காவிரி மேலாண்மை வாரியம் : கலைந்துபோன ‘ஒற்றுமை வேடம்’

மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட மாநில அரசு, குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளிடம் கூட ஒற்றுமை இன்மை ஆகியவற்றுக்கு மத்தியில்தான் தமிழ்நாடு தனது உரிமைப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.

ச.செல்வராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் தமிழ்நாடு கட்சிகளின் ஒற்றுமை வேடம் கலைந்தது. தனித்தனி போராட்டங்கள் லாவணிக் கச்சேரிக்கே உதவும்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் தீர்க்கமான கோரிக்கை! நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டே இதற்கான இறுதி உத்தரவை பிறப்பித்துவிட்டது. ஆனால் கர்நாடகாவின் எதிர்ப்பு, மத்திய ஆட்சியாளர்களின் பாராமுகம் ஆகியவற்றால் இது கிடப்பில் போடப்பட்டது.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின்னராவது மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் பொய்த்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு மார்ச் 29- முடிந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் போராட்டக் களத்திற்கு தயாராகின்றன.

காவிரி பிரச்னைக்காக, கடந்த பிப்ரவரி 16-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதுமே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த திமுக தீர்மானித்தது. ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியை முன்னெடுத்ததும், திமுக அதில் கலந்துகொண்டது. அதில் எடுத்த முடிவின் அடிப்படையில் பிரதமரை சந்திக்க கடைசி வரை ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை. பிறகு சட்டமன்றத்திலும் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற வளாகத்திலும் அதிமுக, திமுக எம்.பி.க்கள் ஓரிரு நாட்கள் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக இணைந்து போராட்டம் நடத்தினர். இந்த ஒற்றுமைக் காட்சிகள் இப்போது கலைகின்றன.

காவிரி விவகாரம் தொடர்பாக அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘மார்ச் 29 வரை பொறுத்திருப்போம். அதன்பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம்’ என்றார்.

ஆனால் திமுக ஈரோடு மண்டல மாநாட்டை முடித்த கையுடன் செயற்குழு அறிவிப்பை மார்ச் 30-ம் தேதி கூட்டுவதாக அறிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு மார்ச் 29-ல் முடியவிருந்த நிலையில், மறுநாள் கட்சி அமைப்பை திமுக கூட்டியதே காவிரி பிரச்னைக்காகத்தான் என புரிந்து கொள்ள முடிந்தது.

திமுக அவசரமாக தனிக் கூட்டத்திற்கு திட்டம் போட்டபோதே, காவிரி பிரச்னையை அது தனியாக முன்னெடுக்கப் போகிறது என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் புரிந்து போனது. தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்த முடிவின்படி பிரதமரை சந்திக்க முடியாததும், இன்று வரை மத்திய அரசுக்கு எதிராக மென்மையான போக்கையே இபிஎஸ்-ஓபிஎஸ் கடைபிடிப்பதாலும் தனி ரூட்டை மு.க.ஸ்டாலின் எடுத்ததை பெரிதாக குறை சொல்லிவிட முடியாது.

ஆனாலும் இன்னொரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தும் வாய்ப்பை வழங்கி, டெல்லியில் தமிழக விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தும் ஒரு ஆலோசனையை ஸ்டாலின் முன்வைத்திருக்கலாம். அதை கூட்டத்தில் ஏற்காதபட்சத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, தனி முயற்சிகளை தொடர்ந்திருக்கலாம்.

இதை செய்திருந்தால், காவிரி பிரச்னையில் தமிழக கட்சிகளின் ஒற்றுமைக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்ததாக அமைந்திருக்கும். தவிர, மத்திய அரசை எதிர்க்க தெம்பில்லாத தமிழக ஆட்சியாளர்களை இன்னும் வலுவாக அம்பலப்படுத்தியிருக்க முடியும்.

இப்போது நடந்தது என்ன? திமுக தனியாக போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதை மோப்பம் பிடித்துவிட்ட அதிமுக, அதற்கு முன்பாகவே போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக அறிவித்து, அது ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

திமுக ஏப்ரல் 1-ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம் என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினாலும், அதில் பங்கேற்பது என்னவோ திமுக.வுடன் நட்பில் இருக்கும் கட்சிகள் மட்டும்தான்! தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள், ‘காவிரி துரோகத்தில் திமுக.வுக்கும் பெரும் பங்குண்டு. எனவே அவர்கள் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை’ என தெரிவித்து வருகின்றன.

கமல்ஹாசன், சீமான் ஆகியோர் திமுக அழைத்தால் அதில் பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். அவர்களை வளர்த்து விட வேண்டுமா? என்கிற தயக்கம் திமுக முகாமில் தெரிகிறது. இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி அவசரமாக மார்ச் 30-ம் தேதியே சென்னையில் விவசாய அமைப்புகள் சிலவற்றை கூட்டி, ஒரு ஆலோசனையை நடத்தியது. அதில் அன்புமணி ராமதாஸை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ‘காவிரி உரிமை மீட்பு கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்குவதாகவும், அந்த அமைப்பு சார்பில் ஏப்ரல் 11-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாமக தரப்பின் இந்த அவசரக் கூட்டம், திமுக முகாமை சற்றே அதிர வைத்திருக்கிறது. அந்தத் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு அன்புமணி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார். காவிரி பிரச்னை என்பதால் அதை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி பல கட்சிகளுக்கும் உண்டு. திமுக இந்த விஷயத்தில் அன்புமணியை வரவேற்குமா? அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து 11-ம் தேதி முழு அடைப்பில் கலந்து கொள்ளுமா? என்பது எதிர்பார்ப்புக்கு உரிய கேள்வி.

ஒருவேளை திமுக கூட்டுகிற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதே 11-ம் தேதி போராட்டம் அறிவிப்பார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது. மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட மாநில அரசு, குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளிடம் கூட ஒற்றுமை இன்மை ஆகியவற்றுக்கு மத்தியில்தான் தமிழ்நாடு தனது உரிமைப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. பாவம், மக்கள்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close