சொன்னால் முடியும் : வரலாறு இவர்களை விடுதலை செய்யுமா?

டார்வினின் கோட்பாடே தவறு என்று கூறும் விஞ்ஞானிகளால் ஆளப்படும் நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது தேசத் துரோகக் குற்றம் தான்.

ரவிக்குமார்

காவிரியில் தண்ணீர் விடமாட்டோம் என கர்னாடக அரசு மறுத்தால் நமக்கென்ன, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டு நாட்டு மக்கள் கூப்பாடு போட்டாலும் கவலையென்ன ஆண்டாள் பிரச்சனையை விடப் போவதில்லையெனச் சிலர் சபதம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ’தாசி மகன்’ ‘தலை உருண்டிருக்கவேண்டும்’ ‘நாக்கை அறுக்கவேண்டும்’ என்ற சாத்வீகமான வசனங்கள்; மனம் முதிரா சிறுமிகளின் பின்னிரவுக் காணொளிகள் முதலான உப கதைகளோடு மூன்று வாரங்களைத் தாண்டி ஊடகம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது இந்த அபத்த நாடகம்.

கவிஞர் வைரமுத்துவுக்கு முன்பு ’அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதியபோதே கவியரசு கண்ணதாசன் ஆண்டாளின் தமிழைப் போற்றியிருக்கிறார். ” ஆண்டாள் என்றொரு பெண்பாற் பிறப்பு இல்லை என்றும், அது பெரியாழ்வார் தமக்கே கற்பித்துக்கொண்ட பெண்மை என்றும் சிலர் கூறுவர்” என அதில் ராஜாஜி அவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது கருத்தை எடுத்துக்காட்டும் கண்ணதாசன், “ஆனால், வடக்கே ஒரு மீராபாயைப் பார்க்கும் தமிழனுக்குத் தெற்கே ஓர் ஆண்டாளும் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வரும்” என்று அதற்கு மறுப்பு கூறிவிட்டு, “அது எப்படியாயினும், நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அரிய கலைச் செல்வம்” என ஆண்டாளின் பாடல்களில் மூழ்கப் போய்விடுகிறார். கவியரசைக் காட்டிலும் தனது ஆட்சிப் பரப்பு அதிகம் எனக் காட்ட நினைத்த கவிப்பேரரசு ஆண்டாளின் தமிழில் ‘நீர்வழிப் படூஉம் புணைபோல்’ போகாமல் ஆராய்ச்சி என்னும் எதிர்நீச்சல் பழகப் பார்த்தார். டார்வினின் கோட்பாடே தவறு என்று கூறும் விஞ்ஞானிகளால் ஆளப்படும் நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது தேசத் துரோகக் குற்றம் என்பது அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஆண்டாள் பக்தர்களின் ‘தர்ம யுத்தத்துக்கு’ வெற்றி கிடைத்ததுபோல இப்போது தினமணி நாளேட்டின் ஆசிரியர் மன்னிப்புக் கேட்ட செய்தி வெளியாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.  அங்கு சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்துப் பேசியதாகவும்  மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டதாகவும் ஜீயர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி ஆசிரியரின் இந்தச் செய்கை கவிஞர் வைரமுத்துவை வைத்து கூட்டம் நடத்தியதையும், அவரது கட்டுரையைத் தினமணியில் வெளியிட்டதையும் தவறு என அவர் ஒப்புக்கொண்டதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது. தினமணி ஆசிரியரின் மன்னிப்புக் கோரல் அவர் செய்த தவறுக்கு ஒப்புதல் வாக்குமூலமாக மட்டுமின்றி கவிஞர் வைரமுத்து குற்றமிழைத்துவிட்டார் என சாட்சியமளிப்பதாகவும் இருக்கிறது. இதன்மூலம் கவிஞர் வைரமுத்துவுக்கு தினமணி ஆசிரியர் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார். ’உங்களுக்கு வேறு வழியில்லை, கண்ணீர் மல்க நீங்கள் கொடுத்த விளக்கம் போதாது, நீங்களும் என்னைப்போல ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று தண்டனிட்டுத்தான் ஆகவேண்டும்’ என்று அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
தினமணி ஆசிரியர் தானே விரும்பி மன்னிப்பு கோரியதாக நான் எண்ணவில்லை. நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட்டு மன்னிப்பு கோரியிருக்கிறார். அதில்தான் இந்தச் சூழலின் ஆபத்து வெளிப்படுகிறது.

வகுப்புவாதத்தின் அச்சுறுத்தல் இங்கே பலனளிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாகத் தயங்கித் தயங்கி அறிக்கைவிட்ட அரசியல் கட்சிகள், ‘வருத்தம் தெரிவித்தற்குப் பிறகும் அவரை மிரட்டுவது சரியல்ல’ என்ற ரீதியிலேயே பெரும்பாலும் பேசின. கவிஞர் வைரமுத்துவை ‘தாசி மகன்’ என்று வசை பாடியவர்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அவர்கள் எவரும் வலியுறுத்தவில்லை.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கோரும்படி செய்யப்பட்டதை ஊடக சுதந்திரத்தின்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகவே நாம் கருதவேண்டும்.

2017 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஊடகங்களின்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை தி ஹூட் என்ற இணையதளம் தொகுத்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. ஊடகத்தினரை அச்சுறுத்தியதாக இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளை எடுத்துக் காட்டியிருக்கும் அந்த அறிக்கை அதில் பத்து வழக்குகள் பாஜக மற்றும் பிற இந்துத்துவ அமைப்புகள்மீது பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

தமிழ்நாட்டில் 18 வழக்குகளை அந்த அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது. ஊடகங்களின்மீது மனநஷ்ட வழக்குகள் ஏழும்; தேசத் துரோக வழக்கு மூன்றும்; வெறுப்புப் பிரச்சாரம் செய்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஊடகங்களின் வாயை மூடுவதற்கு வழக்கு, நீதிமன்றம் என்னும் வழியை வகுப்புவாத அமைப்புகள் அண்மைக்காலமாகப் பின்பற்றி வருகின்றன. எழுத்தாளர்களுக்கு எதிராகவும் இந்தத் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. ஊடகங்களை அச்சுறுத்தி அவை உண்மையைப் பேசாமல் தடுப்பது; பிரபலமான எழுத்தாளர்களை அச்சுறுத்துவதன்மூலம் மற்றவர்களின் குரலை அடக்குவது – இதுதான் வகுப்புவாத அமைப்புகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்திவரும் செயல்திட்டம். உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதை மீறி ஒரு திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என வன்முறையை ஏவும் வகுப்புவாதக் குழுக்களின் நடைமுறை இத்தாலியில் பாசிச அரசு நடைபெற்றபோது அங்கிருந்த சமூகக் குழுக்கள் நடந்துகொண்ட முறையை ஒத்ததாக இருக்கிறது.

இத்தாலியில் பாசிச அரசு கையாண்ட உத்தியை ஆராய்ந்த ஹெர்பர்ட் மார்க்யூஸ் என்ற அறிஞர் அதைப் பின்வருமாறு விளக்கினார்: “ அதிகாரத்தில் இருக்கும் சமூகக் குழுக்களின் கைகளுக்கு அரசியல் அதிகாரத்தை மாற்றித் தருவதன்மூலம் பாசிச அரசானது சமூகத்துக்கும் அரசுக்கும் இடையிலான பிரிவினையை அழிக்கிறது. அத்தகைய சமூகக் குழுக்கள் நாட்டிலுள்ள மற்றவர்களின்மீது நேரடியான அதிகாரம் செலுத்துவதை அது ஊக்குவிக்கிறது. தனி மனிதனின் மூர்க்கத்தனமான தன்னலம் சார்ந்த உணர்வைக் கட்டவிழ்த்து விடுவதன்மூலம் அது மக்கள் திரளைத் தம் விருப்பம்போல் கையாளுகிறது” என அவர் குறிப்பிட்டார். (Herbert Marcuse: Douglus Kelner (Ed) 1998:Technology War and Fascism, Routledge, London ) ஆண்டாள் சர்ச்சையில் இங்குள்ள சில சமூகக் குழுக்கள் இணை அதிகார அமைப்புகளாக செயல்படுவதையும் நீதிமன்றங்களைப்போல உத்தரவுகளைப் பிறப்பிப்பதையும் அதை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதையும் நோக்கும்போது நமக்கு ஹெர்பர்ட் மார்க்யூஸ் வர்ணிக்கும் இத்தாலிதான் நினைவுக்கு வருகிறது.
ஆண்டாள் சர்ச்சையை பக்தி இயக்கம் குறித்த ஆய்வாக மாற்றவேண்டும் என முந்தைய கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தேன்.பக்தி இயக்கம் குறித்த ஆய்வு நடக்காவிட்டாலும் தேவதாசி முறை குறித்த விவாதங்கள் இப்போது சமூக ஊடகங்களில் நடைபெற்று வருகின்றன.

தேவதாசி முறையின் சீரழிவுகளைப் பேசும் அந்தப் பதிவுகளில் பலவும் தேவதாசி முறை ஒழியவேண்டும் எனக் குரல் கொடுத்த திராவிட இயக்கத்தைப் பாராட்டுகின்றன. தேவதாசி முறை ஒழியவேண்டும் எனப் போராடியது திராவிட இயக்கம் என்பதில் மறுப்பேதுமில்லை. ஆனால்,அதே திராவிட இயக்கம் தேவதாசி முறையை வளர்த்து பரவச் செய்த சோழர்களின் ஆட்சிக் காலத்தைப் பொற்காலமாக வர்ணித்தது ஒரு முரண்நகையாகும்.

வைதீக சமயம் எழுச்சிபெற்ற பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் கடவுளுக்கு சேவை செய்யும் அடியாராகப் பெண்ணை அர்ப்பணிப்பது என்ற முறை மாறி அதுவொரு வர்த்தகமாக நடந்துள்ளது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்களும் பண்டங்களைப்போல கோயில்களுக்கு தேவரடியார்களாக விற்கப்பட்டுள்ளனர். அந்த விவரங்களை வரலாற்றறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் விரிவாகப் பதிவுசெய்துள்ளார். (சதாசிவபண்டாரத்தார்,தி.வை., ‘பிற்காலச் சோழர் வரலாறு’, அண்ணாமலைப்பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர், 1974.)

” கி.பி.948ல் நந்திவர்மன் மங்கலத்து மத்தியஸ்தர் ஒருவர் வயலூர் கோயிலில் திருப்பதிகம் பாடவும் இறைவனுக்கு சவரி வீசவும் மூன்று பெண்களை விற்றார்.

கிபி 1099 ல் மூன்று வேளாளர்கள் இரண்டு பெண்களையும் அவர்களுடைய சந்ததியினரையும் தென்னார்க்காடு மாவட்டம் திருவக்கரையில் தேவரடியார்களாக விற்றனர். கிபி 1184 ல் தஞ்சை மாவட்டம் கீழையூரில் கோயிலுக்கும், மடத்துக்கும் சொந்தமாயிருந்த அடிமைகளின் பட்டியலை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

தஞ்சை மாவட்டம் மேலப்பெரும்பள்ளத்தில் உள்ள கோயிலுக்கு நாங்கூர் என்ற ஊரைச் சேர்ந்த பிராமணர் ஒருவர் பதின்மூன்று காசுக்கு ஆறுபேர்களை அடிமைகளாக விற்றுள்ளார். அதுமட்டுமின்றி பெண்கள் இருவர் தம்மோடு மேலும் ஏழுபேர்களை முப்பது காசுக்கும், வேறு பதினைந்து பேர்களை முப்பது காசுக்கும் அதே கோயிலுக்கு விற்றதோடு அவர்களும் அவர்தம் வழியினரும் வழி வழி அடிமைகளாயினர் என அந்த ஊர் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்திலுள்ள கொறுக்கையில் இரண்டாம் இராசாதிராச சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் இராசராச சோழன் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் திருக்கோயிலுக்கு விலைக்கு வாங்கப்பட்டவர்களும், பரிசாகக் கிடைத்தவர்களுமாகிய ஆண், பெண் அடிமைகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வரையப்பட்டுள்ளன.
தனிச்சேரிப் பெண்கள், பதியிலார், தேவரடியார், நாடகக் கணிகையர் எனப்பல பெயர்களில் குறிக்கப்பட்ட பெண்கள்பலர் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டதையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பெண்கள் பலரைத் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் அழைத்து வந்து தஞ்சை ராசராசேச்சுவரத்தைச் சூழ்ந்துள்ள தெருக்களில் முதலாம் ராசராசசோழன் குடியேற்றினான். அப்படி தேவரடியார்களாக்கப்பட்ட பெண்களின் உடம்பில் திரிசூல முத்திரை பொறிக்கப்பட்டது என்ற செய்தியும் தெரியவருகிறது. அரண்மனை சேவகத்துக்கு வந்த பெண்களின் உடம்பில் அரச முத்திரை பொறிக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டுகளால் தெரியவருகிறது.

கி.பி. 1088ல் திருக்காளத்தி கோயிலுக்குரிய தேவரடியார்கள் தவறுதலாக அரண்மனை சேவகத்துக்கு வந்துவிட்டதாகவும், அவர்களை முதலாம் குலோத்துங்கன் மீண்டும் அக்கோயிலுக்கு அனுப்பியதாகவும், அவர்கள் உடம்பில் பொறிக்கப்பட்ட அரச முத்திரை அழிக்கப்பட்டு சிவன் கோயிலுக்குரிய திரிசூல முத்திரை பொறிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. கிபி 1119 ல் பாணபுரத்து வில்லிகளில் ஒருவன் தன் குடும்பத்துப் பெண்கள் சிலரைத் தேவரடியார்களாக அர்ப்பணித்து அவர்களுக்கு திரிசூல முத்திரை பொறித்துள்ளான்.

வரலாற்றை ஆராய்ந்து ஒரு மேற்கோளை எடுத்துக் காட்டிய கவிஞர் வைரமுத்துவே குற்றவாளியென்றால், அதை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றால் அந்த வரலாற்றின் காரணகர்த்தர்கள் குற்றவாளிகளில்லையா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

பக்தர்களாகவும், பெண்மையின் பெருங் காவலர்களாகவும் இப்போது அவதாரம் எடுத்திருக்கும் ஆன்மீக அரசியல்வாதிகள், தமிழ்ப் பெண்களைப் பண்டங்களாக்கி இழிவுசெய்த, தேவதாசி முறையை ஆதரித்து வளர்த்த தமது முன்னோரின் பாவத்துக்காக எங்கே எப்படி மன்னிப்பு கேட்கப் போகிறார்கள்?

(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)

×Close
×Close