மித்ரன்
அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அண்மையில் முக்கியமான விஷயம் குறித்துப் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சுயநலம் சார்ந்த அக்கறையுடன்தான் அவர் அதைச் செய்தார் என்றாலும் அவர் செய்தது முக்கியமான விவாதத்துக்கும் சில சீர்திருத்தங்களுக்கும் வழி வகுத்தால் அது மக்களுக்கு நன்மை பயக்கும்.
வருமானத்துக்கு மீறி சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்கிரஹாரச் சிறையில் இருக்கும் சசிகலா, சிறையில் தனக்கு அதிக வசதிகள் வேண்டும் என்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்குக் கணிசமான பணத்தை லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை அடுத்துச் சிறையில் சில பல மாற்றங்கள் நடந்திருப்பதுடன், சசிகலாவையே வேறொரு சிறைக்கு மாற்றும் யோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நமது சிறைச்சாலைகளின் அவல நிலை
சசிகலா விவகாரம் இருக்கட்டும். நமது சிறைச்சாலைகள் எப்படி இருக்கின்றன என்னும் முக்கியமான கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்புகிறது. வசதி படைத்தவர்களுக்குச் சிறையில் பல சலுகைகள் உண்டு என்றாலும் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியச் சிறைச்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பதே யதார்த்தம்.
சிறைவாசம் என்பது குற்றங்களுக்காகச் சட்டம் வழங்கும் தண்டனை. பாவங்களுக்காக வழங்கப்படும் நரக வாசம் அல்ல. ஆனால் இந்தியச் சிறைகள் பொதுவாக நரக வாசம் என்று சொல்லத்தக்க விதத்தில்தான் இருக்கின்றன. சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் திணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் உனவு, உடை, கழிவறை வசதிகள், தூங்கும் வசதி ஆகியவற்றில் குறைந்தபட்ச மனிதாபிமானமோ, மரியாதையோ இருப்பதில்லை என்பதைச் சிறையில் இருந்த பலர் பல இடங்களில் பதிவுசெய்திருக்கிறார்கள்.
எவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்தவராக இருந்தாலும் சிறையில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகளுக்கான அடிப்படைத் தர அளவுகோல்கள் இருக்கின்றன. நாகரிக வளர்ச்சி பெற்றதாகச் சொல்லப்படும் நாடுகள் அவற்றைக் கடைப்பிடிக்கவேசெய்கின்றன. ஆனால், பல விதங்களிலும் வளர்ந்துள்ள, வேகமாக வளர்ந்துவருகிற இந்தியாவில், மனித வாழ்வுக்கான அடிப்படைக் கண்ணியம்கூடக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தூக்கு மரத்தின் நிழலில்
இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.ஏ.பாலன், ‘தூக்கு மரத்தின் நிழலில்’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். தனது சிறைவாச அனுபவங்களை அவர் அதில் விவரித்திருக்கிறார். உணவு, கழிவறை, படுக்கை வசதி, உடல் நலக் குறைவுக்கான சிகிச்சைகள், அடிப்படை கண்ணியம் ஆகிய அம்சங்களில் விலங்குகளை விடவும் மோசமான விதத்தில் மனிதர்கள் சிறையில் நடத்தப்படுவதை அவர் விவரித்திருக்கிறார். அந்த நூல் வெளியாகிச் சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நமது சிறைகளின் நிலைகளில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.
தண்டனை பெற்றவர்களுக்காவது சில சலுகைகள் உண்டு. விசாரனைக் கைதிகளின் நிலை மிகவும் கொடுமையானது. ‘விசாரணை’ போன்ற படங்கள் இதையெல்லாம் அம்பலப்படுத்தினாலும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
குற்றவாளிகள் திருந்தி வாழ உதவ வேண்டும் என்பது சிறை தண்டனையின் நோக்கங்களில் ஒன்று. நமது சிறைகளில் நிலவும் சூழல் குற்றவாளிகளைத் திருத்துவதை விடவும் அவர்கள் மனங்களை மேலும் இறுக்கமாக்கவும் சமூகத்தின் மீதும் அதிகார அமைப்பின் மீதும் வன்மம் ஏற்படவுமே துணைபுரிகிறது.
தில்லி எரவாடா சிறை போன்ற சில சிறைகளில் நூலகங்கள் உள்ளன. சில சிறைகளில் உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் ஆகிய வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான சிறைகளின் பொதுவான சூழல் கொடுமை என்று சொல்லத்தக்க விதத்தில்தான் இருக்கிறது.
சென்னையில் ஓர் அனுபவம்
சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அரசியல் கைதியாக இருந்துள்ள பத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான த.நீதிராஜன் தன் அனுபவங்களை முகநூலில் பதிவுசெய்திருக்கிறார். அந்தப் பதிவு நமக்குச் சில உண்மைகளை உனர்த்துகிறது. அதிலுள்ள சில பகுதிகளைப் பாருங்கள்:
“அண்ணாந்து பார்க்கிற காம்பவுண்ட் சுவர்கள். தனிச் சிறையறைகள், பொதுச் சிறையறைகள் எனச் சிறை பலவிதமாக இருந்தது. கருப்புக் கல் பதித்த தரையில் படுக்க வேண்டும். அடர்த்தியான அழுக்கு தெரியாத கருப்புப் போர்வை சிறப்புச் சலுகை. நசுங்கிப் போன அலுமினிய சாப்பாட்டுத் தட்டு. புழுத்த அரிசிக் கஞ்சி. நாறும் சாம்பார். நான் இருந்தபோது சுதந்திர தினத்தின் பொன்விழா வேறு வந்தது. அதே அரிசியில் பாயசம் வைத்து கலக்கினார்கள்.
கதவுகள் இல்லாத கழிப்பறைகள். அதன் அருகிலேயே தலைவைத்துப் படுக்க வேண்டும். கூவத்தின் சாக்கடைக் கலரில் குளிக்க தண்ணீர் தொட்டி. அதைச் சுற்றி நின்று குளிக்க வேண்டும். ஆனால், சிறைக்குள் கஞ்சா, பீடி வியாபாரம் எல்லாம் குஷியாக நடந்தது” என்று நீதிராஜன் பதிவுசெய்கிறார்.
அரசியல் கைதிகளுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களை நினைத்துப் பாருங்கள்.
“பணக்காரர்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஏழைகளுக்கு எதுவும் கிடைக்காது. பெரிய குற்றவாளிகளுக்குக் கூடுதல் மரியாதை” என்றும் அவர் சொல்கிறார். மிச்ச மீதி இருக்கும் மனிதத் தன்மையையும் இந்தியச் சிறைகள் சிதைத்துவிடும் என்று சொல்பவர், “குற்றவாளிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள்” என்று நம் சிறைகளை வர்ணிக்கிறார்.
இதெல்லாம் சாதாரணக் கைதிகளுக்குத்தான். பணம் படைத்தவர்களுக்கோ எல்லாமே கிடைக்கும். சசிகலாவுக்குக் கிடைத்ததுபோல.
சிறைச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காகப் பல கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லா கமிட்டி என்பது அவற்றில் முக்கியமானது. ஆனால், எல்லாப் பரிந்துரைகளும் அதிகார வர்க்கத்தின் அலமாரிகளில் தூங்குகின்றன.
நமது சிறைச்சாலைகள் மனிதர்களுக்காக மனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகளாக எப்போது மாறும்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.