 57 வீரர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட, 41 கொலைகள் காஷ்மீரில் அரங்கேறியது. 2016ல் நிலை தலைகீழாக மாற 88 பேர் காஷ்மீரில் கொல்லப்பட, 66 பேர் மாவோயிஸ்ட்டுகாளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 2017ல் 83 கொலைகள் காஷ்மீரிலும் 74 கொலைகள் மாவோயிஸ்ட் இருக்கும் பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றது. 2018ல் இதுவரை (ஏப்ரல் 8) வரை 25 பாதுகாப்பு படைவீரர்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
ஆளும் மத்திய அரசு காஷ்மீர் போராட்டக்காரர்கள் அனைவரையும் இன்று வரை பாகிஸ்தானின் பிரதிநிதிகள் என்று கூறி அனைவரையும் ஒடுக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருகின்றது. இது போன்ற சூழ்நிலைகளை இதற்கு முன் சந்திக்காமல் இருந்ததின் விளைவாக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அங்கு வாழும் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் என அனைவரையும் பாதிக்கும் என்பதையும் ஆளுங்கட்சி உணர வேண்டும். 2016ல் லெப்டினட் ஜெனரல் திரு. டி.எஸ். ஹூடா கூறியதைப் போல், பிரிவினைக்காரர்கள், போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அரசாங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டால் இதற்கு ஒரு முடிவு காணலாம் . ஜம்மூ - காஷ்மீரின் காவல்துறை தலைமை இயக்குநர் எஸ்.பி. வைத், ஏப்ரல் 12, 2018ல், பாகிஸ்தான் அரசுடன் சுமூகப் பேச்சு வார்த்தை நடத்துவதே இதற்கான தீர்வாக அமையும் என்று கூறினார்.
தமிழில் : நித்யா பாண்டியன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.