அரியகுளம் பெருமாள் மணி - எழுத்தாளர், ஊடகவியலாளர்.
சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசியல் சாசனத்தின் பாதையில் இந்திய ஜனநாயகம் பயணிக்கிறது. இந்தியாவின் நிர்வாக கட்டமைப்பை அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே நாம் எழுப்பி உள்ளோம். பாராளுமன்றம், நீதித்துறை போன்ற அமைப்புகளின் அதிகார எல்லைகளை நமக்கு வகுத்தளித்தது இந்திய அரசியல் சாசனம். தேர்தல் ஆணையத்தை ஒரு சுதந்திரமான அமைப்பாக கட்டமைக்கிற அரசியல் சாசனம் உட்கட்சி ஜனநாயகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது அதன் வழியாக மட்டுமே ஆரோக்கியமான ஜனநாயகத்தை நாம் உருவாக்க முடியும் என அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் கருதினர்.
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951 ஆம் ஆண்டு தொடங்கி 1952 வரை ஏறக்குறைய ஆறு மாத காலம் நடைபெற்றது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகள் மட்டுமே அகில இந்திய அளவில் வேட்பாளர்களை நிறுத்தின. 15க்கும் மேற்பட்ட கட்சிகள் தங்களுக்கு தோதான பிராந்திய அளவில் போட்டியிட்டன. 52 தேர்தல் தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் காங்கிரசுக்கு மிகவும் சாதகமான தேர்தல். ஷியாம் பிரசாத் முகர்ஜி ராம் மனோகர் லோகியா போன்றவர்கள் காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு மாற்றான சிந்தனையை முன்வைத்து 1952 தேர்தலில் போட்டியிட்டனர்.
இதையும் படியுங்கள்: இருளைக் கிழிக்கும் நம்பிக்கை கீற்றுகள்: ப. சிதம்பரம்
1967 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ராம் மனோகர் லோகியா காங்கிரசை வீழ்த்த வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் தங்களுடைய சித்தாந்த வேறுபாடுகளை கடந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார், இதற்கு ‘லோகியா பார்முலா’ என்று பெயர் .
தமிழகத்தில் அண்ணாதுரையும், ராஜாஜியும் கை கோர்ப்பதற்கு லோகியா பார்முலாவும் ஒரு காரணம். நேரு மறைந்த பிறகு நடந்த 1967 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி காங்கிரஸை வழி நடத்தினார். 300க்கும் குறைவான இடங்களையே காங்கிரஸ் கட்சியால் இந்தத் தேர்தலில் பெற முடிந்தது.
1977 பொதுத் தேர்தல் வரை காங்கிரஸ் வலிமையான ஒரு சக்தியாக இந்தியாவில் இருந்தது. எமர்ஜென்சி காரணமாக இந்திரா காந்திக்கு எதிராக தலைவர்கள் ஓரணியில் திரண்டனர். 1977 பொதுத் தேர்தலில் ஜனதா கட்சிக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. முன்னர் இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மொரார்ஜி தேசாய் ஜனதா கட்சி சார்பாக பிரதமராக தேர்வானார். அவருக்குப் பின் சரண் சிங் மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்தார். இந்திரா காந்திக்கு எதிரான கூட்டணி அரசால் நீண்ட காலம் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சித்தாந்தங்கள் இந்தத் தேர்தலில் வலுப்பெற்றது. 1977 தேர்தலில் இந்திரா காந்திக்கு எதிரான சக்திகள் ஓரணியில் திரண்டது போல 1989 தேர்தலில் ராஜீவ் காந்திக்கு எதிரான சக்திகள் ஓரணியில் திரண்டன. History repeats itself என்ற சொல்லுக்கு ஏற்ப ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த விஸ்வநாத பிரதாப் சிங் பிரதமர் பதவியேற்று ஓராண்டு காலம் முடிவதற்குள் பதவி விலகினார், அவரைத் தொடர்ந்து வந்த சந்திரசேகரும் சரண் சிங்கை போலவே குறுகிய காலத்தில் ஆட்சியை இழந்தார்.
1989 கூட்டணி அரசு மாநிலக் கட்சிகள் பல்கிப் பெருக வழிவகை செய்தது. 1990 -2000 இந்த பத்தாண்டு காலத்தில் முலாயம் சிங், லாலு பிரசாத், தேவிலால், பிஜு பட்நாயக், தேவ கௌடா, மம்தா பானர்ஜி, சரத் பவார் என பலரும் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி மாநிலக் கட்சிகளின் தலைவர்களாக உருவெடுத்தனர். தி.மு.க, அ.தி.மு.க, அகாலி தளம், சிவ சேனா, தெலுங்கு தேசம் என்றிருந்த மாநிலக் கட்சிகளின் பட்டியல் புதிய கட்சிகளின் வருகையால் நீண்டது.
தங்கள் தலைமையின் கீழ் மாநிலக் கட்சிகளை உருவாக்கிய தலைவர்கள் வலிமையான சித்தாந்த பின்புலம் கொண்டவர்களாகவே இருந்தனர். நிறுவனத் தலைவர்களின் காலத்திற்குப் பிறகு கட்சியின் தலைமையை தீர்மானிப்பதில் குடும்பத்தினர் முக்கிய பங்காற்ற ஆரம்பித்தனர், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய கட்சிகளில் அரசியல் வாரிசை தீர்மானிப்பதில் குடும்பத்தினர் முக்கிய பங்காற்றுவது பொதுப் பண்பாக காணப்படுகிறது. என்.டி.ராமராவ் உருவாக்கிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது மருமகனிடம் சென்றது. குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.
முலாயம் சிங்கின் குடும்பத்தினர் முன்னின்று அகிலேஷை முதல்வர் பதவிக்கு நகரத்தினர். பிஜூபட்நாயக் மறைந்த பிறகு வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த அவரது மகன் ஒடிசா வந்து கட்சிக்குத் தலைமையேற்றார். சரத் பவார் தனது ஒரே மகளை டெல்லி அரசியலில் முன்னிறுத்தினார், கட்சியின் மாநில பொறுப்பை சகோதரர் மகனிடம் வழங்கியுள்ளார். லாலு பிரசாத் இடத்திற்கு அவரது இரண்டு மகன்கள் போட்டியிட்டனர், காலப்போக்கில் இளைய மகன் கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்டார். சிவசேனா கட்சியின் தலைமை உத்தவ் தாக்கரே வசம் சென்றது. மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி மேற்குவங்க அரசியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தின் மாபெரும் தலைவராக, இந்திய துணைப் பிரதமராக, விவசாயிகளின் காவலனாக அறியப்பட்ட தேவிலாலின் கட்சியும், ஆட்சியும் அவருக்குப் பின் அவரது மகன் ஓம் பிரகாஷ் சவுத்தாலா வசம் சென்றது.
பிராந்திய கட்சிகளில் வாரிசுகள் தலைமை ஏற்கின்ற பொழுது அவர்களது திறமை குறித்த கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது, கடும் விமர்சனத்திற்கு இடையே பொறுப்பேற்கும் வாரிசுகள் காலப்போக்கில் தங்களுக்கான அரசியலை திறம்பட கண்டடைவது ஆச்சரியமான ஒன்றாகும். ஒடிசா பற்றிய எந்த புரிதலும் இல்லாதவர், மேற்கத்திய வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டவர் என்று விமர்சிக்கப்பட்ட நவீன் பட்நாயக் ஒடிசாவை நீண்ட காலம் ஆண்டு வருகிறார்.
கிரிக்கெட் வீரராக இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தேஜஸ்வி இந்தியாவின் இளம் தலைவர்களில் ஒருவராக இன்று மதிக்கப்படுகிறார். தனது சித்தப்பாவின் அரசியலையும் மீறி அகிலேஷ் சமாஜ்வாதி கட்சியை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். உத்திரபிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தை ஐந்தாண்டு காலம் நிர்வகித்த அனுபவம் அவருக்கு உள்ளது. மென்மையான மனிதராக பார்க்கப்பட்ட உத்தவ் தாக்கரே பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு நடுவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி அரசை திறம்பட நடத்தினார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தனி மாநிலத்திற்காக போராடி அதனை வென்று தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தவர் சந்திரசேகர ராவ், இன்று தெலுங்கானா அரசியலில் முதல்வரின் மகன் முக்கிய பங்காற்றுகிறார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் நவீன முகமாக இருக்கிறார் ராமாராவ். அகால மரணமடைந்த ராஜசேகர ரெட்டியின் காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைமை ஜெகன்மோகன் ரெட்டியை ஏனோ ஆதரிக்கவில்லை. வழக்குகள் சிறை என காங்கிரஸ் ஆட்சியிலேயே சொல்லொணா துயரங்களுக்கு ஆளானார். தனிக்கட்சி கண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரசை வீழ்த்தி ஆந்திர அரசியலில் பெரும் சக்தியாக எழுச்சி பெற்றுள்ளார்.
மாயாவதி, நிதீஷ் குமார் போன்ற பெரிய தலைவர்கள் அரசியல் வாரிசாக ரத்த சொந்தங்களிலிருந்து யாரையும் வளர்த்தெடுக்கவில்லை, அவர்களின் வாக்கு சதவீதமும் இடங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.
இந்திய ஜனநாயகத்தில் அரசியல் வாரிசாக ரத்த சொந்தங்கள் பதவி ஏற்கிற பிராந்திய கட்சிகள் வலிமை பெறுவதும், ரத்த சொந்தங்களை முன்னிறுத்தாத மாநில கட்சிகள் படிப்படியாக வலுவிழப்பதும் ஏன்? என்ற முரணுக்கு விடை கிடைக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.