வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி, பம்பாறு, நெய்யாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பொன்னியாறு, தென்பெண்ணை, அச்சன்கோவில்-பம்பை-வைப்போறோடு இணைப்பு என்ற பிரச்சினைகள், பிரச்சினைகளாகவே பல ஆண்டுகளாக உள்ளன. இதற்கு எப்போது தீர்வோ?
ஜூன் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் தொடக்கம் வரை குற்றலாத்தில் சாரல் சீசன் தமிழர்களை மகிழ்விக்கும் காலமாகும். அதே ஜூன் இரண்டாவது வாரம் வந்துவிட்டாலே காவிரி டெல்டா மக்களுக்குக் காவிரியில் தண்ணீர் வராமல் திண்டாடும் சீசனும் தொடங்கிவிடும். இது முடிவில்லா சோகக் கதையாகத் தொடர்கிறது.
இப்படியான நிலையில் குறைந்தபட்சம் கிடைக்கின்ற நீரை சேமிக்கவும் அதனால் ஏற்படும் பயன்பாட்டையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
காவிரி ஆறு கரூரிலிருந்து திருச்சி வரை அகன்ற காவிரி ஆறாக உள்ளது. அதனால், காவிரியின் இரு கரைகளையும் சுமார் 10லிருந்து 15அடி வரை உயர்த்தி தடுப்பணை மிக எளிதாக கட்டலாம்.
பயன்கள்:-
1. ஆற்றின் இரு கரைகளை 15அடி உயர்த்தி சாலைகள் அமைத்து, போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கலாம்!
2. 15 அடிகள் உயர்த்தி நீர் தேக்கி வைக்கும் போது தஞ்சையில் முப்போகம் தங்கு தடை இன்றி விளையும்!
3. ஒரே ஒரு முறை காவிரி நீர் மற்றும் மழை நீர் கொண்டு தேக்கி வைத்தால், அங்குள்ள மண் மூலம் அத் தண்ணீர் கிரகிக்கப்பட்டு, அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிலத்தடி நீர் பஞ்சமே இருக்காது.
4. விவசாய நிலங்கள் விளை நிலங்களாக மாறும் போது அது சார்ந்த இஞ்சினியரிங் படித்த மாணவர்களுக்கு ஏகப்பட்ட தொழில் வாய்ப்புக்கள் அமையும்!
6. ஆங்காங்கே இரு கரைகளுக்கு இடையே பாலங்கள் கட்டி, போக்குவரத்து தூரங்களை குறைக்கலாம். அத்துடன் இரு ஊர்களுக்கும் இடையே உள்ள பொருட்களை மிக எளிதாக பண்டம் மாற்றிக் கொள்ளலாம்!
7. இந்த நீண்ட தடுப்பணையில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் அரசு மிகப் பெரும் வருவாய் ஈட்டலாம்!
8. மிகப் பெரிய அளவில் நடக்கும் மணல் கொள்ளை தடுப்பணை கட்டி விட்டால், கனவில் கூட நடக்காது.
9. கரூர், திருச்சி, தஞ்சை ஐந்தே ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஒன்றாகி விடும்.
காவிரி உபரிநீர் மற்றும் மழை நீரைச் சேமிக்க, கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டியும், 1.05டி.எம்.சி தண்ணீரைத்தான் சேமிக்க முடிந்தது. மீதமுள்ள நீர் அணைத்தும் வீணாகக் கடலுக்குச் செல்கின்றது. திட்டங்களை ஒழுங்குபடுத்தி இந்நீரைச் சேமித்து வைத்திருந்தால் காவிரிநதி தீரத்தில் உள்ள தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுக்கட்டளை மேட்டுவாய்க்கால் மட்டுமல்லாமல் மேலும் ஏழு தடுப்பணைகள் கட்டி வீணாகக் கடலுக்குச் சென்ற நீரை சேமித்திருக்க முடியும்.
காவிரியின் இன்றைய நிலை:
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயுள்ள சிக்கலில், காவிரி நீரில் கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் இந்த பிரச்சனையில் உரிய நீராதாரப் பங்குண்டு. காவிரியில் ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் எவ்வளவு நீர் உருவாகிப் பெருகுகிறது என்ற அடிப்படையில் Cauvery Water Dispute Tribunal (CWDT) 2007ல் நீர் பங்கீடு பற்றிய தீர்ப்பை வழங்கியது. இந்த காவிரி நீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் 1901ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை வருடந்தோறும் காவிரியில் உற்பத்தியாகும் நீர்வரத்து குறித்து ஆராய்ந்தது. அதன் வழியே பருவ மழையானது 50 சதவீதம் மட்டுமே பெய்கையில் கூட குறைந்தபட்சம் காவிரியில் 740 டி.எம்.சி தண்ணீர் வரத்து இருக்கும் என்று கண்டறிந்த்து.
தமிழ்நாட்டில் கீழ் அணைக்கட்டு வரை காவிரியில் பாயும் மொத்த, குறைந்த பட்ச நீர் 740 டி.எம்.சி அளவு என்று கணக்கிட்டது தீர்ப்பாயம். இந்த ஒட்டுமொத்த நீர் அளவை கொண்டு தமிழகத்துக்கு 419 டி.எம்.சி, கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி, கேரளாவுக்கு 30 டி.எம்.சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி, மீதமிருக்கும் 14 டி.எம்.சி யை இயற்கை வளத்திற்காக என்று பங்கிட்டது தீர்ப்பாயம்.
மேலும் தமிழகத்துக்கு கர்நாடகம் 192 டி.எம்.சி வழங்க வேண்டும் என்றும், மாத வாரியாக எவ்வளவு திறக்க வேண்டுமென்று கணக்கிட்டு ஒரு உத்தரவை தீர்ப்பாயம் வெளியிட்டது.
அதன்படி ஜுன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் மாதத்தில் 34 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதத்தில் 50 டி.எம்.சி, செப்டம்பர் மாதத்தில் 40 டி.எம்.சி, அக்டோபர் மாதத்தில் 22 டி.எம்.சி, நவம்பர் மாதத்தில் மாதத்தில் 15 டி.எம்.சி, டிசம்பரில் மாதத்தில் 8 டி.எம்.சி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 2.5 டி.எம்.சி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது இன்றும் முடிந்தபாடில்லை.
இந்தப் புள்ளி விபரங்களில் ஒரு குழப்பம் ஏற்படலாம். 50% பருவ மழை பெய்தால் காவிரியில் மொத்தம் 740 டி.எம்.சி இருக்கும் என்கிறது கணிப்பு. அந்த 740 டி.எம்.சி நீர் முழுவதும் கர்நாடகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து காவிரிக்கு கிடைக்கும் என்கிற அடிப்படையில் இல்லை.
காவிரி நீரில் கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி, தமிழ்நாட்டின் பங்காக கொடுக்க வேண்டியது மேலும் 192 டி.எம்.சி என்றால், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து காவிரியில் நீர்வரத்து 462 டி.எம்.சி என்று அர்த்தம். தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய 419 டி.எம்.சி யில் கர்நாடகாவிலிருந்து 192 டி.எம்.சி கிடைக்கிறது என்றால், மீதம் 277 டி.எம்.சி தமிழகத்தில் பெய்யும் பருவ மழையால், தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து காவிரியில் சேரும் நீரின் மூலமாக கிடைக்கிறது எனத் தெரிகிறது. தமிழ்நாடு (277 டி.எம்.சி), கர்நாடகம் (462 டி.எம்.சி) நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 689 டி.எம்.சி நீர் காவிரிக்கு கிடைத்தால், கேரள நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 51 டி.எம்.சி நீர் காவிரிக்கு கிடைக்கிறது. அதில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி நீர் பகிரப்படுகிறது. மிச்சம் 7 டி.எம்.சி நீர் புதுச்சேரிக்கும், 14 டி.எம்.சி நீர் இயற்கை வளத்திற்கும் கிடைக்கிறது.
இதுதான் CWDT எனப்படும் காவிரி நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் வழங்கியுள்ள பங்கீட்டு முறை.
காவிரியில் கர்நாடக பகுதியில் பெறப்படும் நீர், மேற்குத் தொடர்ச்சி மலை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஹசன், கூர்க், மைசூரு போன்ற பிரதேசங்களின் வழியே தென்மேற்குப் பருவமழை மூலமாக கிடைக்கிறது. இந்தப் பருவ மழையானது ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த பருவமழை நீர் கேரளாவின் பருவ மழை வாயிலாகவும் அதன் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து காவிரியில் சேர்கிறது. அதனால் கேரளாவுக்கும் காவிரி நீரில் பங்கு இருக்கிறது. மலையிலிருந்து கீழே சமவெளியில் காவிரி நதி இறங்கியபின் பெரும்பாலும் தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவ மழையில் வரும் நீர் காவிரியில் சேர்கிறது. இப்படி பருவ மழைகளினால் காவிரியில் வந்து சேரும் நீர் 227 டி.எம்.சி தான், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு நீரை (192 டி.எம்.சி) விட அதிகம்.
ஆனால் தமிழகத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தென்மேற்கு பருவமழை இவை பொய்த்தாலோ, குறைந்தாலோ தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கிடைக்கும் நீர் மிகவும் குறைந்து விடுகிறது. அதேசமயம் குடகில் தென்மேற்கு பருவமழையும் குறைந்தால் நீர் பற்றாகுறை இன்னும் அதிகமாகிறது. அந்த சமயத்தில் CWDT நிர்ணயித்தபடி தமிழகத்துக்கு தர வேண்டிய பங்கை கைவிரிக்கிறது கர்நாடகம். அந்த நேரங்களில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை நாடி நீரை போராடி பெற்றுக்கொள்கிறது. காவிரி நீரை CWDT கூறியவாறு பங்கீடு செய்ய காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது. 04/10/2016ம் தேதிக்குள் மேலாண்மைக்கு தத்தமது உறுப்பினர்களை நியமனம் செய்யவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இச்சமயத்தில் உச்ச நீதிமன்றம் குறித்த அளவு நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கியவுடன், காவிரி நீர் மேலாண்மையை அமைக்கும்படி பணித்த தன்னுடைய ஆணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் தான் கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஏறக்குறைய ரூ. 6000 கோடி செலவில் பிரம்மாண்ட அணை கட்ட முடிவு செய்துள்ளது. முக்கியமாக பெங்களூரு நகரத்திற்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த அணை கட்டப்படுவதாகவும், தமிழகத்துக்கு தர வேண்டிய 192 டி.எம்.சி பங்கு நீரை எந்தவித மறுப்பும், பாதிப்பும் இல்லாமல் இந்த அணை கட்டப்படும் என்று கர்நாடகம் கூறுகிறது.
இந்த அணை 64 டி.எம்.சி நீரை தேக்கும் அளவுக்கு அமையும் என்று தெரிகிறது. ஆனால், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்து தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீருக்கு எவ்வித பிரச்சனையும் வராதெனில் மேகதாது அணையின் கட்டுமானத்தை தொடரலாம் என்று கூறியுள்ளது. இந்த அணையினால் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேலும் சச்சரவுகளை உருவாக்கும் என்றே தோன்றுகிறது.
குடகில் உற்பத்தியாகி, கர்நாடகத்தில் தவழ்ந்து, தமிழகத்தில் அலைபரப்பி நடந்து தனது கரத்தை கேரளத்துக்கு விரித்து தன் சுவர்களை புதுவையில் மிதித்து வங்கக் கடலில் இணையும் காவிரி இன்றைக்கு தவிக்கின்றது. தன்னுடைய இயற்கையான போக்கை கர்நாடகம் தடுக்கின்றது என்று காவிரி கண்ணீர் வடிக்கின்றது. இதைத் தீர்க்க வேண்டியவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தீர்ப்பின்படி 419 டி.எம்.சி. தமிழகத்திற்கும், இதில் கர்நாடக அணைகளிலிருந்து 192 டி.எம்.சி. என்றும் எஞ்சிய 227 டி.எம்.சி., காவிரிப் படுகையில் பெறக்கூடிய மழை, மற்றும் கசிவு நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்பட வேண்டும். கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. யும், புதுவைக்கு 7 எடி.எம்.சி.யும், ஆற்றின் சுற்றுச் சூழல் போக்கிற்கு 10 டி.எம்.சி.யும், கடலில் நன்னீர் 4 டி.எம்.சி. கலக்க வேண்டும். இந்தச் சுற்றுச் சூழல் மற்றும் கடலைச் சேர்ந்த 14 டி.எம்.சி. தண்ணீர் மீன்வளத்தைக் காக்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இவையெல்லாம் தீர்ப்பில்தான் உள்ளன. மதிக்கப்படவேண்டிய தீர்ப்பு ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் தீர்வு எட்டப்படும்.
இதிலும் சுணக்கங்களும் புறக்கணிப்புகளும் காட்டுவதில் அர்த்தமில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி ஹேமாவதி, கபினி அணைகளை கர்நாடகம் கட்டியதோ அந்த தைரியத்தில் இப்போது மேகதாதுவில் பெரிய அணையை கட்டி தமிழகத்துக்கு உரிமையான நீரை தடுக்க அனைத்து பணிகளையும் கர்நாடக அரசு செய்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
காவிரி ஒரு சோகத் தொடர்கதையாக இல்லாமல் என்றைக்கு முற்றுப்பெறும்? இதுவே ஒவ்வொரு தமிழருடைய தவிப்பாகும்.
முற்றும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.