சுஷாந்த் சிங்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது. நடத்தப்பட்ட தாக்குதல்களின் வீடியோக்கள் கடந்த புதன் கிழமை அன்று ஊடகங்களில் அதிகாரப் பூர்வம் இல்லாமல் வெளியிடப்பட்டது.
காஷ்மீரில் இருந்த உரி ராணுவ முகாமின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்கள் மேற்கொண்டார்கள். அதில் 19 இந்திய வீரர்கள் உயிரிழந்தார்கள். அதன் விளைவாகவே இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மேற்கொள்ளப்பட்டது.
ஓய்வு பெற்ற வடக்கு மாகாண ராணுவ தளபதி ஹூடா இதைப் பற்றி பத்திரிக்கை ஒன்றில் தெரிவித்த போது, “மக்கள் ராணுவத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது” என்று கூறினார். இறந்த 19 ராணுவ வீரர்களின் இழப்பிற்கு தக்க பதிலடி தருவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், ராணுவத்தின் பலத்தினை பாகிஸ்தான் உணர வேண்டும் என்றும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நிறைய பேர் எண்ணம் தெரிவிக்கின்றார்கள்.
ஆனால் அதை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன்பு எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் போல் இதையும் பாதுகாப்பாய் வைத்திருக்கலாம். ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு, அது வெற்றி அடையும் போது, அடுத்த நாள் அதனை டெல்லியில் இந்திய ராணுவத் தளபதி தெரியப்படுத்துவார். அப்படி இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிய தகவல்கள் தெரிவிக்கும் போது எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தான் அறிக்கை தெரிவித்தார் தவிர எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை.
சர்வதேச எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பினையும் அன்று அவர் வெளியிடவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் இருக்கும் போது எக்காரணம் கொண்டும் விமானப் படையும், ராணுவமும் எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த வீடியோ ஆதாரத்தினையும் முறையாக அரசு வெளியிடவில்லை. ஆனால் முன்னாள் ராணுவ தளபதி ஹூடா அந்த வீடியோக்கள் அனைத்தும் உண்மை என்று ஒப்புக் கொண்டார். இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட நாமே ஒரு காரணத்தை கொடுத்தது போல் அமைந்துவிடும்.
அதிகாரப் பூர்வமற்று வெளியிடப்பட்ட இந்த வீடியோக்களின் இடையிடையே நரேந்திர மோடியின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணைத்து, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. ராணுவ தாக்குதல்கள் மூலம் அரசியல் ஆதாயம் அடையவே இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது போல் ஒரு பிரம்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலமாக பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதல்கள் குறைக்கப்பட்டு, காஷ்மீரில் அமைதியை நிலைநிறுத்துவதிற்கு பதிலாக அரசியல் ஆதாயங்களை அடையவே இது பயன்பட்டுள்ளது.
1948, 1965, 1971, மற்றும் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ தாக்குதல்களிலும் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றி தான். குறிப்பாக 1971ம் ஆண்டு, பாகிஸ்தான் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவுட் டேட்டட் ஆன நம் ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு பதிலாக புதிய ஆயுதங்களை தர வேண்டும். ராணுவ பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பிற்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை இவ்வரசு கருத்தில் கொள்ளுதல் நலம்.
வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு ராணுவத்தின் பலத்தினை அதிகரிப்பதற்கு பதிலாக, அதற்கான ஆதாயத்தினைப் பெற்றுக் கொண்டு அரசியலில் ஆதாயம் தேடுவது வருத்ததிற்குரிய ஒன்றாகும். அதைத்தான் இந்த வீடியோவும் காட்டுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் சுஷாந்த் சிங் இன்று (04/07/2018) எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
தமிழில் நித்யா பாண்டியன்