தாய்ப்பால் தாய்க்கும் நல்லது

தாய்ப்பால் கொடுப்பது பாரம்பர்யம் சார்ந்த பழக்கம். நமது தமிழகத்தில் அந்த பழக்கம் சமீப காலமாகவே குறைந்துவருகிறது. மரபார்ந்த வாழ்க்கை முறைகளே மறுபடியும் அந்தப் பழக்கத்தை ஊக்குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

Breastfeeding good for mothers, world breastfeeding week, world breastfeeding day, does breastfeeding affect mother beauty, தாய்ப்பால் தாய்க்கும் நல்லது, தாய்ப்பால் வாரம், தாய்ப்பால், தாய்ப்பால் தினம், தாப்பால் தமிழ்நாடு, கன்னியாகுமரி, breastfeeding not affect mother beauty, mother beauty, Tamilnaddu, breastfeeding rate in tamilnadu

த. வளவன், மூத்த பத்திரிகையாளர்

கருவறையில் இருந்து வெளிவரும் மழலைக்கு தாய்ப்பாலே முதலுணவு. வருங்கால வலிமைக்கு அதுவே அடித்தளம். போதிய நோய் எதிர்ப்பு சக்தியையும் புரதத்தையும் அடக்கிய அமுதம். குழந்தையின் சரிவிகித சத்துணவு. குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்கலாம். முறையாக தாய்ப்பால் கொடுத்தால் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை மரணங்கள் வெகுவாக குறைக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்து.

இந்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 64% பெண்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவது தெரியவந்துள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் 1998ஆம் ஆண்டில் 50% ஆக இருந்தது. அது 2005ல் 55% ஆகவும் உயர்ந்தது. ஆனால், 2009ல் 40% ஆக குறைந்தது. தற்போதைய ஆய்வுப்படி இந்திய அளவில் இந்த விகிதம் உயர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டில் குறைந்திருப்பதை யுனிசெப் ஆய்வு எடுத்து கூறுகிறது.

அதன்படி வள்ளுவரின் முப்பாலான தமிழ்ப்பால் குடித்துவளர்ந்த தமிழகத்தில் 18.8% தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். 2008ன் தொடக்கத்தில் நிகழ்த்திய ஆய்வில் இது 22.4% ஆக இருந்தது. கல்வி குறைந்த ஜார்கண்ட் மாநிலத்தில் 50% தாய்மார்கள் தாய்ப்பாலூட்டி தாய்மையின் பெருமையை நிலைநாட்டுகின்றனர்.

தமிழகத்திலும் குன்றா எழில் மிகுந்த பெண்கள் வாழும் குமரியில் தான் பாலூட்டும் தாய்மார் எண்ணிக்கை அதிகம் என்பது தென்நிலத்துக்கு கிடைத்த பாராட்டு. பாலூட்டுவதால் எழில் குன்றாது என்பதற்கு ஏற்றதொரு எடுத்துக்காட்டு. சென்னையில் 7%, திருவாரூர், தேனி மாவட்டங்களில் 10%, ஈரோடு 12%, தஞ்சாவூர் 13%. ஆனால், கன்னியாகுமரியில் மட்டும் 35%. 2007-08 ல் 22.4% ஆக இருந்த தாய்ப்பால் ஊட்டும் வழக்கம் 2012-2013ல் 18.8% ஆக குறைந்தது.

தாய்ப்பால் அளிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார் உடல்நலனுக்கும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கருப்பை, மார்பக புற்றுநோய்களை தடுக்கலாம். தாய்ப்பால் அருந்தாத குழந்தைகள் நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். தாய்ப்பால் ஒவ்வாமை மற்றும் நுண்ணுயிர்த் தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. தாய்மொழி பேசி மகிழ தவழும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம். ஏனெனில், குழந்தைகளின் பற்கள் நாக்கு உட்பட பேசப் பயன்படும் உறுப்புகள் அதன்மூலமே தகுந்த வளர்ச்சி அடைகின்றன.

தாய்ப்பாலில் மட்டுமே கால்சியமும் பாஸ்பரசும் 2:1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான சத்துவிகிதம். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். அதுவும் கால்சியத்துடன் இணைந்து உப்பாக மாறி குழந்தைகள் உடல்நலனுக்கு மிகுதியாக பயன்படாமல் போய்விடும். சத்துக்கள் சரிவிகிதத்தில் இல்லாவிட்டால் குழந்தைகளின் மென்மையான குடல் நொந்து வயிற்றுப்போக்கு வழி வகுத்துவிடும்.

பசும்பாலில் கேசின் மற்றும் வே (casein and whey protein) என்ற புரோட்டீன் தான் இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கேசின் ஹோமோலாகஸ் (casein homologous to bovine B casein) என்ற புரோட்டீன் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. தாய்ப்பாலில் உள்ள நுண்சத்துக்கள் தான் குழந்தைக்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. இவ்வளவு மகத்துவம் மிகுந்த தாய்ப்பாலில் ஒரே ஒரு குறை இருக்கிறது. இதில் வைட்டமின்- D இல்லை. எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலுடன் வைட்டமின் D சொட்டு மருந்து கொடுக்கப் பட வேண்டும்.

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்க அன்னையர் தடுமாறுவதற்கு பாழாய்ப்போன நமது அந்நிய நாகரீக மோகமும் ஒரு காரணம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய்விடும் என்ற தவறான கருத்தை மேலைநாட்டு நவநாகரீக நங்கையர்கள் நம் பெண்கள் மனதில் விதைத்துவிட்டனர்.

மார்பகம் அழகா, அதன் பின்னிருக்கும் மனம் அழகா என்றால் நமது தாய்மார்களின் பதில் என்னவாக இருக்கும்? பாலூட்டும் மார்பகம் பருக்கவும் சிறுக்கவும் பல காரணங்கள் உண்டு. தாம்பத்யத்தின் பலனாக நிமிர்ந்த அழகு சரிந்து வழுவது இயற்கையாகவே நிகழந்துவிடும். பால் கொடுப்பதால் மட்டும் அது நிலைகுலையும் என்ற நினைப்பு தவறு. இன்னும் சொல்லப்போனால் பால்பெருகும்போதே மார்பகம் விடைத்து தனது முழு அளவையும் நிறையழகையும் காட்டி நிற்கிறது.

மேலும், அன்புக்கு முன்பு அழகுக்கு மதிப்பு அளிக்க முடியுமா? தாய்ப்பால் கொடுக்காதபோது தாய், குழந்தை தொடுதல் குறையும். இதனால் எதிர்காலத்தில் பாசம் குறையும். நமது பாட்டி காலத்தில் ஐந்தாண்டு ஆறாண்டு காலம் பால்குடி மறவாமல் பிள்ளைகள் இருந்ததை இப்போதும் சொல்கிறார்கள். அதனால்தான் நமது தாய், தந்தையர், அன்னையர் சொல்லுக்கு அடுத்த சொல் சொல்லாதவர்களாக இருந்தார்கள்.

பாலூட்டும் தாய்மார் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் ஒரு காரணம். சர்வதேச தொழிலாளர் நிறுவன உடன்படிக்கைப்படி கர்பமுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 14 வார ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப் படவேண்டும். பணி நேரத்தில் தாய்ப்பாலூட்ட இடைவேளை வழங்க வேண்டும். பணியிடங்கள் அனைத்திலும் குழந்தைகளுக்கான காப்பகங்கள் அமைக்கவேண்டும். இவையனைத்தையும் விட, பாலூட்டும் தாய்மார்கள் தங்களது தாய்ப்பாலை பிரித்தெடுக்கவும், சேமித்து வைக்கவும் தனி இடங்களை உருவாக்கித் தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது. தமிழக அரசின் ஏற்பாட்டின்படி நகர பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் 19 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. தொற்றுநோய் காரணமாக 2000ல் உயிரிழப்பு 5 லட்சமாக இருந்தது. இப்போது அது 1 லட்சமாக குறைந்துள்ளது. உலகில் மரணம் அடையும் குழந்தைகளில் பாதி இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தான் . தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை மேம்படுத்திவிட்டால் இந்த இழப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துவிடலாம்.

தாய்ப்பால் கொடுப்பது பாரம்பர்யம் சார்ந்த பழக்கம். நமது தமிழகத்தில் அந்த பழக்கம் சமீப காலமாகவே குறைந்துவருகிறது. மரபார்ந்த வாழ்க்கை முறைகளே மறுபடியும் அந்தப் பழக்கத்தை ஊக்குவிக்க வாய்ப்பு இருக்கிறது. தாய்மொழிக் கல்வியை கைவிட்டதுபோல் தாய்ப்பால் அளிப்பதையும் கைவிட்டுவிட்டால் நம் குழந்தைகள் பிறர் குழந்தைகளாகவே வளரும். மனிதப்பால் குடித்தால் மனிதப் பண்புகள் மலரும். தாய்ப்பால் கொடுக்கும் தாளாண்மை நமது பெண்கள் அனைவருக்கும் வந்துவிட்டால் தாய்மை வாழ்கவென்று தாய்நிலமே கூத்தாடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Breastfeeding good for mothers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express