Advertisment

சொன்னால் முடியும் : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமா மோடி அரசு?

உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News in Tamil : Latest, Breaking, and Live News Updates, Cauvery Management Board Meeting

Cauvery Management Board Meeting

ரவிக்குமார்

Advertisment

காவிரி பிரச்சனை என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1807ல் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892ல் முதன் முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அதுகுறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

1910ல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்து மத்திய அரசிடம் மைசூர் அரசு பிரச்சனையைக் கொண்டு சென்றது. மத்திய அரசு, கண்ணாம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.

மைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 1914ஆம் ஆண்டு மே மாதம் தனது தீர்ப்பை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதை இங்கே எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

‘‘இரண்டு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் ஒரு தீர்வை தரமுடியாததற்காக நான் வருந்துகிறேன். இரண்டு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளும் ஏற்கத் தக்கவையாக இல்லை. இரு தரப்பினருமே ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தனர். தற்போதைய சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதே சமயம், மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என கிரிஃபின் தனது உத்தரவில் தெரிவித்தார்.

கிரிஃபின் கூறியதை சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. அது மேல் முறையீடு செய்தது. மீண்டும் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டன. அதன் இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகள் நடைமுறையில் இருக்குமென்று அப்போது தீர்மானித்தார்கள்.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் மேலும் சில துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 1929 ஒப்பந்தப்படி மைசூர் அரசு கிருஷ்ணராஜசாகர் திட்டத்தையும், சென்னை மாகாண அரசு மேட்டூர் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு நிலைமைகள் மாறின. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபிறகு காவிரி சிக்கல் மேலும் தீவிரமடைந்து விட்டது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்கு சற்று முன்பு மத்திய அரசு ‘‘காவிரி உண்மை அறியும் குழு’’ ஒன்றை அமைத்தது. அந்தக்குழுவும் 1972ல் தனது அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் பின் வாங்கிக்கொண்டன. பல ஆண்டுகள் சென்ற பிறகு மத்திய அரசு 1990ல் அமைத்தது தான் ‘காவிரி நடுவர் மன்றம்’ ஆகும்.

நீதிபதி என்.பி.சிங் தலைமையிலான காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி வழங்கியது. 1980 ல் இருந்து- 1990 க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வந்த காவிரி நீரின் அளவைக் கணக்கிட்ட நடுவர் மன்றம் அதிலிருந்து ஒரு சராசரியைக் கணக்கிட்டு தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும் என அந்த இடைக்காலத் தீர்ப்பில் கூறியது. அதுமட்டுமின்றி கர்நாடகத்தில் அப்போது சாகுபடி செய்யப்பட்ட்டுவந்த 11.20 லட்சம் ஏக்கர் பரப்பை அதிகரிக்கக்கூடாது எனவும் ஆணையிட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமது மாநில நலன்களுக்கு எதிராக உள்ளது என்று குற்றம் சாட்டிய கர்நாடக அரசு அந்த இடைக்காலத் தீர்ப்பை ரத்து செய்து தமது சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழகத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் சட்டத்தை ரத்து செய்ததோடு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு செல்லும் எனவும் தீர்ப்பளித்தது.

அப்போது தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலித தந்த அரசியல் அழுத்தத்தின் காரணமாக அன்றைய பிரதமர் திரு.நரசிம்மராவ் அந்த உத்தரவை அரசிதழில் வெளியிடச் செய்தார். உடனடியாக அன்றைய கர்னாடக முதல்வர் திரு.பங்காரப்பா, மாநிலம் தழுவிய ‘பந்த்’ போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். கர்னாடகத்தில் வாழ்ந்த தமிழர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர்.

பெங்களூர், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர் ஆகிய பகுதிகளில் கலவரம் பரவியது. தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். மூன்று நாட்கள் நடந்த கலவரத்தில் சுமார் பத்தாயிரம் பேர் காயமுற்றனர். மூன்னூறு கோடி ருபாய் மதிப்புள்ள தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

நீதிபதி என்.பி.சிங் தலைமையிலான காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வழங்கியது. ஐந்து வால்யூம்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் காவிரியில் இருக்கும் மொத்த நீர் 789 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டு அது பகிர்ந்தளிக்கப்பட்டது. கர்நாடக எல்லையில் உள்ள பில்லி குண்டுலு நீர் தேக்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டுமென்ற குறிப்பான ஆணையை நடுவர் மன்றம் பிறப்பித்தது. கேரளாவுக்கு 30 டி.எம்.சி.யும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.யும் வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

தமிழகத்துக்கு 566 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டுமென்று நடுவர் மன்றத்தின் முன்பு தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. தமக்கு 456 டி.எம்.சி. நீர் தேவையென கர்நாடகம் வற்புறுத்தி வந்தது. கர்நாடகத்தில் காவிரி படுகைப் பகதியில் 48 தாலுகாக்கள் உள்ளன. அவற்றில் 27 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதைக் கணக்கில் கொண்டு தண்ணீர் ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் கர்நாடகத்துக்காக ஆஜர் ஆன மூத்த வழக்கறிஞர் அனில் திவான் கோரியிருந்தார். பிரபல வேளாண் விஞ்ஞானி ஜே.எஸ்.கன்வார் என்பவர் கர்நாடகத்தில் பெய்யும் மழை அளவு குறித்துக் கூறிய விவரங்களை அவர் கர்நாடகத்துக்கு சாதகமாக எடுத்துக் காட்டியிருந்தார். நடுவர் மன்றமோ தனியாக நிபுணர்களை அனுப்பித் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பயிர் செய்யப்படும் நிலத்தின் பரப்பைக் கணக்கிட்டது.

கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தரவேண்டிய நீரின் அளவையும் நடுவர் மன்றம் வரையறுத்தது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டு மாதத்தில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாடுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியது. நடுவர் மன்றத்தால் வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு தமிழகம் கேட்ட அளவை விடக்குறைவுதான் என்ற போதிலும், அது ஒப்பீட்டளவில் நியாயமான தீர்ப்பாகவே அமைந்தது என தமிழ்நாட்டு விவசாயிகள் கருதினர். நடுவர் மன்றம் நிர்ணயித்த அட்டவணைப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணையை ஜூன் மாதத்தில் பாசனத்துக்காகத் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது என்று ஆறுதல் பட்டனர். ஆனால் , நடுவர் மன்றம் கூறியபடி ஒரு மாதம்கூட கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படவில்லை எனக் காரணம் காட்டி கர்நாடகா நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்தது.

2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசால் 2013 ஆம் ஆண்டுதான் அரசிதழில் வெளியிடப்பட்டது. நடுவர்மன்றத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணையானது என நதிநீர் பங்கீட்டுச் சட்டம் தெரிவித்தாலும் அதை கர்நாடகம் மதிக்கவில்லை. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதனால் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் வழக்கு தொடுக்கவேண்டியதாயிற்று. அந்த வழக்கில்தான் இப்போது உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம், மத்திய அரசு, உச்சநீதிமன்றம் என பந்தாக உதைபட்ட காவிரிப் பிரச்சனைக்கு இப்போதாவது முடிவு தெரியுமா? உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியே இப்போது தமிழக விவசாயிகளின் மனதில் நிறைந்திருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அதை சகித்துக்கொண்டு மத்திய அரசின் நடவடிக்கை எப்படி அமையப்போகிறது எனத் தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டுள்ளனர். அவர்களது அமைதிக்கும், மௌனத்துக்கும் அதுதான் காரணம்.

தமிழ்நாட்டுக்கு வருகைதரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக் கெடுவான 2018 மார்ச் 30க்குள் காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்படும் என அறிவிப்பாரா? அல்லது அதிமுக அரசின் இலவசத் திட்டத்தைத் துவக்கிவைப்பதோடு போய்விடுவாரா?

strong>(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)

Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment