அணு உலைகளை வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடையாது என்ற மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயலின் பேச்சு, அடிப்படை ஜனநாயக விழுமியங்களுக்கு விரோதமானது.
மக்கள் வாழும் பகுதிகளில் எந்த மாதிரியான திட்டங்கள் வரலாம் அல்லது வரக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது. ரசாயன தொழிற்சாலை முதல் அணு மின் நிலையங்கள் வரை மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெறுவதன் அடிப்படை நோக்கமே, அந்த திட்டம் பற்றி மக்களின் கருத்துக்களை கேட்டறிவதுதான். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமை இது. மத்திய எரிசக்தி துறை அமைச்சரின் மக்கள் விரோத பேச்சு இதற்கு எதிரான, யதேச்சதிகார அரசியல் பேச்சாகும்,
’பூவுலகின் நண்பர்கள்’ கோ.சுந்தர்ராஜன்
உலகத்தில் அணு சக்தியை அதிகமாக பயன்படுத்தும் நாடு, பிரான்ஸ், அந்த நாடு தற்போது அணுசக்தியிலிருந்து 75% மின்னுற்பத்தி செய்கிறது, அதை வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 50% ஆக குறைத்து, வரக்கூடிய ஆண்டுகளில் மேலும் குறைக்கப்போவதாக முடிவுசெய்திருக்கிறது. தன்னுடைய மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை அணு சக்தியை நம்பியிருக்கும் தென் கொரியா, அணு சக்தி பயன்பாட்டிலிருந்து முழுவதும் வெளியேறப்போவதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவும், தன்னுடைய அணுசக்தி பயன்பாட்டை 19 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
உலகம் முழுவதும் அணுசக்திக்கு எதிரான மன நிலையிலிருக்கும் போது, இந்தியாவின் எரிசக்தி துறை அமைச்சர் பேசியிருப்பது அவருடைய பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. குஜராத் மாநிலத்திலுள்ள பாவ் நகர் மாவட்டம், மிதிவிர்தியில் அமையவிருந்த அணு உலைகளை, மக்கள் போராட்டங்கள் காரணமாக விலக்கிக்கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு மாற்றியிருக்கிறது மத்திய அரசு. அப்படி என்றால் இனிமேல் குஜராத் மாநிலத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கொடுக்காமல் இருக்க மத்திய அரசு முடிவு செய்யுமா? கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கங்களில் கூடங்குளம் கழிவுகள் கொட்டப்படும் என்று அறிவித்த போது, மொத்த கர்நாடக மாநிலமும் போராட்டத்தில் இறங்கியது. போராட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றவுடன் அன்றைய மாநில முதல்வர் "ஷெட்டர்" கர்நாடகாவின் எந்த பகுதியிலும் அணுக்கழிவுகளை கொட்ட விட மாட்டோம் என்று அறிவித்தார். மத்திய அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் "கர்நாடக மாநிலத்திற்கு கூடங்குளம் மின்சாரம் போகக்கூடாது, ஆனால் சுமார் 442 MW மின்சாரம் கர்நாடகாவுக்கு செல்கிறது.
கட்டுரையாளர், கோ.சுந்தர்ராஜன், அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர். ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் மூலம் அணு ஆற்றலுக்கு எதிரான கருத்தரங்குகள், போராட்டங்களை முன்னெடுப்பவர். சூழலியல், மரபணு பயிர்கள் எதிர்ப்பு, நிலையான வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.