Advertisment

அதிகமாகும் குடும்ப கடன், நுகர்வு தேவை குறைவு: பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

தற்போதைய நிலையில், துணிச்சலான நடவடிக்கைகள் தேவை. வழக்கம் போல் இது மற்றொரு பட்ஜெட்டாக இருந்தால் பயனில்லை. பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இடையூறுகளைக் களைவதற்கு ஒரு இடைக்கால வழிமுறைகளை பட்ஜெட் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

author-image
WebDesk
New Update
Budget 5 things to watch out Tamil News

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஜூலை 2024 இல் நாடாளுமன்றத்தில் 2024-25 நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்/பிரவீன் கன்னா)

கட்டுரை: இஷான் பக்ஷி

Advertisment

அன்புள்ள எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு,

இன்னும் இரண்டு நாட்களில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய
நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கிறார். உள்நாட்டிலும், உலகளவிலும் ஒரு நிலையில்லாத பொருளாதாரச் சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: In Our Opinion: 5 things to watch out for in the Budget

Advertisment
Advertisement

உள்நாட்டில், பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மந்தநிலை பற்றிய கவலைகள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் முழு ஆண்டுக்கான வளர்ச்சியை வெறும் 6.4 சதவீதமாகக் கணித்துள்ளன. அடுத்த சில வருடங்களுக்கான கணிப்புகளும் பிரகாசமாக இல்லை. எடுத்துக்காட்டாக, அதன் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரம் 6.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என பன்னாட்டு பண நிதியம் (ஐ.எம்.எஃப்) கணித்துள்ளது.

வளர்ச்சியை இயக்கும் சக்திகள் பலவீனமாக உள்ளன. தனியார் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளன. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின்படி, புதிய திட்ட அறிவிப்புகள் கணிசமாக குறைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத்தில் முதலீடுகளைச் செலுத்தி வரும் அரசாங்க மூலதனச் செலவினம் கூட கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. வேலை வாய்ப்பு நிலைமை மோசமாகிவிட்டது. 

அவ்வப்போது எடுக்கப்படும் தொழிலாளர் கணக்கெடுப்புத் தகவல்களின்படி, லட்சக்கணக்கானவர்கள் தொழிலாளர்களாக நுழையும் அதே வேளையில் அதிகமானோர் தனி நபர் சாலையோர கடைகளை அமைப்பது அல்லது வீட்டு வேலைகளில் ஈடுபடுவது போன்ற சுயதொழிலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். உண்மையான ஊதிய வளர்ச்சி தொடர்ந்து மந்தமாகவே உள்ளது. மூன்றாம் காலாண்டு எஃப்.எம்.சி.ஜி. (அன்றாட நுகர் பொருட்கள்) முடிவுகள், தனியார் நுகர்வு விகிதம் பலவீனமாக உள்ளதாகவும், குடும்பங்கள் அதிகக் கடனைப் பெறுவதாகவும் குறிக்கிறது.

உலகளவில், இதுவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிதானத்தைக் காட்டினாலும், வரிவிதிப்பின் அச்சுறுத்தல் பெரியதாகவே உள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்ததாக இப்போது கூறப்படுகிறது. இருப்பினும், இது எப்படி இருக்கும் என்பதில் நிச்சயமற்ற நிலையே தொடர்கிறது. அடுத்த சில நாட்களில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமும் நடத்தப்படும். இது அமெரிக்காவில் வட்டி விகிதங்களின் பாதையைத் தெளிவுபடுத்தும். 10 வருட அமெரிக்க பத்திர ஈட்டுத் தொகை 4.61 சதவீதமாக உள்ளது. எவ்வாறாயினும், டாலர் குறியீடு சமீபத்திய நாட்களில் வீழ்ச்சியடைந்து, தற்போது 107.5 ஆக உள்ளது.

இந்தப் பின்னணியில், பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?

முதலில், பொருளாதாரம் எந்த விகிதத்தில் வளரும் என்று பட்ஜெட் கருதுகிறது. கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களும் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 10.5 சதவீதமாகக் கருதியது. இருப்பினும், 2023-24 ஆம் ஆண்டில், உண்மையான வளர்ச்சி 9.6 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு, அது 9.7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டு வருடங்களாக, பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதத்திற்கும் குறைவாகவே வளர்ந்துள்ளது. பொருளாதாரம் இந்த குறைந்த வளர்ச்சிப் பாதையிலேயே குடிகொண்டால், அது அரசாங்கத்தின் கடன்-பற்றாக்குறை திட்டவியலில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக, அரசாங்கம் நிதி ஒருங்கிணைக்கும் பாதையில் தொடருமா? 2021-22 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் 2025-26க்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்குக் கீழே கொண்டு வருவதற்கான தனது நோக்கத்தை அறிவித்திருந்தார். கடந்த பட்ஜெட்டிலும் அவர் இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும், இப்போது சிலர் ஒருங்கிணைப்பு வேகத்தை தளர்த்துவதற்கு ஆதரவாக வாதிடுகின்றனர். இது அடிப்படை பொருளாதார வேகம் பலவீனமாக இருக்கும் நேரத்தில் அதன் செலவினங்களை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இடமளிக்கும்.

மேலும், கடந்த பட்ஜெட்டில், நிதியமைச்சர், "ஒவ்வொரு ஆண்டும் நிதிப்பற்றாக்குறையை, மத்திய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தின் அளவில் ஒவ்வொரு ஆண்டும் குறையும் பாதையில் இருக்க முயற்சி எடுக்கப்படும்" என்றும் கூறியிருந்தார். இதை மிகத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அரசாங்கம் விரிவான இடைக்கால நிதிக் கொள்கை அறிக்கையை வழங்க வேண்டும்.

மூன்றாவதாக, தனியார் துறை முதலீடுகளை எளிதாக்குவதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், வீட்டு நுகர்பொருள் உபயோகத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கும். அரசாங்கம் பெருநிறுவனங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தது மட்டுமின்றி, சமீபத்திய ஆண்டுகளில் மூலதனச் செலவினத்தை அதிகரித்துள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் அதன் மூலதனம் 2019-20-ல்  1.7 சதவீதத்திலிருந்து 2024-25ல் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஆரோக்கியமான கார்ப்பரேட் மற்றும் வங்கி இருப்புநிலைகள் இருந்தபோதிலும், தனியார் துறை முதலீடுகளில் இது தோல்வியடைந்துள்ளது. தனியார் துறையின் நம்பிக்கையை அதிகரிக்க பட்ஜெட்டில் தகுந்த நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். இது வேலை உருவாக்கம், குடும்ப வருமானம் மற்றும் தேவை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொழிலாளர் சந்தையும் பலவீனமாகவே உள்ளது. 2017-18ல் 49.8 சதவீதமாக இருந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2023-24ல் (வயது 15 மற்றும் அதற்கு மேல்) 60.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொழிலாளர் கணக்கெடுப்பு தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும், அதே காலகட்டத்தில், சுயதொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பங்கு 52.2 சதவீதத்தில் இருந்து 58.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டில், 44.1 விழுக்காடு தொழிலாளர்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். 2023-24ல் இது 46.1 சதவீதமாக இருந்தது. இந்த ஆய்வறிக்கையின்படி, கிராமப்புறங்களில், 2023-24ல் முடிவடையும் ஐந்து ஆண்டுகளில் உண்மையான ஊதிய வளர்ச்சி -0.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், இது வெறும் 0.5 சதவீதமாக இருந்தது.

குடும்ப நுகர்பொருள் தேவை உபயோகம் குறைவாகவே உள்ளது. மூன்றாம் காலாண்டில், எஃப்.எம்.சி.ஜி.-யின் முக்கிய அங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்-ன் வளர்ச்சி அளவில் கிட்டத்தட்ட வேறுபாடு இல்லை. ஜி.எஸ்.டி வசூலிலும் பெரிய அளவில் மாற்றமில்லை. இந்த நுகர்வு மந்தநிலை வருமான வரி விகிதங்களைக் குறைக்கும் கோரிக்கைகளுக்கு வழிவகுத்திருக்கின்றது. இருப்பினும், வருமான வரிக் குறைப்புக்கள் தொழிலாளர் சக்தியில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பாதிக்கும், மேலும் அவை எந்த அளவிற்கு நுகர்பொருள் தேவையை அதிகரிக்க முடியும் என்பது விவாதத்திற்குரியது.

நான்காவதாக, வர்த்தகம் தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக வரவு செலவுத் திட்டம் சைகை செய்யுமா? அது கட்டணங்களைக் குறைத்து, பாதுகாப்புவாதத்தைத் தவிர்க்குமா? இது வர்த்தகத்திற்குக் கைகொடுத்து, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்திய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை எளிதாக்குமா? 

கடைசியாக, இது ஒரு தைரியமான தனியார்மயமாக்கல் திட்டத்தை உருவாக்குமா?

தற்போதைய நிலையில், துணிச்சலான நடவடிக்கைகள் தேவை. வழக்கம் போல் இது மற்றொரு பட்ஜெட்டாக இருந்தால் பயனில்லை. பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இடையூறுகளைக் களைவதற்கு ஒரு இடைக்கால வழிமுறைகளை பட்ஜெட் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

அடுத்த வாரம் வரை, இஷான்

மொழிபெயர்ப்பு: எம். கோபால் 

 

Nirmala Sitharaman Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment