இந்திரா காந்தியால் நடைமுறைப்படுத்தப்பட்ட எமெர்ஜென்சியின் 43வது வருடத்தினை, கடந்த மாதம் பாஜக நினைவு கூர்ந்தது. அந்த நாட்கள் இந்தியாவின் இருண்ட காலம் என்றும் வர்ணித்தது பாஜக. இதற்கு பதில் தரும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா “மோடியின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சி. டெல்லியின் சுல்தானாக இருந்த ஔரங்கசீப்பினை விட மிகவும் கொடுமையான ஆட்சியை நடத்துகிறார்” என்று கூறினார்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தனர். ஏன்னெனில் 2015ம் ஆண்டு டெல்லியில் இருக்கும் ஔரங்கசீப் சாலையின் பெயரை, அப்துல் கலாம் சாலையாக மாற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்ததிற்கு காங்கிரஸ் தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது.
ஔரங்கசீப் பற்றிய காங்கிரஸ் கட்சியின் எண்ணமும் புரிதலும் முற்றிலும் வேறு என்பதை சுர்ஜிவாலா மறந்துவிட்டார். அதைமட்டும் அல்ல, ஔரங்கசீப் பற்றிய சில முக்கியமான வரலாற்றுப் பதிவினையும் மறந்துவிட்டார்.
Advertisment
Advertisements
சுதந்திர போராட்ட வீரர் மற்றும் முன்னாள் ராஜ்ய சபை உறுப்பினர் டாக்டர் பிஷாம்பர் நாத் பாண்டே, ஔரங்கசீப்பின் மதம் சார்ந்த கொள்கைகள் பற்றி வெளி உலகத்திற்கு கொண்டு வந்தவர். ஜவஹர்லால நேருவின் நெருங்கிய நண்பரும், காந்தியவாதியுமான இவர் “இந்திய காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு வரலாறு” (A Centenary History of the Indian National Congress) என்ற புத்தகத்தினையும் எழுதியுள்ளார்.
ஔரங்கசீப் தொடர்பாக, டெல்லி ஜமியா மிலியா இஸ்மாலியாவில் 1993ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 17ம் தேதி அன்று ஒரு சிறப்பு வகுப்பினை எடுக்கச் சென்றார். அங்கு இந்துக்களுக்கு ஔரங்கசீப் அளித்த உரிமைகள் பற்றி வகுப்பு எடுத்தார்.
மதசார்பற்ற ஔரங்கசீப்
டெல்லியின் சுல்தானாக இருந்த மொகலாய மன்னர் ஔரங்கசீப்
"அலகாபாத்தில் இருக்கும் சோமேஷ்வர் நாத மகாதேவ் கோவில், உஜ்ஜியினியில் இருக்கும் மகாகாலேஷ்வரா கோவில், சித்ரகுட் பகுதியில் இருக்கும் பாலாஜி கோவில், கௌஹாத்தியில் இருக்கும் உமானந்தா கோவில் மற்றும் ஜெயின் கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் அனைத்தையும் திறம்பட கவனித்து வந்தவர்களுக்கு முறையே பரிசுகள் மற்றும் கோவில்களுக்கு நிலங்கள் வழங்கி சிறப்பு செய்தவர் ஔரங்கசீப்" என்று கூறியிருக்கிறார் பாண்டே.
1659ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி ஔரங்கசீப் கொடுத்த அரசாணைப் பற்றியும் அதில், இந்துக்கள் புதிதாக கோவில்கள் கட்டக்கூடாது என்றும் குறிப்பிட்டதைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள் அங்கிருந்தவர்கள். அதற்கு பதிலளித்த பாண்டே “இந்துக்களின் புராதானக் கோவில்கள் எந்த காலத்திலும் அழிவிற்கு ஆளாகக் கூடாது” என்றும் அந்த அரசாணையின் கீழ் குறிப்பிடப்பட்டதை மேற்கோள் காட்டினார். மேலும் இந்த பகுதிகளில் வசித்து வந்த பிராமண சமூகத்தினருக்கு எந்தவொரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக செயல்பட்டவர் ஔரங்கசீப்.
இந்து மன்னர் ஒருவர் ஆண்டு வந்த அசாம் பகுதியை கைப்பற்றினார் ஔரங்கசீப். அப்பகுதியில் இருந்த உமானந்தா கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியின் வாழ்வாதாரத்திற்கு இந்து மன்னர் நிலம் மற்றும் காட்டின் ஒரு பகுதியினை கொடுத்திருந்தார். அங்கு ஆட்சி அமைத்த பின்பு, ஔரங்கசீப்பும் எந்த ஒரு தடையுமின்றி அந்த பிராமணருக்கான அனைத்து வசதிகளையும் வந்ததையும் குறிப்பிட்டார் பாண்டே.
சமரசமற்ற நீதி வழங்கும் ஔரங்கசீப்
அகமதபாத் சிந்தாமன் கோவிலை தரைமட்டமாக்கியவர் ஔரங்கசீப் என்ற ஒரு எண்ணம் வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கிறது. இதற்கு பதில் அளித்த பாண்டே, “அதே ஔரங்கசீப் தான் சதுரஞ்சயா மற்றும் அபு கோவில்களுக்கு நிலம் கொடுத்தவர்” என்று குறிப்பிட்டார். “கோல்கொண்டாவின் ஆட்சியாளராக இருந்த தானாஷா ஔரங்கசீப்பிற்கு கட்ட வேண்டிய வரியை கட்டாமல், ஜாமா பள்ளிவாசலை கட்டியுள்ளார். இதனை அறிந்த ஔரங்கசீப் சிறிதும் தயங்காமல் அந்த பள்ளிவாசலை இடிக்க உத்தரவிட்டார். நீதி என்று பார்க்கும் போது ஔரங்கசீப் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்று எந்தவித பாகுபாடும் பார்ப்பதில்லை என்பதற்கு இதுவே சான்று” என்று குறிப்பிட்டார் அந்த வகுப்பில்.
பாண்டேவின் ஆராய்ச்சி மற்றும் கருத்துகள் ஔரங்கசீப் ஒரு மதவாதி இல்லை என்பதை வெளிப்படையாக உணர்த்துகிறது. ஜூன் 26ம் தேதி சுர்ஜிவாலா ஏன் ஔரங்கசீப்பினை மோடியுடன் எந்த கோணத்தில் ஒப்பிட்டு பேசினார் என்று கூற வேண்டும்.