ச.செல்வராஜ்
நாட்டின் பிரதமரை ஒரு சாதாரண பிரஜை நினைத்தாலும் சந்திப்பதுதான் ஜனநாயகம்! ஆனால் ஒரு மாநிலத்தின் உயிர் பிரச்னைக்கு அந்த மாநிலத்தின் அரசு மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவுக்கும் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (மார்ச் 3) சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதை அம்பலப்படுத்துகிறார். உடனே அமைச்சர் ஜெயகுமார், ‘பிரதமர் சந்திக்க மறுக்க வில்லை. முதலில் நீர்வளத்துறை அமைச்சரை சந்தியுங்கள் என்றுதான் கூறுகிறார்’ என பதற்றத்துடன் மறுப்பு கூறுகிறார். மோடிக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என பாஜக கூட என இப்படி துடிக்கவில்லை.
பிரதமர் போர்க்கால அவசரப் பணிகளில் இருந்து இதைக் கூறியிருந்தால் ஏற்கலாம். ஆனால் நம் பிரதமருக்கு மேடைகளில் எவ்வளவு சிறப்பாக பேசத் தெரியுமோ அதே அளவுக்கு, மவுனம் காக்க வேண்டிய இடங்களும் நன்றாக தெரியும்.
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரைக்கான வாய்ப்பு வரும்போது எத்தனைக் கூச்சல்கள் இடை மறித்தாலும் ‘தம்’ கட்டி, பேச நினைத்ததை முடித்துவிட்டுத்தான் உட்காரும் மோடியை பார்த்திருக்கிறோம். அதேசமயம் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் புகார்களுக்கும் பதில் சொல்லும் சவாலை இதுவரை ஏற்றுக் கொண்டவர் இல்லை மோடி!
மோடியின் இந்த ‘உறுதிப்பாடு’க்கு இன்னொரு உதாரணம்தான், காவிரி பிரச்னை! தமிழ் தொன்மையான மொழி என புகழ்வார். சென்னைக்கு வந்தால், ‘தமிழர்களுக்கும் எனக்கும் நெருக்கம் அதிகம்’ என உருகுவார். அதே விழாவில் பிரதமர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் உயிர் பிரச்னையான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ குறித்து கோரிக்கை வைத்த பிறகும் அதை காதிலேயே கேட்காதவராக கடந்து போகிற லாகவம் மோடியைத் தவிர வேறு யாருக்கும் வராது.
மோடி தமிழகம் வருவதற்கு இரு தினங்கள் முன்பே (பிப்ரவரி 22) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில் பிரதான தீர்மானம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரை சந்திப்பதுதான்!
பிப்ரவரி 24-ம் தேதி சென்னை, கிண்டியில் கவர்னர் மாளிகையில் தங்கிய மோடிக்கு பாஜக தலைவர்கள் மூவரை தனித்தனியாக சந்திக்க நேரம் இருந்தது. அமைச்சர் தங்கமணியை அழைத்து அளவளாவ நேரம் கிடைத்தது. எதற்காக அந்த சந்திப்பு? என இன்று வரை அதிகாரபூர்வமாக இரு தரப்பும் கூறவில்லை. பரவாயில்லை! அது உங்கள் ‘உள்கட்சி’ விவகாரம்!
அந்த சந்திப்புகளுக்கு இடையே காவிரி குறித்து தமிழக தலைவர்களை சந்திக்க 15 நிமிடங்கள் கிடைக்கவில்லையா? ஆனால் மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனிக்கிறவர்களுக்கு இதில் பெரிய அதிர்ச்சி இருக்க வாய்ப்பில்லை.
2017 பிப்ரவரியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பிரதமர் மோடியின் ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்டார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதற்கு பதிலே இல்லை. 2017 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டங்களில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்து மோடியை சந்திக்க முயன்ற யாருக்கும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இதே காலகட்டங்களில் ஒரு எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு சரளமாக மோடியின் தரிசனம் கிடைத்தது.
அதே காலகட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரி பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய 8 கடிதங்களில் ஒன்றுக்குகூட பதில் வரவில்லை. சித்தராமையாவுக்கு சந்திக்கவும் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை. அப்போதும்கூட, ‘பரவாயில்லைப்பா, இதுவும் ஒரு நடுநிலைமைதான்’ என நம்பினோம். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இறுதிகட்டத்தில் இருப்பதாலேயே இரு தரப்பையும் மோடி சந்திக்கவில்லை என்றும் நம்புகிற மாதிரி ஒரு காரணத்தை பாஜக தலைவர்கள் கூறினர்.
ஆனால் பாஜக.வின் சாயம் 2017 அக்டோபர் முதல் வாரத்தில் வெளுத்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயார் என உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா அமர்வில் இரு தினங்களுக்கு முன்பு உறுதி கொடுத்த மத்திய அரசு, உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்ததும் அப்படியே பல்டி அடித்தது. ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கே அதிகாரம் கிடையாது’ என வாதிட்டது. அது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியும் என மல்லுக்கட்டியது.
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என பல முறை கூறிய இதே அரசு, உச்ச நீதிமன்ற விசாரணையை சுட்டிக்காட்டியே இரு மாநிலத் தலைவர்களையும் சந்திக்கக்கூட மறுத்த மத்திய அரசு, கடைசியில் அதே உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது என பிடிவாதம் பிடித்த காட்சி இதற்கு முன்பு இந்திய சரித்திரம் காணாதது.
காவிரி பிரச்னையில் காங்கிரஸும் கடந்த காலங்களில் கர்நாடகாவுக்கு ஆதரவாகவே பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட 2013-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததும் மறு பேச்சில்லாமல் மன்மோகன் அரசு வெளியிட்டது. அதனால்தான் அந்த அரசிதழ் நகலை பெருமை பொங்க மீடியாவிடம் காட்டி, ‘என் அரசியல் வாழ்வின் ஆகப் பெரிய சாதனை இது’ என ஜெயலலிதாவால் பெருமைப்பட்டுக்கொள்ள முடிந்தது.
உச்சநீதிமன்றம் கடந்த 16-ம் தேதி வழங்கிய இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவை 14 டி.எம்.சி. குறைத்தாலும்கூட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியிருப்பதுதான் ஒரே ஆறுதல்! ஆனால் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தனது சென்னை பயணத்தில், ‘மேலாண்மை வாரியம் அமைக்க சாத்தியமில்லை’ என தனது நிலையை தெளிவுபடுத்திவிட்டார்.
அதன்பிறகு பிரதமரை சந்திக்க அப்பாய்ன்மென்ட், கேட்டதற்குத்தான் மீண்டும் நிதின் கட்கரியை சந்திக்க ஆலோசனை கூறுகிறார் பிரதமர்! இது என்ன விளையாட்டு? அ.தி.மு.க.வின் நலனை மனதில் வைத்து இரு அணிகளையும் இணைக்க பிரதமர் மோடி உதவியதாக கூறுகிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக.வின் நலனைவிட தமிழ்நாட்டின் நலன் முக்கியமாக படவில்லையா மோடிக்கு?
தமிழ்நாடு இதில் கேட்பது சலுகை அல்ல! நீதி..! உச்ச நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த வேண்டிய அரசியல் சாசன கடமையை மத்திய அரசு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். முன்பு இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் இரு தரப்பையும் மோடி சந்திக்க வில்லை என்றார்கள். இப்போது இறுதி தீர்ப்பு வந்துவிட்டது. மீண்டும் எதற்கு கண்ணாமூச்சி ஆட்டம்?
கர்நாடகாவும் காவிரி பிரச்னைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அவர்களும் பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்பார்கள். மறுபடியும் இரு தரப்பையும் சந்திக்காமல் ‘நடுநிலை ஆட்டம்’ நடத்த மோடி தயாராகி விட்டதாகவே தெரிகிறது. நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே நிற்பதன் பெயர் நடுநிலை அல்ல என்பதை யார்தான் சொல்வது?
வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ லட்சியத்தை முன் வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு அங்கு சித்தராமையா அரசை வீட்டுக்கு அனுப்புவது பிரதான பணியாக இருக்கும். அங்கு பாஜக.வே ஆட்சிக்கும் வரலாம். எனவே சில பல மாதங்களுக்கு மோடி இதில் மவுனம் கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
தமிழ்நாட்டில் நோட்டாவுடன் போட்டி போடும் பாஜக, அதற்கும் கீழே போனாலும் அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. காரணம், தமிழ்நாட்டில் தேர்தலில் ஜெயித்துதான் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும், இந்தியாவில் இன்னொரு மாநிலத்திற்கு எதிராக மத்திய அரசு இப்படி மவுனம் காத்துவிட முடியாது. தமிழ்நாடு என்னதான் செய்யப் போகிறது?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.